- ஏப்ரல் 6: ராஜாளியார் நினைவு நாள்
- தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்துக்கு தெய்வச்சிலையார் எழுதிய உரையைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தெய்வச்சிலையார் எழுதிய உரையை 1929-ல் அரங்க.வேங்கடாசலம் பிள்ளை பதிப்பித்தபோது, பதிப்புச் செம்மைக்குத் தம்மிடம் இருந்த தொல்காப்பிய ஓலைச்சுவடியை அளித்து உதவியவர் ஹரித்துவாரமங்கலம் கோபாலசாமி ரகுநாத ராஜாளியார்.
- தொல்காப்பிய ஆய்வாளர்களைப் போற்றியதால் ‘ராஜாளியார் வீட்டுச் சொத்து தொல்காப்பியம்’ என்று புலவர் பெருமக்கள் குறிப்பிடுவது வழக்கம்.
- மதுரையில் பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கம் காணவும், தமிழ்க் கல்லூரி நிறுவவும் பெருந்துணையாக இருந்தவர் ராஜாளியார்.
- மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தஞ்சையில் நடைபெற்ற ஏழு நாள் விழாவைப் பொறுப்பேற்று நடத்தி பாண்டித்துரையாரின் பாராட்டைப் பெற்ற பெருமை அவருக்கு உண்டு.
- தஞ்சையில் தமிழ்ச் சங்கம் தொடங்கவும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் உருவானபோதும் ராஜாளியார் பெரும்பொருள் நல்கி ஆதரவு அளித்துள்ளார். கரந்தைத் தமிழ்ச் சங்கக் கட்டிட நிதிக்கு ரூ.1,000 முதல் நன்கொடையாக வழங்கியவர் ராஜாளியார்.
- அந்த சங்கத்தின் நிரந்தரப் புரவலராக விளங்கி, சங்கத்தின் நூலகத்தை மேம்படுத்தியும், தமிழ் நிகழ்வுகள் நடைபெறவும் நூல் வெளியீடுகள் நடைபெற நிதியுதவியும் நல்கியுள்ளார்.
- குன்னூரில் நூலகம் தொடங்க ரூ.10,000 நன்கொடை வழங்கியதுடன் (இன்றைய மதிப்பு ரூ.60 லட்சம்) நூலகத்தில் 10.09.1911-ல் தொல்காப்பியருக்கு முதன்முதல் சிலை நிறுவியது இவரின் தொல்காப்பிய ஈடுபாட்டை அறிய உதவும் சான்றாக இருக்கிறது.
சமூகப் பணிகள்
- ‘அரதைப் பெரும்பாழி’ என ஞானசம்பந்தராலும் ‘சுத்தமல்லி வளநாட்டு வெண்ணி நாட்டு அரதைப் பெரும்பாழி’ எனச் சோழர் காலக் கல்வெட்டுகளாலும் அழைக்கப்பெற்ற ஹரித்துவாரமங்கலம் ஊரில் வாழ்ந்த வாசுதேவ ராஜாளியார், ஆயி அம்மாள் ஆகியோரின் புதல்வராக, கோபாலசாமி ரகுநாத ராஜாளியார் 01.12.1870-ல் பிறந்தவர்.
- தனது இளமைக் கல்வியைப் பச்சைக்கோட்டையில் விஞ்சிராயரிடம் 8 ஆண்டுகள் குருகுலவாச அடிப்படையில் பயின்றார். மெட்ரிகுலேசன் படிப்பைக் கும்பகோணத்தில் முடித்தார்.
- தஞ்சை எஸ்பிஜி கல்லூரியில் சேர்ந்து சிலகாலம் படித்தபோது தந்தையார் உடல்நலம் பாதிக்க, படிப்பைப் பாதியில் நிறுத்திக் குடும்பப் பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு, தாமே பல துறை நூல்களைப் படித்து உயர் அறிவு பெற்றார். தான் பிறந்த ஊரில் சித்த மருத்துவமனையை நிறுவி, ஏழை எளிய மக்கள் இலவசமாக மருத்துவம் பார்த்துக்கொள்ள வழிவகுத்தார். தன் ஊரில் பள்ளிக்கூடம் ஒன்றைத் தொடங்கி, மக்களுக்குக் கல்வி கிடைக்கத் துணைநின்றார்.
- ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் கள்ளர், மறவர் உள்ளிட்ட 89 சாதிகளைச் சேர்ந்த மக்கள், குற்றப்பரம்பரை என்ற கொடிய சட்டத்தின் வழியாக ஒடுக்கப்பட்டிருந்தனர்.
- இந்தச் சமூகங்களைச் சேர்ந்த 16 வயதுக்கு மேற்பட்ட 60 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் இரவுப்பொழுதில் அருகில் உள்ள காவல் நிலையங்களில் கையொப்பம் இட்டுத் தங்கியிருக்க வேண்டும்.
- வெளியூர் சென்றாலும் தாம் இன்ன ஊரிலிருந்து வந்துள்ளோம் என்ற விவரத்தைக் காவல் நிலையத்திலோ ஊர்ப் பெரியவர்களிடத்திலோ ‘ராத்திரிச் சீட்டுகள்’ பெற்றுத் தெரிவிக்க வேண்டும்.
- ராஜாளியார் இத்தகைய கொடுஞ்சட்டத்தை நீக்க வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற முடிசூட்டு விழாவில் கலந்துகொண்ட ஐந்தாம் ஜார்ஜ் மன்னரிடமும் ராணியாரிடத்தும் கோரிக்கை வைத்துத் தஞ்சைப் பகுதி ஈசநாட்டுக் கள்ளர்களைக் குற்றப்பரம்பரைச் சட்டத்திலிருந்து மீட்டவர்.
மும்மொழிப் புலமை
- ராஜாளியார் தமிழ், ஆங்கிலம், வடமொழி என மும்மொழியிலும் ஆற்றல்பெற்றவர்.
- மருத்துவ அறிவு, இசையறிவு, சமய அறிவு நிரம்பப் பெற்றவர். பரம வைணவப் பக்தரான இவர் ஹரித்துவாரமங்கலம் பெருமாள் கோயிலுக்குக் கோபுரம் எடுத்தவர்.
- எனினும், அவ்வூர் சிவன் கோயிலுக்கு அருட்பணிகள் செய்தும் சமயப் பொதுமை கொண்டவராகவும் விளங்கினார். திருவாவடுதுறை ஆதீனகர்த்தரை அந்தச் சிற்றூருக்கு அழைத்துப் பட்டினப் பிரவேசம் செய்வித்தவர்.
- ராஜாளியார் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த நூலகத்தைக் கண்ணுற்ற ஆதீனகர்த்தர், அதற்கு ‘சரசுவதி மகால்’ என்று பெயர் சூட்டி, திருமடத்தின் சார்பில் பச்சைக்கல் மாலை ஒன்றைப் பரிசிலாக வழங்கினார்.
- ராஜாளியார் தமிழ்ப் புலவர்களிடத்துப் பேரன்பு கொண்டவர். அந்தக் காலத்தில் புகழுடன் விளங்கிய புலவர் பெருமக்கள் பலரை ஆதரித்தவர். உ.வே.சாமிநாதையருக்கு வெள்ளிப் பேழையில் வைத்து ரூ.1,000 நன்கொடை வழங்கினார்.
- அரசஞ் சண்முகனார், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், உ.வே.சாமிநாதையர், விஞ்சைராயர், சர்க்கரை இராமசாமி புலவர், அருணாசலக் கவிராயர், கோபாலகிருஷ்ணன், சேதுராம பாரதியார், தூத்துக்குடி முத்தையா பிள்ளை, சாமிநாதப் பிள்ளை, வேங்கடேசப் பிள்ளை, முத்துசாமி ஐயர், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், கந்தசாமிப் பிள்ளை, பரிதிமாற் கலைஞர், இராகவ ஐயங்கார் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்தப் பெருமக்களுக்கு அன்புடன் பொருளுதவி செய்தும், நூல் பணிகளை ஆதரித்தும் உதவியவர் என்பதை அவர்கள் எழுதிய நூல்களின் முன்னுரைகளில் காண முடிகிறது.
