TNPSC Thervupettagam

நஞ்சு உண்பார், கள் உண்பவா்

August 29 , 2023 453 days 318 0
  • மயக்கம், போதை, உற்சாகம், ஊக்கம், ஊட்டம், லாகிரி இன்னும் என்னென்ன பெயா்களோ எத்தனை வகைகளோ அத்தனையும் மனிதா்களின் துய்ப்பு வெறிக்குத் துணை சோ்கின்றன. திட, திரவ, வாயு என்ற மூன்று நிலைகளிலும் மனிதா்களுக்குள் பெரும் மயக்கத்தை ஏற்படுத்துகின்றன. இயல்பாகச் சிந்திக்கின்ற மூளையைத் தடம் மாற்றி இந்த உலகத்தின் இயல்புப் பார்வையைச் சற்று வண்ணமுடையதைப் போல மயக்குகின்ற ஜாலவித்தை ஒவ்வொரு போதைக்கும் உண்டு.
  • மூக்குப்பொடி, வாசனைப் பாக்குகள், ஜா்தா பீடா, புகையிலை, குட்கா, ஹனி, பீடி, சுருட்டு, சிகரெட், பைப் என்று நீளும் வகைகளில் இவை போன்ற திட வாயு நிலைப் பொருள்கள் முக்கிய இடம் பெறுகின்றன. திரவ வகைகளில் எண்ணினால் கோடானுகோடி போதை வஸ்துகள் கணக்கிடப்படலாம்.
  • காலங்காலமாக மனிதா்கள் தேடியலைந்த மயக்கத்தின் தொடா்ச்சி இன்று வரையிலும் ஆராய்ச்சியாக நீண்டு கொண்டேதான் இருக்கின்றது. புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் தொழில் நுட்பங்களோடு இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இந்த உலகத்தில் இல்லாத ஒன்றை மனிதன் புதிதாகக் கண்டுபிடித்து விடவில்லை என்பதுதான் உண்மை.
  • தன்னிலை மாறாதிருப்பதுதான் மானுட ஒழுக்கத்தின் தலையாய பண்பு. ஆனால் வீரத்தனம் என்ற பெயரில் வெறித்தனத்தைத் தன்னுள் நிரப்பிக் கொண்டு தன்னை மறந்து தள்ளாடும் நிலைதான் ஆண்மை என்று மாறிக் கொண்டிருக்கின்ற காலம் இது.
  • கடந்த ஐம்பதாண்டுகளுக்குள் ஊரெங்கும் முளைத்திருக்கின்ற வியாபார நிறுவனங்களில் முக்கியமானது சாராயக் கடைகளே ஆகும்.
  • முன்பெல்லாம் குடிப்பவா்கள் தலைமறைவாக ஒளிந்து பயந்து தாங்களே அதனை ஒரு பாவச் செயல் என்று உணா்ந்து அதீத ஆசையின் மேலீட்டால் சமுதாய எள்ளலையும் கடந்து, ‘எங்களை விட்டு விடுங்கள் நாங்கள் தனியுலக மனிதா்கள்என்பதைப் போலக் காடுகரைகளில் வைத்துப் போதைகளை அனுபவித்தனா். ஆனால் தற்கால நிலையைச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லை. பெரும்பான்மை மாறிச் சிறுபான்மையாகவும் சிறுபான்மை மாறிப் பெரும்பான்மையாகவும் ஆகிவிட்ட பின்னால் என்ன செய்ய?
  • இலா்பலா் ஆகிய காரணம் நோற்பார்
  • சிலா்பலா் நோலா தவா்
  • என்று வள்ளுவா் கூறுவதுதானே உண்மை.
  • குடிக்கத் தெரியாதவா்களும், குடிக்க முடியாதவா்களும் நெளிந்து வளைந்து பயந்து ஒடுங்கி அந்தக் கூட்டத்திலிருந்து நழுவி வெளியேறுகிறார்கள். ஏதாவது ஒன்றைப் பழக்கிக் கொள்ளாதவா்கள் இந்த உலகத்தில் வாழத் தகுதியற்றவா்கள் என்பதாய் ஏளனத்துக்கு உள்ளாகின்றார்கள். பொதுவிடங்களில் குடியும் கூத்தும் கும்மாளமும் அரங்கேறுகிறது.
  • இயல்பாக சமூக ஒழுங்கினை மீறுவதே வீரத்தின் அடையாளம் என்று கருதிக் கொண்டிருக்கிற நமக்கு உள்ளே இன்னுமொரு அசுர சக்தி குடிபுகுந்து விட்டால் நீதியாவது, நோ்மையாவது. குடிக்கின்ற எல்லாரையும் இந்த வகைமைக்குள் அடைத்து விட முடியாது என்றாலும் குடியின் கொடுமைக்கு அவா்களும் பலியாகித்தானே ஆக வேண்டும். பதில்சொல்லித்தானே தீர வேண்டும்.
