நகர்மயமாதல் தலித் மக்களை விடுவித்துள்ளதா?
- நமது அண்டைப் பகுதிகளில் உள்ள பெயர்ப் பலகைகளைப் பார்த்தாலே இந்திய நகரங்களில் வெளிசார்தன்மையின் முதன்மையான மொழி சாதிதான் என்பது தெரிந்துவிடும். இத்தகைய வீழ்ச்சிகளையும் தாண்டி, கிராம வாழ்க்கையை நிராகரித்து தலித் மக்கள் நகரங்களை நோக்கி நகர வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார். இந்தியக் கிராமம் என்பது ‘இந்து சமூகப் படிநிலை செயல்படும் ஆலை’ என்று கூறிய அம்பேத்கர், கிராமம்தான் சாதியைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு மிகச் சரியான இடம் என்று வாதிட்டார்.
- அதே நேரம், இந்தியக் கிராமத்தைச் சுயசார்பு கொண்ட, சமத்துவமும் நியாயமும் அகிம்சையும் நிறைந்த அமைப்பாகப் பார்த்த காந்தி, கிராம-சுயராஜ்யம் வழியாக மையத்திலிருந்து அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். இதைக் கடுமையாக எதிர்த்த அம்பேத்கர், இந்தியக் கிராமத்தைச் சிறந்ததாகக் கருதுவது கிராமப்புற மக்களை மேம்பட்டவர்களாகக் கருதும் காலனியச் சிந்தனை அல்லது சாதி ஆதிக்கத்தைத் தக்கவைக்கும் இந்துக்களுடைய விருப்பத்தின் வெளிப்பாடு என்று கூறினார்.
- அரசமைப்பு நிர்ணய அவையில் கிராமங்கள் தன்னாட்சி கொண்ட நிர்வாக அலகுகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்னும் யோசனையை அம்பேத்கர் எதிர்த்தார். அந்த யோசனையை அவை நிராகரித்தது குறித்து நிம்மதி அடைந்தார். ‘தீண்டப்படாத மக்களுக்கு இதைவிடப் பெரிய பேராபத்து இருந்துவிட முடியாது’ என்று அது குறித்து அவர் எழுதினார்.
நகர்மயமாதலும் அம்பேத்கரின் நம்பிக்கையும்:
- நகர்மயமாகும் செயல்முறையில் தலித் மக்களின் விடுதலைக்கான வாய்ப்பு இருப்பதாக அம்பேத்கர் கருதினார். சேரிகளை ஒதுக்கி, தலித் மக்களை விலக்கி வைத்தல், அவர்களின் பொருளாதாரச் செயல்பாடுகள் மீதான கட்டுப்பாடுகள், நில உரிமை மறுப்பு என இந்தியக் கிராமங்களில் செழித்தோங்கும் சாதி ஒடுக்குமுறைக்கான அமைப்புகள் நகரங்களில் வலுவிழக்கும் என்று அவர் நம்பினார். தாராளமயமாக இருந்ததற்காகவும் தனது வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்ள வழி அமைத்துக் கொடுத்ததற்காகவும் ஜோதிராவ் பூலேவும் நகர வாழ்க்கையைப் போற்றினார்.
- அம்பேத்கரையும் பூலேவையும் பொறுத்தவரை அடையாளத்தை மறைத்துக்கொண்டு வாழ்வதற்கான வாய்ப்புதான் நகரங்களின் விடுதலை அளிக்கும் ஆற்றலின் மையம். அந்நியர்களின் கடலில் ஒரு அந்நியராக வாழ்வதற்கான வாய்ப்பை நகரங்கள் அளிக்கின்றன. சாதி அடிப்படையிலான படிநிலையிலிருந்து வர்க்க அடிப்படையிலான படிநிலைக்கு மாறுவதற்கான வாய்ப்பையும் அளிக்கின்றன. இது வம்சாவளியினால் அல்லாமல், வளங்கள் அல்லது மூலதனக் குவிப்பினால் வரையறுக்கப்படுவதாக உள்ளது.
