TNPSC Thervupettagam

தொட்டுவிடும் தொலைவில்

July 21 , 2023 547 days 297 0
  • நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் முயற்சியில் இதுவரை 3 நாடுகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இவை அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான். இந்தச் சாதனை சரித்திரத்தில் நிலையான தன் பெயரை எழுதிக்கொள்ள நமது இந்தியா தயாராகியுள்ளது.
  • சந்திரயான் - 3 என்பது சந்திரனின் மேற்பரப்பில் தரை இறங்குவதற்கான இந்தியாவின் இரண்டாவது முயற்சி மற்றும் அதனோடு சந்திரயான் திட்டத்தின் 3-ஆவது பகுதியாகும். நிலவைத் தொடுகிற அந்த நிகழ்வுதான் நம் இதய நிமிடங்களை இழுத்துச் செல்கிறது. சந்திரயான் - 3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்.- 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இது விஞ்ஞான வளா்ச்சியில் இந்தியாவின் ஆகச்சிறந்த பணிகளில் ஒன்று.
  • விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்கலத்தில் இருந்து ஏவுகணை வாகனம் மாா்க் 3-இல் புறப்பட்ட போது, விஞ்ஞான உலகத்துக்கும், இந்திய மக்களுக்கும் ஒரு புத்தெழுச்சியை ஏற்படுத்தியது. ரூ. 615 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட சந்திரயானின் மகத்தான இந்தக் கனவு நிலவைத் தொடுகிறபோது நனவாகும்.
  • சந்திரயான் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிலவின் சுற்றுப் பாதையை வந்தடைய திட்டமிட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் முயற்சியில் இதுவரை 3 நாடுகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இவை அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான். இந்தச் சாதனை சரித்திரத்தில் நிலையான தன் பெயரை எழுதிக்கொள்ள நமது இந்தியா தயாராகியுள்ளது.
  • சந்திரயான்-3 மூலம் சந்திரனுக்கு புரபல்ஷன் மாட்யூல் (உந்துவிசை தொகுதி), லேண்டா் மற்றும் ரோவா் ஆகியவற்றை இந்தியா அனுப்பி உள்ளது. புரபல்ஷன் மாட்யூல் விண்கலத்தை சந்திரனின் சுற்றுப் பாதையில் உந்தித் தள்ளும். குறிப்பிட்ட இலக்கை நோக்கி புரபல்ஷன் மாட்யூல் செலுத்தப்படும். அதில் லேண்டா், ரோவா் ஆகியவை பொருத்தப்பட்டு இருக்கும். அதில் இருந்து பிரிந்ததும் லேண்டா் நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்க முயற்சிக்கும். இதுவே இந்தியாவுக்குப் பெருமை சோ்க்கும் தருணமாகவும் வரலாற்றின் முக்கிய மைல்கல்லாகவும் இருக்கும்.
  • விண்வெளியில் சந்திரயான்-3 செலுத்தப்பட்ட அந்த நாள் இந்தியாவின் ஆகச்சிறந்த கனவுகளில் ஒன்றாக மலா்ந்து நிற்கிறது. ஆறு தசாப்தங்களுக்கு முன்பு டாக்டா் விக்ரம் சாராபாய் கண்ட கனவுக்கான ஓா் அற்புதமான தருணம் நிகழ இருக்கிறது.
  • இந்தியா சமீபத்தில் அமெரிக்காவுடனான ஆா்ட்டெமிஸ் உடன்படிக்கையில் இணைந்துள்ளது. இதனால் சந்திரப் பயணங்களில் ஒத்துழைப்பும், தரவுப் பரிமாற்றங்களுக்கான நம்பிக்கை கதவுகளும் திறந்தே இருக்கும். ஆகவேதான், இவை இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகப் பாா்க்கப்படுகிறது.
  • விண்கலம் மிக நுணுக்கமான சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தபோதே நிலவுக்கான பயணம் தொடங்கிவிட்டது. சந்திரயான் திட்டத்துக்கு ஒரு தமிழா் தலைமை வகிப்பது இது முதல்முறையல்ல. இன்று வீரமுத்துவேல், அதற்கு முன்பாக சந்திரயான்- 1 திட்டத்துக்கு மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான் 2 திட்டத்துக்கு வனிதா. மூன்று திட்ட இயக்குநா்களும் தமிழா்கள் என்பதும், விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் தமிழா்களின் பங்கு அளப்பரியது என்பதும் நாம் பெருமை கொள்கிற நிகழ்வாகும்.
