TNPSC Thervupettagam

தொலைவிட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த தலையங்கம்

January 5 , 2023 667 days 345 0
  • நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் அவர்கள் இருக்கும் பகுதியிலேயே வாக்களிக்கும் வகையில் "தொலைவிட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர' மாதிரியை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கி உள்ளது. அந்த இயந்திரத்தின் செயல்பாட்டை விளக்குவதற்காக அங்கீகரிக்கப்பட்ட எட்டு தேசிய கட்சிகள், 57 மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான கூட்டம் புதுதில்லியில் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • இப்போது வடிவமைக்கப்பட்டுள்ள தொலைவிட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 72 தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும். தேர்தல் நடைமுறைகளை எளிதாக்கவும், வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கவும் தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
  • இப்போதே, அரசுப் பணியாளர்களில் சிலர் அஞ்சல் வழியில் வாக்களிக்கும் வசதி உள்ளது. கரோனா காலத்துக்குப் பிறகு 80 வயதுக்கு மேற்பட்டவர்களும் அஞ்சல் வாக்கை செலுத்தும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
  • 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நமது நாட்டில் 45.6 கோடி பேர் (மக்கள்தொகையில் சுமார் 40 %) ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். அவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் 66 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கும், 5.4 கோடி பேர் வேறு மாநிலங்களுக்கும், 39.6 கோடி பேர் மாநிலத்துக்குள்ளும் இடம் மாறியவர்கள் ஆவர்.
  • 11 ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதல் ஆகியிருக்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டையே எடுத்துக் கொண்டால், சென்னை, கோவை, திருப்பூர் போன்ற பெரிய நகரங்களில் பெரும் எண்ணிக்கையில் வேறு மாநிலத்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெரிய நகரங்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதுமே ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் வெளிமாநிலத்தவர்கள் பணிபுரிவதைக் காண முடியும்.
  • வால்பாறை, நீலகிரி மாவட்டம் மஞ்சூர் போன்ற தொலைதூரப் பகுதிகளிலும்கூட இன்று வேறு மாநிலத்தவர்கள் பணிபுரிய வந்துவிட்டனர். குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் இவர்களுக்கு வாக்களிக்கும் ஆர்வம் இருந்தாலும், வாக்களிப்பதற்காக மட்டும் நிறைய தொகை செலவழித்து சொந்த ஊருக்குச் செல்வது என்பது நடைமுறையில் சாத்தியமற்றதாக உள்ளது. தொழில்நுட்பம் காரணமாக, வெளிமாநிலத்தவர்கள் இருக்கும் இடத்திலேயே ரேஷன் கடைகளில் பொருள்கள் பெறுவது சாத்தியமாகி உள்ளது. அதுபோல், இந்தத் திட்டமும் சாத்தியமாகக்கூடியதுதான்.
  • 2020 பிகார் மாநில, 2022 உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை ஆய்வு செய்தால் ஓர் உண்மை புலப்படும். பிகாரில் பெண் வாக்காளர்களைவிட ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 40 லட்சம் அதிகம். ஆனால், வாக்களித்தவர்களில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை வெறும் மூன்று லட்சம்தான் அதிகம்.
  • இதேபோன்று, உத்தர பிரதேசத்தில் பெண் வாக்காளர்களைவிட ஆண் வாக்காளர்கள் 1.1 கோடி அதிகம். ஆனால், வாக்களித்தவர்களில் பெண்களைவிட ஆண்களின் எண்ணிக்கை 45 லட்சம் அதிகம் ஆகும்.
  • புலம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கும் திட்டத்தை செயல்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. தான் இருக்கும் இடத்தில் வாக்களிக்க விரும்புபவர் தேர்தல் ஆணையம் குறிப்பிடும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். வாக்காளர் குறிப்பிடும் விவரங்கள் சரியா என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும். அதன் பின்னர், வாக்காளர் வசிக்கும் இடத்துக்கு அருகே உள்ள வாக்குச்சாவடியில் அவர் பெயர் இணைக்கப்படும்.
  • இதற்காக பிரத்யேக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அவர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். இது குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சவாலான பணியாகும். அதேபோன்று, புலம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பிவைப்பதற்கும், ஒரே வாக்குப்பதிவு இயந்திரத்தில் பல்வேறு தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதால் வாக்கு எண்ணிக்கைக்கும் பிசிறு இல்லாத தெளிவான நடைமுறைகளை வகுப்பது மிகவும் முக்கியமானதாகும்.
  • இப்போதே, இந்த நடைமுறைக்குப் பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதே சந்தேகம் இருக்கும் நிலையில், இந்தப் புதிய ஏற்பாடு தேர்தல் மீதான நம்பிக்கையையே சீர்குலைக்கும் என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
  • திமுக, திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) ஆகிய கட்சிகள் வரும் 16-ஆம் தேதி நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றபின் இது தொடர்பாக கருத்து தெரிவிப்பதாக கூறியுள்ளன. ஆனால், ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகியவை இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
  • தேர்தல் ஆணையத்தின் முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் நீண்ட காலமாக நிலவிவரும் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி கூறியுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.
  • கட்சிகளின் சந்தேகங்களைப் போக்கி, வெளிமாநிலங்கள் மட்டுமல்லாமல், மாநிலத்துக்குள் இடம்பெயர்பவர்களுக்கும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக உயரும் என்பதிலும், அது நமது நாட்டின் ஜனநாயக நடைமுறைக்குப் பெருமை சேர்க்கும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.

நன்றி: தினமணி (05 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்