- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் மக்கள் நலனில் அக்கறை கொண்டிருக்க வேண்டும். கல்வி, சுகாதாரம் அனைத்து குடிமக்களுக்கும் இலவசமாக அளிக்கப்பட வேண்டும் என்றே அரசியல் சாசனம் கூறுகிறது. அவற்றை வழங்குவதே மக்கள் நலம் நாடும் அரசாகும்.
- உத்தரப் பிரசேத்தின் மஹராஜ்கன்ஜ் நகரில், கடந்த 10 மாதங்களில் 111 மழலைகள் - அதாவது, பிறந்து ஒரு வயதைத் தாண்டாத குழந்தைகள் - இறந்துள்ளன. ஒரே மாதிரியாக நிகழ்ந்த இந்த மரணங்களின் பின்னணி என எதையும் உடனடியாகக் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, குழந்தைகளின் உணவுக் குடலில் நஞ்சு இருப்பது கண்டறியப்பட்டது.
- சின்னஞ்சிறு குழந்தைகள் வெளி உணவுகள் ஏதும் உட்கொள்ள வாய்ப்பே இல்லையே என அதிர்ச்சியடைந்த மருத்துவ நிபுணர்கள், தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போதுதான், குழந்தைகளுக்குத் தாய்மார்கள் கொடுத்த தாய்ப்பாலில் நச்சுகள் இருப்பது கண்டறியப்பட்டது. உலகின் மிகத் தூய உணவு என்று அறியப்படும் தாய்ப்பாலில் நச்சு கலந்திருந்த கொடுமையை அறிந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
- உணவில் நச்சின் அளவு அதிகரிப்பதற்குப் பல்வேறு பழக்கங்கள் காரணமாக இருந்தாலும் தடை செய்யப்பட்ட பல பூச்சிக்கொல்லிகள் நமது நிலங்களில் தாராளமாகப் புழங்குவதுதான் முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக டி.டி.ட்டி (DDT - Dichloro diphenyl trichloroethane) எனும் பூச்சிக்கொல்லி அபாயம் மிகுந்தது. ஆனால், பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இத்தகைய நச்சுக்கொல்லிகள் நமது வயல்களில் கொட்டப்படுகின்றன. மஹராஜ்கன்ஜ் குழந்தைகள் மரணமடைய, இதுபோன்ற பூச்சிக்கொல்லிகள்தாம் முக்கியக் காரணி எனத் தெரியவந்திருக்கிறது.
- நஞ்சாகும் உணவுகள்: சமைத்த உணவு, தண்ணீர், ஒயின், பழச்சாறுகள், குளிர்பானங்கள் எனப் பலவற்றில் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் காணப்படுகின்றன. அதிகமான பாலைச் சுரக்க வைப்பதற்காக மாடுகளுக்குச் செலுத்தப்படும் வேதிப்பொருள்கள் மூலமாகவும், சில கால்நடைத் தீவனங்கள் மூலமாகவும் மனிதர்களின் உடலில் நச்சு கலக்கப்படுகிறது. ஆர்கனோகுளோரின் (Organochlorine), ஆர்கனோபாஸ்பேட் (Organophosphate) ஆகிய நஞ்சுகள் உருளைக்கிழங்கில் இருந்ததும் கண்டறியப்பட்டிருக்கிறது. கழுவுதல், உரித்தல் மூலமாக நச்சு எச்சங்களை முழுவதுமாக அகற்றிவிட முடியாது என்பது அதிரவைக்கும் இன்னொரு உண்மை.
- சென்னையிலும் கொடுமை: தாய்ப்பாலில் பூச்சிக்கொல்லி நச்சுக் கலப்பு புதிதல்ல. தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், 2007ஆம் ஆண்டில் ‘சயின்ஸ் டைரக்ட்’ என்கிற இதழில் வெளியிடப்பட்டன. சென்னை பெருங்குடி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலில் ஆர்கனோகுளோரின் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
- சென்னை தாய்மார்களின் தாய்ப்பாலில் அதிக அளவு ஹெக்ஸாகுளோரோ சேக்ளோஹெக்ஸேன் (Hexachlorocyclohexane) உள்ளதாகக் கண்டறியப்பட்டது. 1997 முதல் 2007 வரையான காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சென்னை தாய்மார்களின் தாய்ப்பாலில் இரண்டு மடங்கு ஆர்கனோகுளோரின் பூச்சிக்கொல்லிகளின் அளவு அதிகரித்திருப்பதும் தெரிய வந்தது. இப்போது அது இன்னும் அதிகமாகியிருக்கக்கூடும்.
- 2011-12இல் சீனாவின் ஷாங்காய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் தாய்ப்பாலில் கலந்திருக்கும் நச்சு குறித்துத் தெரியவந்தது. 142 தாய்மார்களின் பாலில் இருந்த பல்வேறு பூச்சிக் கொல்லி நச்சுகள் அதிர்ச்சி தரும் தகவல்களைத் தந்தன. குறிப்பாக, பெருஞ்சேர்க்கை உயிர்ம மாசுகள் தொடர்ச்சியாக உடலில் சேரும்போது புற்றுநோய் போன்ற கடும் விளைவுகளை ஏற்படுத்துவதை நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் தாய்ப்பாலில் நச்சு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பதுதான் பெரும் அச்சமூட்டுகிறது.
