TNPSC Thervupettagam

தொழில்நுட்ப மறைஞானி

October 15 , 2023 279 days 189 0
  • புலம்பெயர்ந்த ஒரு மண்வள நிபுணரான தந்தைக்கும், தாவரவியலாளரான தாய்க்கும் மகவாக அக்டோபர் 15, 1923ஆம் ஆண்டு கியூபாவில் பிறந்தவர் இடலோ கால்வினோ. அவர் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக அவர்களது குடும்பம் இத்தாலிக்குத் திரும்பியது. பெற்றோரைப் போலவே விவசாயக் கல்வியைக் கற்க இரண்டு பல்கலைக்கழகங்களில் விருப்பமின்றிச் சேர்ந்து, அதை முடிக்க முனைந்தபோதும் இரண்டாம் உலகப் போரால் அவரது கல்வி தடைபட்டது. கட்டாய ராணுவ ஆள் சேர்ப்பிலிருந்து தப்பினார். நாஜி ஜெர்மன் படைகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய இத்தாலிய எதிர்ப்புப் படையில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் போரிட்டார். கட்டாய ஆள் சேர்ப்பைத் தவிர்த்ததற்காக கால்வினோவின் பெற்றோரை நாஜிப் படைகள் பிணைக்கைதிகள் ஆக்கின. போர் முடிந்ததும், கலைத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று, பதிப்பகங்களிலும் பத்திரிகைகளிலும் வேலை பார்த்தார்.

எழுத்தில் ஏற்பட்ட மாற்றம்

  • முப்பது வயதுக்கு முந்தைய கால்வினோ அதிகாரபூர்வமாக கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். ஹங்கேரியின் மீதான ரஷ்யப் படையெடுப்புக்குப் பிறகு அக்கட்சியிலிருந்து விலகினார். தனது போர் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆரம்பகட்ட கதைகளை, நாவலை எழுதிய கால்வினோ 1950களுக்குப் பிறகு முற்றிலும் புதிய முறையில் தனது படைப்புகளை எழுதத் தொடங்கினார். இக்காலகட்டத்தைய கால்வினோவே இலக்கிய உலகில் புகழ்பெற்றவராகிறார். முன்பு தொகுக்கப்படாத அவரது கட்டுரைகளின் புதிய தொகுப்பில் 1956-59ஆம் ஆண்டுகளில் அவர் எழுதிய மூன்று கட்டுரைகளை வாசிக்கையில் அவரது எதிர்கால எழுத்துமுறைக்கான வேட்கையை நாம் அறியலாம்.
  • அக்கட்டுரைகள் முறையே, ‘நாவலின் ஊழ்கள்’, ‘யதார்த்தவாதத்தின் மீதான கேள்விகள்’, ‘நாவலின் ஒன்பது கேள்விகளுக்கான பதில்கள்’. தன்னுடைய முந்தைய கூறுமுறையிலிருந்து மட்டுமல்ல, தனது சமகால இத்தாலிய நாவல்களின் கூறுமுறையிலிருந்தே அவர் விடுபட முனைவதை இக்கட்டுரைகளில் பார்க்கலாம். கியார்க் லூகாக்ஸ், பெட்ரோல்ட் பிரெக்ட் ஆகியோரின் கோட்பாடுகளை வாசிக்கும் கால்வினோ, நாடகங்களைப் போலவே இலக்கியமும் கேளிக்கையை நோக்கமாக உடையது என எழுதுகிறார். மதம், அழகியல், அறவியல், சமூக நோக்கங்கள் இவை அனைத்தும் நாடகங்களின் வரலாற்றில் பேசப்பட்டிருப்பினும் மக்களைக் கேளிக்கைக்கு உட்படுத்துவதையே நாடகம் முன்வரையறையாகக் கொண்டது. புனைவுக்கும் இதுவே நோக்கம் என்று கூறும் கால்வினோ, இது அடிக்கடி மறக்கப்படுகிறது என்கிறார்.

நாட்டார் கதைகள், அதிபுனைவுக் கதைகள்

  • இரண்டாம் கட்ட கால்வினோ அறிவியல்-புனைவு, நாட்டார் கதைகள், மிகை யதார்த்தக் கதைகளின் (Fantasy) வழியாகத் தனது படைப்புகளை எழுதுகிறார். தனது பதிப்பக ஆசிரியர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இத்தாலிய நாட்டார் கதைகளைத் தொகுக்கிறார். அறிவியல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட ‘கஸ்மியோ காமிக்ஸ்’ எனும் தொகுதியை வெளியிடுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டு மிகை யதார்த்தக் கதைகளைத் தொகுக்கும் கால்வினோ, இக்கதைகள் சமூக மனத்தின் அழுத்தி வைக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடுகள் என்கிறார். உலகம், அதனை நாம் அறியும் முறை, இதன் பின்னணியில் ஆழ்மனத்தில் அழுத்தி வைக்கப்படும் உணர்வுகளின் வெளிப்பாடே அதிபுனைவுக் கதைகள் எனும் கால்வினோ,தன்னை ஒரு பகுத்தறிவுவாதி என்றே அழைத்துக்கொண்டார். அதே காலகட்டத்தில் மார்க்சியரான நா.வானமாமலை தமிழ்நாட்டில் நாட்டார் கதைகளைச் சேகரிப்பதைத் தொடங்கி வைத்தாலும், அதிபுனைவுக் கதைகளின் மீதான ஒவ்வாமை தமிழ் இலக்கியத்தில் 1980களுக்குப் பிறகே விலகியது.
  • கால்வினோவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றான, ‘புலப்படாத நகரங்கள்’ நாவல், வழமையான நாவல் கட்டமைப்பைக் கொண்டிராதது. மார்க்கோ போலோவின் பயணத்தை அடிப்படையாகக் கொண்டது என்றாலும், பெயர் குறிப்பிடப்படாமல் ஒவ்வொரு நகரமும், விதவிதமான அவற்றின் வடிவங்களும் விவரிக்கப்பட்டிருப்பதை வாசித்து முடித்ததும் அறிகிறோம். இதனை வாசிக்கும் ஒவ்வொருவரும் மார்க்கோ போலோ என்பதை வாசித்து முடித்ததும் அறிகிறோம். மற்றொரு முக்கியப் படைப்பான ‘குளிர்கால இரவில் ஒரு பயணி’ நாவல், வாசிப்பு எனும் செயலை ஆழ்ந்த விசாரணைக்கு உட்படுத்துவதோடு விநோதமான வகையில் தனது கட்டமைப்பை ஒருங்கிணைத்திருக்கிறது. இதை வாசிக்கும் ஒருவர், ஒரே சமயத்தில் கதையிலிருந்து சிதறடிக்கப்பட்டவராகவும், கதை ஒன்றைத் தேடுபவராகவும் இருக்கிறார்.

