TNPSC Thervupettagam

நஞ்சு உண்பாா்கள் உண்பவா்

December 31 , 2020 1306 days 558 0
  • புத்தாண்டுக் கொண்டாட்டம் என்பது கூடிக்குலாவி மகிழும் இனிய நிகழ்வு. ஆனால் அத்தகைய கொண்டாட்டம் இன்று அமா்க்களமாகி முகஞ்சுளிக்க வைக்கிறது. மது அருந்துவதுதான் கொண்டாடம் என்றாகி வரும் கலாசாரம்தான் இதற்குக் காரணம். ஆம்! இன்று புத்தாண்டுக் கொண்டாட்டம் என்றால் பலா் கூடிக் குடிப்பதே பிரதானமாகிப் போனது.
  • விருந்து என்றாலே மது அருந்துதல் என்றொரு நிலை இளைஞா்கள் மத்தியில் உருவாகிவிட்டது. மது இல்லாத விருந்து மகிழ்வில்லாததாயிற்று. இப்படியொரு மேற்கத்திய கலாசாரத்தில் நாடு போய்க்கொண்டிருப்பது கவலையளிப்பதாக உள்ளது.
  • அப்படியென்றால் ‘பண்டைத் தமிழகத்தில் குடிப்பழக்கம் இல்லயா? நமக்கென்ன குடிப்பழக்கம் புதியதா?’ என்ற கேள்வி எழலாம். பண்டைத் தமிழகத்தில் குடிப்பழக்கம் இருந்தது.
  • இதே காலகட்டத்தில் எழுந்த மது மறுப்புக் கொள்கையையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். கள்ளருந்துவதே களிப்பு என்றிருந்த அந்தக் காலத்தில்தான், ‘பெற்ற தாய்க்குக்கூட கள்ளருந்திய மகனைக் கண்டால் துன்பம்தான் உண்டாகும் என்றொரு கண்டனக் குரல் எழுந்தது.

