TNPSC Thervupettagam

நடுங்கும் நிலம்!

September 21 , 2017 2620 days 2923 0

நடுங்கும்     நிலம்!

___________

 அ. மாணிக்கவள்ளி கண்ணதாசன்
 

               அண்மையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பதின்மூன்றாம் தேதி அன்று இந்தோனேஷியா பகுதி சுமத்ராவில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நல்ல வேளையாக சுனாமி பாதிப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டது எல்லோருக்கும் நிம்மதியளித்தது. இந்தோனேஷியா பகுதியானது நிலப்பலகைகள் மோதும் பகுதியான அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு ஏற்படும் பசுபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளது.  கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேஷியாவின் மேற்கு ஏசிச் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமானது 100 க்கும் மேற்பட்ட நபர்களை பலி கொண்டதோடு மட்டுமல்லாமல் பலரை படுகாயமடையச் செய்தும், ஆயிரக்கணக்கானோர் வீட்டினை இழக்கவும் செய்தது வேதனைக்குரியது.

அண்மையில் கடந்த ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி சீனாவின் தென்மேற்கு மாகாணம் சிச்சுவானில் சாங்சா நகரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.0 அளவினைத் தொட்டபடியால் 24 நபர்கள் மரணம் அடைந்தார்கள். 493 நபர்கள் காயமடைந்தும் 45 நபர்கள் படுகாயமடைந்தும் உள்ளனர். மேலும் 85000 மக்கள் இடம்பெயருமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளார்கள். சீனாவிற்கு நிலநடுக்கம் ஒன்றும் புதிதல்ல. 2008 ஆம் ஆண்டு ரிக்டர் அளவுகோலில் 8.0 அளவினை துரதிர்ஷ்டவசமாகப் பதிவு செய்த காரணத்தினால் 87000 நபர்கள் மரணமடைந்தது மற்றும் காணாமல் போனது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி நிலநடுக்கமானது இந்தியா மற்றும் பங்களாதேஷில் ஏற்பட்டது.  ரிக்டர் அளவுகோலில் அளவீடு 5.7 ஆக இது இருந்தது. இதில் மூன்று பேர் இறந்தனர் மற்றும் எட்டு நபர்கள் காயமும் அடைந்தனர். மேலும்,  2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாள் வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியையும் மாபெரும் உயிரிழப்பையும் நம்மால் என்றும் மறக்க முடியாது. ரிக்டர் அளவுகோலில் 9.3 அளவினைப் பதிவு செய்து ஏறக்குறைய 2,80,000 மக்களைப் பலி வாங்கிய அதி பயங்கர நிகழ்வு நம் நெஞ்சில் இன்றும் நெருஞ்சி முள்ளாய்க் குத்தும் அல்லவா!
சுனாமி-தகவல் பேழை
  • சுனாமி எனப்படும் வார்த்தைக்கு ஜப்பானிய மொழியில் ‘துறைமுக அலைகள்’ என்று பெயர்.
  • சுனாமி எனப்படுவது மிகுந்த ஆற்றலுடைய நிலநடுக்கத்தினால் அல்லது எரிமலை வெடிப்பினால் தொடர்ச்சியாக ஏற்படும் வேகமான அலைகளால் உருவாவது ஆகும்.
  • இந்த அலைகள் கடற்கரைப் பகுதி , வீடுகள் ஏன் ஒரு நகரத்தினையே மூழ்கடிக்கும் தன்மை வாய்ந்தது.
  • சுனாமியை  துரதிர்ஷ்டவசமாக நம்மால் தடுக்க முடியாது. ஆனால், அந்த அலைகள் நிலத்தினைச் சூறையாடுவதற்கு முன்னர் மக்களுக்கு முன்னறிவிப்புச் செய்து அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல நம்மால் அறிவுறுத்த முடியும்.
  • சுனாமி வருவதினை நம்மாலும் கணிக்க முடியும். எப்படி தெரியுமா? கடல் அலையானது 100 மீட்டர் அளவில் உள்வாங்கும். அலைகள்  மிக உயரமாக அமையும்.  அந்த அறிகுறிகளை வைத்துத் தெரிந்து கொள்ளலாம்.
  • 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானின் கிழக்கு கடற்கரையோரம் உள்ள டொகோகு பகுதியில் நிகழ்ந்த சுனாமியானது 15000 நபர்களை பலி வாங்கியது. மேலும் சில இடங்களில் அலையானது 40 மீட்டர் அளவிற்கு உயர்ந்தது.  அது மட்டுமல்லாமல் அணு விபத்துகளையும் ஏற்படுத்தியது.

