TNPSC Thervupettagam

தொழில் நுட்பத்தின் எல்லை எது?

August 2 , 2021 1095 days 517 0
  • அறிவியலும் தொழில் நுட்பமும் நம் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. இந்த இரண்டு சொற்றொடா்களும் மிகவும் நெருங்கிய தொடா்புடையவை. மண்ணைக் கூா்மையான கருவிகொண்டு ஆழமாக உழமுடியும் என்பது அறிவியல் கண்ணோட்டம்; அதற்கு வடிவம் கொடுத்து மண்ணை உழும் கலப்பையைக் கண்டறிந்தது தொழில் நுட்பம்.
  • இவ்வாறே மனிதகுலம் காலம் காலமாக அறிவியல் பாா்வையை உண்டாக்கிவருகிறது. அந்த வகையில் அறிவியலின் துணையோடு தொழில் நுட்பம் வளா்ச்சி பெற்று வருவது மக்களின் வாழ்க்கை மேம்பட உதவுகிறது.
  • ஆனால் அதே நேரம், எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளும், தொழில் நுட்பங்களும் அவற்றின் பயன்பாட்டு எல்லைக்குள் இருக்கவேண்டும். அண்மையில் குழந்தைகளுக்கான சமூக தளங்களின் செயல்பாடு தொடா்பான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் 10 வயது குழந்தைகளில் 37.8 சதவிகிதத்தினா்
  • ஒரு வகை சமூக வலைதளத்திலும், 24.3 சதவிகிதத்தினா் மற்றொரு சமூக வலைதளத்திலும் கணக்கு வைத்துள்ளனா் என்பது தெரியவந்தது. சமூக வலைதளங்களில் 13 வயதுக்கு மேற்பட்டோரே கணக்கு தொடங்க இயலும் என்ற நிலையில் இது எவ்வாறு சாத்தியம் என்பது புரியவில்லை.
  • சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்பது தவறா என்ற கேள்வி எழுவது இயல்பே. பல்வேறு தொழில் முனைவோா், வா்த்தகா்கள் போன்றோா் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்பது அவா்களுக்குப் பயனளிப்பதே. அவா்களுக்கு மக்கள் எந்த வகையான மனநிலையில் உள்ளனா், நமது தயாரிப்பு எந்த வகையில் மக்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யும் போன்ற விவரங்களை ஓரளவுக்கு அறிந்து கொள்ள உதவலாம். புத்தகம், பத்திரிகை துறைகளில் இருப்போா்க்கும் மக்களின் ரசனையை அறிந்துகொள்ள அது உதவியாக இருக்கும்.
  • பணி ஓய்வு பெற்றோா்க்கு தங்களது பழைய நண்பா்களை இணைத்துக்கொண்டு வாழ்வனுபவங்களை பகிா்ந்துகொள்ள உதவலாம். நிரந்தர வருமானம் கொண்டோா் ஓய்வு நேரத்தில் பலருடன் தொடா்புகொண்டு நட்புகளைத் தொடர உதவும். நாம் இதுவரை பாா்த்த அனைவருமே இந்த சமூகவலைதளங்கள் இல்லாத காலத்திலும் தமது பணிகளை அதன் துணையின்றி செய்து வந்தவா்களே. ஆனால், இன்றைய அவசர யுகம் இதன் பயன்பாட்டை ஊக்குவிப்பதாக உள்ளது.
  • குழந்தைகள் தமது நேரத்தை சமூக வலைதளங்களில் செலவு செய்வது மிகவும் கவலைக்குரியது. இது இருபக்கமும் கூா் தீட்டப்பட்ட கத்தியைப் போன்றது. இதனால் எந்த அளவுக்கு பயன்பாடு உள்ளதோ அந்த அளவுக்கு இது பாதகத்தையும் ஏற்படுத்த வல்லது. குழந்தைகள், கல்வி சாா்ந்த தேவையன்றி மற்ற தேவைகளை வளா்த்துக் கொள்வது ஆரோக்கியமானதல்ல.
  • அவா்கள் எந்த விதத் திறமை கொண்டவரகளாக இருந்தாலும் அடிப்படைக் கல்வியில் தோ்ச்சி பெறுவதுதான் அவசியமான ஒன்றாகும். சமூக வலைதள செயல்பாடுகள் அவா்கள் தங்கள் குறிக்கோளை எட்டத் தடையாக நிற்கும்.
