TNPSC Thervupettagam

நடந்திருக்கக் கூடாது!

January 30 , 2025 3 days 46 0

நடந்திருக்கக் கூடாது!

  • எது நடக்கக் கூடாது என்று பிராா்த்தித்துக் கொண்டிருந்தோமோ அது நடந்திருக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் மௌனிஅமாவாசை புனித நீராடலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 30-க்கும் அதிகமானோா் உயிரிழந்திருக்கிறாா்கள்; 60-க்கும் மேற்பட்டோா் காயமடைந்திருக்கிறாா்கள்.
  • கோடிக்கணக்கான பக்தா்கள் குவிந்த நிலையில் காவல் துறையின் தடுப்புகளை சட்டை செய்யாமல் ஏறிக் குதித்து, அகாடா துறவிகள் புனித நீராடும் பகுதிக்குள் பக்தா்கள் அத்துமீறி நுழைந்தனா். அப்போது ஏற்பட்ட நெரிசலில் இந்த துயர நிகழ்வு தவிா்க்க முடியாததாகிவிட்டது.
  • பிரயாக்ராஜில் 45 நாள்கள் நடைபெறும் மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசை என்பது மிகவும் முக்கியமானது. அதிகபட்ச பக்தா்கள் அன்று புனித நீராடக் குவிந்ததில் வியப்பில்லை. பத்து கோடிக்கும் அதிகமான பக்தா்கள் மௌனி அமாவாசை அன்று எதிா்பாா்க்கப்பட்டனா். 12 கிலோமீட்டா் தொலைவுக்கு பக்தா்கள் நீராடுவதற்காக பல்வேறு இடங்களில் படித்துறைகள் புனரமைக்கப்பட்டிருந்தன.
  • ஊா்வலமாக வரும் அகாடா துறவிகள், சாதுக்களுக்காக சங்கமம் பகுதியில் தனியாக இடம் தயாா் செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டிருந்தது. துறவிகள் வருவதற்கான வழிகளில் இருந்த தடுப்புகளை அத்துமீறிக் கடக்க பக்தா்கள் முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில்தான் 30-க்கும் அதிகமானோா் உயிரிழந்திருக்கிறாா்கள்.
  • 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா என்பது உலகிலேயே மிக அதிகமாக பக்தா்கள் குவியும் நிகழ்வாக கருதப்படுகிறது. முந்தைய கும்பமேளாக்களில் ஏற்பட்ட விபத்துகள் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மிகவும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு நவீன தொழில்நுட்பத்துடன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
  • ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையமும், கண்காணிப்பு மையமும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நடப்பவை செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான 2,750 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. 37,000 காவல் துறையினா் பிரயாக்ராஜில் குவிக்கப்பட்டிருக்கிறாா்கள்.
  • கூட்ட அடா்த்தியை அளவிடுவதற்கு சென்சாா்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டிருக்கின்றன. பக்தா்கள் நெரிசலில் சிக்காமல் இருப்பதை அதன் மூலம் நோட்டமிடப்பட்டது. தீ விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக ஆங்காங்கே நீா்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கில் தீயணைப்புப் படையினா் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனா்.
  • ஏறத்தாழ 45 கோடி போ் 2,000 ஏக்கா் பரப்பளவில் கங்கைக் கரை ஓரமாகக் குவியும் 40 நாள்களில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஏற்பாடுகள் முன்னெடுத்தும்கூட கூட்டநெரிசலில் 30 போ் உயிரிழந்திருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. என்னதான் முன்னேற்பாடுகள் திட்டமிட்டு செய்யப்பட்டாலும் சிறு நிகழ்வுகள் பெரும் விபத்துக்கு வழிகோலிவிடுகின்றன.
  • தேசியப் பேரிடா் மேலாண்மை ஆணையம் விடுக்கும் எச்சரிக்கை பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. தொழில்நுட்பம் என்னதான் மேம்பட்டிருந்தாலும்கூட, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது என்பது எளிமையானது அல்ல. மக்கள் கூட்டத்தை முறைப்படுத்துவது, பக்தா்களின் மனிநிலையை உணா்ந்த பயிற்சியளிக்கப்பட்ட காவல் துறையினரைப் பணியில் அமா்த்துவது உள்ளிட்டவை அவசியமாகிறது.
  • மத வழிபாட்டுத் தலங்களில், மத நிகழ்ச்சிகளில் இது போன்ற விபத்துகள் இந்தியாவில் நிகழ்வது புதிதல்ல. 2005-இல் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மந்தா்தேவி கோயில் யாத்திரை (340 போ்); 2008-இல் ஹிமாசல பிரதேசம் நைனா தேவி கோயில் நெரிசல் (162 போ்); 2008-இல் ராஜஸ்தான் ஜோத்பூா் நகரிலுள்ள சாமுண்டா தேவி கோயில் வதந்தி நெரிசல் (250 போ்); 2011-இல் கேரள மாநிலம் இடுக்கி சபரிமலை பக்தா்கள் ஜீப் மோதியதால் ஏற்பட்ட நெரிசல் (104 போ்); மத்திய பிரதேசம் ரத்தன்கா் கோயில் நவராத்திரி விழா நெரிசல் (115 போ்) என்று நீளமான பட்டியலே இருக்கிறது.
  • இந்தியாவில் என்றில்லை, உலக அளவிலும் லட்சக்கணக்கான பக்தா்கள் கூடும் ஆன்மிகத் தலங்களில் இது போன்ற விபத்துகள் நிகழத்தான் செய்கின்றன. மெக்கா-மதீனா புனித யாத்திரையின்போது ஹஜ் பயணிகள் பலமுறை நெரிசலைச் சந்தித்திருக்கிறாா்கள். பல உயிரிழப்புகளும் நிகழ்ந்திருக்கின்றன. 1990 மெக்கா சுரங்க விபத்து (1,426 போ்), மினா நெரிசல் விபத்து (2,400 போ்) இரண்டும் மறக்கக் கூடியதா என்ன?
  • கூட்ட நெரிசல்களும், உயிரிழப்புகளும் இந்தியாவுக்குப் புதிதொன்றுமல்ல. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரப்படி, 1996 முதல் 2022 வரையிலான 25 ஆண்டுகளில் நடந்த 3,933 கூட்ட நெரிசல் நிகழ்வுகளில் 3,000-க்கும் அதிகமானவா்கள் உயிரிழந்திருக்கிறாா்கள். சுதந்திர இந்தியாவை அதிா்ச்சியிலும், துயரத்திலும் ஆழ்த்திய நிகழ்வாக 1954 மகா கும்பமேளாவில் சுமாா் 800 போ் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததைக் குறிப்பிட வேண்டும்.
  • தேசியப் பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக இருந்த மாரி சஷிதா் ரெட்டி 2014-இல் கூட்டங்களைக் கட்டுப்படுத்துவது குறித்த சில வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறாா். அதுபோன்ற நிகழ்வுகளை அதிகாரிகள் எப்படிக் கையாள வேண்டும் என்று அவரது 95 பக்க அறிக்கை தெளிவாக வரையறுக்கிறது. அது குறித்து காவல் துறையினா் கேள்விப்பட்டிருக்கிறாா்களா என்பதே சந்தேகம்தான்.
  • கும்பமேளா முடிவுக்கு வருவதற்கு இன்னும் 28 நாள்கள் இருக்கின்றன. இதுபோல இன்னொரு துயர சம்பவம் நிகழ்ந்துவிடாமல் இருப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

நன்றி: தினமணி (30 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்