அரசியலில் ஊழல்; அதிகாரத்தில் ஊழல் என்ற வாசகங்கள் நாட்டு மக்களின் காதுகளுக்குப் புளித்துவிட்டன. அந்த ஊழலை ஒழிக்க கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த போராட்டம், அண்மையில் லோக்பால் அமைப்பை ஏற்படுத்தியதன் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது.
ஊழல்
அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோரின் பொதுப் பணியில், ஊழல் என்பது ஏதோவொரு வகையில் உள்புகுந்துவிட்டது. இதை ஒழிப்பதற்கான முயற்சிகள், பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன.
முதன்முதலாக, ஊழலைத் தடுப்பதற்கான வழிமுறைகளை வழங்க, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையில் 1966-ஆம் ஆண்டு, முதலாவது நிர்வாக சீர்திருத்தக் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், முதல் முறையாக 1968-ஆம் ஆண்டு லோக்பால் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது இந்திரா காந்தி அரசு. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு இருந்ததால், மக்களவையின் காலம் முடிவுற்றதையடுத்து, இந்த மசோதாவும் காலாவதியாகியது.
1971
இதைத் தொடர்ந்து, 1971-ஆம் ஆண்டு லோக்பால் மசோதாவை இரண்டாவது முறையாக பிரதமர் இந்திரா காந்தி மக்களவையில் தாக்கல் செய்தார். முதல் முறை ஏற்பட்ட தடைகளே தற்போதும் தொடர்ந்தன. பின்னர், 1977-ஆம் ஆண்டு பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசும், 1985-ஆம் ஆண்டு பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசும் லோக்பால் மசோதாவைத் தாக்கல் செய்தன.
எனினும், இந்த விஷயத்தில் நாடாளுமன்றம் சற்றும் அசைந்து கொடுக்காததால், இரண்டு அரசுகளின் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
இதையடுத்து, 1989-ஆம் ஆண்டு பிரதமர் வி.பி.சிங் அரசும், 1996-ஆம் ஆண்டு பிரதமர் தேவெ கெளட அரசும், 1998 மற்றும் 2001-ஆம் ஆண்டுகளில் பிரதமர் வாஜ்பாய் அரசும் லோக்பால் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து தோல்வியையே சந்தித்தன. அதன் பிறகு, 2006-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, லோக்பால் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.
அந்தக் காலகட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்த காமன்வெல்த் விளையாட்டு ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல் உள்ளிட்டவற்றால் நாடே கொந்தளிப்புக்குள்ளானது.
இந்த மிகப் பெரும் ஊழல்களால், லோக்பால் அமைப்பு அவசியம் என்ற விழிப்புணர்வு மக்களிடையே பெருமளவில் உருவாகத் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, லோக்பால் அமைப்பை அமைப்பதற்கான மாதிரி சட்டவரைவைத் தயாரிப்பதற்கு 10 பேர் கொண்ட குழுவை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அரசு அமைத்தது. அதில் 5 மத்திய அமைச்சர்களும், அண்ணா ஹசாரே உள்பட 5 சமூக ஆர்வலர்களும் இடம்பெற்றனர்.
லோக்பால் மசோதா
அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், லோக்பால் மசோதாவை 2011-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு மக்களவையில் தாக்கல் செய்தது.
இந்த முறை மசோதாவுக்குத் தடைகள் சற்று குறைந்திருந்த நிலையில், மசோதாவை ஆய்வுக்கு உட்படுத்தும் பொருட்டு, நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு மக்களவை அனுப்பி வைத்தது. அந்தக் குழு லோக்பால் மசோதாவுக்குப் பல்வேறு பரிந்துரைகளை அளித்தது. இதையடுத்து ஏற்கெனவே தாக்கல் செய்த லோக்பால் மசோதாவை திரும்பப் பெற்ற மன்மோகன் சிங் அரசு, நாடாளுமன்ற நிலைக் குழு அளித்த பரிந்துரைகளை மசோதாவில் இணைத்து, 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதிய மசோதாவைத் தாக்கல் செய்தது.
தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளே, புதிய மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. மசோதாவுக்கு மக்களவையில் கிடைத்த வரவேற்பைப் போன்று, மாநிலங்களவையில் கிடைக்கவில்லை.
45 ஆண்டுகள்
மாநிலங்களவையின் தேர்வுக் குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டு, அதன்மீது தீவிரமாக ஆய்வு நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த லோக்பால் மசோதா, தேர்வுக் குழு அளித்த பரிந்துரைகளோடு 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி மாநிலங்களவையில் நிறைவேறியது.
குறிப்பாக 45 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு, சட்டமாக லோக்பால் மசோதா உருப்பெற்றது.
பிரதமர், அமைச்சர்கள், குரூப் ஏ, பி, சி, டி அதிகாரிகள், மத்திய அரசுப் பணியாளர்கள் உள்ளிட்டோர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பால் அமைப்புக்கு இந்தச் சட்டம் அதிகாரம் வழங்குகிறது.
இந்த அமைப்பில் ஒரு தலைவர் மற்றும் அதிகபட்சமாக 8 உறுப்பினர்கள் வரை இருக்க சட்டம் வழிவகுத்துள்ளது. அந்த உறுப்பினர்களில், 50 சதவீத உறுப்பினர்கள், நீதித்துறை சார்ந்தவர்களாக இருப்பது அவசியம். மேலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் உள்ளிட்டவர்கள் 50 சதவீதம் இருக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத் தலையீட்டின் காரணமாக, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் தலைமையில் 8 உறுப்பினர்களைக் கொண்ட லோக்பால் அமைப்பை, சட்டம் இயற்றப்பட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு அமைத்துள்ளது. அந்த உறுப்பினர்களும் அண்மையில் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
இதன் மூலம், லோக்பால் அமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. எனினும், லோக்பால் அமைப்பு, ஊழலை முழுமையாக ஒழித்துவிடும் என்பதற்கும் எந்தவித உறுதியும் கிடையாது.
சுதந்திரத்துக்கு முன்பிருந்தே நாட்டில் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. எனினும், நாட்டில் குற்றங்கள் குறைந்ததாகத் தெரியவில்லை.
எனவே, லோக்பால் மட்டுமே ஊழலை ஒழிப்பதற்கான பொறுப்புடைய அமைப்பு என்று எவரும் கருதுதல் கூடாது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பொது மக்களின் தனிமனித ஒழுக்கத்தில் மாற்றமும், அவர்களின் நடத்தையில் மாற்றமும் ஏற்படாதவரை நாட்டில் ஊழலை ஒழிப்பது கேள்விக்குறியே!