- நகரங்கள் எந்த வழிமுறைகளின் மூலம் சாதியைத் தழுவிக்கொள்கின்றன என்பதையும் அம்பேத்கர் கண்டுகொண்டார். ‘விசாவுக்காகக் காத்திருக்கிறேன்’ நூலில் பரோடாவில் வாடகைக்கு வீடு தேடுவதற்கான தனது போராட்டத்தை அவர் விவரிக்கிறார்.
- நவீன நகர்மயமாதல் என்பது திறன் - அடிப்படையிலான, அதாவது தொழில்மயமாதல் மூலமாக நிகழும் பொருளாதார மாற்றத்தால் உந்தப்படுகிறது. ஆனால், ஜவுளி ஆலைகளின் நெசவுப் பிரிவுகளில் திறன் வாய்ந்த தலித்துகள் நுழைய அனுமதிக்கப்படாததிலிருந்து, திறன் மீதான சாதியின் ஆதிக்கமும் அம்பேத்கருக்குத் தெளிவாகப் புரிந்தது.
- இத்தகைய அனுபவங்களை எதிர்கொண்டாலும் நகர்மயமாதலை விடுவிக்கும் சக்தியாக அம்பேத்கர் பார்த்தார். ஆனால், பரோடாவில் வாடகைக்கு ஒரு வீடு பிடிப்பதற்கான அம்பேத்கரின் போராட்டம் நிகழ்ந்து நூறாண்டு கடந்துவிட்ட பிறகும், இந்திய நகரங்களின் வெளிசார் தர்க்கமாக சாதி நீடிக்கிறது.
‘தூய்மை-தீட்டு’ என்னும் மொழி:
- ‘தூய்மை-தீட்டு’ என்னும் மொழியின் மூலமாக ஒரு நகரத்தின் வெளிசார்தன்மையாக சாதி மாறுகிறது. 2021இல் மேற்கொள்ளப்பட்ட நுகர்வோர் கணக்கெடுப்பு ஒன்று, இந்தியாவில் இறைச்சி உணவுப் பழக்கமே வாடகைக்கு வீடு கிடைப்பதைத் தடுக்கும் மிகப் பெரிய காரணியாக இருப்பதை அம்பலப்படுத்தியது. மராத்தா ராஜ்ஜியத்தில் பேஷ்வாக்களின் ஆட்சியில் விலக்கிவைக்கும் கொள்கைகள் குறித்து எழுதுகையில், இந்தச் சூழலைக் குறித்து கோபால் குரு விளக்குகிறார்.
- சேரி என்பது வெளி மட்டும் அல்ல. அது சேரிவாசியுடைய உடலின் உருவமைப்பாகவும் இருக்கிறது. சவர்ணர்களின் (சாதி இந்துக்கள்) வெளியைத் ‘தூய்மை’யானதாகவும், தலித் உடலால் தீட்டுப்படக்கூடியதாகவும் அடையாளப்படுத்தும் ‘தூய்மை-தீட்டு’ மொழி, நகரத்தின் தர்க்கத்துக்கும் நீட்டிக்கப்படுகிறது. இங்கு நகரத்துக்குள் நுழையும் சேரிவாசி, தனது உடல் மீது சேரியைச் சுமந்துகொண்டு வருபவர் ஆகிறார்.
- சாதியின் மொழியில், அசிங்கத்தையும் அழுக்கையும் பண்பாகக் கொண்ட சேரியின் வெளியும் இறைச்சி உண்ணுதல் உள்ளிட்ட தாங்கள் ஏற்கத்தகாத பண்புகளைக் கொண்ட தலித்தின் உடலும் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுபவை ஆகின்றன.
- அண்மைக் காலங்களில் சாதியின் மொழி நகரங்களின் பொது வெளிகளில் பல்வேறு அரசாங்கங்களால் சுமத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 2017 மார்ச் மாதத்தில் உத்தரப் பிரதேச அரசாங்கம் இறைச்சி விற்பனைக் கடைகளுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்தது.
- மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இறைச்சி விற்கத் தடை, இறைச்சி பாதசாரிகளின் பார்வையில் படுவதைத் தடுக்கும் வகையில் கடையின் முகப்பில் கறுப்புச் சாயம் பூச வேண்டும் அல்லது திரைச்சீலைகளைத் தொங்கவிட வேண்டும் என்பவை அவற்றுள் சில. 2021இல் குஜராத்தின் கணிசமான நகராட்சி அமைப்புகள் ‘மத உணர்வு’களைக் காரணம் காட்டி, நகரத்தின் முக்கியச் சாலைகளில் இறைச்சி உணவை விற்பதற்குத் தடை விதித்தன.
- இத்தகைய பிராமணியக் கட்டுப்பாடுகள் மூலமாக இறைச்சியை மதம்சார்ந்த, மதம்சாராத பொதுவெளியை அல்லது ஒரு பாதசாரியின் பார்வையைக்கூடத் தீட்டுப்படுத்தும் அசுத்தமாக அரசுகள் வகைப்படுத்திவிட்டன.
முடக்கிப்போடும் விலக்குதல்:
- நகர்ப்புற நிர்வாகக் கொள்கைகளும் வீட்டுவசதி நெருக்கடிகளும்கூடச் சாதி அடிப்படையிலான விலக்குதலை நிலைபெறச் செய்துள்ளன. ரஃபேல் சுஸ்விண்ட், ஷெபா டெஜானி, கிறிஸ்டோப் ஜாஃபர்லோ (Raphael Susewind, Sheba Tejani and Christophe Jaffrelot) போன்ற அறிஞர்கள் இந்திய நகரங்களில் தலித் மக்களும் இஸ்லாமியர்களும் முடக்கிப்போடும் விலக்குதலை எதிர்கொண்டிருப்பதை விவரித்துள்ளனர்.
- தலித்துகளும் இஸ்லாமியர்களும் வாழும் சேரிகளில்தான் அரசு சேவைகளும் தூய்மையான குடிநீர் உள்ளிட்ட நகராட்சிக் கட்டமைப்பு வசதிகளுக்கான அணுகலும் மிக மோசமாக இருப்பதாகப் பெரிய அளவில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. குப்பைகளையும் கழிவையும் எரிக்கும் அல்லது பூமியில் புதைக்கும் பகுதிகள் போன்ற மிக மோசமான சூழலியல் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவையாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகள் பெரும்பாலும் தலித் மக்களும் இஸ்லாமியர்களும் வசிக்கும் இடங்களாகவே இருப்பதும் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
- வீட்டுவசதி - நில உரிமை வலைப்பின்னல் (Housing and Land Rights Network) என்னும் அமைப்பு, இந்தியாவில் மக்கள் தம் வசிப்பிடங்களிலிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையானது, தலித் மக்களும் இஸ்லாமியர்களுமே இத்தகைய அப்புறப்படுத்தல்களால் பெரிதும் பாதிக்கப்படுவதைக் காட்டுகிறது.
- நகர்மயமாக்கலின் மீது தலித் விடுதலை இயக்கம் வைத்திருந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் இந்திய நகரங்கள் தகர்த்துவிட்டதை வாழ்வனுபவத்தின் மூலமாகவும் விரிவான ஆய்வின் மூலமாகவும் நாம் அறிய முடியும். நகர வாழ்க்கைக்கு மாறுவது சாதி ஒடுக்குமுறையின் சில கட்டமைப்புகளை வலுவிழக்கச் செய்திருந்தாலும், அவை மொழியின் வடிவிலும் அரசுக் கட்டுப்பாடுகள் - கொள்கையின் வடிவிலும் உருமாறி, இந்திய நகரங்களில் சாதி செழித்தோங்க வழிவகுப்பவையாகப் பரிணமித்துள்ளன.
- நகர்மயமாதலில் அம்பேத்கர் கண்ட சாத்தியங்களுக்கும் நம்பிக்கைக்கும் இந்திய நகரம் நியாயம் சேர்க்கவில்லை. நகர்ப்புற வளர்ச்சி தொடங்கி நூறாண்டுகள் ஆகிவிட்ட பிறகும், அம்பேத்கரின் வார்த்தைகளில் சொல்வதென்றால், தலித் மக்கள் ‘இந்தியச் சேரிகளின் குழந்தை’களாகவே நீடிக்கிறார்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 08 – 2024)