TNPSC Thervupettagam

தோல்வி நிலையென நினைத்தால்

May 7 , 2023 615 days 442 0
  • தமிழ்நாட்டின் தொழிலாளர் போராட்டங்கள் நூறு ஆண்டுகளைக் கடந்த வரலாறு கொண்டவை. வேலை நேரம், வார விடுப்பு, ஊதியம் - ஊதிய உயர்வு, தொழிலாளர் நல நிதி, பணிக்கொடை, தொழிலாளர் நலன் போன்றவையே இந்தப் போராட்டங்களின் அடிநாதம். தொழிற்சங்கங்களின் உருவாக்கத்துக்கும் தொழிலாளர் போராட்டங்களே காரணமாக அமைந்தன. வரலாற்றில் நிலைகொண்டுவிட்ட தொழிலாளர் போராட்டங்களில் சில:

பின்னி ஆலை வேலை நிறுத்தப் போராட்டம்

  • பின்னி கம்பெனியின் ‘பக்கிங்ஹம் அண்டு கர்நாடிக்’ ஆலைகளில் தொழிலாளர்கள் ஆண்டுக்குச் சராசரியாக 310 நாள்களும் ஒரு நாளுக்குச் சராசரியாகப் பதினொன்றரை மணி நேரமும் உழைத்தனர். தொழிலாளர் அமைப்புகள் முறையாக உருவாகாத காலம் என்பதால், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வேண்டும் என்று கோரி, பக்கிங்ஹம் ஆலையிலும் (1878) கர்நாடிக் ஆலையிலும் (1889) நடைபெற்ற வேலைநிறுத்தங்கள் வெற்றிபெறவில்லை. 1918 ஏப்ரலில் சென்னைத் தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது. 1921 ஜூன் முதல் அக்டோபர் வரை நடந்த ஒரு வேலைநிறுத்தம், சென்னையின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

மில் தொழிலாளர் போராட்டங்கள்

  • ஹார்வி சகோதரர்களால் 1880களில் விருதுப்பட்டி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களில் பஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. பஞ்சாலைத் தொழிலாளர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் ஒன்றிணைந்து போராடினாலும் 1908இல் வ.உ.சி. - சுப்பிரமணிய சிவா தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்ற ‘கோரல் மில் போராட்டம்’ வரலாற்றில் முக்கியமானது. இதில் 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். 1973இல் மதுரை ஹார்வி மில் தொழிலாளர்கள் இரண்டு மாத வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • ஹோ அண்ட் கோ தொழிலாளர் போராட்ட’மும் அதன் தொடர்ச்சியாக அச்சகத் தொழிலாளர் சங்கம் பலம் வாய்ந்ததாக உருவானதும் குறிப்பிடத்தகுந்தவை. நெல்லிக்குப்பம் பாரி சர்க்கரை ஆலைப் போராட்டம், மதுரை நிட்டிங் பாக்டரி போராட்டம், கோவை லட்சுமி மில் போராட்டம் போன்றவையும் முக்கியமான தொழிலாளர் போராட்டங்கள்.

டிராம்வே தொழிலாளர் போராட்டம்

  • வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளி களை வேலைக்கு எடுத்துக்கொள்ளக் கோரி 1937இல் டிராம்வே தொழிலாளர்கள் போராடினர். பிரச்சினை நீதிமன்றம் சென்ற போது, பெரும்பான்மை தொழிலாளர்களைக் கொண்ட சங்கம் அங்கீகரிக்கப்பட வேண்டும், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக எந்தவொரு தொழிலாளியும் பழிவாங்கப்படக் கூடாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

விவசாயிகள் போராட்டம்

  • அன்றைய தஞ்சை மாவட்டத்தில் இடது சாரித் தலைவர் சீனிவாசராவ் தலைமையில் தொடங்கிய போராட்டம், பிற பகுதிகளுக்கும் பரவியது. தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழ்வெண்மணி கிராமத்தில், 1968இல் அமைப்பாகத் திரண்டு விவசாயிகள் போராடினர். போராட்டத்தில் தாக்கப்பட்டபோது, தப்பிப்பதற்காக அருகில் இருந்த குடிசைக்குள் தஞ்சமடைந்த 44 பேரை நில உடைமையாளர் கோபாலகிருஷ்ண நாயுடு தீவைத்துக் கொன்றார். விடுதலைக்குப் பிறகு தலித் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட மோசமான கொடுஞ்செயலாக இது வரலாற்றில் பதிவானது.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் போராட்டம்

  • ஊதிய உயர்வு கேட்டும், போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட தொழிலாளர் களை விடுவிக்கக் கோரியும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் 1999இல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தை அடையும் முன்பே காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தி பேரணியைக் கலைக்கக் காவலர்கள் முயன்றனர். அதிலிருந்து தப்பிக்கப் பலரும் தாமிரபரணி நதியில் இறங்க, 2 வயதுக் குழந்தை உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

  • 2001இல் நடைபெற்ற போக்குவரத்து ஊழியர் கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஒரு லட்சத் துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். பொதுப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 10,000-க்கும் அதிகமானோர் கைதாகினர்; ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர்.

ரயில்வே தொழிலாளர் போராட்டம்

  • திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர்கள் 1946இல் நடத்திய போராட்டம் இந்திய அளவில் கவனம் பெற்றது. சுதந்திரத்துக்குப் பின் மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து அனைத்திந்திய ரயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் 1974 மே 8 அன்று மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கைதைத் தொடர்ந்து 17 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற நாடு தழுவிய போராட்டம் மே 28 அன்று முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 50,000-க்கும் மேற்பட்டோர் கைதாகினர்; 10,000-க்கும் அதிகமானோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்; 5,000-க்கும் அதிகமான தற்காலிகப் பணியாளர்களின் வேலை பறிக்கப்பட்டது.
  • செவிலியர்கள் போராட்டம், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஃபாக்ஸ்கான் ஊழியர்கள் போராட்டம், நோக்கியா நிறுவன ஊழியர்கள் போராட்டம் போன்றவை தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகத் தொழிலாளர்கள் நடத்திய அண்மைக்காலப் போராட்டங்கள். உழைப்பாளர் களின் நலன் முழுமை அடையாதவரைக்கும் போராட்டங்கள் ஓய்வதில்லை என்பதைத்தான் இந்தப் போராட்டங்கள் உணர்த்துகின்றன.

நன்றி: தி இந்து (07 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்