TNPSC Thervupettagam

நடக்குமா? நடக்காதா?

May 19 , 2021 1347 days 659 0
  • சர்வதேச விளையாட்டு அரங்கில் ஒலிம்பிக் போட்டி என்பது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மிகப் பெரிய நிகழ்வு.
  • கடந்த ஆண்டு தள்ளிப்போடப்பட்ட ஒலிம்பிக் போட்டி, இந்த ஆண்டாவது நடைபெறுமா என்பதை கேள்விக்குறியாக்கியிருக்கிறது கொள்ளை நோய்த்தொற்று.
  • ஜூலை 23-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுவதாக இருக்கிறது சர்வதேச ஒலிம்பிக் போட்டி.
  • கடந்த ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நடைபெற இருந்த போட்டிகள், கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக ஓராண்டு தள்ளிப் போடப் பட்டது.
  • கொள்ளை நோய்த்தொற்று இன்னும் கட்டுக்குள் அடங்காமல் இருக்கும் நிலையில், டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டி எப்படி நடக்கப் போகிறது என்கிற கேள்வி எழுகிறது.
  • ஒலிம்பிக் போட்டியை நடத்தியே தீருவது என்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் செய்கோ ஹஷிமோட்டோ உறுதியாக இருக்கிறார்.
  • ஆனால், நோய்த்தொற்றுப் பரவலால் அச்சமடைந்திருக்கும் ஜப்பான் மக்கள் மத்தியில் அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
  • சர்வதேச ஒலிம்பிக் போட்டி என்பது சாதாரணமான நிகழ்வு அல்ல. ஏறத்தாழ 205 நாடுகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் 11,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் நிகழ்வு.
  • விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல், பயிற்சியாளர்கள், அதிகாரிகள், போட்டியை நடத்தத் தேவையான ஊழியர்கள் என்று உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் டோக்கியோ நகரில் வந்து குவிவார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  • மூன்று வார டோக்கியோ ஒலிம்பிக் போட்டியால், சர்வதேச அளவில் நோய்த்தொற்றுப் பரவல் மிகப் பெரிய அளவில் அதிகரித்துவிடக் கூடிய ஆபத்து காத்திருக்கிறது என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
  • ஆப்பிரிக்காவிலும், ஆசிய பசிபிக்கிலும் உள்ள பல சிறிய நாடுகளில் முன்களப் பணியாளர்கள் உள்பட ஒருவருக்குக்கூட இன்னும் தடுப்பூசி செலுத்தப்படாத அவலம் காணப்படும்போது, இத்தனை பொருள்செலவில் ஒலிம்பிக் பந்தயத்தை நடத்தி நோய்த்தொற்றுப் பரவலை ஊக்குவிப்பது தேவைதானா என்பது அவர்களது தர்க்க ரீதியான வாதம்.
  • ஜப்பானில் ஏற்கெனவே நான்கு முறை அவசர நிலை அறிவிக்கப்பட்டு, இப்போது நான்காவது அலை நோய்த்தொற்றை அந்த நாடு எதிர்கொள்கிறது.
  • சமீபத்திய சோதனைகளின்படி, முதலாவதாக பரவிய தீநுண்மித் தொற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய வகை உருமாறிய தீநுண்மித் தொற்று ஜப்பானில் பரவி வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
  • டோக்கியோ, ஒசாகா, கியோடோ, ஹியோகோ பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் தொடர்கின்றன. இந்தியா அளவுக்கு உயிரிழப்புகள் இல்லை என்றாலும்கூட, ஜப்பானின் மக்கள்தொகையை ஒப்பிடும்போது, பாதிப்பைப் புறந்தள்ளிவிட முடியாது.
  • ஒலிம்பிக் போட்டிக்கு முன்னால் ஒலிம்பிக் ஜோதியை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் சம்பிரதாயம் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக, ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் அடக்கி வாசிக்கப்படுகிறது. ஹியோகோ, ஓகையாமா, ஹிரோஷிமா நகரங்களில் பொது சாலைகள் வழியாக செல்லும் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் ரத்து செய்யப்பட்டது.
  • ஜப்பானியர்கள் மத்தியில் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டபோது 80%-க்கும் அதிகமானோர் போட்டியைத் தள்ளிப்போட வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
  • விளையாட்டு வீரர்கள் நேரடியாக டோக்கியோவுக்கு விமானத்தில் அழைத்து வரப்படுவார்கள். அவர்களுக்கு தினந்தோறும் நோய்த்தொற்று சோதனை நடத்தப்படும்.
  • தங்கள் குழுவினருடன் கலந்துரையாடுவதைக்கூட அவர்கள் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அரங்கத்தில் பார்வையாளர்கள் இருக்க மாட்டார்கள். இதுபோன்ற பல்வேறு எச்சரிக்கைகளுடன்தான் ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிட்டிருக்கிறது சர்வதேச ஒலிம்பிக் சங்கம்.
  • ஒருவேளை இறுதிக்கட்ட போட்டியின்போது விளையாட்டு வீரர் ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டாலோ அல்லது பரிசோதனையில் தவறான முடிவு இருந்தாலோ என்ன செய்வது என்கிற கேள்வி எழுகிறது.
  • அப்படிப்பட்ட நிலையில் அந்த விளையாட்டுப் போட்டி ரத்து செய்யப்படுமா? நோய்வாய்ப்பட்ட வீரருக்கு பதிலாக அதே நாட்டை சேர்ந்த வேறொரு விளையாட்டு வீரரை அனுமதிப்பார்களா என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
  • ஜப்பான் தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்த நாடாகவும், பணக்கார நாடாகவும் இருக்கலாம். ஆனால், கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.
  • ஏற்கெனவே ஜப்பானின் பொருளாதாரம் கொள்ளை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒலிம்பிக் போட்டியின் விளைவாக நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்தால் என்ன செய்வது என்று ஜப்பானியர்கள் அச்சப்படுகிறார்கள்.
  • ஒலிம்பிக் போட்டியை நடத்துவதால் எதிர்பார்த்ததுபோல் சுற்றுலாப் பயணிகளின் வருகையோ, பொருளாதாரத்துக்கு ஊக்கமோ ஏற்படப் போவதில்லை.
  • பந்தயத்துக்கான திட்ட மதிப்பீடு கடந்த ஓராண்டில் மூன்று பில்லியன் டாலர் அதிகரித்து இப்போது 15.4 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. தள்ளிப்போடப்பட்டால் மேலும் அதிகரிக்கும்.
  • போட்டிகளை ரத்து செய்தால் பெரும் இழப்பு. தள்ளிப்போட்டாலோ, அப்போதும் இழப்பு.

நன்றி: தினமணி  (19 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்