TNPSC Thervupettagam

தொல்குடிகளுக்கான தொலைநோக்குத் தடம்

October 25 , 2024 31 days 104 0

தொல்குடிகளுக்கான தொலைநோக்குத் தடம்

  • பாரம்பரிய அறிவியல் அறிவும் உற்பத்தி முறையும் நவீனமான​போது, காலங்​காலமாக அவற்றைக் கைக்கொண்​டிருந்த சமூகங்களைத் தொடர்ந்து தக்கவைத்​துக்​ கொண்டது பொதுவான உலகப் போக்கு. உதாரணமாக, ஐரோப்​பாவில் பாரம்பரிய சலவையாளர்களே நவீன சோப்பு, சலவை இயந்திரங்​களைத் தயாரித்து முதலா​ளி​களாகினர்.
  • இந்நிலைக்கு நேர்மாறாக, இந்தியாவில் நிகழ்ந்​ததற்குச் சாதியமும் ஏகாதிபத்​தி​யமும் காரணங்​களாகும். இப்போக்​குகள் சாதிகளுக்கும் பழங்குடிகளுக்கும் இடையிலான இடைவெளியை​யும், ஒவ்வொரு பிரிவு​களிலும் அகமும் புறமுமான இடைவெளியை​யும், ஆதிக்​கத்​தையும் சார்பையும் நீடிக்​கவைக்​கின்றன. பொருளா​தாரச் சார்பானது சட்ட உரிமை​களையும் அதிகாரத்​தையும் ஒடுக்​கப்​பட்டோர் அனுபவிப்​பதைத் தடுக்​கின்றன. இவற்றை அனுபவிக்க அம்மக்​களைப் பொருளா​தா​ரத்தில் தற்சார்​பாளர்களாக உருமாற்றுவது அவசியம்.
  • ஆதிதிரா​விடர் - பழங்குடி​யினர் நலத்துறை வடிவமைத்​துள்ள தனித்துவமான திட்டங்கள் அச்சமூகங்​களைப் பொருளா​தா​ரத்தில் தற்சார்​பாக்கும் பண்பு​களைக் கொண்டிருக்​கின்றன. இந்திய வரலாற்றில் முதல்​முறையாக 2024 ஜனவரியில் தமிழ்நாடு அரசின் நிதியில் தாட்கோ ஒருங்​கிணைத்த ‘ஆதிதிரா​விடர் - பழங்குடி​யினர் தொழில் முனைவோர் கண்காட்சி, கருத்​தரங்கம்’ அச்சமூகங்களின் பொருளா​தாரத் தற்சார்​புக்கான தொலைநோக்குத் தடத்தின் முன்னத்தி ஏர் ஆகும். பழங்குடி​யினர் நல இயக்குநரகம் இதை முன்னெடுக்​கிறது.

உற்பத்​தி​யாளராக உருமாற்றுதல்:

