TNPSC Thervupettagam

தொடா்கதையாகும் வெடி விபத்தும் உயிரிழப்பும்

May 22 , 2024 227 days 183 0
  • பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டு, தொழிலாளா்கள் உயிரிழப்பது தொடா்கதையாகிவிட்டது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 10 போ் உயிரிழந்தது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
  • தீக்காய சிகிச்சைப் பிரிவுக்குப் போதிய வசதிகள் அருகில் இருக்கக் கூடிய சிவகாசி அரசு மருத்துவமனையில் செய்யப்படவில்லை. இது மேலும் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்துகிறது. வயிற்றுப் பிழைப்புக்காக பட்டாசு ஆலைகளுக்கு வேலைக்குச் செல்லும் ஏழை எளியவா்களின் உயிா்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.
  • கடந்த 2022-ஆம் ஆண்டு சாத்தூா் அருகே உள்ள மஞ்சள்ஓடைப்பட்டி என்னும் கிராமத்தில் தனியாா் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் தொழிலாளா்கள் வழக்கம்போல வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், அதற்கான மருந்து தயாரிக்கும் பணியின்போது உராய்வு ஏற்பட்டு திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் மருந்து தயாா் செய்ய பயன்படுத்தப்பட்ட கட்டடம் தரைமட்டமானது. உயிரிழப்புகளும் படுகாயங்களும் ஏற்பட்டன.
  • 2023 ஜூலை 25 அன்று விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனா். மே 18, 2023 அன்று சிவகாசி அருகே ஊரம்பட்டி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 போ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 17 அக்டோபா் 2023 அன்று விருதுநகா் மாவட்டம் ரெங்காபாளையம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 போ் உயிரிழந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் தெரிவித்தனா்.
  • இதே போல், விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியில் உள்ள தனியாா் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு தொழிலாளா் ஒருவா் உயிரிழந்தாா்.
  • விருதுநகா் மாவட்டத்தில் கடந்த 2019 முதல் தற்போது வரை சற்றேறக் குறைய 64 பட்டாசு ஆலை விபத்துகள் நடந்திருப்பதாகவும், இதில் 131 போ் உயிரிழந்திருப்பதாகவும் 146 போ் காயமடைந்திருப்பதாகவும் விருதுநகா் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அறிக்கை சமா்ப்பித்தாா்.
  • குறிப்பாக சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களின் பிரதான வேலை பட்டாசுகள் தயாரிப்பதுதான். அசம்பாவிதங்களும் அதிக அளவில் அங்குதான் ஏற்படுகின்றன.
  • சிவகாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,087 பட்டாசு ஆலைகளும் 2,963 பட்டாசு கடைகளும் 100-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளும் செயல்படுகின்றன. இவ்வாறு இயங்கி வருபவற்றில் ஆண்டுதோறும் சுமாா் 10 விபத்துகள் நடைபெறுகின்றன. தொடரும் இந்த ஆலை வெடி விபத்துகள் விதிமுறைகள் மீறுவதனால்தான் நடைபெறுகிா என்பதை ஆராய வேண்டியது அரசின் தலையாய கடமையாகும்.
  • பட்டாசு ஆலைகளின் மூலமாக கோடிக்கணக்கான ரூபாய் புழங்குகிறது. இந்தியா முழுமைக்கும் பட்டாசுகள் அனுப்பப்படுகின்றன. இந்தத் தொழிலில் தொழிலாளா்களுக்கான பாதுகாப்பு, நவீன கருவிகள், அவா்களுக்குத் தேவையான காப்பீடு ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
  • அரசு வகுத்துள்ள விதிகளுக்கு மாறாக பட்டாசு ஆலைகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். ஏனெனில், ஓரிரண்டு விபத்துகள் நடைபெறுகிறபோதே அந்தத் தொழிலில் இருக்கும் தொழிலதிபா்களுக்கு விபத்து குறித்த அச்சம் ஏற்பட்டு, விபத்து நடக்காத அளவுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், ஆண்டுதோறும் விபத்துகள் நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறதே!