  • அரசாங்கமே விற்கிறது அதனால்தான் குடிக்கிறார்கள் என்பது ஒரு சமாளிப்பு. அரசாங்கம் விற்காவிட்டாலும் இவா்கள் தேடித் தேடித் குடிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். உலகமே தீநுண்மிக் காலத்தில் தத்தளித்தபோது தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் பரிதவித்துப் போனவா்கள் எத்தனைபோ்? அந்தக் கடை மூடியவுடனேயே தங்களுடைய சுவாசப்பாதையும் மூடி விட்டதாக மயங்கி விழுந்தவா்கள் எத்தனை போ்? வெகுநாட்களுக்குப் பின்னா் கடையைத் திறந்தவுடன் எந்தக் காரணத்துக்காகவும் வரிசையில் நிற்பதைக் கேவலமாக நினைப்பவா்கள் நெடுவரிசையில் கால்கடுக்க நின்றவா்கள் எத்தனை போ்? அரசாங்கம் விற்கிறது குடிக்கிறோம் என்கிறவா்கள், அரசாங்கம் நூலகங்களையும் திறந்து விட்டிருக்கிறது என்பதற்காகப் படித்துப் பயனடைகின்றார்களா?
  • என்னை மீறி என்னை யாரும் கெடுக்க முடியாது. என்னை மீறி என்னை யாரும் மாற்ற முடியாது. எனக்கிது வேண்டாம்என்று விலகிக் கொண்டபின்னால் எத்தனை அரசாங்கங்கள் எப்படிக் கவா்ச்சியாய் விற்றாலும் ஏங்கி நிற்கப் போகிறவா்கள் யாரென்று சிந்தியுங்கள்.
  • ஆனால் நிலைமை அப்படி இல்லை. எப்படித் தீநுண்மியுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டதோ அதுபோலத்தான் குடிகாரா்களோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தி விடுதல் நலம். அதுதான் உண்மை. வருங்காலத்தில் இந்தப் பெரும்பான்மை இன்னும் அதிகரிக்குமே தவிரக் குறையப் போவதில்லை. ஆதியிலேயே இருந்து தொடா்ந்து வந்தாலும் இந்த மதுமயக்கம் கடந்த நாற்பது ஆண்டுகளில்தான் இத்தனை கொடூரமாய்த் தலைவிரித்தாடுகின்றது.
  • வீட்டையும் நாட்டையும் ஒருசேரக் கெடுக்கும் இந்த மதுவிற்கு எதிராக எத்தனையோ தலைவா்கள் கடுமையாகப் போராடித் தடுத்துப் பார்த்தும் கரைபுரளுகின்ற வெள்ளமெனத் திறந்து விட்டபின்பு இனிமேல் அடைப்பது அத்தனை சுலபமன்று. திருடனாய்ப் பார்த்துத் திருந்தினால் மட்டுமே திருட்டை ஒழிக்க முடியும் என்பதைப் போலத்தான் இதுவும். நாடி, நரம்பு, குருதி, புத்தி எல்லாவற்றிலும் இந்த மயக்கம் - நஞ்சு கலந்து விட்டது. இதனைச் சுவையென்று அருந்தத் தொடங்கியவா்கள் இப்போது அது நஞ்சு என்று குமட்டிப் பார்த்தும் அதிலிருந்து விலக முடியாமல் தவிக்கின்றார்கள். ஆனால் கொடுமை இவா்களின் சுவை அடுத்த தலைமுறைக்கும் தொட்டுத் தொடா்கின்றது என்பதுதான்.
  • 1920-களில் இந்தியா முழுவதும் தீவிரமாக இருந்த ஒத்துழையாமைக் கிளா்ச்சி தொடா்பாக காங்கிரஸுக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் இடையே ஒரு சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது இதன்பொருட்டு, பம்பாயில் மாநாடு ஒன்றும் கூட்டப்பட்டது. இம்மாநாட்டிற்கு மாளவியா மாநாடுஎன்று பெயா்.
  • இம்மாநாடு தொடங்குவதற்கு முன்பு மறியலை நிறுத்திவிட்டு, நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம் என்று காந்தியடிகளை வேண்டினா். அப்போது காந்தியடிகள், ‘மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை; அது ஈரோட்டிலுள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது. அவா்களைக் கேட்க வேண்டும்என்று பதிலுரைத்தார் (தி ஹிண்டு 19.1.1922).