- விழிப்புணர்வின்மை: பூச்சிக்கொல்லிகளை விற்கும் விற்பனையகங்களில் முறையான கட்டுப்பாடுகளும் இல்லை. வேதியியல் பெயர்கள் பொறிக்கப்படாமல், நிறுவனத்தின் வணிகப் பெயர்களில் பல பூச்சிக்கொல்லிகள் விற்கப்படுவதால், பிரச்சினைக்குரியவற்றைக் கண்டறிய இயலாத நிலை உள்ளது. இது குறித்து உழவர்களுக்கு உரிய விழிப்புணர்வு தரப்படுவதில்லை.
- அறிவியலில் உயிரியக்குமிப்பு (Bioaccumulation) என்ற ஒரு முறை உள்ளது. அதாவது, நம் உடல் எடுத்துக்கொள்ளும் வேதிப்பொருள் - குறிப்பாக பூச்சிக்கொல்லி போன்ற வேதிகள் - மென்மேலும் சேர்ந்து குவிந்துகொண்டே வரும். இது உடலில் பெருக்கமடையவும் செய்யும். எடுத்துக்காட்டாக டி.டி.ட்டி என்ற வேதிப்பொருள், ஒரு பங்கு அளவாகப் புற்களில் இருக்கும் என்று கொண்டால், அதை உண்ணும் மாட்டின் வயிற்றுக்குள் சென்று இரண்டு மடங்காகப் பெருகும். பின்னர், அந்த மாட்டுப் பாலை அருந்தும் மனிதரின் உடலில் நான்கு மடங்காகப் பெருகும். இந்தப் பெருக்கம் வடிவியல் பெருக்கல் முறையில் அமையும்.
- இதன் விளைவாக எதிர்பாராத உடலியல் சிக்கல்கள் உண்டாகின்றன. குறிப்பாகப் புற்றுநோய், மலட்டுத் தன்மை போன்ற கடும் விளைவுகளைப் பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், பூஞ்சணக்கொல்லிகள் ஏற்படுத்துகின்றன. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா ஃபாஸோ நாட்டில் நடைபெற்ற பல ஆய்வுகள் இதை வெளிக்கொண்டு வந்துள்ளன. இந்தியாவில் புற்றுநோய் இறப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதற்கான காரணிகளாக சிகரெட் போன்ற புகையிலை நுகர்வு மட்டும் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், பூச்சிக்கொல்லிகள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அதிகம் விவாதிக்கப்படுவதில்லை.
- அதிகரிக்கும் பாதிப்புகள்: தேசியப் புற்றுநோய் பதிவுத் திட்ட அறிக்கை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, புற்றுநோய் பாதிப்புக்குள்ளான ஆண்களின் எண்ணிக்கை 2020இல் 6,79,421 ஆக இருந்ததாகவும், 2025இல் 7,63,575 ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், புற்றுநோய் பாதிப்புக்குள்ளான பெண்களின் எண்ணிக்கை 2020இல் 7,12,758 எனத் தெரியவந்திருக்கிறது. வாய்வழி, நுரையீரல், பெருங்குடல் புற்றுநோய்கள் ஆண்களிடையே காணப்படும் மிகவும் பொதுவான புற்றுநோய்களாகும். பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் மொத்தப் புற்றுநோயில் 35% எனத் தெரியவந்திருக்கிறது. ஆக, தாய்ப்பாலில் நச்சு என்ற தகவலும், அதிகரிக்கும் மார்பகப் புற்றுநோயின் அளவும் பூச்சிக்கொல்லிகளின் தொடர்பைச் சுட்டிக்காட்டுகின்றன.
- பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்கள் போன்றவற்றில் உள்ள சில வேதிச் சேர்மங்கள் மனிதர்களின் நாளமில்லாச் சுரப்பிகளையும் இயக்கு நீர்களையும் சீர்குலைப்பதன் மூலம் பெண்கள் கருவுறும் நிகழ்வு தடுமாற்றம் அடைகிறது. குறைவான அளவில் கருவுறுதல், முன்கூட்டிய பிறப்பு, குறைந்த எடையுடன் குழந்தை பிறத்தல், தானாகக் கருக் கலைதல், கரு வளர்ச்சிக் குறைபாடுகள், கருப்பைக் கோளாறுகள் போன்றவை பூச்சிக்கொல்லிகளில் உள்ள வேதிமங்களால் ஏற்படுகின்றன.
- ஹார்மோன்களின் தொகுப்பு, சேமிப்பு, வெளியீடு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றில் பூச்சிக்கொல்லிகள் குறுக்கிடுகின்றன; அத்துடன் ஏற்பிகளின் அங்கீகாரம், பிணைப்பு, பிந்தைய ஏற்பி செயல்படுத்தல் போன்ற விளைவுகள் ஹார்மோன்களின் செறிவு, கருப்பைச் சுழற்சி செயலிழப்புகளின் பண்பேற்றத்துக்கு வழிவகுக்கும். பெரும்பாலான பூச்சிக்கொல்லிகள் நாளமில்லாச் சுரப்பிகளைச் சீர்குலைக்கும் வேதிப்பொருள்களாகச் செயல்படுகின்றன.
- இந்தச் சூழலில், வேளாண்மையிலிருந்து பூச்சிக்கொல்லிகளை அப்புறப்படுத்தும் பணி முதன்மையானதாக இருக்க வேண்டும். அதேபோல துப்புரவுப் பணி, மலேரியா ஒழிப்பு போன்றவற்றில் டி.டி.ட்டி பயன்படுத்தும் வழக்கத்தை அறவே நிறுத்த வேண்டும். எதிர்காலக் குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டு நச்சு கலந்த பூச்சிக்கொல்லிகளைச் சுற்றுச் சூழலிலிருந்து விரட்டுவது நம் ஒவ்வொருவரின் கடமை.
நன்றி: தினமணி (13 – 02 – 2023)