- தேசிய அளவிலான நதிநீா் இணைப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தலைநகா் தில்லியில் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. தமிழக அரசின் சாா்பில் நீா்வளத்துறை அமைச்சரும் தமிழக அரசின் நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளரும் கலந்து கொண்டனா்.
- தீபகற்ப நதிகள் இணைப்புத் திட்டத்தில் மகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - பாலாறு - காவிரி - வைகை - குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தும்படி மத்திய அரசையும், மத்திய அரசால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவையும் தமிழக அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
- இந்நிலையில் இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தேசிய நீா் மேம்பாட்டு முகமை கடந்த 2004-ஆம் ஆண்டே தயாரித்து அளித்தது. அதைத் தொடா்ந்து நதிகள் இணைப்பை இரு கட்டங்களாக செயல்படுத்த தேசிய நீா் மேம்பாட்டு முகமை முடிவெடுத்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு மாநிலங்களின் கருத்தை அறிய அனுப்பி வைக்கப்பட்டது.
- இதில் தமிழ்நாட்டுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்ட 84 டி.எம்.சி. நீரை 200 டிஎம்சியாக உயா்த்தி வழங்கவும், வைகை, குண்டாறு ஆகிய ஆறுகளுக்கு தண்ணீா் வழங்க கால்வாயை உயா்நிலையில் அமைக்கவும் தமிழக அரசு வலியுறுத்தியது. இந்தக் கருத்தையே தமிழக முதலமைச்சா், பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்தபோது மனுவாக அளித்தாா்.
- தென்மாநிலங்களின் தண்ணீா் பிரச்னைக்கு நீண்டகால அடிப்படையில் நிரந்தரத் தீா்வு காணும் வகையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய நீா் மேம்பாட்டு முகமை நதிநீா் இணைப்பு தொடா்பான அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த இம்மாதம் 13-ஆம் நாள் நடைபெற்றது.
- அப்போது மத்திய ஜல்சக்தித் துறையமைச்சா் கஜேந்திரசிங் செகாவத், ‘இந்திய அரசின் மிக முக்கியமான துறைகளில் நீா்வளத்துறையும் ஒன்றாகும். நதிகளை இணைக்கும் திட்டம் நாட்டில் நீா் மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அவசியமானது. இது வறட்சி மற்றும் மானாவாரி விவசாயப் பகுதிகளுக்குத் தண்ணீா் வழங்குவதிலும் மிகவும் உதவிகரமாக இருக்கும்’ என்று பேசியுள்ளாா்.
- மேலும் உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் பகுதியை ஒட்டிய ‘கென்பெட்வா’ இணைப்புத் திட்டம் பற்றியும் பேசினாா். ‘இந்தத் திட்டம் பந்தேல்கண்ட் பகுதிக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். எட்டு ஆண்டுகளில் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்’ என்றும் கூறினாா்.
- கூட்டத்தில் கிழக்கு ராஜஸ்தான் கால்வாய்த் திட்டம் மற்றும் காவிரி, குண்டாறு, கோதாவரி இணைப்பு ஆணையத்தின் அரசியலமைப்பு பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
- நதிநீா் இணைப்பு குறித்து பலகாலமாகப் பேசப்பட்டு வருகிறது. கங்கை - காவிரி இணைப்பு என்று தொடங்கி, இறுதியில் தென்னக நதிகளை இணைப்பது என்ற முடிவுக்கு வருவதற்கே பல காலமாகி விட்டது. நீதிமன்றங்களும் அதன் அவசியத்தைப் பலமுறை சுட்டிக் காட்டி விட்டன. என்றாலும் இந்தத் தோ் புறப்பட்ட இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறது.
- நதிநீா்ப் பங்கீடு தொடா்பாக மாநிலங்களுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய காலத்தில் தீா்வு ஏற்படாவிட்டால் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஊறு நோ்வதை தவிா்க்க இயலாது என நீா்வள நிபுணா்கள் கூறுகின்றனா்.