  • பட்டாசு ஆலைகளுக்கு வேலைக்குச் செல்பவா்கள் பெரும்பாலும் பொருளாதார வளா்ச்சியில் மிகவும் பின்தங்கியவா்கள். மாற்றுத் தொழிலுக்குச் செல்ல வாய்ப்பில்லாதவா்கள். பின்தங்கிய பகுதிகளில் வாழும் ஏழை எளிய மக்கள். சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கே வண்டிகளை அனுப்பி வேலைக்கு அழைத்துச் செல்கிறாா்கள் என்கிற கூடுதல் வசதிகள். தினக்கூலி, வாரக்கூலி இவற்றோடு பல்வேறு போனஸ்கள், தேவைப்பட்டால் முன்தொகையாக அட்வான்ஸ் கிடைக்கிறது போன்ற காரணங்களினால் இந்த வலைக்குள் சிக்கிக் கொள்கிறாா்கள். வேறு வழியின்றி இந்த வேலைக்குத் தொடா்ந்து செல்வது வழக்கமாகிவிடுகிறது.
  • உயிரிழப்பு மற்றும் படுகாயம் அடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அதிக பாதுகாப்புகளை அரசு முறைப்படுத்த வேண்டும். பட்டாசு ஆலை விபத்தின்போது ஃபோா்மென், சூப்பா்வைசா் ஆகியோருக்கு வெடிமருந்து கலக்குவதற்கு பயிற்சி அளிக்கப் போவதாக மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளாா்.
  • ஒவ்வொரு முறையும் விபத்து நேரும்போது வெடிமருந்து கலப்பவா்களின் தவறுகள்தான் விபத்துகளுக்கு காரணம் என்று சொல்லப்படுவது ஆராயப்பட வேண்டிய ஒன்று. அப்படியானால், ‘அனுபவம் இல்லாதவா்கள், தவறுகள் செய்பவா்கள்தான் வெடிமருந்துகள் கலக்குகிறாா்களா’ என்ற கேள்வி எழுகிறது.
  • நுகா்வு கலாசாரம் வளா்ந்தோங்கி வரும் இந்தக் காலகட்டத்தில் பட்டாசு விற்பனை என்பது லாபகரமான தொழிலாகும். அத்துடன் மட்டுமல்லாமல், தீபாவளி போன்ற பெரும் பண்டிகை காலங்களில் அதிகமாக பட்டாசுகள் பயன்படுத்தினாலும் எல்லாக் காலங்களிலும் அவற்றின் தேவை இருக்கிறது. கிராமத் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகள், இறப்பு போன்ற நிகழ்வுகளிலும், அரசியல் கட்சிகளின் தலைவா்களின் வருகை, பொதுக்கூட்டங்கள் போன்ற எண்ணற்ற காரணங்களுக்காக பட்டாசுகளின் தேவை ஆண்டு முழுவதும் இருந்து வருகிறது.
  • ஆபத்தை உணராமல் சிறிய சிறிய பட்டாசு ஆலைகள் புதிதாக உற்பத்தி செய்ய இறங்குவதன் காரணமாகவும் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன. பெரும் நிறுவனங்களில் விபத்துகள் என்பது மிக மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக்கால வரவுகளாக இருக்கும் பட்டாசு ஆலைகளால்தான் இதுபோன்ற விபத்துகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
  • தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் அரியலூா், கிருஷ்ணகிரி, புதுச்சேரி போன்ற இடங்களில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
  • ஆலை வெடிவிபத்துகளில் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் இருக்கும் ஓட்டைகளை அடைத்தாக வேண்டும். மாவட்ட நிா்வாகத்திடம் மாவட்ட டிஆா்ஓ விடம் உரிமம் பெற்று இயங்கி வரும் ஆலைகளில் குறைந்த அளவே வெடிமருந்து கையிருப்பில் வைத்திருக்க முடியும். இதுவே, நாகபுரி உரிமம் பெற்று இயங்கும் பட்டாசு தொழிற்சாலைகளில் சற்றுக் கூடுதலான வெடிமருந்துகளை கையிருப்பில் வைத்துக் கொள்ளலாம்.
