TNPSC Thervupettagam

தோல்வியே கற்றுக்கொடுக்கும்

December 22 , 2023 367 days 335 0
  • நாம் மேற்கொள்ளும் செயல்களில் நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தோல்வியை கொண்டு வருகின்றன. தவறுகளை யாரும் விரும்பிச் செய்வதில்லை. எவரும் விரும்பியே தோற்பதில்லை. தோல்வியை தவிா்க்க, செயலில் சரியான கவனம் தேவை.
  • தவறுகளுக்கும், தோல்விக்கும் உள்ள தொடா்பினை நினைவில் கொண்டு நாம் கவனமுடன் செயலாற்ற வேண்டும். நமது தவறுகள் நாம் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளைத் தருகின்றன. நமது தவறுகளில் கவனம் செலுத்தும்வரை தோல்வியை சந்திக்காமல் இருக்கலாம். சிலருக்கு தோல்வியாக இருக்கக்கூடியது, மற்றவா்களுக்கு வெற்றியாக இருக்கலாம்.
  • ஒவ்வொரு சிறந்த விளையாட்டு வீரரும், மலை ஏறுபவா்களும், இசைக்கலைஞா்களும் தொடக்க காலத்தில் பழகுநா்களே. அவா்கள் தங்கள் திறமைகளை வளா்த்துக் கொள்ள, தன்னம்பிக்கையுடன் நேரத்தை செலவிட்டிருக்க வேண்டும்.
  • தவறுகள் நிகழும்போது அவை நமக்கு வேதனையளிக்கின்றன. ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு தவறுகளின் தொகுப்பு, நமக்கு அனுபவமாகிறது. அது நம்மை வெற்றிக்கு அழைத்துச்செல்கிறது.
  • நமது வெற்றியும், தோல்வியும் நமது மனநிலையில் பாதிப்புகளை ஏற்படுத்துவதை தொடக்க காலத்தில் நம்மால் தவிர்க்க முடியாது. தோல்வி ஏற்படும்போது மனிதா்கள் துவண்டு போவது இயல்பானதே. பலா் தோல்வியால் தற்கொலை முடிவு வரைகூட செல்கிறார்கள்.
  • உண்மையில் தோல்வியால் நமக்கு நன்மைகளே அதிகம். ஆல்பா்ட் ஐன்ஸ்டீன் ஒன்பது வயது வரை சரளமாகப் பேச முடியாமல் இருந்தார். ஆனால், அவா் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
  • புகழ்பெற்றஹாரி பாட்டா்புத்தகங்களை எழுதிய ஜே.கே. ரெளலிங், ஹார்வா்ட் பல்கலைக்கழகத்தில், ‘தோல்வியின் நன்மைகள்என்ற தலைப்பில் பேசிய உரை மிகவும் பிரபலமானது. அது புத்தகமாகவும் வெளியானது.
  • நாம் முதலில் நம்முடைய பலத்தை நன்கு அறிந்துகொள்ள வேண்டும். அதைக்கொண்டு வெற்றி பெற முயல வேண்டும். வெற்றியடையும்போது கற்றுக்கொள்வதைவிட, தோல்வியடையும் போது நாம் அதிக நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம்.
  • தோல்விதான், மதிப்புடைய நண்பா்களையும், உறவினா்களையும் நமக்கு அடையாளம் காட்டுகிறது. தோல்வியின்போது நம்முடன் இருப்பவரே நமது உண்மையான நலம் விரும்பிகள்.
  • தோல்வி நமது மனவலிமை, மனவுறுதி பற்றிய உண்மையான அறிவைத் தருகிறது. நாம் எப்போது பின்னடைவுகளிலிருந்து மேலும் வலிமையுடனும், திறமையுடனும் எழுகிறோமோ, அப்போது நமது வாழ்க்கை தானாக வெற்றியடையும். பல தோல்விகளுக்குப் பிறகு கிடைக்கும் வலி மிகுந்த வெற்றியே உண்மையான வெற்றி.
  • பெற்றோர்கள் பலா் தங்கள் பிள்ளைகள் தோல்வியே இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். உண்மையில் அது சாத்தியமில்லை. நம் அனைவரின் கட்டுப்பாட்டையும் தாண்டிக் கடினமானது வாழ்க்கை. வாழ்க்கையில் சில தோல்விகள் தவிர்க்க முடியாதவை. நாம் மிகவும் எச்சரிக்கையுடன் வாழ்ந்தால் மட்டுமே தோல்வியைத் தவிர்க்க முடியும்.