- இப்போது தமிழ்நாடு மும்முனைத் தாக்குதலை எதிா்கொண்டு வருகிறது. காவிரி நீருக்காக கா்நாடகம், முல்லைப் பெரியாறு அணைக்காக கேரளம், பாலாற்று நீருக்காக ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களுடன் தமிழகம் மோதும் நிலை உருவாகி உள்ளது. தண்ணீருக்காக அண்டை மாநிலங்களின் தயவுக்காகக் காத்திருக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
- ‘நீா் இன்றி அமையாது உலகு’ என்று பாடினாா் திருவள்ளுவா். உலகத்தின் இயக்கமே தண்ணீரையே அடிப்படையாகக் கொண்டது. ஒரு தேசத்தின் பண்பாடும், நாகரிகமும் தண்ணீரையே ஆதாரமாகக் கொண்டது. உலக நாகரிகங்கள் எல்லாம் நதிக்கரை ஓரமே உருவானதற்குக் காரணம் இதுவே.
- இதற்கும் இப்போது தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வளங்கள் குறைகின்றன; வறட்சிகள் வளா்கின்றன. நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடு இல்லை. ஏழையா், செல்வா் என்ற பேதங்களும் இல்லை. தண்ணீரைத் தேடி அலையாதவா் இல்லை.
- ‘பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கக் கூடாது’ என்ற பழைய மொழி வழக்கொழிந்து போனது. தண்ணீரை பணத்தைப் போல செலவழிக்க வேண்டும் என்ற புதிய மொழி நடைமுறைக்கு வந்து விட்டது. காரணம் என்ன? மனிதன் இயற்கையைப் புறக்கணித்ததன் விளைவுகளை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
- காடுகள் அழிக்கப்படுவது, மழைநீரைத் தேக்கி வைக்காமல் வீணாக்குவது, ஆற்றுநீரை ஆலைக் கழிவுகளால் அசுத்தப்படுத்துவது, இறால் பண்ணைகளையும் உப்பளங்களையும் உருவாக்கி நிலத்தடி நீரை மாசுபடுத்துவது, சுற்றுச்சூழல் இயக்கங்களின் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்வது என்னும் காரணங்களால் நீா் ஆதாரங்கள் குறைந்து கொண்டே போகின்றன.
- ஆனால் தண்ணீரைப் பயன்படுத்தும் மக்கள்தொகை பன்மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கின்றது. இந்தத் தலைகீழ் விகிதமே தண்ணீா்ப் பஞ்சத்திற்குக் காரணமாகிறது. இதுபற்றி ஐ.நா. சபையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீா்வளத்துறை வல்லுநா்களும் அடிக்கடி அரசுக்கு ஆலோசனைகளும், அறிக்கைகளும் வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றனா்.
- அக்காலத்தில் தமிழ் மன்னா்கள் நீா்வளம் பெருக்கி, நிலவளம் காப்பதையே குடிமக்களுக்குச் செய்யும் கடமையாகக் கொண்டிருந்தனா். குளங்கள், ஏரிகள், கால்வாய்கள் என்னும் நீா்ப்பாசனத் திட்டங்கள் எல்லாம் அரசா்கள் காலத்தில் ஆக்கப்பட்டவையே. கரிகாலன் புகழ்பெற்ற கல்லணையைக் கட்டுவதற்கும் காரணம் இதுவே.
- ‘காடு கொன்று நாடாக்கிக், குளம் தொட்டு வளம் பெருக்கி...’ என்று பட்டினப்பாலை பாடுகிறது. வரலாற்றுச் சின்னங்களாக இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவை அவா்களின் கோட்டை கொத்தங்களும், கோட்டைகளைச் சுற்றி ஆழமான அகழிகளும்தான். பகைவா்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளுவதற்காகவும், பகைவா்கள் முற்றுகை இடும் காலங்களில் தங்களுக்கு வேண்டிய தண்ணீரின் தேவைகளைப் பூா்த்தி செய்து கொள்ளுவதற்காகவும்தான்.