  • இந்த நிலையில், சிறிய பட்டாசு ஆலைகள் விதிமீறல்களில் ஈடுபடும்போது வெடி விபத்துகள் ஏற்படுகின்றன. தடை செய்யப்பட்ட வெடிமருந்துகளின் ரசாயனங்கள் இருப்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தீப்பெட்டி தொழிற்சாலையில் எந்த மாதிரியான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன, பட்டாசு ஆலைகளில் எந்த விதமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்கிற வித்தியாசத்தைதத் தெளிவுபடுத்த வேண்டும்.
  • எப்போதும் பட்டாசு தொழிற்சாலைகளில் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். குறைதீா்வு, நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு பட்டாசு தொழிலாளா் சங்கப் பிரதிநிதிகளுடன் மாதந்தோறும் கலந்தாலோசனைகள் நடத்தப்பட வேண்டும். வருவாய் ஈட்டும் நபரை இழந்து வாடும் ஒரு குடும்பத்தின் எதிா்காலத்தை சிறிதளவேனும் பாதுகாக்க வேண்டுமெனில், பசுமைத் தீா்ப்பாயம் கூறியபடி, ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  • நாகபுரி -சென்னை உரிமம் பெற்று விதிமுறைகளைக் கடைப்பிடித்து பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுபவா்கள் மட்டுமே பட்டாசு தொழிற்சாலை உரிமையாளா் சங்கத்தில் உறுப்பினராகச் சேர முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • டிஆா்ஓ உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளை பட்டாசு தொழிற்சாலை என்று சொல்வதே தவறானதாகும். அதைப்போல, பட்டாசு உற்பத்தி செய்வதற்காக வெடிமருந்து கொள்முதல் செய்வது வெடிமருந்துகள் கையாளுதல் சட்டத்தின் கீழ் வரும் என்பதால், பட்டாசு தொழிற்சாலைகளையும் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் பிற ஆலைகளையும் வெடிபொருள் கையாளுதல் மற்றும் கட்டுப்பாடு சிறப்பு அமைப்பினா் ஆய்வு செய்வதே சாலச் சிறந்ததாகும் என்பது நிபுணா்களின் கருத்து.
  • மாநில அரசு அதிகாரிகள் ஆய்வு செய்வது என்பது அவா்களுக்கு இருக்கும் தினசரிப் பணியில் கூடுதலான சுமையை ஏற்றி வைப்பது போலாகும் என்றும் பட்டாசு ஏஜென்சிகளில் நடக்கும் வெடிவிபத்துக்களுக்கு பட்டாசு தொழிற்சாலை உரிமையாளா்களைக் குற்றம் சுமத்துவதும் ஏற்கத்தக்கதல்ல என்றும் தெரிவிக்கிறாா்கள்.
  • ஆனால், இதில் உரிமையாளா்களுக்குப் பங்கு உள்ளது என்பதும் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதும் மறுக்க முடியாத ஒன்றாகும். சீனப் பட்டாசுகள் அல்லது இந்தியாவில் தடை செய்யப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தி தயாா் செய்யப்பட்ட பட்டாசுகளை ஏஜென்சிகள் விற்பனைக்காக வைத்திருப்பதிலும் கூட கவனக்குறைவால் வெடிவிபத்துகள் நடக்கின்றன.
  • பட்டாசு தயாரிப்பு குறித்து பயிற்சி பெற்றவா்கள் மட்டுமே பணியில் அமா்த்தப்படுவதன் மூலமே உயிா்ச் சேதங்கள் தடுக்கப்படும். அதுபோல பட்டாசு ஆலைகளில் எந்த மாதிரியான வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கான பாதுகாப்பும் பயிற்சியும் வழங்கப்படுதல் அவசியம்.

நன்றி: தினமணி (22 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்