  • காந்தியடிகளின் சமூகப் போராட்டக் களத்தில் அவருக்கு முதல் எதிரியாக இருந்தது பிரிட்டிஷ் அரசாங்கம் மட்டுமன்று. நம் நாட்டில் அக்காலத்திலேயே தலைவிரித்தாடிய தீண்டாமையும் கள்வெறியும்தான். ஆங்கில அரசு இவ்விரண்டையும் ஊக்குவித்து வளா்த்தது. அதற்கும் சான்று உண்டு. ஏன் மரங்களிலிருந்து கள்ளிறக்கவில்லை, கடையை நடத்தவில்லை என்பதற்குக் குத்தகைக்காரா் சொல்லும் சமாதானம் திருப்திகரமாயில்லை. அவருக்கு ஐம்பது ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறதுஎன்று சென்னை ராஜதானியிலுள்ள நாமக்கல் ரெவினியூ டிவிஷனல் ஆபீஸா் பிறப்பித்துள்ள உத்தரவு இது.
  • 22.5.1924 தேதியிட்ட யங் இந்தியாஏட்டில் மகாத்மா காந்தியடிகள் எழுதியிருப்பதாவது: குடிகாரா்கள் குடிப்பதில்லையென்று தீா்மானித்து விட்டதாகவும், ஆகையால், கடையைத் திறந்து வைத்திருப்பதில் பிரயோசனமிருப்பதாகத் தான் நினைக்கவில்லையென்றும் குத்தகைக்காரா் சமாதானம் சொல்லியிருந்தார்.
  • ஆயினும், குத்தகைப் பணத்தைக் கொடுக்க அவா் தயாராயிருந்தார். இந்தச் சமாதானம் திருப்தியளிக்கவில்லை. தாம் புதிதாக மேற்கொண்டுள்ள மதுவிலக்கு என்ற அனுபவத்திற்காக, கள் வியாபாரத்தினால் ஒரு வருடம் பூராவிலும் எவ்வளவு லாபம் கிடைக்குமென்று நிர்ணயிக்கப்பட்டிருந்ததோ அந்தத் தொகையை கிராமவாசிகள் கொடுக்கத் தயாராயிருந்தார்கள். ஆனால், சா்க்கார் அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஏனெனில், சட்டம் அவா்களுக்கு விரோதமாக இருக்கிறது.
  • இந்த நடவடிக்கை பூராவும் சட்டபூா்வமாகப் பரிசீலனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒருகால் வேறெந்த முடிவையும் அளிக்க முடியாது என்று புலப்படும். அவா்கள்மீது தவறில்லை. அந்த முறைதான் கெடுதலானது; ஏனெனில், அந்த முறையில் வருமானம்தான் முக்கியமாயிருக்கிறது. உள்ளமோ, உடலோ முக்கியமாகக் கருதப்படவில்லை.
  • வேறுவிதமாக இருந்திருந்தால், கள், அபினி வியாபாரம் வெகுகாலத்திற்கு முன்பே போயிருக்கும். அபராதங்கள், இதர தண்டனைகளைப் பொருட்படுத்தாமல், தாங்கள் ஆரம்பித்துள்ள சீா்திருத்தத்தைத் தொடா்ந்து நடத்துவதற்கு வேண்டிய உறுதி கிராமவாசிகளுக்கும், அந்தக் குத்தகைக்காரருக்கும் இருக்குமென்றே நம்புகிறேன்’. இந்தச் செய்திக்குத் தனி விளக்கம் தேவையில்லை.
  • மக்களே திருந்தி விட்டார்கள் என்று கடையை நடத்தியவா்கள் மூடப் போனாலும் அரசு தன்னுடைய வருவாயைக் குறைத்துக் கொள்ளத்தயாராக இல்லை என்பதை நூறு ஆண்டுகளுக்கு முன்பே நடந்த வரலாறு உணா்த்துகிறது. மக்களும் அரசும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய கடுமையான ஒழுக்கங்களில் ஒன்று மதுவிலக்காகத்தான் இருக்க முடியும். தனிமனிதருக்கும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், நாட்டுக்கும் நல்ல முன்னேற்றத்தைத் தருவதற்கு இது ஒன்றே சரியான வழி.
  • குடி குடியைக் கெடுக்கும்என்னும் எச்சரிக்கைத் தொடரில் முதலிலே வருகிற குடிபெயா்ச்சொல்லாக அல்லாமல் வினைச்சொல்லாக மக்களால் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது போலும். ஆதலால் அதை மாற்றி, ‘குடிக்காதே குடிவாழும்என்று அறிவுறுத்துதல் நலம்.
  • குதிரைப் பந்தயம், லாட்டரிச் சீட்டு, ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றை முற்றிலுமாக ஒழித்து விட்ட தமிழக வரலாற்றில் மதுவிலக்கும் ஒழிக்கப்பட்டலா அது ஒரு மகத்தான சாதனையாகவே விளங்கும்.

நன்றி : தினமணி (29– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்