பாயிர விருத்திப் பதிப்புதவி
- அரசஞ் சண்முகனார் நோயுற்றிருந்தபோது தம் ஊருக்கு அழைத்துவந்து, மருத்துவம் பார்த்து, அவருக்கு ரூ.300 அன்பளிப்பாக அளித்தமையை, தொல்காப்பியப் பாயிர விருத்தி நூலின் முகப்பில் சண்முகனார் எழுதியுள்ளார். வா.கோபாலசாமி ரகுநாத ராஜாளியாரவர்களால் தஞ்சை ஸ்ரீ வித்தியா விநோதினி முத்திராசாலையில் பதிப்பிக்கப்பட்டது என்று நூல் முகப்பில் பதிவாகியுள்ளது (1905).
- மேலும், ‘பாயிர விருத்தி முதலாய நூலை அச்சிடுவதற்குத் தஞ்சை சென்றபோது, சுரம் கண்டு, உணவு உண்ண முடியாத நிலையில், கோபாலசாமி ரகுநாத ராசாளியார் தம் ஊருக்கு அழைத்துச்சென்று பல நன் மருத்துவரைக் கொண்டு மருந்தளித்தும் வேதமுணர்ந்த அந்தணரைக் கொண்டு கிரகசாந்தி முதலாயின செய்தும் பிணிதீர்த்து வெண்பொற்காசு முந்நூற்றின்மேலாக என் நிமித்தஞ் செலவு செய்ததூஉமன்றி, பாயிரவிருத்தி நூலினைப் பதிப்பிக்கும் பணியில் இராசாளியார் முன்னின்று உழைத்தார்’ என்று அரசஞ் சண்முகனார் பதிவுசெய்துள்ளார்.
- ‘கருணாமிர்த சாகரம்’ இயற்றிய ஆபிரகாம் பண்டிதர் இசைத்தமிழ் வளர்ச்சிக்கு 1912-ல் ஏற்படுத்திய ‘தஞ்சை சங்கீத வித்தியா மகாஜன சங்க’த்தின் வளர்ச்சிக்கும் ராஜாளியார் துணையாக இருந்ததை ஆபிரகாம் பண்டிதர் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார்.
- பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் நற்றிணை நூலுக்கு உரை எழுதிப் பதிப்பித்தபோது, பொருளுதவி செய்தோர்களுள் ராஜாளியாரின் உதவி இருந்ததைப் பின்னத்தூரார் பதிவுசெய்துள்ளார்.
- ஔவை சு.துரைசாமிப் பிள்ளை புறநானூற்றுக்கு உரை வரைந்தபோது முன்னுரையில், ஹரித்துவாரமங்கலத்துக்கு அருகில் உள்ள பள்ளியூர் கிருட்டிணசாமி சேனைநாட்டார் என்பவர் வழியாக ராஜாளியார் பற்றி அறிந்ததாகவும், அவரிடம் இருந்த புறநானூறு ஏட்டுச்சுவடியைப் படியெடுத்து வைத்திருந்த சேனைநாட்டாரிடமிருந்து தாம் பல திருத்தங்களை அறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். உ.வே.சா.வின் பார்வைக்கு இந்தப் புறநானூற்றுச் சுவடி உட்படவில்லை என்பதையும் பதிவுசெய்துள்ளார்.
- எனவே, ராஜாளியாரின் வீட்டு நூலகம் தமிழ்ச் செல்வங்களைப் பாதுகாத்து வைத்திருந்தமை புலனாகும். பின்னாளில் இந்த நூலகத்தின் நூல்கள் தருமபுரம் கல்லூரிக்குக் கொடையாக அளிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
- இந்திய தேசிய காங்கிரஸின் கமிட்டி உறுப்பினராகவும் விளங்கியவர். ஆங்கிலேய அதிகாரிகளான லாலி, சென்னை ஆளுநர் ஆஸ்டின் துரை உள்ளிட்டவர்களுக்கு நண்பராக விளங்கியவர் ராஜாளியார்.
- தாலுகா போர்டு தலைவராக இருந்தவர். தஞ்சைச் சிற்றூர் ஒன்றில் குறுநில மன்னர்போல் வாழ்ந்து, தமிழ்ப் புலவர்களை ஆதரித்து, சமய ஈடுபாட்டுடன் விளங்கிய ராஜாளியார் 06.04.1920-ல் இயற்கை எய்தினார்.
- அவர் மறைந்து நூறாண்டுகள் ஆனாலும் தமிழ் வளர்ச்சிக்கு அவர் அளித்த கொடைகள் அவர் பெயரை என்றும் நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (11 - 04 - 2021)