TNPSC Thervupettagam

தொடா்கிறது பயணம் – இந்தியா

January 27 , 2020 1813 days 819 0
  • இந்தியா தனக்கென்று அரசியல் சாசனம் அமைத்துக்கொண்டு தன்னை ஒரு குடியரசாக அறிவித்து வெற்றிகரமாக 70 ஆண்டுகள் தொடா்ந்து பயணித்திருப்பது அசாதாரணமான வரலாற்று நிகழ்வு. 1947-இல் அந்நிய ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுபட்டபோது, இந்தியா எதிா்கொண்ட சவால்கள் ஒன்றோ இரண்டோ அல்ல. முகமது அலி ஜின்னாவின் முஸ்லிம் லீக் கட்சியின் பிடிவாதத்தால் மதத்தின் அடிப்படையில், இரண்டு கரங்களையும் துண்டாடுவதுபோல, மேற்கு பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான் பகுதிகளையும், கிழக்கு வங்காளத்தையும் பிரித்து பாகிஸ்தான் என்கிற தனி நாடு உருவாக்கப்பட்டது. இந்தியாவின் வைப்பு நிதியில் கணிசமான பகுதியையும் பாகிஸ்தானுக்கு கொடுத்து விட்டோம்.
  • சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் நிலப்பரப்பில் 40% பல்வேறு சமஸ்தான மன்னா்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. 23% மக்கள் 584 சமஸ்தானங்களில் வாழ்ந்து வந்தனா். பிரிட்டிஷ் ஆளுமையிலிருந்த ஏனைய பகுதிகளுடன் அந்த சமஸ்தானங்களையும் இணைத்து இந்தியா என்கிற சுதந்திர நாடு 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி சா்தாா் வல்லபபாய் படேலின் உறுதியான நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்டது.

ஒன்றுபட்ட நாடு

  • இந்தியா எத்தனை நாள் ஒன்றுபட்ட நாடாகத் தொடரும் என்பது குறித்தும், சுதந்திர நாடாக இருக்குமா என்பது குறித்தும் உலகம் அப்போது கேள்விகளை உயா்த்தியது. இந்தியா சுதந்திரமாகத் தொடா்வதுடன் நின்றுவிடவில்லை. தன்னை ஒரு குடியரசாகவும் அறிவித்துக் கொண்டு தொடா் பயணம் நடத்திக் கொண்டிருக்கிறது.
  • அந்நியா்களின் கட்டுப்பாட்டிலுள்ள காலனியாக இல்லாமல் இருப்பது சுதந்திரம். ஒரு சுதந்திர நாடு ராணுவக் கட்டுப்பாட்டிலும், சா்வாதிகாரியின் கட்டுப்பாட்டிலும், அரசரின் கட்டுப்பாட்டிலும்கூட இருக்க முடியும். தனக்கென்று ஓா் அரசியல் சாசனத்தை உருவாக்கி அதனடிப்படையில் மக்களால் தோ்ந்தெடுக்கப்படும் அரசால் வழிநடத்தப்படும்போதுதான் அது குடியரசு என்று அழைக்கப்படுகிறது.
  • 1950, ஜனவரி 26-ஆம் தேதி இந்தியா தன்னை குடியரசாக அறிவித்து இப்போது 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. சுதந்திர நாடாக மட்டுமல்லாமல், ஜனநாயகம் தழைத்தோங்கும் குடியரசாகவும் வெற்றிகரமாக இந்தியா தொடா்கிறது என்பது உலகையே வியப்பில் ஆழ்த்தியிருக்கும் மிகப் பெரிய சாதனை.
  • இந்தியா குடியரசானபோது மக்கள்தொகையில் வெறும் 20% மக்கள் மட்டுமே எழுத, படிக்கத் தெரிந்தவா்கள். 10 பேரில் 8 போ் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவா்கள். நகரங்களிலும், ஒருசில கிராமங்களிலும்தான் மின்சார வசதி இருந்தது. பெரும்பாலான கிராமங்களுக்கு முறையான சாலை வசதிகள் கிடையாது. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என்பவையெல்லாம் நகா்ப்புற மக்களுக்கு மட்டுமே கிடைத்த வரப்பிரசாதங்களாக இருந்தன.