பாரிஸ், அமெரிக்கா

  • கால்வினோவைப் பொறுத்தவரை அவரது காலத்தில் செல்வாக்கு செலுத்திய கோட்பாடுகளை வாசித்தவராகவே தெரிகிறார். அவற்றின்செல்வாக்கை அவரது படைப்புகளில் பார்க்க முடிகிறது. பாரிஸில் சில காலம் வாழ்ந்த கால்வினோ,அங்கே கோட்பாட்டாளர் ரோலாண்ட் பார்த், பின்நவீனத்துவ எழுத்தாளர்களான ஜியார்ஜ் பெரெக்,ரெமெண்ட் கனோ ஆகியோரோடு இணைந்து பணியாற்றினார். அமெரிக்க அரசின் கடும் குடிமையியல் கட்டுப்பாடுகளையும் கடந்து, அவர் அங்கே சில மாதங்கள் தங்கியிருந்தார். அங்கே புகழ்பெற்ற ‘பீட்’ கலாச்சார எழுத்தாளர்களைச் சந்தித்த அனுபவங்களைத் தனது ‘பாரிஸில் ஒரு துறவி’ எனும் நூலில் எழுதியிருக்கிறார். எனினும் அமெரிக்க எழுத்தாளர்களில் எர்னெஸ்ட் ஹெமிங்வேயைத் தவிர யார் மீதும் ஈர்ப்புமிக்கவராகத் தெரியவில்லை. சார்த்தரின் நாவல்களின் மீதான விமர்சனக் கட்டுரையில் ஒரு நாவலில் புனைவுக்கு அடுத்த அடுக்கில் தான் மெய்யியல் இருக்க வேண்டும் என எழுதியிருக்கிறார்.

தமிழில் அறிமுகம்

  • கால்வினோவின் சிறுகதைகளை முதன்முறையாகத் தமிழில் மொழிபெயர்த்து தொகுப்பாக வெளியிட்டவர் கவிஞர் பிரம்மராஜன். வழுவழுப்பான தாளில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட அந்நூலின் பல பக்கங்களை அடிக்கோடிட்டு வாசித்தது இப்போது நினைவில் அடிக்கோடிடப்பட்டிருக்கிறது. அவரே, கால்வினோவின் ‘செவ்வியல் படைப்புகளை ஏன் வாசிக்க வேண்டும்’ எனும் முக்கியமான கட்டுரையையும் மொழிபெயர்த்தார். மொழிபெயர்ப்பாளர் சமயவேல், கால்வினோவின் இரண்டு படைப்புகளான, ‘புலப்படாத நகரங்கள்’, ‘குளிர்கால இரவில் ஒரு பயணி’ நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தொழில், எழுத்துமுறை இவற்றில் மார்க்கேஸோடு கால்வினோவை ஒப்பிட முடிந்தாலும், இருவருக்குமான முக்கியமான வேறுபாடு ஐரோப்பிய அறிவியலை கால்வினோ தனது படைப்புகளில் ஊடாட வைத்ததே. மார்க்கேஸ் தனது மாய யதார்த்தவாத எழுத்தின் வழியாக ஒருபோதும் அறிவியலை எழுதியிருக்கவில்லை. ஆகவே, கால்வினோவைக் காட்டிலும் அவரே நமக்கு நெருக்கமாகவும் இருக்கிறார்.
  • எனினும் இன்றளவும் புத்தகக் கடைகளில் குறிப்பாக, ஆங்கில நூல்கள் விற்கப்படும் கடைகளில் இருவரின் படைப்புகளும் முன் வரிசையில் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மொத்தப் படைப்புகளின் வழியாக கால்வினோவை மதிப்பிட்டு, முன் சொன்ன கருத்தின்படி அவர் முழு மறைஞானியாகத் தமிழ்ச் சூழலில் அறியப்படும் காலம் சமீபத்தில் இல்லை என்றாலும்கூட அவரை ‘தொழில்நுட்ப மறைஞானி’ (Technological Mystic) என அழைப்பதற்கு மறுப்புகள் ஏதும் இருக்காது.
  • (அக். 15: இடலோ கால்வினோ நூற்றாண்டு நிறைவு)

நன்றி: இந்து தமிழ் திசை (15 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்