- சித்தார்த்தர் துறவறம் ஏற்கப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவர் முதுமையை, மரணத்தைப் பார்த்ததுதான் காரணம் எனச் சொல்லப்படுகிறது. அம்பேத்கரின் ‘புத்தரும் அவர் தம்மமும்’ என்ற நூலில் இதற்கான விடை உள்ளது.
- சித்தார்த்தர் சாக்கிய வம்சத்தைச் சார்ந்த சத்திரியர். சாக்கிய நாட்டுக்கும் அண்டை நாடான கோலியர் தேசத்துக்கும் இடையில் ரோகிணி ஆறு ஓடுகிறது. இருநாட்டு விளைநிலங்களைச் செழிக்கவைக்கும் ஆறு இதுதான். இந்த ஆற்றின் நதிநீரைப் பங்குபோட்டுக்கொள்வதில் இரு நாட்டுக்கும் பிரச்சினை, தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இருப்பதுபோல்.
- சாக்கிய நாட்டில் சாக்கிய சங்கம் செல்வாக்கு பெற்றதாக இருந்தது. சாக்கிய நாட்டின் கபிலவஸ்துவிலுள்ள 20 வயது நிரம்பிய இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் சாக்கிய சங்க உறுப்பினர்கள். அவ்வகையில் சித்தார்த்தரும் தன் இருபதாவது வயதில் இதில் அங்கமானார். சங்கத்தின் முடிவே அரசின் முடிவாகும். சங்கத்தை அதன் தலைவரும் அந்நாட்டின் சேனாதிபதியும் வழிநடத்துவர்.
- ரோகிணி ஆற்று நீரைச் சாக்கியர்கள் பயன்படுத்தத் தடையாக இருந்த கோலியர்கள் மீது போர் தொடுக்க சாக்கிய சங்கத்தில் விவாதிக்கப்பட்டது. போர் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தை சித்தார்த்தர் முன்வைத்தார். கோலியர்கள் நம் உறவினர்கள் அதனால் பேச்சுவார்த்தையின் மூலம் இதற்குத் தீர்வு காணலாம் என்பது சித்தார்த்தரின் கருத்து. சித்தார்த்தரின் கருத்துக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு சங்கத்தில் ஆதரவு கிடைக்கவில்லை.
- பெரும்பாலானோர் போருக்கு ஆதரவாகவே வாக்களித்தனர். சித்தார்த்தர் போருக்கு அஞ்சுவதாக ஏளனமும் செய்யப்பட்டது. சங்கத்துக்குக் கட்டுப்படாதவர்களைத் தூக்கிலிடுவது, நாடு கடத்துவது, சொத்தைப் பறிமுதல் செய்வது, குடும்பத்தை நிந்திப்பது போன்ற தண்டனைகளை சித்தார்த்தரும் அறிவார். ஆனால், அதற்காக போரை ஆதரிக்கவும் அவருக்கு மனம் இல்லை. சித்தார்த்தர் பக்கம் சொற்பமானவர்களே நின்றனர். அதனால் முடிவெடுக்காமல் சங்கக் கூட்டம் கலைந்தது.
- தண்டனைகளும் இல்லாமல் இருக்க வேண்டும். அதே நேரம் போரும் வேண்டாம். முடிவு சங்கத்திற்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும். அதனால் சித்தார்த்தர் மாற்று வழி யோசித்து ஒரு தீர்வைக் கண்டறிந்தார். அதுதான் துறவறம் என அம்பேத்கர் தனது நூலில் பதிவுசெய்துள்ளார். சித்தார்த்தரின் இந்த யோசனையை திரும்பவும் கூடிய சங்கக் கூட்டத்தில் அறிவிக்க, வேறு வழியின்றி சங்கம் இதை ஏற்றுக்கொண்டது. அதனால் சித்தார்த்தரும் குடும்பமும் தண்டனையிலிருந்து தப்பித்தனர். போரைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கவும் சங்கம் ஏகமனதாக ஒப்புக்கொண்டது.
- சங்கக் கூட்டம் முடிந்து சித்தார்த்தர் வீடு திரும்பவதற்கு முன்பே அவரது தந்தை சுத்தோதனா, சித்தி கெளதமி, மனைவி யசோதா ஆகியோர் சங்க நடவடிக்கைகளை அறிந்திருந்தனர். அவர்களுக்கு சித்தார்த்தரின் முடிவு கவலை அளிப்பதாக இருந்தது. ஆனால், சித்தார்த்தர் முடிவுக்குப் பின்னால் இருக்கும் காரணம் அவர்களைச் சமாதானப்படுத்தியது. அவர்கள் ஏற்றுக்கொள்ளவும் செய்தனர்.
- சித்தார்த்தர் துறவறம் ஏற்றுக் காட்டுக்குச் சென்றபோது அவருடன் சன்னா என்கிற அரண்மனைத் தேரோட்டியும் சித்தார்த்தரின் வெள்ளை குதிரையான கந்தகாகவும் கூடவே பயணத்தினர். சித்தார்த்தரின் பயணம் நீண்டது. ஒருகட்டத்தில் இந்த சன்னாவையும் கந்தகாவையும் கடந்தும் செல்கிறார். துறவறம் ஏற்ற சித்தார்த்தர் புத்தகயாவில் அரசமரத்தின் கீழ் நீண்ட தியானம் மேற்கொண்டார். இது அவரது 35ஆவது வயதில் நிகழ்ந்தது. இந்த நிகழ்வுக்குப் பின்தான் சித்தார்த்தர், புத்தர் எனப் போற்றப்பட்டார். சித்தார்த்தர் முதுமை, பிணி, மரணம் போன்ற காரணங்களால்தான் துறவறம் ஏற்றார் என்கிற கருத்துக்கு மாறாக அம்பேத்கர் தனது எழுத்தால் இந்த உண்மையைக் கண்டறிந்து தனது நூலில் பகிர்ந்துள்ளார்.
நன்றி: இந்து தமிழ் திசை (17 – 12 – 2023)