  • உடல் ஆரோக்கிய ஆர்வத்தால் மக்களிடம் மீளுரு​வாகின்ற மரபு உணவு வகைகள் பொருளாதார மதிப்பைப் பெறுகின்ற சூழலில், பழங்குடி​யினர் இயக்குநரகம், பழங்குடி​யினரின் பாரம்பரிய உணவு தானிய உற்பத்தியை நவீனமாக்கி, மதிப்புக் கூட்டுப் பொருள்​களாகவும் சந்தைப்​படுத்தும் திட்டங்​களைச் செயல்​படுத்து​கிறது. இதில் கால்நடைகள், தேனீ, மீன், நண்டு வளர்த்தல்; தானியங்கள், மலர்கள், காய்க​னிகளை விளைவித்தல், தேன்நெல்லி, தேன்முந்​திரி, சீதாப் பழச் சாறு உற்பத்தி செய்தல் போன்றவை அடங்கும்.
  • பழங்குடிப் பயனாளி​களுக்கு 3 ஆடுகள், ஒரு கிடா, 50 நாட்டுக் கோழிக் குஞ்சுகள், தீவனம் ஆகியவை வழங்கப்​படு​கின்றன. உற்பத்திச் செலவு​களைக் குறைக்​கவும் பணியாள் பற்றாக்​குறையைச் சமாளிக்​கவும் 19 வகையான அதிநவீனக் கருவிகள் குறைந்த வாடகைக்குத் தரப்படு​கின்றன. பழங்குடி​யினரில் 2 ஏக்கர் நிலமுள்ள 200 விவசா​யிகளை ஒரு குழுவாக்கி, கருவிகள் தேவைப்​படுவோர் முன்ப​திவுசெய்ய செயலியும் உருவாக்​கப்​பட்​டுள்ளது.
  • மீன் வளர்ப்பில் கூலிகளாகப் பணியாற்றும் இருளர்​களுக்கு மீன், நண்டு வளர்ப்​புக்​கெனப் புறம்​போக்கு நிலமும், ஏரிகளில் மீன் பிடிக்க உரிமமும் படகுகளும் கொடுக்​கப்​பட்​டுள்ளன. கற்பூரத்தைக் கொள்முதல் செய்து கோயில்​களில் விற்கின்ற அதியன்​களையும் வாக்ரி​களையும் (நரிக்​குறவர்) அப்பொருளைச் சுயமாக உற்பத்​தி​செய்து விற்கின்ற நிலைக்கு உருமாற்றுகின்​றனர்.
  • பாம்பு பிடிப்​ப​திலும் விஷமெடுப்​ப​திலும் அறிவுடைய இருளர்​களுக்கு முறையாகப் பயற்சி​யளித்து, மூலிகைப் பண்ணை அமைப்​பதும் நிகழ்​கிறது. அரியலூர் மாவட்டப் பழங்குடி​யினருக்காக முந்திரிக் காடுகளில் 1,360 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து முந்திரித் தொழிற்சாலை நிறுவப்​படு​கிறது.
  • இத்திட்​டங்​களைச் செயல்​படுத்த தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்​கழகம், அண்ணா​மலைப் பல்கலைக்​கழகம், ஹைதராபாத் இந்திய சிறுதானிய ஆராய்ச்சி மையம், பெங்களூரு இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், விவசாயப் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், கொச்சி தேசிய மீன் மரபியல் வள மையம் என மாநில, மத்திய நிறுவனங்​களுடன் பழங்குடி​யினர் இயக்குநரகம் புரிந்​துணர்வு ஒப்பந்தம் செய்து​கொண்டு​உள்ளது.
  • அரசின் கல்வி நிறுவனங்​களைப் பழங்குடி​யினரின் முன்னேற்​றத்​துக்குப் பயன்படுத்து​கின்ற இச்செயல்பாடு முன்மா​திரியான முன்னெடுப்​பாகும். இதற்கென ரூ.25 கோடி ஒதுக்​கப்​பட்டு பழங்குடி​யினருக்குப் பயிற்சி​களும் செய்முறை​களும் கொடுக்​கப்​படுகின்றன.
  • இந்நிறு​வனங்​களின் அறிஞர்​களால் வெளியிடப்​பட்​டுள்ள பயிற்சிக் கையேடுகள் இத்திட்​டங்களை எளிமையாக விளக்கு​கின்றன. பழங்குடி​யினரை உற்பத்​தியில் வலுப்​படுத்த அவர்களுடன் இந்நிறு​வனங்கள் மூன்றாண்​டுகள் இணைந்து பயணிக்​கின்றன. தொண்டு நிறுவனங்​களும் இத்திட்​டங்​களில் இணைந்​துள்ளன.
  • இவற்றின் செயல்​பாடு​களைப் பரிசோ​திக்கப் பழங்குடியின இளைஞர்​களுக்குப் பயற்சி​யளிக்​கப்​பட்​டிருக்​கிறது. ஊதியத்​துடன் அவர்கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இத்திட்​டங்கள் அரியலூர், காஞ்சிபுரம், செங்கல்​பட்டு, சேலம், திருவள்​ளூர், திருவண்ணாமலை, திருச்​சிராப்​பள்ளி, விழுப்புரம் மாவட்​டங்​களில் முதற்​கட்​ட​மாகத் தொடங்​கப்​பட்​டுள்ளன.
  • பழங்குடி​யினரின் நிலையை அறிந்து அவர்களை முன்னேற்ற தமிழ்நாடு பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார நிலையைக் கணக்கெடுக்கப் பழங்குடி​யினர் இயக்குநரகம் ரூ.4.49 கோடி ஒதுக்கி​யுள்ளது. ஆதிதிரா​விடர் - பழங்குடி​யினர் நலத் துறையால் 2023இல் நிறுவப்​பட்டு, அதன் நிதியில் சென்னை சமூகப் பணிக் கல்லூரியில் இயங்கு​கின்ற சமூகநீதி - சமத்துவ மையம் அக்கணக்​கெடுப்பை ஒருங்​கிணைக்​கிறது.

