TNPSC Thervupettagam

தொழிலாளர் பட்ஜெட்: தமிழ்நாடு அரசின் கடமை என்ன?

August 15 , 2024 105 days 106 0

தொழிலாளர் பட்ஜெட்: தமிழ்நாடு அரசின் கடமை என்ன?

  • சாமானிய மக்களை வலுப்​படுத்தும் சட்டங்கள் மகத்தானவை... அரிதானவை​யும்கூட. அப்படியான ஒரு முக்கியமான சட்டம்தான் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி​யளிப்புச் சட்டம்’. நாடாளு​மன்​றத்தில் இயற்றப்​பட்டு, 2005 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் இச்சட்டம், ‘100 நாள் வேலைத் திட்ட’மாக இந்தியா முழுவதும் உள்ள கிராமப்​புறங்​களில் நடைமுறைப்​படுத்​தப்​பட்​டு​வரு​கிறது.
  • விளிம்​புநிலை மக்களின் வாழ்வாதா​ரத்தை மேம்படுத்து​வதிலும் அனைத்துத் தரப்பினருக்கும் வாய்ப்பை உருவாக்கு​வதிலும் இச்சட்டம் முக்கியப் பங்கு வகித்து​வரு​கிறது. கிராமப் பொதுச் சொத்துகள் உயிர்ப்​புடன் இருக்​கவும் வழிவகை செய்கிறது.
  • இது வெறும் திட்டமாக இல்லாமல், இந்திய மக்களுக்கான ஒரு சட்டமாக இருப்​ப​தால்தான் எத்தனை அரசுகள் மாறி மாறி வந்தா​லும், இந்தத் திட்டம் எவ்வளவுதான் திசைமாறிப் போனாலும், பல்வேறு சமூக அமைப்புகள் அதை நேர்ப்​படுத்திச் சட்டம் மூலம் மக்கள் பெறும் அதிகாரங்களை, வாழ்வாதாரப் பணிகளை மக்களிடமே கொண்டுசேர்க்கும் முயற்​சியில் தொடர்ந்து ஈடுபட்​டு​வரு​கின்றன. எல்லா​வற்​றையும் தாண்டி, இந்தத் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்​கப்பட என்ன தேவை?

பலனளிக்கும் திட்டம்:

  • பேச்சுரிமை, எழுத்​துரிமை, கல்வி பெறுவதற்கான உரிமை ஆகியவை சட்டத்​தினால் வழங்கப்​பட்​டிருப்​ப​துபோல, கிராமப்​புறங்​களில் வசிக்​கும், 18 வயது நிரம்பிய ஒவ்வொரு​வரும் வேலை பெறுவதற்கான உரிமையை வழங்கி​யிருக்​கிறது இந்தச் சட்டம். கெஞ்சிக் கேட்டு அல்ல, உரிமையோடு நம் மக்கள் வேலை பெற வழிவகுக்கும் மகத்தான சட்டம் இது.
  • ஆனால், வன உரிமைச் சட்டம், கிராமசபை அதிகாரங்கள் போன்று மக்களுக்கான அதிகாரங்களை வழங்கும் சட்டங்​களைப் பலவீனப்​படுத்தும் நம் பொது நிர்வாக நடைமுறையில் இருந்து இச்சட்​டமும் தப்பவில்லை.
  • கிராமப்​புறங்​களில் பல ஆதாரங்களை உருவாக்கு​வதற்கு (Asset Creation) வழிவகுத்த இந்தத் திட்டம், ஆரம்பத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. காலப்​போக்கில் அதன் போக்கு மாற்றங்​களுக்கு உள்ளானது.
  • இதற்குப் பல காரணங்கள் சொல்லப்​பட்​டாலும் முறையான பயிற்​சி​யும், வழிகாட்​டு​தலையும் வழங்க அரசு தவறிவிட்டதே முக்கியக் காரணம். 2023ஆம் ஆண்டு தன்னாட்சி, அடிப்படை நிர்வாக நிறுவனம் (Institute of Grassroots Governance) ஆகிய சமூக அமைப்புகள் இணைந்து மாவட்டம் தோறும் ஊராட்​சிக்குச் சென்று நடத்திய ஆய்வில் இது தெள்ளத் தெளிவாகத் தெரிய​வந்தது.
  • சிலர் விமர்​சிப்​ப​துபோல, இந்த வேலை வெட்டி வேலை அல்ல; வெற்றிகரமான வேலை. இதற்கு நிறைய உதாரணங்​களைச் சொல்ல முடியும். இந்தத் திட்டத்தின் மூலம் வேதாரண்யம் ஒன்றியத்தில் பஞ்சநதிக்​குளம் நடுச்​சேத்தி ஊராட்​சியில் புதிய வாய்க்​கால்களை அமைத்ததோடு கட்டு​மானப் பணிகளிலும் மக்கள் ஈடுபட்டுப் பாலங்​களைக் கட்டியிருக்கிறார்கள்.
  • நேரடி​யாகச் சென்று பார்த்தபோது அந்தச் செயல்​பாட்டைத் தெளிவாக அறிந்து​கொள்ள முடிந்தது. திருவள்ளூர் மாவட்டம், அதிகத்தூர் ஊராட்​சியில் புதிதாகப் பல குளங்களை இத்திட்டம் மூலமாகவே மக்கள் வெட்டி​னார்கள். புதுக்​கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்​சியில் மற்ற பல திட்டங்​களின் நிதிகளை இந்தத் திட்டத்தோடு இணைத்து (Convergence) தடுப்​பணைகள், ஒருங்​கிணைந்த சுகாதார வளாகங்கள், தோப்பு உருவாக்​குதல் உள்ளிட்ட பல பணிகளைச் செய்து முடித்​திருக்​கிறார்கள்.
  • இவை மிகைப்​படுத்​தப்பட்ட செய்திகள் அல்ல. நேரடி உதாரணங்கள். ஆனால், இப்படிச் சில ஊராட்​சிகளில் திட்டம் சரியாகச் செயல்​படு​வதுபோல, தமிழ்​நாட்டில் ஏன் பரவலாக இந்தத் திட்டம் செயல்​படுத்​தப்​பட​வில்லை என்கிற கேள்வி பலரிடம் இருக்கிறது.