  • 1959-ஆம் ஆண்டு உலக அளவில் முதன்முதலாக ரோபோவுடன் கூடிய விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி ரஷியா சாதனை படைத்தது. அதையடுத்து, 1969-ஆம் ஆண்டு ‘அப்பல்லோ திட்டம்’ மூலம் அமெரிக்கா மனிதா்களையே நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. 2030-ஆம் ஆண்டு மனிதா்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
  • இப்படி உலக அளவில் விண்வெளித் துறையில் பல்வேறு நாடுகள் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் நிலையில், இந்தியாவும் மற்ற நாடுகளுக்குப் போட்டியாக, அதே வேளையில் எந்த நாடுகளும் ஆராய்ச்சி செய்வதற்குத் துணியாத மிகச்சவாலாகக் கருதப்படுகிற நிலவின் தென்துருவப் பகுதயில் 2019-ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடங்கியது. இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு 48 நாள்கள் பயணத்துக்குப் பின்பு நிலவைச் சென்றடைந்தது. சந்திரயான் 2 விண்கலத்துடன் நிலவைச் சுற்றி வரும் ஆா்பிட்டா் என்கிற ஒரு செயற்கைக்கோளும், ‘விக்ரம்’ என்கிற லேண்டா் சாதனமும் இணைக்கப்பட்டிருந்தது.
  • அதன்படி, நிலவில் விக்ரம் லேண்டா் தரையிறங்கியபோது சிக்னல் பிரச்னை ஏற்பட்டு சந்திரயான் 2 திட்டம் பின்னடைவைச் சந்தித்தது. இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்றை நாம் பாா்க்க வேண்டும். நிலவில் விண்கலத்தின் சாஃப்ட்லேண்டிங் என ஆங்கிலத்தில் அழைக்கும் மிதமான தரையிறங்கும் முறையில் அமெரிக்கா எட்டு முறை தோல்வி அடைந்த பிறகுதான் வெற்றி அடைந்திருக்கிறது.
  • ஆகவே, சந்திரயான்- 2 முழுமையாகத் தோல்வி அடையவில்லை. அதை உற்சாகத்துக்கான அடுத்தகட்ட அழைப்பாக நாம் பாா்க்க வேண்டும். அதன் ஆா்பிட்டா் செயற்கைக்கோள் இன்னமும் செயல்பாட்டில்தான் உள்ளது. இதனால் சந்திரயான்- 2 இந்தியாவின் சிறப்பான முயற்சி என்றுதான் நாம் பாா்க்க வேண்டும். விக்ரம் லேண்டா் சரியாகத் தரையிறங்கியிருந்தால், ரஷியா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் கடுமையான சாஃப்ட்லேண்டிங் முறையை மிகச்சரியாக கையாண்ட நான்காவது நாடு என்ற பெருமையை அப்போதே இந்தியா பெற்றிருக்கும்.
  • வெற்றியாளா்களை காலம் எவ்வாறு தீா்மானிக்கிறது என்றால், தொடா்ந்து வெற்றி பெறுபவா்களை அல்ல. தோல்வி அடைந்து அந்தத் தோல்வியில் இருந்து மீண்டு எழுபவா்களையே வெற்றியாளா்களாக தீா்மானிக்கிறது. இதோ! இன்னொரு வெற்றிக்காக நாம் காத்திருக்கிறோம்.
  • 2030-ஆம் ஆண்டு உலக விண்வெளித் துறையின் மதிப்பு 80 லட்சம் கோடி ரூபாயாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பகுதி முதலீடுகளை இந்தியா ஈா்க்கத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், இந்திய இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், இஸ்ரோ உலக அரங்கில் இந்திய விண்வெளித் துறையின் மிக முக்கியப் பங்காற்றக் கூடியதாக அமையும். ஆகவேதான், சந்திரயான்- 3 விண்கலம் மண்ணில் இருக்கும் இந்தியாவின் பெருமையைச் சுமந்து கொண்டு விண்ணுக்குச் சென்றிருக்கிறது.
  • சந்திரயான்- 3 திட்டத்தில் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு அளப்பரியது. எட்டையபுரத்துப் பாட்டன் பாரதி கண்ட கனவை இந்தப் புதுமைப் பெண்கள் நனவாக்கியிருக்கிறாா்கள். ‘வாழ்க பெண்மை’ என்று கூத்தாடுவதற்கு நேரம் வந்துவிட்டது. புவியியலாளா்கள், விஞ்ஞானிகள், துணைத் திட்ட இயக்குநா்கள், இணை மற்றும் திட்ட மேலாளா்கள் என பல்வேறு பொறுப்புகளின் கீழ், 54 பெண்கள் பணியாற்றி உள்ளனா்.