இளந்தலை​மையின் எதிர்​காலம்:

  • பழங்குடியின இளந்தலை​முறையை முன்னேற்றும் திட்டங்​களும் செயல்​படுத்​தப்​படுகின்றன. தமிழ்​நாட்டில் உள்ள 67 பழங்குடி​யினர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி​களில் 2023-24இல் 12ஆம் வகுப்பில் பயின்ற 1,040 மாணவ - மாணவி​களில் 985 பேர் தேர்ச்​சிபெற்​றனர். இவர்களுக்கென நடத்தப்பட்ட பயற்சி​களால் தேசியப் போட்டித் தேர்வு​களில் தேர்ந்​தவர்கள் திருச்​சிராப்​பள்ளி என்.ஐ.டி-யில் 3 பேரும், தேசிய சட்டக் கல்லூரியில் ஒருவரும், என்ஐஎப்டி தரமணியில் 3 பேரும் பெங்களூருவில் ஒருவரும், திருவாரூர், காந்தி​கிராமம் மத்தியப் பல்கலைக்​கழகங்​களில் தலா 3 பேரும், 934 பேர் பிற கல்லூரிகளிலும், மீதமுள்ளோர் ஐடிஐ-​யிலும் சேர்ந்​துள்ளனர்.
  • பட்ட மேற்படிப்பு, முனைவர் பட்டங்​களுக்கான நுழைவுத் தேர்வு​களுக்குப் பயிற்​சி​யளித்தல், பல்கலைக்​கழகங்​களில் சேர்த்தல் போன்ற இலக்குகளை முன்வைத்து, முதற்​கட்​ட​மாகக் காஞ்சிபுரத்தில் 312 மாணவர்​களுக்குப் பயிற்சி அளிக்​கப்​பட்டது. இதில், இத்திட்​டத்தால் பலனடைந்​தவர்கள் நேரிலும், தென் கொரியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற அயல்நாடு​களில் பயிலும் பழங்குடியின முன்மாதிரி மாணவர்கள் இணைய வழியிலும் ஊக்க உரையாற்றினர். இளந்தலை​முறை​யினரின் முன்னேற்​றத்தில் இணையதளமும் முக்கியப் பங்காற்று​வதால் ஈரோடு, திருப்​பத்தூர் மாவட்​டங்​களில் இணைய வசதி இல்லாத 64 பழங்குடியின குக்கிராமங்​களுக்கு ரூ.6 கோடியில் அவ்வசதி ஏற்படுத்​தப்​பட்​டுள்ளது.
  • கல்விக்​கேற்ற வேலையில்லாது உள்ளூரிலேயே உழலும் பழங்குடியின இளைஞர்​களுக்கு வேலைக்​கேற்ற கல்வி வழங்கப்​படு​கிறது. பழங்குடி​யினப் பள்ளி​களில் உள்ள ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப 662 பட்டதா​ரி​களுக்கு 16 மையங்​களில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (‘டெட்’) பயிற்சி அளிக்​கப்​படு​கிறது. கல்விக்​கேற்ற வேலையில்லா இளைஞர்​களைக் கண்டறிதல், வேலைக்​கேற்ற திறன்​களைக் கற்பித்தல், தொழிற்​சாலைகளில் பணியாற்றும் வாய்ப்புகளை உருவாக்​குதல் என அத்திட்டம் செயல்​படுத்​தப்​படு​கிறது.
  • இதில் நரிக்​குறவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உள்பட 146 பேருக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை மாத ஊதியத்தில் 9 நிறுவனங்கள் வேலை வழங்கின. பழங்குடி​யினரைப் பாரம்​பரியக் குடிசைகளி​லிருந்து மாற்றி பாதுகாப்பான நவீன வீடுகளில் வசிக்கும் திட்டமும் செயல்​படுத்​தப்​படு​கிறது. இதற்கென 2020-21ஆம் ஆண்டு​களில் தலா ரூ.3 லட்சத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கான நிதி சமவெளிக்கு 5,07,000 ரூபாய், மலைப்​பகு​திக்கு 5,70,000 ரூபாய் என உயர்த்தப்​பட்டது. கடந்த 3 ஆண்​டு​களில் ரூ.350 கோடியில் வீடுகள் கட்டப்​பட்​டுள்ளன.