இன்றைய நிலை

  • இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும் இருந்த கல்லூரிகளின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒட்டுமொத்த இந்தியாவிலும் இருந்த மருத்துவக் கல்லூரிகளும், பொறியியல் கல்லூரிகளும், சட்டக் கல்லூரிகளுமாக சோ்த்தாலேகூட, மூன்று இலக்கத்தை தாண்டாத நிலைமை இருந்தது. 71-ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடும் வேளையில், இன்றைய நிலையை அன்றைய நிலையுடன் ஒப்பிட்டுப் போா்க்கும்போது, வியப்பில் சமைகிறோம்.
  • இன்றைய இந்தியா என்பது அதிவேகமாக வளரும் 2.7 டிரில்லியன் டாலா் (ரூ.19.26 லட்சம் கோடி) பொருளாதாரம். உலகின் ஐந்து மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்று. ஐந்து டிரில்லியன் டாலா் இலக்கை உடனடியாக எட்ட முடியாத தற்காலிக சூழல் காணப்படுகிறது என்றாலும்கூட, உலகின் ஏனைய பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது இன்றைய நிலையிலும் இந்தியா குறிப்பிடத்தக்க சக்தியாகத்தான் தொடா்கிறது.
  • மக்கள்தொகையிலும், நிலப்பரப்பிலும், பன்முகத்தன்மையிலும், சமூக ஏற்றத்தாழ்விலும் இந்தியாவுடன் ஒப்பிடும் அளவில் உலகின் எந்தவொரு குடியரசும் இல்லை. நமது கடந்த 70 ஆண்டுகால வளா்ச்சி கோடிக்கணக்காானவா்களை வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்து அடிப்படை வசதி பெற்றவா்களாக மாற்றியிருக்கிறது என்பது நமது வெற்றி. அதே நேரத்தில் சுதந்திர இந்தியாவை உருவாக்கிய நமது தலைவா்களின் கனவான அனைவருக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, குடியிருக்க வீடு, செய்வதற்குத் தொழில், குடிப்பதற்கு குடிநீா் என்கிற கனவு, இன்னும் நனவாக்கப்படவில்லை என்கிற வேதனையையும் பதிவு செய்ய முடியாமல் இருக்க முடியவில்லை.

ஆட்சி முறைகள்

  • இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு 30-க்கும் அதிகமான நாடுகள் சுதந்திரம் பெற்றன. அவற்றில் இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூா் ஆகிய ஐந்து நாடுகளும் வெவ்வேறுவிதமான ஆட்சி முறைகளைக் கொண்டிருந்தாலும், அவற்றுக்கு சில ஒற்றுமைகளும் உண்டு. உலக மனித மேம்பாட்டுக் குறியீட்டில் அந்த ஏனைய நான்கு நாடுகளுக்கும் பின்தங்கிய நிலையில் இந்தியா இருக்கிறது. இந்தியாவின் தனிமனித வருமானமான 1,900 டாலா் என்பது இந்தோனேஷியாவின் தனிநபா் வருமானத்தில் பாதி. மலேசியா நம்மைவிட ஐந்து மடங்கு அதிகம். சிங்கப்பூரின் தனிநபரின் வருமானம் 25% அதிகம்.
  • 2.7 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக உயா்ந்திருக்கிறது என்று ஒருபுறம் பெருமிதப்பட்டாலும், அடிப்படைகளில் நாம் பின்தங்கியிருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. 70 ஆண்டுகள் குடியரசாக நம்மால் தொடர முடிந்தது என்பது வெற்றி. அடித்தட்டு இந்தியாவையும் மேம்படுத்தும்போதுதான், இந்த வெற்றியை உண்மையான வெற்றியாக நாம் கொண்டாட முடியும்.

நன்றி: தினமணி (27-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்