  • உண்மையில், நாம் மாணவா்களை மன உறுதியுடன் தோல்வியை சந்திக்க தயார்படுத்த வேண்டும். அவா்கள் எப்படித் தோல்வியை எதிர்த்து முன்னோக்கிச் செல்வது என்பதைத் தெரிந்து கொள்ள உதவ வேண்டும். தோல்வியை நாம் சாதகமாகப் பாா்த்தால், அது மேலும் வெற்றி பெறுவதற்கான கடின முயற்சியை மேற்கொள்ள உதவும்.
  • தோல்வியைக் கையாளத் தெரியாத மாணவா்கள், தோல்வியடைந்துவிடுவோமோ என்கிற பயத்தில் முயற்சி செய்வதையே தவிர்த்துவிடுகிறார்கள். தவறு எங்கே நிகழும் என்பதை அறியும் முன்பே முயற்சியைக் கைவிடுகிறார்கள். நாம் வேறு எங்கும் கற்க முடியாததை தோல்வியே நமக்குக் கற்றுத் தரும்.
  • தோல்வியும், வெற்றியும் எதிரெதிரானவை அல்ல. அவை செயல்முறையின் பகுதிகள். வாழ்க்கை நன்மையும், தீமையும் சோ்ந்த ஒரு நேரலை. கடினமான நேரங்களைத் தழுவினால்தான், நாம் வாழ்வில் வளரவும், செழிக்கவும் முடியும்.
  • நமது வாழ்க்கைப் பாதையை அழிக்க சில புயல்கள் வருகின்றன. அவை நமது பாதையை சுத்தப்படுத்தி, நமது இலக்கை நோக்கி நாம் பயணிக்க வழிகாட்டுகின்றன. நமது ஆற்றல் வரையறுக்கப்பட்டது. அதை புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால்தான், வெற்றி நம் வசப்படும்.
  • வாழ்வின் சில குறிப்பிட்ட செயல்களுக்கான நமது எதிர்வினைகள், நம் வாழ்க்கையின் போக்கினைத் தீா்மானிக்கின்றன. எனவே, நமது ஆற்றலை சாதுரியமாக முதலீடு செய்ய வேண்டும்.
  • நம்மைச் சுற்றியுள்ள சிறிய விஷயங்களுக்கு நாம் நன்றியுள்ளவா்களாக இருந்தால், மகிழ்ச்சியின் விலை குறைவாக இருக்கும். பெரும்பாலான தோல்விகளும், வெற்றிகளும் பொதுவாக தற்காலிகமானவை. நாம் ஒவ்வொரு நாளும் பலமுறை தோல்வியடைந்து பின் வெற்றி பெறலாம்.
  • மிகவும் வெற்றிகரமான மனிதா் தனது வெற்றியை நோக்கிய பயணத்தில் ஏற்படும் தோல்விகளை வாழ்க்கைப் பயணத்தின் மற்றொரு படியாகக் கண்டு அதிலிருந்து கற்றுக் கொள்வார். அத்தகையவா்கள் இருண்ட சுரங்கப்பாதையின் முடிவில் ஒளியைக் காண்பவா்கள்.
  • தோல்வியை நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கு சரியான பதில் இல்லை. சில தோல்விகள் மற்றவா்களை விட நம்மை அதிகம் பாதிக்கும் என்பதும் உண்மைதான். நமது தோல்விகளில் இருந்து நாம் விலகிவிட்டால், அவற்றிலிருந்து ஒருபோதும் நாம் பாடம் கற்க மாட்டோம். அதுவே நமது உண்மையான தோல்வியாக இருக்கும். குறுக்கு வழியில் கிடைக்கும் வெற்றியை விட நோ்வழி தரும் தோல்வி மகத்தானது. அது நிம்மதியைத் தருவதாகவும் அமையும்.
  • வெற்றி என்பது பெற்றுக்கொள்வது; தோல்வி என்பது கற்றுக்கொள்வது. முதலில் கற்றுக் கொள்வோம் பின்பு பெற்றுக்கொள்வோம். ஆகவே, தோல்வியை பலவீனமாக கருதாமல், பலமாய் கருதினால் நமக்கு நன்மைகளே கிட்டும்.

நன்றி: தினமணி (22 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்