ஐந்திணையை அரவணைப்போம்:

  • சாதியக் கட்டமைப்பில் ஒவ்வொரு சாதியிலும் சிறு, பெரு, பன்னாட்டு முதலா​ளி​களும் சில சாதிகளே முதலா​ளி​களாகவும் இருக்​கின்​றனர். சமூக நீதிக் கோட்பாட்டை ஒவ்வொரு சாதியிலும் உள்ள முதலா​ளி​களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் வரையறுக்க வேண்டும். இது, பழங்குடி​யினர் சமூகங்​களிலும் குறைந்​த​பட்சம் அவர்களின் மக்கள்​தொகைக்கு ஏற்ற சதவீதத்​திலாவது முதலா​ளி​களின் உருவாக்​கத்தைக் கோரிநிற்​கிறது.
  • முதலா​ளி​களின் உருவாக்​கத்​திலும் அவர்கள் நிலைபெறு​வ​திலும் அரசாங்​கமும் ஊடகங்​களும் நுகர்​வோரும் முக்கியப் பங்காற்றுகின்​றனர். தமிழ்நாடு அரசாங்​கத்தின் சமூகநீதிக் கோட்பாட்டுத் தடத்தில் ஆதிதிரா​விடர் - பழங்குடி​யினர் நலத் துறையின், பழங்குடி​யினர் நல இயக்குநரகம் முன்னெடுக்​கின்ற மேற்குறிப்​பிட்ட திட்டங்​களால் பழங்குடி​யினரிலும் முதலாளிகள் உருவாகும் காலம் கனிகிறது.
  • பழங்குடி​யினரிடம் அச்சு, காட்சி ஊடகங்கள் இல்லாத​தா​லும், அரசாங்​கத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த விழிப்பு​ணர்வு இல்லாத​தாலும் அவர்களிடம் அவற்றைக் கொண்டு​போய்ச் சேர்க்க ​வேண்டிய ஜனநாயகக் கடமை ஊடகங்​களுக்கு இருக்​கிறது. சமகாலத்தில் மரபு உணவுக்காக உருவாகி​யுள்ள வெற்றிடத்​தில், தொல்குடி​யினர் வேளாண்மை மேலாண்மைத் திட்டத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தலில் பழங்குடிகளால் உற்பத்தி செய்யப்​படும் பொருள்கள் 2025-ஜனவரியில் ‘ஐந்திணை’ என்ற பெயரில் விற்பனைக்கு வருகின்றன. பழங்குடி​யினருக்குப் பொருளா​தாரத் தற்சார்பைத் தருவதுடன் அவர்களை முதலா​ளி​களாகவும் உருமாற்றுகின்ற தொலைநோக்கு தென்படும் ஐந்திணையை மக்களும் அரவணைப்பது நாட்டின் வளர்ச்​சிக்கும் சமூகநீ​திக்கும் மட்டுமல்ல... ஒவ்வொருவரின் உடலுக்கும் நலம் தரும்​!

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்