நிலநடுக்கங்கள் பெரும்பாலும் எதனால் ஏற்படுகின்றது தெரியுமா? புவியில் ஏற்படும் பிளவுகளினால் மற்றும் புவியோடு நகர்வினால் உருவாகும் நிலநடுக்க அலைகளால் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் நடுக்கமே காரணம் ஆகும். நிலநடுக்க அலைகள் பூமிக்கு அடியில் உள்ள ஆற்றல் திடீரென வெளிப்படும் பொழுது நிகழ்கின்றது. பாறைகள் ஒன்றொடொன்று விசையினைச் செலுத்தும்பொழுது உடைதலினாலும் இந்த நிலநடுக்க அலைகள் ஏற்படுகின்றன.  அது மட்டுமல்லாமல் எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு, சுரங்கத் தகர்ப்பு, அணு ஆயுதச் சோதனை ஆகியவற்றாலும் நிலநடுக்க அலைகள்  ஏற்படுகின்றது.

நிலநடுக்கம் மூன்றுவிதமான அலைகளை உருவாக்குகின்றன. P அலைகள், S அலைகள், மேற்புற அலைகள் ஆகியன ஆகும்.  அழுத்த அலைகள் அல்லது அதிர்ச்சி அலைகள் எனப்படும் P அலைகள் நெட்டலைகள் ஆகும். இவை வேகமாகச் செல்லும் நிலநடுக்க அலைகள் ஆகும் . இது செல்லும் வழியில் உள்ள பொருட்களை அழுத்தத்திற்கு உட்படுத்தியும்  பெருக்கமடையச் செய்தும் தொய்வடையச் செய்தும் நாசப்படுத்துகின்றது. S அலைகள் பொருளின் வழியே கடந்து செல்லும் குறுக்கலைகள் ஆகும். P அலைகள், S அலைகளை விட அதி வேகத்தில் செல்கின்றன. மேற்புற அலைகள் மேற்புறத்தில் மட்டும் செல்லக் கூடியதாகும். மேலும் இது ரெய்லக் அலைகள் (Rayleigh wave) என்று அழைக்கப்படுகின்றன. புவி மேலோட்டில் புவிப்பலகைகள் ஒன்றின் மீது ஒன்று மோதுதலும் , நழுவிச் செல்லுதலுமே நிலநடுக்கத்திற்கு மிக முக்கிய காரணமாகும்.
நிலநடுக்கமானது புவியில் பிளவுகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நிலச்சரிவு, பனிச்சரிவு, காட்டுத் தீ ஆகியவற்றையும் ஏற்படுத்தும். மேலும், புவிநடுக்கமானது மின்சார மற்றும் பெட்ரோலிய வாயுப் பாதைகளில் பாதிப்பினை ஏற்படுத்தி தீ விபத்தினை ஏற்படுத்துகின்றன. சான்றாக 1906 ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தீ விபத்துதான் நிலநடுக்கத்தினை விட அதிக பாதிப்பினை ஏற்படுத்தியது தெரியுமா!. மேலும், அணைக்கட்டுகளில் பாதிப்பினை ஏற்படுத்தி வெள்ளப் பெருக்கினை ஏற்படுத்தும். அதனைத் தொடர்ந்து நோய்களையும், மக்களுக்கு மனரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
அண்மைக்கால ஆய்வுகள் உலக வெப்பமயமாதலும் நிலநடுக்கம் நிகழ்வதிற்கு ஒரு காரணியாக  அமைகின்றன என்று கூறுகின்றது. பனியாறு உருகுவதும் கடல்மட்டம் உயர்வதும் புவியின் நிலப்பலகைகளில் அழுத்த வேறுபாட்டினை ஏற்படுத்துகின்றன. அதுவும் புவியில் அடிக்கடி நிலநடுக்கம் நிகழவும் தீவிரமடையவும் காரணிகளாகின்றன.
