TNPSC Thervupettagam

தொலைத்தொடர்புத் துறையைப் பாதுகாக்க சமரசத் திட்டம் அவசியம்

March 12 , 2020 1722 days 714 0
  • அலைக்கற்றைப் பயன்பாடு, உரிமக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால், அவற்றைச் செலுத்தாமல் ‘பாரதி ஏர்டெல்’, ‘வோடஃபோன்’, ‘ஐடியா’ நிறுவனங்கள் தாமதித்துவந்தன. தற்போது இரு நிறுவனங்களும் உச்ச நீதிமன்ற ஆணைப்படி நிலுவையை உடனடியாகச் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

  • உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, இந்தியத் தொலைத்தொடர்புத் துறைக்கு ஒரு புதிய நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு நிறுவனங்களும் கட்டுப்படவில்லை, அரசும் நிலுவையை வசூலிக்கவில்லை என்பதால் கோபமுற்ற உச்ச நீதிமன்றம், மேற்கொண்டு காலஅவகாசம் அளிக்க மறுத்துவிட்டது.
  • அலைக்கற்றைப் பயன்பாட்டுக்கான கட்டணம், உரிமக் கட்டணம், கட்டணங்களைத் தாமதப்படுத்தியதால் அவற்றுக்குச் செலுத்த வேண்டிய வட்டி, அபராத வட்டி என்று இந்த இரண்டு நிறுவனங்களின் மொத்த நிலுவைத் தொகை ரூ.1.47 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. ‘பாரதி ஏர்டெல்’ நிறுவனம் ரூ.10,000 கோடியைச் செலுத்திவிட்டு, எஞ்சிய தொகையை மார்ச் மாதத்தில் செலுத்துவதாகக் கூறி தவணை கோரியிருக்கிறது. ‘வோடஃபோன்’ நிறுவனம், முதல் தவணைக்கே அவகாசம் கேட்டது. உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாததால் அன்று மாலைக்குள் ரூ.2,500 கோடியைச் செலுத்தியது.
  • கட்டண நிர்ணயம் தொடர்பாகக் கருத்து வேறுபாடு இருந்தது என்றாலும், செலுத்த வேண்டிய தொகையைத் தங்களுடைய நிறுவனக் கணக்கிலேயே தனியாக வரவு வைத்துப் பத்திரப்படுத்தியிருக்கலாம். நிறுவனங்களின் தவறுகள் ஒருபுறம் இருந்தாலும், நுகர்வோர் நலன் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இச்சிக்கலிலிருந்து மீள அரசு ஏதாவது சமரசத் திட்டம் உருவாக்கியே தீர வேண்டும் அல்லது உச்ச நீதிமன்றமே வழிகாட்ட வேண்டும். காரணம், இது வளர்ந்துவரும் துறை. தொழில், வளர்ச்சி, கல்வி, விவசாயம் என்று அனைத்துடனும் சம்பந்தப்பட்டது.
  • பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ஏற்கெனவே தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இருக்கும் சில தனியார் நிறுவனங்களும் சந்தையிலிருந்து விலகினால், ஓரிரு நிறுவனங்கள் மட்டுமே ஏகபோகம் செலுத்த நேரிடும். அதன் பிறகு அவை தங்களுடைய விருப்பத்துக்குக் கட்டணங்களை உயர்த்தும்; சேவையைத் தரமாகவும் விரைவாகவும் அளிப்பதில் அக்கறையுடன் செயல்படாது; புதிய உத்திகளிலும் ஆர்வம் காட்டாது.

வேலையிழப்பு

  • தற்போது 5ஜி அலைக்கற்றையை ஏலம் விட அரசு தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், உள்நாட்டிலிருந்து நான்கைந்து நிறுவனங்களாவது போட்டியிட்டால்தான் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும். எனவே, அரசும் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அமர்ந்து பேசி, நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்கு எளிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
  • முக்கியமாக, இரு தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும், வங்கிகளின் வாராக் கடன் அளவும் அதிகரிக்கும். இந்நிறுவனங்களுக்குக் கருவிகளையும் சேவைகளையும் அளிக்கும் நிறுவனங்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும்.
  • இவற்றையெல்லாம் உத்தேசித்துத் தவணை முறையில் கட்டணத்தை வசூலிக்கவும், வட்டி, அபராத வட்டி ஆகியவற்றை ரத்துசெய்யவும் வழிகாணப்பட வேண்டும். இது இரண்டு நிறுவனங்கள் தொடர்புடைய விஷயம் மட்டுமில்லை, தொலைத்தொடர்புத் துறையின் எதிர்காலமும் இதில் அடங்கியிருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (12-03-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்