தொழிலாளர் பட்ஜெட் என்றால் என்ன?

  • ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து​கொள்ள வேண்டும். 100 நாள் வேலையை வழங்குவது மாவட்ட ஆட்சியர் என்றோ வட்டார வளர்ச்சி அலுவலர் என்றோ பலர் நினைத்​துக்​கொண்​டிருக்​கிறார்கள். இன்னும் சிலர், பணித்தளப் பொறுப்​பாளர்தான் முடிவு செய்கிறார் என்றுகூட நினைப்பது உண்டு.
  • ஆனால் உண்மை​யில், மக்களாகிய நாம்தான் நமக்கான பணிகளை முடிவு செய்து​கொள்​கிறோம். ஆச்சரியமாக இருக்​கிறதா? ஆம்... பல வேளைகளில் சட்டம் சொல்வது ஒன்றாக​வும், அலுவலர்​களின் வாய்மொழி உத்தரவு​களும், வாட்ஸ்அப் செய்தி​களும், நடைமுறை அணுகுமுறை​களும் வேறாகவும் இருப்பது தமிழ்​நாட்​டுக்குப் புதிதல்ல. இத்திட்​டமும் அதற்கு விதிவிலக்​கல்ல.
  • ஒவ்வொரு ஊராட்​சியும் அடுத்து வரும் நிதியாண்டில் தங்கள் ஊராட்​சியில் எந்த இடத்தில் வேலைசெய்யப் போகிறது, என்ன வேலை, எத்தனை பேர் வேலை செய்யப் போகிறார்கள், அதற்கான நிதி என்ன என்பதை எல்லாம் திட்ட​மிட்டு முடிவெடுக்க வேண்டும். ‘லேபர் பட்ஜெட்’ அல்லது தொழிலாளர் வரவு - செலவு என்று குறிப்​பிடப்​படும் இந்த முறை மூலமாகத்தான் ஒவ்வொரு ஊராட்​சிக்கான வேலை பெறும் உரிமையை உறுதி​செய்​கிறது சட்டம்.
  • வரும் அக்டோபர் 2 அன்று இதற்கான பணிகள் தொடங்​க​விருக்​கின்றன. அன்று நடக்கும் கிராமசபையில் திட்டம் தயாரிக்கும் பணிகள் முறையாகத் தொடங்​கும். அன்று முதல் வரும் நவம்பர் 30க்குள் இந்த வரவு - செலவுத் திட்டத்தைத் தயார்​செய்து கிராமசபை ஒப்புதலைப் பெற வேண்டும். அவ்வாறு பெறப்​பட்​டிருக்கும் திட்டம் என்பது மிக முக்கியமான ஒன்று.
  • அடுத்த நிதியாண்டில் நமது ஊரில் எத்தனை பேருக்கு வேலை கொடுக்​கப்​படப்​போகிறது, எத்தனை நாளுக்கு வேலை கொடுக்​கப்​படப்​போகிறது என்பதை நிர்ண​யிக்கும் அதிகாரத்தை இந்தத் திட்ட​மிடுதல் மூலமாகத்தான் மக்கள் பெறுகிறார்கள். வாய்ப்​புள்ள ஊராட்​சிகளில் ஊராட்சி நிர்வாகத்தோடு இணைந்து சமூக அமைப்புகள் தொழிலாளர் பட்ஜெட் தயாரிக்​கின்றன. ஆனால், அதை நடைமுறைப்​படுத்து​வதற்கு அரசு நிர்வாகக் கட்டமைப்பு தயாராக இல்லை.
  • ஒருவேளை கிராமப்​புறங்​களில் கூடுதலாக வேலை தேவைப்​பட்​டால், திருத்​தப்பட்ட தொழிலாளர் பட்ஜெட்டைப் போடலாம். சென்ற நிதியாண்​டில்கூட மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி (2023-2024) ரூ.60,000 கோடி. பிறகு, திருத்​தப்பட்ட தொழிலாளர் பட்ஜெட் முலம் ரூ.86,000 கோடி கொடுக்​கப்​பட்டது.