நிலநடுக்கங்கள் சீஸ்மோ மீட்டரினால் அளக்கப்படுகின்றது. இது 1935 ஆம் ஆண்டு சார்லஸ் ரிக்டர் அவர்களினால் கண்டுபிடிக்கப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் ஒவ்வொரு அளவீடு உயர்வும் 10 மடங்கு நிலம் நடுங்குதல் உயர்வை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் , 32 மடங்கு ஆற்றல் உயர்வதையும் உறுதி செய்கின்றது.  ரிக்டர் அளவுகோலில் 3 க்குக்கீழ் அளவு பதிவானால்  அதனை நம்மால் உணர முடியாது. ரிக்டர் அளவுகோலில் 7 க்கு மேல் பதிவாகும் போது மட்டுமே பாதிப்புகளை ஏற்படுத்தும்.
பெரும்பாலான நிலநடுக்கங்கள் பசுபிக் நெருப்பு வளையத்தைச் சுற்றியே நிகழ்கின்றன. அது என்ன பசுபிக் நெருப்பு வளையம் என்கின்றீர்களா? புவியில் மிக அதிகமான எரிமலைகள் காணப்படுவதும், புவி நடுக்கம் ஏற்படும் இடமே பசுபிக் நெருப்பு வளையம் ஆகும். நிலப்பலகைகளின் மோதலின் விளைவால் ஏற்படும் இயக்கமே பசுபிக் வளையத்தின் நேரடி விளைவாகும். இது பத்து கிலோமீட்டருக்குள் நிகழ்கின்றது. இது 40000 கி.மீ பரப்பளவு கொண்டது. மேலும், உலகின் 90% நிலநடுக்கங்கள் இங்கே நிகழ்கின்றன. அதற்கு அடுத்தபடியாக மத்திய தரைக்கடல், இமயமலை வழியாக ஜாவாவிலிருந்து சுமத்ராவிற்குச் செல்லும் ஆல்பிட் பகுதி நிலநடுக்கம் அதிகம் நிகழும் இடமாகும்.   மேலும் மத்திய அட்லாண்டிக் மலைத்தொடரும் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியாகும்.
இது வரை நடந்த நிலநடுக்கங்களிலேயே பயங்கரமானது 1960 ஆம் ஆண்டு சிலியின் வல்டிவியா பகுதியில் நிகழ்ந்ததாகும்.  ரிக்டர் அளவுகோலில் 9.5 அளவினைக் கொண்டதென்றால் அழிவு அதிகமாகத்தானே இருந்திருக்கும். அப்பொழுது நில நடுக்க அலைகள் உலகம் முழுவதும் உணரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கம்-தகவல் பேழை
  • 1663ல் நிலநடுக்கம் முதன்முதலில் ஐரோப்பியர்களால் அமெரிக்காவில் உணரப்பட்டது. பின் 1769 ல் கலிஃபோர்னியாவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
  • பெரும்பாலான நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் நிலப்பலகையின் எல்லையோரமே நிகழ்கின்றன.
  • கி.மு 350 ல்  அரிஸ்டாட்டில் மென்மையான நிலம் கடினமான நிலத்தினை விட அதிகம் அதிர்வதாக குறிப்பிட்டுள்ளார்.
