அனசுயா சாராபாய் (1885-1972):
- லண்டனில் பொருளாதாரம் படித்தவர். இந்தியத் தொழிலாளர் சங்கத்தின் முதல் பெண் தலைவர். அகமதாபாதில் ஜவுளித் தொழிலாளர் நலனுக்காக ‘மஸ்தூர் மகாஜன்’ சங்கத்தைத் தொடங்கிச் செயல்பட்டார். 1918இல் தொழி லாளர்களுடன் ஒரு மாதம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, 35% ஊதிய உயர்வைப் பெற்றுக் கொடுத்தார்.
மணிபென் காரா (1905-1979):
- மகாராஷ்டிரத்தைச் சேந்த இவர், மும்பை துறைமுகம், கப்பல் துறைத் தொழிலாளர் சங்கங்களை அமைத்தவர். 1936இல் அகில இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரஸில் (ஏஐடியுசி) முதல் பெண் பொதுச் செயலாளர்.
விமல் ரணதிவே (1915-1999):
- அகில இந்தியத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தின் முதல் பொதுச் செயலாளர், அகில இந்திய அங்கன்வாடிப் பணியாளர்கள், உதவியாளர்கள் சங்க நிறுவனர், பீடித் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் போன்ற பொறுப்புகளைத் திறம்பட வகித்தவர். ‘தி வாய்ஸ் ஆஃப் தி ஒர்க்கிங் வுமன்’, ‘காம்காஜி மகிளா’ ஆகிய பத்திரிகைகளை நிறுவியவர்.
இலா பட் (1933-2022):
- அகமதாபாதைச் சேர்ந்த இவர், சட்டம் படித்தவர். பெண் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கத்தை (SEWA) 1972இல் தொடங்கினார். பெண் களுக்கான கூட்டுறவு வங்கி, உலக வங்கி உருவாகவும் காரணமானவர்.
மைதிலி சிவராமன் (1939-2021):
- தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், ஐநாவின் இந்தியத் தூதரகப் பணியிலிருந்து விலகி, மக்கள் பணியில் தம்மை இணைத்துக் கொண்டார். பல நிறுவனங்களில் நடைபெற்ற தொழிலாளர் விரோதச் செயல்பாடுகளைக் குறித்து, பத்திரிகைகளில் எழுதினார். தொழிற்சாலை வாயில் கூட்டங்களில் உரையாற்றினார். வேலை நிறுத்தப் போராட்டங்களைத் துணிச்சலுடன் மேற்கொண்டார்.
கே.ஹேமலதா (1951-):
- மருத்துவர்; சிஐடியுவின் முதல் பெண் தலைவர். 1979இல் சிஐடியுவில் இணைந்தார். தற்போது இரண்டாவது முறையாக சிஐடியுவின் அகில இந்தியத் தலைவராக இருக்கிறார்.
அமர்ஜீத் கவுர் (1952-):
- ஏஐடியுசி-வின் தேசியச் செயலாளராக, 1994 முதல் 2017 வரை இருந்த அமர்ஜீத், தற்போது அதன் பொதுச் செயலாளராக இருக்கிறார். மணிபென் காராவுக்குப் பிறகு சுதந்திர இந்தியாவில் ஏஐடியுசி-வின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இரண்டாம் பெண் இவர்.
மெர்சிகுட்டி அம்மா (1955-):
- மெர்சி குட்டி அம்மாவின் பெயரைச் சொன்னால் கேரளத்தின் தொழில் நிறுவனங்கள் நடுங்கும் என்கிற பெயர் இவருக்கு உண்டு. மீனவர் சம்மேளனம், கயிறு தொழிலாளர் சங்கம், காதி தொழிலாளர் கூட்டமைப்பு போன்றவற்றில் பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார். மூன்று முறை எம்.எல்.ஏ.வும்கூட.
எஸ்.வரலட்சுமி (1970-):
- கர்நாடகத்தில் நன்கு அறியப்பட்ட தொழிற்சங்கத் தலைவர் இவர். 2017இல் இவர் தலைமை யில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடிப் பணியாளர்களுடன் இணைந்து நான்கு நாள்கள் இரவும் பகலும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்.
சந்தோஷ் குமாரி தேவி (1897-1989):
- ‘சணல் தொழிலாளர்கள்’ சங்கத்தை உருவாக்கிய இவர், ஒருங்கிணைந்த வங்கத்தில் 1918-1928 காலகட்டத்தில் தொழிற்சங்க முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர். தொழிலாளர்களுக்காகப் ‘ஸ்ராமிக்’ என்கிற பத்திரிகை யையும் நடத்தினார்.
நன்றி: தி இந்து (05 – 05 – 2023)