TNPSC Thervupettagam

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த தலையங்கம்

February 7 , 2022 910 days 455 0
  • இந்தியாவின் விடுதலையைவிட காந்தியடிகள் முன்னுரிமையாகக் கருதியது கிராம சுயராஜ்யம் என்கிற அடிப்படை நிர்வாக அமைப்பைத்தான்.
  • அதன்படி உருவானவைதான் பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன்கள், நகராட்சிகள், மாநகராட்சிகள் அனைத்துமே. எந்தவொரு மாநிலத்தின் வளர்ச்சியும், பொருளாதார வெற்றியும் உள்ளாட்சி அமைப்புகளின் ஆரோக்கியமான செயல்பாட்டால்தான் சாத்தியம் என்பதை அனுபவம் உணர்த்தியிருக்கிறது. 
  • இப்போது அப்போது என்று தள்ளிப்போடப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பல்வேறு கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளன்று வேட்பாளர்கள் கூட்டம் அலைமோதியதிலிருந்து, மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுவதை புரிந்துகொள்ள முடிந்தது.

மக்கள் குரலே மகேசன் குரல்

  • 74,000-க்கும் அதிகமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று இறுதிப்பட்டியல் வெளியாகிவிடும். பிப்ரவரி 19 அன்று வாக்குப்பதிவு நடைபெற்று, பிப்ரவரி 22-இல் முடிவுகள் அறிவிக்கப்படும். 
  • நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 1,37,06,793 ஆண் வாக்காளர்கள், 1,42,45,637 பெண் வாக்களார்கள், 4,324 திருநங்கைகள் என மொத்தம் 2,79,56,754 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
  • 21 மாநகராட்சிகளிலுள்ள 1,374 வார்டுகளுக்கும், 138 நகராட்சிகளிலுள்ள 3,843 வார்டுகளுக்கும், 490 பேரூராட்சிகளிலுள்ள 7,621 வார்டுகளுக்கும் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. 
  • கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கிராமப் பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன்கள், மாவட்ட பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்கள் நடந்தன. சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் 9 மாவட்டங்களில் தேர்தல் நடக்கவில்லை.
  • திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த அக்டோபர் மாதம் அதற்கான தேர்தலும் நடந்துவிட்டன.  பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கான தேர்தல் ஏதாவது ஒரு காரணத்தின் அடிப்படையிலும், சட்டச் சிக்கல்களின் அடிப்படையிலும் தள்ளிப்போடப்பட்டு வந்தன.
  • உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், நான்கு மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்துவிட வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தடைகள் அகற்றப்பட்டு தேர்தல் நடக்க இருக்கிறது. 
  • இதற்கு முன்பு 2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நகராட்சி, மாநகராட்சிகளுக்கான தேர்தல் நடந்தது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் 2016-ஆம் ஆண்டிலேயே முடிவடைந்துவிட்டது.
  • கடந்த ஐந்தரை ஆண்டுகளாக எந்தவொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல்தான் நிர்வாகம் நடந்து வருகிறது. அதிகாரிகளின் நிர்வாகத்தில் பேரூராட்சிகளும், நகராட்சிகளும், மாநகராட்சிகளும் நடப்பது என்பது மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் குறித்த புரிதல் இல்லாத நிர்வாகம் நடக்கிறது என்று பொருள். 
  • இதற்கு முன்பு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, மாநகராட்சி மேயர்களையும், நகராட்சித் தலைவர்களையும் மக்கள் நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுத்தனர்.
  • அதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயரோ, தலைவரோ ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும், அவையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் மாற்றுக் கட்சியைச் சார்ந்தவர்களாகவும் இருக்கும் நிலை சில அமைப்புகளில் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
  • அதனால் மேயரோ, தலைவரோ கொண்டுவர நினைக்கும் எந்தவொரு தீர்மானத்தையோ, செயல்படுத்த நினைக்கும் திட்டத்தையோ நிறைவேற்ற முடியாது. முரண்பாடு காரணமாக நிர்வாகம் செயலிழக்கும் வாய்ப்பு ஏராளம்.  தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மேயரையோ, தலைவரையோ தேர்ந்தெடுக்கும் முறைதான் சரியானது.
  • சட்டப்பேரவையில் முதல்வரும், மக்களவையில் பிரதமரும் அப்படித்தான் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.
  • நாடாளுமன்ற ஜனநாயக முறையை நாம் அரசியல் சாசனத்தின் மூலம் ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில், கிராமப் பஞ்சாயத்துகள் தொடங்கி மாநகராட்சிகள் வரையில் மறைமுகத் தேர்தல் நடத்துவதுதான் பிரச்னைகள் இல்லாமல் நிர்வாகம் நடைபெறுவதற்கு வழிகோலும். 
  • நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகளுக்கான மேயர் பதவியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் பதவியிடங்களில் 50% பெண்களுக்கு ஒதுக்கப் பட்டிருக்கிறது.
  •  அதுமட்டுமல்லாமல், பட்டியலினத்தைத் சேர்ந்த பெண்களுக்கு இரண்டு மாநகராட்சி மேயர் இடங்களும், பட்டியலினத்தை சேர்ந்த ஆண் அல்லது பெண்ணுக்கு ஒரு மாநகராட்சி மேயர் பதவியிடமும் ஒதுக்கப்பட்டிருப்பது இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அம்சம்.
  • ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்குப் பிறகு சென்னை மாநகராட்சியின் மேயராக பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.
  •  வளர்ச்சியின் ஊற்றுக்கண் உள்ளாட்சி அமைப்புகள். கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தும் என்று எதிர்பார்ப்போம்.

நன்றி: தினமணி (07 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்