தொல்குடிகளுக்கான தொலைநோக்குத் தடம்
- பாரம்பரிய அறிவியல் அறிவும் உற்பத்தி முறையும் நவீனமானபோது, காலங்காலமாக அவற்றைக் கைக்கொண்டிருந்த சமூகங்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டது பொதுவான உலகப் போக்கு. உதாரணமாக, ஐரோப்பாவில் பாரம்பரிய சலவையாளர்களே நவீன சோப்பு, சலவை இயந்திரங்களைத் தயாரித்து முதலாளிகளாகினர்.
- இந்நிலைக்கு நேர்மாறாக, இந்தியாவில் நிகழ்ந்ததற்குச் சாதியமும் ஏகாதிபத்தியமும் காரணங்களாகும். இப்போக்குகள் சாதிகளுக்கும் பழங்குடிகளுக்கும் இடையிலான இடைவெளியையும், ஒவ்வொரு பிரிவுகளிலும் அகமும் புறமுமான இடைவெளியையும், ஆதிக்கத்தையும் சார்பையும் நீடிக்கவைக்கின்றன. பொருளாதாரச் சார்பானது சட்ட உரிமைகளையும் அதிகாரத்தையும் ஒடுக்கப்பட்டோர் அனுபவிப்பதைத் தடுக்கின்றன. இவற்றை அனுபவிக்க அம்மக்களைப் பொருளாதாரத்தில் தற்சார்பாளர்களாக உருமாற்றுவது அவசியம்.
- ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறை வடிவமைத்துள்ள தனித்துவமான திட்டங்கள் அச்சமூகங்களைப் பொருளாதாரத்தில் தற்சார்பாக்கும் பண்புகளைக் கொண்டிருக்கின்றன. இந்திய வரலாற்றில் முதல்முறையாக 2024 ஜனவரியில் தமிழ்நாடு அரசின் நிதியில் தாட்கோ ஒருங்கிணைத்த ‘ஆதிதிராவிடர் - பழங்குடியினர் தொழில் முனைவோர் கண்காட்சி, கருத்தரங்கம்’ அச்சமூகங்களின் பொருளாதாரத் தற்சார்புக்கான தொலைநோக்குத் தடத்தின் முன்னத்தி ஏர் ஆகும். பழங்குடியினர் நல இயக்குநரகம் இதை முன்னெடுக்கிறது.
உற்பத்தியாளராக உருமாற்றுதல்:
- உடல் ஆரோக்கிய ஆர்வத்தால் மக்களிடம் மீளுருவாகின்ற மரபு உணவு வகைகள் பொருளாதார மதிப்பைப் பெறுகின்ற சூழலில், பழங்குடியினர் இயக்குநரகம், பழங்குடியினரின் பாரம்பரிய உணவு தானிய உற்பத்தியை நவீனமாக்கி, மதிப்புக் கூட்டுப் பொருள்களாகவும் சந்தைப்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்துகிறது. இதில் கால்நடைகள், தேனீ, மீன், நண்டு வளர்த்தல்; தானியங்கள், மலர்கள், காய்கனிகளை விளைவித்தல், தேன்நெல்லி, தேன்முந்திரி, சீதாப் பழச் சாறு உற்பத்தி செய்தல் போன்றவை அடங்கும்.
- பழங்குடிப் பயனாளிகளுக்கு 3 ஆடுகள், ஒரு கிடா, 50 நாட்டுக் கோழிக் குஞ்சுகள், தீவனம் ஆகியவை வழங்கப்படுகின்றன. உற்பத்திச் செலவுகளைக் குறைக்கவும் பணியாள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் 19 வகையான அதிநவீனக் கருவிகள் குறைந்த வாடகைக்குத் தரப்படுகின்றன. பழங்குடியினரில் 2 ஏக்கர் நிலமுள்ள 200 விவசாயிகளை ஒரு குழுவாக்கி, கருவிகள் தேவைப்படுவோர் முன்பதிவுசெய்ய செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
- மீன் வளர்ப்பில் கூலிகளாகப் பணியாற்றும் இருளர்களுக்கு மீன், நண்டு வளர்ப்புக்கெனப் புறம்போக்கு நிலமும், ஏரிகளில் மீன் பிடிக்க உரிமமும் படகுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கற்பூரத்தைக் கொள்முதல் செய்து கோயில்களில் விற்கின்ற அதியன்களையும் வாக்ரிகளையும் (நரிக்குறவர்) அப்பொருளைச் சுயமாக உற்பத்திசெய்து விற்கின்ற நிலைக்கு உருமாற்றுகின்றனர்.