  • பெரும்பாலான நிலநடுக்கங்கள் 20 ஹெர்ட்ஸ் அதிர்வெண்ணுக்குக் குறைவான அலைகளையே உருவாக்குகின்றன. அதனால்தான் அவற்றை நாம் உணர முடிவதில்லை.
  • நிலநடுக்கம் நாம் அறிந்ததே! நிலாநடுக்கம் அறிவீர்களா? புவியில் நிகழ்வதினை விட இது குறைவான அளவில் நிலவில் நிகழ்கின்றது. நிலாவிற்கும் புவிக்கும் இடையில் உள்ள கடல் அலையின் ஈர்ப்பினால் ஏற்படுகின்றது.
  • ஹைபோ மையம் (Hypocenter / Focus) எனப்படுவது பூமிக்குக் கீழே பிளவுகள் துவங்கும் இடமாகும்.
  • புவியில் ஹைபோ மையத்திற்கு நேரடியாக மேலே உள்ள இடமே நிலநடுக்க மையம் (Epicentre) எனப்படுகின்றது.
  • வருடந்தோறும் 5 லட்சம் நிலநடுக்கங்கள் நிகழ்கின்றன. அவற்றுள் ஒரு லட்சத்தினை மட்டுமே  நம்மால் உணர முடியும். இதில் 100 ஆபத்தினை ஏற்படுத்தக்கூடியவை.
  • உலகின் பெரிய மலைத் தொடர் இமயமலையின் காரகோரம் மற்றும் உலகின் நீண்ட மலைத் தொடர்   ஆண்டிஸ் ஆகிய இரண்டுமே நிலப்பலகை இயக்கத்தினால் உருவானவையாகும்.
  • உலகின் அனைத்துக் காலநிலைகளிலும் நிலநடுக்கம் நிகழக்கூடியது
  • பெரும்பாலான நிலநடுக்கங்கள் புவிப்பரப்பிலிருந்து  50 மைல்கள் ஆழத்திலேயே நடைபெறுகின்றன.
  • உலகிலேயே அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்ட நிலநடுக்கம் 1556ல் மத்திய சீனாவில் ஏற்பட்டதாகும். 8,30,000 நபர்கள் இதில் பலியாயினர்.
  • நிலநடுக்கத்தின் காரணங்களை பிரிட்டிஷ் பொறியாளர் ஜான் மைக்கேல் முதன் முதலில் கண்டுபிடித்தார்.
  • ரிக்டர் அளவுகோலில் ஒரே மாதிரியாக பதிவாகி இருந்த போதிலும்  நிலநடுக்கத்தின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடுகின்றது.
  • 8.6 அளவு உள்ள நிலநடுக்கம் உலகில் இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு வெடித்ததினால் ஏற்பட்ட விளைவைப்போல் 10000 மடங்கு ஆற்றலை வெளியிடுகின்றது.
ஜப்பானிலும் கலிஃபோர்னியாவிலும் நிலநடுக்கங்களை எதிர்த்துத் தாங்கி நிற்கக்கூடிய கட்டிடங்களைக் கட்டுகின்றார்கள். வானுயர்ந்த கட்டிடங்களை விடச் சதுரம் மற்றும் செவ்வக வடிவ சராசரி உயர கட்டிடங்கள் நிலநடுக்கத்தினை எதிர்த்துத் தாங்கி நிற்கும் வல்லமை பெற்றவை.  மேலும் கட்டிடங்கள்  நிலநடுக்கத்தின் போது அதற்கு இணையாக அதிருமாறு வடிவமைக்கப்படுகின்றன. மேற் கூரைகள் மிக எடை குறைந்த பொருட்களால் அமைக்கப்படுகின்றன. வெளிப்புறச்  சுற்றுச் சுவர்கள் வலுவூட்டப்பட்ட கான்கிரீட்டால் அமைக்கப்படுகின்றன. நிலநடுக்கத்தின் போது ஜன்னல்கள் உடையாமல் இருக்க நெகிழும் தன்மை உடையதாக அமைக்கப்படுகின்றன.