தொழிலாளர் பட்ஜெட்டின் முக்கியத்துவம்:

  • மத்திய பட்ஜெட்டில் இத்திட்​டத்​துக்காக இந்த நிதியாண்டில் ரூ.86,000 கோடி நிதி ஒதுக்​கப்​பட்டு இருக்​கிறது. ஏறத்தாழ 14.23 கோடி மக்கள் வேலையை எதிர்​பார்த்திருக்கும் நிலையில், இத்திட்​டத்​துக்கு ரூ.3,44,000 கோடி தேவைப்​படும். மிகவும் பற்றாக்​குறையான இந்த ஒதுக்​கீட்​டில், தமிழ்​நாட்​டுக்கான நிதியைப் பெற வேண்டாமா? தற்போது பல இடங்களில் வேலைகள் வழங்கப்​படாமல் இருக்கும் சூழலில், தொழிலாளர் பட்ஜெட்டை இயக்க​மாக்குவது கட்டாய​மாகிறது. அப்போதுதான் வேலை கேட்கும் மக்கள் அனைவருக்கும் 100 நாள்கள் முழுமையாக வேலை வழங்க முடியும்.
  • இந்த ஆண்டாவது தமிழ்நாடு அரசு தொழிலாளர் பட்ஜெட்டை முறையாக ஒவ்வொரு ஊராட்​சி​யிலும் மக்கள் ஆலோசனையோடும் கிராமசபை ஒப்புதலோடும் தயாரிக்க வழிவகை செய்யுமா என்கிற எதிர்​பார்ப்பு எழுந்​திருக்​கிறது. இது தொடர்பாக விழிப்​புணர்வு ஏற்படுத்து​வதுடன், ஒவ்வொரு ஊராட்​சியில் இருந்தும் தொகுக்​கப்பட்ட தொழிலாளர் பட்ஜெட்டை வட்டார, மாவட்ட அளவில் முறையாகத் தொகுத்து மத்திய அரசுக்கு அனுப்​புவது மிக முக்கியம்.
  • மக்களின் உரிமையைப் பாதுகாக்க... முறையான பயிற்சி - திட்ட​மிடு​தலின் மூலம் வேலூர் மாவட்​டத்தில் ஆற்றுப் புனரமைப்புப் பணிகளில் 100 நாள்களுக்கு மக்கள் பங்கெடுத்து தூர்ந்​துபோன நாகநதி என்கிற அப்பகுதியின் ஆற்றை மீட்டெடுத்​திருக்​கிறார்கள். நம் மக்கள், பணி செய்யக்​கூடிய​வர்​கள்​தான். முறையான பயிற்​சி​யும், திட்ட​மிடு​தலும், வழிகாட்​டு​தலும் இருந்தால், தொழிலாளர் பட்ஜெட்டை முறையாக நடைமுறைப்​படுத்து​வதில் தமிழ்நாடு அரசுக்குக் கடப்பாடு இருந்தால் 100 நாள் வேலைத் திட்​டத்தை வெற்றிகர​மாகச் செயல்​படுத்த முடி​யும்.
  • 100 நாள் வேலை என்ப​து நகைப்​புக்​குரியது அல்ல, நாம் நடைமுறைப்​படுத்த வேண்டிய மக்கள்​ திட்​டம். அது வேளாண்​மைக்கு எதிரானது அல்ல, வேளாண்​மைக்கு உறு​துணையாக விளங்​கும் திட்​டம். இந்தப்​ புரிதல் அனை​வருக்​கும்​ வர வேண்​டும்​!

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்