- பாம்பு பிடிப்பதிலும் விஷமெடுப்பதிலும் அறிவுடைய இருளர்களுக்கு முறையாகப் பயற்சியளித்து, மூலிகைப் பண்ணை அமைப்பதும் நிகழ்கிறது. அரியலூர் மாவட்டப் பழங்குடியினருக்காக முந்திரிக் காடுகளில் 1,360 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து முந்திரித் தொழிற்சாலை நிறுவப்படுகிறது.
- இத்திட்டங்களைச் செயல்படுத்த தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஹைதராபாத் இந்திய சிறுதானிய ஆராய்ச்சி மையம், பெங்களூரு இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், விவசாயப் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், கொச்சி தேசிய மீன் மரபியல் வள மையம் என மாநில, மத்திய நிறுவனங்களுடன் பழங்குடியினர் இயக்குநரகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுஉள்ளது.
- அரசின் கல்வி நிறுவனங்களைப் பழங்குடியினரின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்துகின்ற இச்செயல்பாடு முன்மாதிரியான முன்னெடுப்பாகும். இதற்கென ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டு பழங்குடியினருக்குப் பயிற்சிகளும் செய்முறைகளும் கொடுக்கப்படுகின்றன.
- இந்நிறுவனங்களின் அறிஞர்களால் வெளியிடப்பட்டுள்ள பயிற்சிக் கையேடுகள் இத்திட்டங்களை எளிமையாக விளக்குகின்றன. பழங்குடியினரை உற்பத்தியில் வலுப்படுத்த அவர்களுடன் இந்நிறுவனங்கள் மூன்றாண்டுகள் இணைந்து பயணிக்கின்றன. தொண்டு நிறுவனங்களும் இத்திட்டங்களில் இணைந்துள்ளன.
- இவற்றின் செயல்பாடுகளைப் பரிசோதிக்கப் பழங்குடியின இளைஞர்களுக்குப் பயற்சியளிக்கப்பட்டிருக்கிறது. ஊதியத்துடன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டங்கள் அரியலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் மாவட்டங்களில் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளன.
- பழங்குடியினரின் நிலையை அறிந்து அவர்களை முன்னேற்ற தமிழ்நாடு பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார நிலையைக் கணக்கெடுக்கப் பழங்குடியினர் இயக்குநரகம் ரூ.4.49 கோடி ஒதுக்கியுள்ளது. ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத் துறையால் 2023இல் நிறுவப்பட்டு, அதன் நிதியில் சென்னை சமூகப் பணிக் கல்லூரியில் இயங்குகின்ற சமூகநீதி - சமத்துவ மையம் அக்கணக்கெடுப்பை ஒருங்கிணைக்கிறது.
இளந்தலைமையின் எதிர்காலம்:
- பழங்குடியின இளந்தலைமுறையை முன்னேற்றும் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 67 பழங்குடியினர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2023-24இல் 12ஆம் வகுப்பில் பயின்ற 1,040 மாணவ - மாணவிகளில் 985 பேர் தேர்ச்சிபெற்றனர். இவர்களுக்கென நடத்தப்பட்ட பயற்சிகளால் தேசியப் போட்டித் தேர்வுகளில் தேர்ந்தவர்கள் திருச்சிராப்பள்ளி என்.ஐ.டி-யில் 3 பேரும், தேசிய சட்டக் கல்லூரியில் ஒருவரும், என்ஐஎப்டி தரமணியில் 3 பேரும் பெங்களூருவில் ஒருவரும், திருவாரூர், காந்திகிராமம் மத்தியப் பல்கலைக்கழகங்களில் தலா 3 பேரும், 934 பேர் பிற கல்லூரிகளிலும், மீதமுள்ளோர் ஐடிஐ-யிலும் சேர்ந்துள்ளனர்.