ரிக்டர் அளவுகோலில் ஒவ்வொரு அளவீடு உயர்வுக்கும் 32 மடங்கு ஆற்றல் வெளியிடப்படுகின்றது. புவியில் பிளவுபடும்  இடத்தின்  நீளம் மற்றும் அகலம் நிலநடுக்கத்தின் அளவீட்டினைத் தீர்மானிக்கின்றது. 300°
செல்சியசுக்கு மேல் உள்ள பாறைகள் திரவ நிலையில் உள்ள காரணத்தினால் வெடிப்பதற்குப் பதிலாக உருகி வெளியே வருகின்றது. 70 கிலோ மீட்டருக்குள் நிகழும் நிலநடுக்கம் ஆழம் குறைந்த நிலநடுக்கம் எனப்படுகின்றது. 70 கிலோ மீட்டர் முதல் 300 கிலோ மீட்டர் வரை நிகழும் நிலநடுக்கம் இடைநிலை ஆழ நிலநடுக்கம் எனப்படுகின்றது. 300 கிலோ மீட்டர் முதல் 700 கிலோ மீட்டர் வரை காணப்படும் நிலநடுக்கம் வடாட்டி பெனிஆஃப் மண்டலம் (Wadati–Benioff zone) எனப்படுகின்றது.
அமெரிக்காவின் அலாஸ்கா மற்றும் கலிஃபோர்னியா, எல்சால்வடார், மெக்சிகோ, கௌதமாலா, சிலி, பெரு, இந்தோனேஷியா, ஈரான், பாகிஸ்தான், துருக்கி, நியூசிலாந்து,  இந்தியா, ஜப்பான், கிரீஸ், இத்தாலி ஆகிய பகுதிகள் சிறிய அளவிலான நிலநடுக்கம் அடிக்கடி நிகழும் இடங்களாகும் . பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் மிகக் குறைந்த அளவிலேயே நிகழ்கின்றன. ஒவ்வொரு வருடமும் சராசரியாக 3.7 முதல் 4.6 ரிக்டர் அளவீடு வரையிலான நிலநடுக்கங்கள் நிகழ்கின்றன. ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு ஒரு முறை 4.7 முதல் 5.5 ரிக்டர் அளவு வரையிலான சராசரி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு 100 வருடங்களுக்கு ஒரு முறை சராசரியாக  5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இது கூட்டன்பர்க் – ரிக்டர் விதிக்கு  (Gutenberg–Richter law) உதாரணமாகும்
நிலநடுக்கத்தினைப் பற்றி இதுவரை அறிந்தோம் . பனி நடுக்கத்தினைப் பற்றி அறிந்துள்ளீர்களா? ஆம்! அண்டார்டிகாவின் உள்புறம் பனிநடுக்கம் நிகழ்கின்றது. பனிநடுக்கமும் நிலநடுக்கம் போன்றதே.  புவியோட்டிற்குப் பதிலாக பனியோட்டின் மேல் நிகழ்கின்றது.
நிலம் என்னும் நன்மகள் இயற்கையாகவும் , மனிதனின் செயற்கைக் காரணங்களாலும்,நடுங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு  நிலநடுக்கம் என்னும் விஸ்வரூபம் எடுத்து மாபெரும் பேரிடராக நமக்கு மாறி விடுகின்றாள். அப்பேரிடரினை எதிர் கொள்ள நாம் அனைவரும் விழிப்புணர்வு பெற்றவர்களாக இருந்தாலொழிய அதனை நாம் தவிர்க்க இயலாது. ஆதலால் இயற்கையோடு இணைந்து வாழ்வோம். இன்னல்களைத் தவிர்ப்போம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்