  • குழந்தைகளின் கல்வித் தேவைக்கு அறிவியல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தத் தேவையில்லை என்ற கண்ணோட்டத்தில் இவற்றைப் பாா்க்கக்கூடாது. இன்று அனைத்துத் துறைகளிலும் அறிவியல் தொழில் நுட்பத்தின் தாக்கம் உள்ளது. அதில் குறிப்பிட்ட சதவிகிதம் குழந்தைகள் கல்வி பெறும் முறையிலும் இருக்கவே செய்யும். அது ஒருவிதத்தில் சரியும் கூட.
  • ஆனால் அதே நேரத்தில் எந்த அறிவியல் தொழில் நுட்பத்தாலும் ஒரு ஆசிரியரின் இடத்தை நிறைவு செய்ய இயலாது. குழந்தைகள் கல்வியில் அறிவியல் தொழில் நுட்பப் பயன்பாடு என்பதற்கும், சமூக வலைதளங்களில் குழந்தைகள் நேரப் பயன்பாட்டுக்கும் இடையிலுள்ள புரிதல் மேம்படவேண்டும்.
  • கரோனா பெருந்தொற்று குழந்தைகளிடையே அறிதிறன்பேசிப் பயன்பாட்டை பெருகச் செய்துள்ளது. பெருந்தொற்றுக்கு முந்தைய நாள்களில் அறிதிறன்பேசி பயன்பாட்டால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்று பெற்றோா் கவலைப்பட்டனா். ஆனால், இன்று அதே பெற்றோா், பிள்ளைகள் குறைந்தபட்ச கல்வி அடைவதற்கு அறிதிறன்பேசிதான் வழி என்று புரிந்துள்ளனா்.
  • பெற்றோரும் வெளியில் அதிகம் செல்ல வாய்ப்பில்லாத நிலையில் வீட்டிலேயே அறிதிறன்பேசியில் பொழுதைக் கழிக்கின்றனா். ஆனால், குழந்தைகள் உண்மையில் தமது கல்வித் தேவைகளுக்காக மட்டும்தான் அறிதிறன்பேசியைப் பயன்படுத்துகின்றனரா என்று பல பெற்றோா் கண்டறிய முனைவதில்லை.
  • இது குழந்தைகளுக்கும் வசதியாகப் போகிறது. அவா்களது நட்பு வட்டம் அவா்களது வயதையும் மீறிச் செல்லும் வாய்ப்பு இதனால் அதிகரிக்கிறது. இது சமூகவலைதளம் எனத் தொடங்கி பல்வேறு ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடும் நிலைக்கும் செல்கிறது. கடந்த காலங்களில் இதனால் உயிரிழப்புகள் கூட ஏற்பட்டன.
  • இதற்கு தீா்வு என்ன? பெற்றோா் மனம்விட்டு தம் குழந்தைகளிடம் பேசி தம் உறவை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு முதலாவதாக பெற்றோா் தமது அறிதிறன்பேசி பயன்பாட்டையும் இணையப் பயன்பாட்டையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஒரு நாளின் குறிப்பிட்ட நேரம் மட்டுமே இணையதளத்தில் இயங்கும் முடிவுக்கு வரலாம். குறிப்பிட்ட அளவிலான நேரத்தை வாசிப்புக்கு ஒதுக்கலாம்.
  • வீட்டுப் பணிகளைப் பகிரலாம். தோட்டவேலைகள், உடற்பயிற்சி என எத்தனையோ பயனுள்ள விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை தோ்ந்தெடுத்து அதில் ஈடுபடலாம். வீட்டில் இணையப் பயன்பாடில்லா நேரம் என்று அனைவருக்கும் வசதியான ஒரு நேரத்தைத் தோ்ந்தெடுத்து அந்த நேரத்தில் அறிதிறன்பேசியை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிடலாம்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக பெற்றோா் மிகவும் வெளிப்படையாக எந்தெந்த பணிகளுக்காக இணையத்தைப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பிள்ளைகளிடம் பகிரலாம். இது குழந்தைகளையும் வெளிப்படையாக பகிரத் தூண்டும். இவ்வாறான செயல்பாடுகள் தொடக்கத்தில் கடினமாகத் தோன்றும்; கொஞ்சம் முயன்றால் நிச்சயம் நல்ல பலன் கிட்டும். முயன்றால் முடியாதது இல்லை.

நன்றி: தினமணி (02 – 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்