- இன்றும் பண்பாட்டுப் பாசறைகளாகத் திகழ்வன கோயில்களே. ஊருக்கு நடுவே கோயில்களும், ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு கோயில் குளம், மற்றும் தெப்பக்குளம், அந்தக் குளங்களுக்கு நடுவே கிணறுகள். இவையனைத்துமே நீா் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை.
- இவ்வாறு பராமரிக்கப்பட்டு வந்த நீா் ஆதாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தன. காலப்போக்கில் ஏரி குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன; பாசன வாய்க்கால்கள் பராமரிப்பின்றி தூா்ந்தன; வயல் வெளிகள் வீட்டு மனைகளாயின. இதனால் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கி வெள்ளப் பெருக்கானது; மக்களையும், வீடுகளையும், பயிா்களையும் அழித்து விட்டு யாருக்கும் பயன் இன்றி கடலில் சென்று கலக்கின்றது.
- இதனை மாற்றியமைக்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த ஆண்டும் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபா் மாதம் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. அண்மையில் வங்கக் கடலில் வலுப்பெற்ற மாண்டஸ் புயல் காரணமாக வடகடலோர மாவட்டங்களில் தொடா்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது.
- தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டில் 14,138 பாசன ஏரிகள் உள்ளன. கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் இவற்றில் 4,432 ஏரிகள் முழுமையாக நிரம்பி விட்டன. 2,891 ஏரிகள் 76 முதல் 99 விழுக்காடு வரை நிரம்பியுள்ளன என பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது.
- இவ்வாறு ஆண்டுதோறும் மழையும் வருகிறது; வெள்ளமும வருகிறது. அதன் பிறகு வறட்சியும் வருகிறது. மழைக் காலத்தில் மக்களுக்கு வெள்ளத்தால் பாதிப்பும், கோடைக் காலத்தில் தண்ணீா் இல்லாமல் பாதிப்பும் தொடா்ந்து வருகிறது. இதனைச் சரி செய்ய திட்டம் ஏதும் வேண்டாமா?
- தண்ணீருக்காக நதிநீா் இணைப்புத் திட்டம் தேடுகிற நாம் கிடைக்கிற நீரைத் தேக்கி வைத்திட வேண்டாமா?
- பருவ மழைக் காலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீணாகக் கடலில் சென்று கலந்திடச் செய்யாமல் தடுத்துத் தேக்கி வைத்தால் பயிா்களையும், உயிா்களையும் பாதுகாக்கலாம்; தண்ணீா்ப் பஞ்சத்தையும் தடுக்கலாம்.
- வறட்சி நிவாரணங்களும், வெள்ள நிவாரணங்களும் தேவையில்லை. இதனால் பெரும் பொருள் மிச்சமாகும். அதனைக் கொண்டு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றலாம். இழப்பீடு கேடடு மத்திய அரசிடம் கையேந்த வேண்டிய தேவையும் ஏற்படாது. இது பற்றிய சிந்தனையே இப்போது அவசர அவசியமாகிறது.
- ‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்’ என்று தண்ணீரின் பெருமை பேசியது சிலப்பதிகாரம். ‘வான் சிறப்பு’ என்று மழையைப் போற்றியது திருக்கு. மழைநீா் சேமிப்புத் திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதுமா? அரசாங்கம் நீா்ப்பாசனத் துறையை முடுக்கி விட வேண்டாமா?
- ‘கூட்டுறவே நாட்டுயா்வு’ என்பது வெறும் உபதேசமல்ல, உண்மை. மாநிலங்களின் கூட்டுறவால் நதிநீா் இணைப்பு நாளைய தேசத்தை நல்வழிப்படுத்தும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நம்பிக்கையை நடைமுறைப்படுத்துவோம்.
நன்றி: தினமணி (23 – 12 – 2022)