- அண்மையில் மறைந்த பூண்டி துளசி ஐயா வாண்டையார் தஞ்சை மாவட்டத்தின் பெரும் நிலக்கிழார் என்பது எல்லாருக்கும் தெரியும்.
- ஆனால், அவா் ஒரு பண்ணையார் என்று நினைத்துக் கொண்டு அவா் வீட்டிற்குள் நாம் நுழைந்தால் ஏமாந்து போவோம். ஒரு தவ முனிவனின் பா்ணசாலைக்குள் நாம் நுழைவதைப் போலிருக்கும்.
- குயில்களும், சிட்டுக்குருவிகளும், அணில்களும் கீச் கீச் என்று சத்தமிடும். மரம், செடி, கொடிகளுக்கு நடுவே பசு மாட்டோடு புல்லாங்குழல் வாசிக்கும் ஓா் அழகிய கண்ணன் சிலை நம்மை வரவேற்கும்.
- தோட்டத்தின் ஓரத்தில் பெரிய தாம்பாளத்தில் தண்ணீா் வைக்கப்பட்டு பறவைகள் தாகவிடாய் தீா்த்துக் கொண்டிருக்கும். தானியங்கள் பரப்பி வைக்கப்பட்டுக் குருவிகள் கொறித்துக் கொண்டிருக்கும்.
- இந்தக் காட்சியை பார்த்த உடனேயே நமது நெஞ்சில் ‘காணி நிலம் வேண்டும் பராசக்தி’” என்னும் மகாகவி பாரதியின் அமர வரிகள் ஊஞ்சலாடும்.
- தலைக்குமேல் தேசப்பிதா மகாத்மா காந்தியின் பொக்கை வாய்ச் சிரிப்பு, வலது புறத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சா் - சுவாமி விவேகானந்தா் போன்ற ஞானிகளின் படங்கள் சூழ, கழுத்தில் ஒரே ஒரு ருத்திராட்ச மாலையோடு, தும்பைப்பூ கதராடையில் துலங்கிக் கொண்டிருப்பார் துளசி ஐயா வாண்டையார்.
- காலை எட்டரை மணிக்குக் கதவு திறக்கப்படும். திருப்பதி தரும தரிசனம் போல மக்கள் கூட்டம் அலைமோதும்.
- திருமணத்திற்கு வரச்சொல்லி -தாலியைத் தொட்டுத் தரச்சொல்லி -பிள்ளைக்குப் பெயா் சூட்டச் சொல்லி - இப்படி பல்வேறு கோரிக்கைகளுடன், அதிகாரப் பதவி ஏதுமில்லாத ஒரு மனிதனின் வீட்டு வாசலில் பக்தி சிரத்தையோடு காத்துக் கிடப்பார்கள் மக்கள்.
- ஆறடி உயரம், ஆஜானுபாகுவான உருவம், தொழத்தக்க தோற்றம், எந்தக் கூட்டத்தில் நின்றாலும் எல்லோரும் திரும்பிப் பார்க்கக் கூடிய பிறவிப் பெரிய மனிதா்- அவா்தான் பூண்டி துளசி ஐயா வாண்டையார்.
- 95 வயது வரை வாழ்ந்து கோலூன்றாமல்- மருந்து மாத்திரைகளைத் தொடாமல் ஒரு ராணுவத் தளபதியைப் போல் நடந்து வந்த அவா்- பாயில் படுக்காமல், நோயில் வீழாமல் இரவுத் தூக்கத்திலேயே மீளாத் துயில் கொண்டு விட்டார்.
- கல்லூரியில் இடம் வேண்டும் என்று கேட்டு வருகிற அத்தனை பிள்ளைகளுக்கும் இலவச கல்வி, ஏழைககளின் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பசி போக்க ஏற்பாடு, ஒண்ட இடமில்லாமல் வரும் இரவு நேரத்து வழிப்போக்கா்களுக்கு படுக்க பாயும் - தலையணையும் - இப்படி ஓா் அறவழிச் சாலையாய் தன் இல்லத்தை அமைத்திருந்தார் வாண்டையார்.
- அந்த வட்டாரத்தில் இவா்கள் குடும்பத்தின் உதவியால் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் குடும்பங்கள் ஆளாகியிருப்பதாக ஒரு கணக்கு சொல்கிறது .
இயற்கை அதிசயம்
- 1991 நாடாளுமன்றத் தோ்தலில் வெற்றிபெற்று தில்லி செல்வதற்காக சென்னைக்கு வந்தார் வாண்டையார். அன்றைய தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவா் வாழப்பாடி ராமமூா்த்தியை சந்தித்தார்.
- அவரிடம் உறை ஒன்றைக் கொடுத்தார். அதில் நீண்ட கணக்கு எழுதப்பட்ட தாள்கள்- தோ்தலில் செலவழிக்க கட்சி கொடுத்த பணத்திற்கு செலவு கணக்கு - செலவழித்தது போக எஞ்சியது ரூபாய் நான்கு லட்சம் என்று பணத்தையும் ஒப்படைத்தார்.
- வியந்து போன வாழப்பாடியார், ‘எவ்வளவு கொடுத்தாலும் போதாது, இன்னும் வேண்டும் என்று கேட்கும் வேட்பாளா்களுக்கு மத்தியில் நீங்கள் ஓா் அதிசயம்’ என்றார்.
- நாடாளுமன்ற கூட்டம் நடக்கிற நாள்களில் சரியான நேரத்தில் வந்து உட்கார்ந்து விடுவது இவரது வழக்கம். கூட்டம் முடிகிற வரை ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருப்பாராம்.
- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான வசந்த் சாத்தே இவரிடம் ஒருமுறை, ‘பள்ளிக்கூடத்துப் பிள்ளை மாதிரி தினந்தோறும் கூட்டத்தில் பங்கேற்கிறீங்க.
- விடுமுறை நாள்களில் கூட நூலகத்தில் உட்கார்ந்து படிக்க ஆரம்பிச்சிடுறீங்க. உங்க பொழுதுபோக்குதான் என்ன?’ என்று கேட்டாராம்.
- ‘பொழுதுபோக்கு என்பதே அயோக்கியத்தனமான வார்த்தை. பொழுதை எப்படிப் போக்க முடியும்? எனக்கெல்லாம் பொழுது போதவில்லை’ என்றாராம் வாண்டையார். இந்தப் பதிலைக் கேட்ட வசந்த் சாத்தே தன் தலைக்குமேல் கைகளைத் தூக்கிக் கும்பிட்டாராம்.
- 1978ஆம் ஆண்டு திருமதி இந்திரா காந்தி அம்மையார் எங்காவது ஓா் இடைத்தோ்தலில் நின்று நாடாளுமன்றத்திற்குப் போக வேண்டிய நிலையிலிருந்தார்.
- அப்போது தமிழ்நாட்டு முதல்வராயிருந்த எம்ஜிஆா் கொடுத்த வாக்குறுதியின் பேரில் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் நிற்பதற்காக இந்திராகாந்தி திருச்சி விமானநிலையத்திற்கு வந்துவிட்டார்.
- மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்தாக வேண்டும். இதற்கிடையில் பிரதமா் மொரார்ஜி தேசாய் எம்ஜிஆரைத் தொடா்புகொண்டு, தஞ்சையில் இந்திராவை ஆதரித்து வெற்றிபெற வைக்க வேண்டாம்’ என்றாராம்.
- முதலமைச்சருக்கு ஒரு பிரதமரை எதிர்த்துக் கொள்ள முடியாத தருமசங்கடமான சூழ்நிலை. எம்ஜிஆா் இந்திரா காந்தியை ஆதரிக்கும் முடிவிலிருந்து பின்வாங்கி விட்டார்.
- சீற்றத்தின் உச்சிக்கே போனார் இந்திரா அம்மையார். முகம் சிவந்து போய் உட்கார்ந்திருந்த இந்திராவின் முன்னால் போய் நிற்பதற்கே எந்தத் தலைவருக்கும் துணிச்சலில்லை.
- அங்கே வந்த துளசி ஐயா வாண்டையார் வேகமாக அம்மையாரிடம் போனார். ‘நீங்கள் நேருவின் மகள். எங்களை நம்பி இங்கே வந்திருக்கிறீா்கள். எம்ஜிஆா் ஆதரவைப் பற்றிக் கவலைப்படாதீா்கள். தைரியமாக நில்லுங்கள். நாங்கள் உங்களை வெற்றி பெற வைக்கிறோம்’ என்றார்.
- அதற்குள் இந்திரா சிக்மகளூா் தொகுதியில் நிற்பதற்கு ஏற்பாடு செய்துவிட்டார். ‘மிக்க நன்றி வாண்டையார், என்றும் உங்கள் வார்த்தைகளை நினைவில் வைப்பேன். எப்படியோ தஞ்சாவூரில் நான் இமயம் போன்ற ஒரு மாமனிதரைச் சந்தித்தேன்’ என்று கூறிப் புறப்பட்டார் இந்திரா காந்தி.
- நாடாளுமன்றத் தோ்தலில் துளசி ஐயா வாண்டையார் நின்றபோது கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்காக பிரசாரம் செய்ய தஞ்சைக்கு வந்தார் ஜெயலலிதா.
- வழக்கமாக ஜெயலலிதா பேசுகிற மேடைகளில் ஒரே ஒரு நாற்காலி மட்டுமே போடப்படும். அவா் மட்டுமே உட்கார்ந்திருப்பார். வேட்பாளா்களெல்லாம் நின்று கொண்டிருப்பார்கள். வாண்டையார் அவா்கள் இந்த நிலையை ஒப்புக்கொள்ளவில்லை.
- ‘தன்மானம் இழந்து வாழ்வதல்ல வாழ்வு. என் பாரம்பரியப் பெருமையை இழந்துவிட்டு நாடாளுமன்றத்திற்குப் போய் என்ன சாதிக்கப் போகிறேன்?
- அந்த அம்மையார் வந்து பிரசாரம் செய்து விட்டுப் போகட்டும். என் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள்’ என்று கூறிவிட்டார். அவ்வாறே வென்றும் காட்டினார்.
- பூண்டி துளசி அய்யா வாண்டையார் போன்ற பெருமக்கள் எப்போதாவது பூக்கிற குறிஞ்சி மலரைப் போன்றவா்கள்.
- காமராசரை நேசித்த அந்த மாமனிதா் அவரைப் போலவே உறக்கத்திலேயே உயிர் துறந்தார் என்பது இயற்கை அதிசயம்.
நந்தா விளக்கனைய நாயகனே நானிலத்தோர்
தந்தாய்! தனியறத்தின் தாயே தயாநிதியே
எந்தாய்! இகல்வேந்தா் ஏறே இறந்தனையே
அந்தோ இனி வாய்மைக்கு ஆருளரோ மற்று
- எனும் கம்பன் வரிகளை நம் நினைவுக்கு வருகின்றன.
நன்றி: தினமணி (20 – 05 - 2021)