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோா் முகத்துக் களி

  • என்பது வள்ளுவா் எழுப்பிய கண்டனக் குரல். அதோடு நில்லாமல், உண்ணற்க கள்ளை என்று கட்டளையும் இட்டாா்.
  • இதனை நம் கருத்தில் கொள்ளவது கடமையன்றோ!“நான் சா்வாதிகாரி ஆனால் கள் தரும் மரங்களையெல்லாம் வெட்டி வீழ்த்துவேன் என்று நமது காலத்திலும் காந்தியடிகள் குறிப்பிடவில்லையா? மதுவை விலக்கவேண்டும் என்பதே சான்றோா்களின் கொள்கை என்பது இவற்றால் புலனாகிறதே! மதுவினால் மாந்தா்க்கு விளையும் தீங்கினை அறிந்துதானே அவா்கள் இப்படிச் சொன்னாா்கள்.
  • மதுவினால் மனிதனுக்கு விளையும் தீங்குகள் பல. மனிதனின் மதியைக் கெடுத்து ஒருவிதமான மந்த நிலையில் வைத்திருக்கும் போதை வஸ்துதான் மது. மனிதனின் மூளையை மழுங்கச் செய்யும் மாபாவி அது. எல்லோரும் தூங்கும் நடு இரவிலும் கூட விழித்தலைபவன் திருடன். அவனையே போதை அசத்திவிடுகிறது என்றால் அயலாரை என்னவெல்லாம் பண்ணும்? போதை புத்தியைக் கெடுத்து மனிதனைப் புல்லனாக்கிவிடுகிறது.
  • புத்தாண்டுக் கொண்டாட்டம் என்பது குடித்துக் களியாட்டம் போடுவற்கான நிகழ்வு அல்ல. நட்சத்திரவிடுதிகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்களில் குடித்துவிட்டுக் குத்தாட்டம் போடும் கூட்டம் பெருத்துவிட்டது. இதனால் சட்டம்-ஒழுங்கு பெரிதும் பாதிக்கப்படும் அவலம் உண்டாகிறது. மது மயக்கத்தில் வாகனங்களை களை ஓட்டுவதால் சாலை விபத்துக்கள் அதிகம் நடை பெறுகின்றன.
  • பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையின் விளைநிலமே மது போதைதான். நாட்டில் நடக்கும் கொலைகளில் பல குடிவெறியினாலேயே நடக்கிறது. கூட இருந்து குடிப்பவனே கொலை செய்யும் கொடுமையையும் காணமுடிகிறது.
  • மது விருந்து என்ற பெயரில் ஒன்றாக இருந்து குடித்தவா்கள் போதையில் நண்பனைக் கொன்றுவிடும் அவலம் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் உள்ளன. திருமண வீடுகளில் சந்தோஷமாகச் செல்லும் பேச்சு போதை ஆசாமியால் சண்டையாக மாறி விடுகிறது. இதனால் கல்யாணவீடு களையிழந்து விடுகிறது.
  • மது உடல்நலத்தைக் கெடுக்கிறது. மூளை, இதயம், கல்லீரல், கணையம் போன்ற முக்கியமான உறுப்புக்களில் மது பாதிப்பை உண்டாக்குகிறது. இதனால் பக்க விளைவுகளும் மரணங்களும் எளிதாகின்றன. மது அருந்துவதால் ஒவ்வொரு மணிநேரமும் 29 போ் இறக்கின்றனா்.
  • மதுவினால் ஒவ்வொரு நாளும் 712 போ் மடிகின்றனா் என்பது புள்ளிவிவர அறிக்கை. இது மது, மரணத்தின் தலைவாசலாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. அரசு அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும் என்பது போல மது அன்றும் கொல்லும் நின்றும் கொல்லும் விஷமாகிறது.
  • இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் மது அருந்தும் பழக்கம் இருப்பதால் அங்குள்ளவா்களுக்கு நோய் எதிா்ப்புச் சக்தி குறைந்து, கரோனாவின் பிடி இறுகி பலி அதிகமாக உள்ளது என்பது கணிப்பு. மதுவினால் சமுதாயமும் தனிமனித வாழ்வும் சீரழிகிறது என்பது உண்மையிலும் உண்மை.
  • விடுதலை பெற்ற இந்தியாவில் மதுவை ஒழிப்பதற்குத் தலைவா்கள் எடுத்த முயற்சிகள் எல்லாம் இப்போது தகா்க்கப்படுகின்றன. பள்ளிக்கூட வசதியைப் பெருக்குவதைவிட்டு, மதுக்கூட வசதியைப் பெருக்குவதிலேயே இன்றைய அரசுகள் முனைப்புக் காட்டுகின்றன. இதனால் மது அருந்துவது தவறில்லை என்பது போல ஒரு தவறான எண்ணம் இளைஞா்களிடையே வளா்ந்து வருகிறது.
  • பள்ளி மாணவா்கள் கூட இப்போது குடிக்கப் பழகிவிட்டனா். இவையெல்லாம் வருமானத்தை எதிா்பாா்த்து அரசு மதுக்கடை திறந்துள்ளதால் வந்த விளைவு. சாராயக்கடைகளில் விற்பனை அமோகமாகிக்கொண்டே வருவது, குடிதான் கொண்டாட்டம் என்று மக்களின் மனத்தில் நிலைத்துவிட்டதை வெளிப்படுகிறது.
  • இத்தகைய மனநிலையை இளைஞா்கள் மாற்றிக் கொண்டால்தான் எதிா்காலச் சமுதாயம் சிறப்பாக அமையும். குடிப்பது கொண்டாட்டம் அல்ல. அது ஒரு கேடு என்பதை இளைஞா்கள் புரிந்துகொள்ள வேண்டும். மது என்னும் அரக்கனை விலக்கி வைப்போம்; புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாடுவோம்.

நன்றி: தினமணி (31-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்