- பட்ட மேற்படிப்பு, முனைவர் பட்டங்களுக்கான நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சியளித்தல், பல்கலைக்கழகங்களில் சேர்த்தல் போன்ற இலக்குகளை முன்வைத்து, முதற்கட்டமாகக் காஞ்சிபுரத்தில் 312 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், இத்திட்டத்தால் பலனடைந்தவர்கள் நேரிலும், தென் கொரியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற அயல்நாடுகளில் பயிலும் பழங்குடியின முன்மாதிரி மாணவர்கள் இணைய வழியிலும் ஊக்க உரையாற்றினர். இளந்தலைமுறையினரின் முன்னேற்றத்தில் இணையதளமும் முக்கியப் பங்காற்றுவதால் ஈரோடு, திருப்பத்தூர் மாவட்டங்களில் இணைய வசதி இல்லாத 64 பழங்குடியின குக்கிராமங்களுக்கு ரூ.6 கோடியில் அவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- கல்விக்கேற்ற வேலையில்லாது உள்ளூரிலேயே உழலும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைக்கேற்ற கல்வி வழங்கப்படுகிறது. பழங்குடியினப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப 662 பட்டதாரிகளுக்கு 16 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (‘டெட்’) பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்விக்கேற்ற வேலையில்லா இளைஞர்களைக் கண்டறிதல், வேலைக்கேற்ற திறன்களைக் கற்பித்தல், தொழிற்சாலைகளில் பணியாற்றும் வாய்ப்புகளை உருவாக்குதல் என அத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- இதில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உள்பட 146 பேருக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை மாத ஊதியத்தில் 9 நிறுவனங்கள் வேலை வழங்கின. பழங்குடியினரைப் பாரம்பரியக் குடிசைகளிலிருந்து மாற்றி பாதுகாப்பான நவீன வீடுகளில் வசிக்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதற்கென 2020-21ஆம் ஆண்டுகளில் தலா ரூ.3 லட்சத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கான நிதி சமவெளிக்கு 5,07,000 ரூபாய், மலைப்பகுதிக்கு 5,70,000 ரூபாய் என உயர்த்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.350 கோடியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
ஐந்திணையை அரவணைப்போம்:
- சாதியக் கட்டமைப்பில் ஒவ்வொரு சாதியிலும் சிறு, பெரு, பன்னாட்டு முதலாளிகளும் சில சாதிகளே முதலாளிகளாகவும் இருக்கின்றனர். சமூக நீதிக் கோட்பாட்டை ஒவ்வொரு சாதியிலும் உள்ள முதலாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தும் வரையறுக்க வேண்டும். இது, பழங்குடியினர் சமூகங்களிலும் குறைந்தபட்சம் அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ற சதவீதத்திலாவது முதலாளிகளின் உருவாக்கத்தைக் கோரிநிற்கிறது.
- முதலாளிகளின் உருவாக்கத்திலும் அவர்கள் நிலைபெறுவதிலும் அரசாங்கமும் ஊடகங்களும் நுகர்வோரும் முக்கியப் பங்காற்றுகின்றனர். தமிழ்நாடு அரசாங்கத்தின் சமூகநீதிக் கோட்பாட்டுத் தடத்தில் ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத் துறையின், பழங்குடியினர் நல இயக்குநரகம் முன்னெடுக்கின்ற மேற்குறிப்பிட்ட திட்டங்களால் பழங்குடியினரிலும் முதலாளிகள் உருவாகும் காலம் கனிகிறது.
- பழங்குடியினரிடம் அச்சு, காட்சி ஊடகங்கள் இல்லாததாலும், அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாததாலும் அவர்களிடம் அவற்றைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டிய ஜனநாயகக் கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது. சமகாலத்தில் மரபு உணவுக்காக உருவாகியுள்ள வெற்றிடத்தில், தொல்குடியினர் வேளாண்மை மேலாண்மைத் திட்டத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தலில் பழங்குடிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் 2025-ஜனவரியில் ‘ஐந்திணை’ என்ற பெயரில் விற்பனைக்கு வருகின்றன. பழங்குடியினருக்குப் பொருளாதாரத் தற்சார்பைத் தருவதுடன் அவர்களை முதலாளிகளாகவும் உருமாற்றுகின்ற தொலைநோக்கு தென்படும் ஐந்திணையை மக்களும் அரவணைப்பது நாட்டின் வளர்ச்சிக்கும் சமூகநீதிக்கும் மட்டுமல்ல... ஒவ்வொருவரின் உடலுக்கும் நலம் தரும்!
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 10 – 2024)