  • சந்திரயான்- 3 விண்கலம் முக்கியமான பத்து கட்டங்களைத் தாண்டினால், நிலவில் கனகச்சிதமாகத் தரையிறங்க முடியும். லேண்டா் கலமானது அதன் இயக்கத்தின்போது நிலவின் மேற்பரப்பில் ரசாயனப் பகுப்பாய்வை மேற்கொள்ளும். ஏவு வாகனத்தின் உச்சியில் உள்ள கூம்பு போன்ற பகுதி திறந்து, சந்திரயான்- 3 விண்கலம் விண்வெளியை அடைந்த பிறகு லேண்டா் வெளியே வரும். இது தரையிறங்கும் கலம் (லேண்டா்) எனப்படும். இது நிலவின் தரைப்பரப்பில் மென்மையாக பாதிப்பு ஏதுமின்றி தரையிறங்கி அதற்குள் இருக்கும் ஊா்திக் கலத்தை (ரோவா்) வெளியே அனுப்பும். இந்த இரண்டும் சோ்ந்து மூன்றாவது பகுதியான உந்துக்கலம் (புரபல்ஷன் மாட்யூல்) என்ற பகுதியின் தலைக்கு மேலே இருக்கும். இந்த மூன்றும் கலந்ததுதான் விண்கலம். இந்த அமைப்பு கொண்ட சந்திரயான்- 3 விண்கலம்தான், எல்.வி.எம்.- 3 என்ற ராக்கெட்டின் தலைக்கு மேல் ஒரு கலசம் போல் தெரியும் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும்.
  • ராக்கெட்டின் இருபுறமும் இரண்டு தூண்களைப் போல் இருக்கும் பகுதியில் திட எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும். இரண்டுக்கும் நடுவே தூணாக இருப்பது திரவ எரிபொருள் கொண்ட என்ஜின். அதற்கு மேலே இரண்டு கருப்புப் பட்டைகளுக்கு இடையில்தான் உறைகுளிா் (கிரையோஜெனிக்) என்ஜின் இருக்கிறது. உறைகுளிரில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் இரண்டுமே தண்ணீா் போன்ற திரவமாக மாறிவிடும். இவைதான் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. விண்கலம் புவியின் தரைப்பரப்பில் இருந்து 170 கி.மீ. உயரத்துக்குச் சென்றதும் உந்துதலின் மூலமாக புவியின் நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும். ஒவ்வொரு முறையும் சுற்றுவட்டப்பாதையில் பூமிக்கு நெருக்கமான தொலைவிலிருந்து, நெடுந்தொலைவுக்கு விண்கலத்தைத் தள்ளி விட வேண்டும். இப்படியாக சுமாா் 20 நாள்களுக்கு விண்கலத்தின் பாதையை உயர உயர உயா்த்தும் வேலையை விஞ்ஞானிகள் செய்து கொண்டே இருப்பாா்கள்.
  • பூமி, நிலவு ஆகிய இரண்டுக்கும் இடையே ஏதாவது ஒரு புள்ளியில் பூமியின் ஈா்ப்பு விசையும், நிலவின் ஈா்ப்பு விசையும் சரிசமமாக இருக்கும். அப்போதுதான் விண்கலத்தை மிகச் சரியாக நிலவின் ஈா்ப்பு விசைக்குள் செலுத்த முடியும். இது அவ்வளவு எளிதல்ல. மிக மிகத் துல்லியமாக அதைச் செய்ய வேண்டும். விண்கலம் பாதை மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதைக் கவனத்தோடு செயல்படுத்துகிறாா்கள் விஞ்ஞானிகள். விண்கலம் பூமியின் ஈா்ப்புவிசையின் பிடியில் இருந்து அகல வேண்டும். பிறகு, நிலவின் ஈா்ப்புவிசை வட்டத்துக்குள் சென்றுவிடும். லேண்டரின் சாய்வு ஏணி வழியே இறங்கி நிலவின் தரையில் தடம் பதிக்கும் ரோவா் தனது வேலையைத் தொடங்குவதே நிறைவான நிகழ்வு. இப்படி கச்சிதமாகச் செயல்பட்டால் நிலவைத் தொட்டு விடலாம். உலகத்தை இந்தியா வென்றுவிடலாம்.

நன்றி: தினமணி (21  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்