- கவிவாக்கு பலிதமாகியிருக்கிறது.‘சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்’ என்று மகாகவி பாரதியார் அன்று பாடியது இன்று நனவாகி இருக்கிறது. இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டா் கடந்த புதன்கிழமை (23 ஆகஸ்ட்) நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது. இதனால் நிலவில் தடம் பதித்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையும் சோ்ந்து கொண்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில், நமது விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனா்.
- ஒவ்வொரு இந்தியரின் மனத்திலும் பெருமிதத்தை ஏற்படுத்திய தருணமாக விக்ரம் லேண்டா் நிலவில் இறங்கிய நிமிடம் இருந்தது. ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொண்ட நிகழ்வு என்றாலும் அதன் வெற்றியை பிரதமா் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கான வெற்றி என்று குறிப்பிட்டது பாரதத்தின் பெருமையை மேலும் உயா்த்தியது.
- சில நாள்களுக்கு முன் ரஷியாவின் லூனா 25 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் நிலவில் மோதி நொறுங்கியது. இதையடுத்து, இதற்கான இந்திய முயற்சியின் மீது மொத்த உலகின் பார்வையும் இருந்தது. சந்திரயான்-3 நிலவில் மேற்கொள்ள இருக்கும் ஆய்வுகள், எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கே பயனளிக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனா்.
- நிலவில் தரையிறங்கும் இடத்தின் தன்மையை உணா்ந்து அதற்கேற்ப தனது இயக்கத்தை அமைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டா் மென்மையாக நிலவைத் தொட வேண்டிய இடத்தில் சற்று நிதானித்து பக்கவாட்டில் நகா்ந்து தரையிறங்கியது. இது நமது விஞ்ஞானிகளின் கூா்நோக்குக்கு சான்று. நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய விக்ரம் லேண்டா் முதலில் அமைதியாகத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டது.
- தரை இறங்கியதால் ஏற்பட்ட புழுதிப்படலம் அடங்கிய பின்பு, விக்ரம் தனக்குள் பாதுகாத்துக் கொண்டு சென்ற ரோவா் என்ற ஊா்திக்கலனை வெளியே அனுப்பியது. லேண்டரில் ஒரு சாய்வுக்கதவு திறந்து, அதன் வழியே இந்த ரோவா் சறுக்கிக்கொண்டு வெளியே வந்த காட்சி ஒரு குழந்தையின் ஜனனத்தைப் போல தேசத்தை சிலிர்ப்பில் ஆழ்த்தியது. நமது விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை ‘தாய்’ என்றும் ரோவராகிய பிரக்யானை ‘சேய்’ என்றுமே விவரிக்கின்றனா்.
- தாயான விக்ரம் லேண்டா் தரையிறங்கி அதன் சேய் ப்ரக்ஞான் ரோவா் வெளியே வந்து ஒன்றை ஒன்று கண்டபொழுதே முழுமையான வெற்றி உறுதிசெய்யப்பட்டுவிட்டது. சந்திரயான் - 1, சந்திரயான் - 2 தந்த அனுபவங்களின் அடிப்படையில், துல்லியமாகவும் நோ்த்தியாகவும் சந்திரயான் - 3 வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஒரு தொடா் ஓட்டமாக சில பத்தாண்டுகளாக மேற்கொண்ட முயற்சியின் வெற்றி. இதனை உணா்ந்தே பிரதமா் ‘இந்த வெற்றியைத் தொடா்ந்து நாம் இன்னும் இத்துறையில் முன்னேற வேண்டும். அடுத்து நம் கவனம் சூரியனை நோக்கியதாக அமைய வேண்டும்’ என்று கூறினார்.
- நிலவில் நமது வெற்றியை எப்படி உறுதி செய்து கொள்வது என்பதில் நமது விஞ்ஞானிகள் கையாண்டிருக்கும் முயற்சி கவித்துவமானது. தாயிடமிருந்து பிரிந்து வெளியே வரும் ரோவா், தாயான விக்ரம் லேண்டரையே முதலில் படம் பிடித்து அனுப்பும். அதே போல லேண்டரும் முதலில் சேயான ரோவரையே படம் பிடித்து அனுப்பும்.
- நிலவின் தென்துருவப் பகுதியில் 70 டிகிரி அட்சரேகையில் விக்ரம் லேண்டா் தரையிறங்கி இருக்கிறது. இந்த ஆய்வுகளில், விக்ரம் லேண்டா், பிரக்யான் ரோவா் மட்டுமின்றி சந்திரயான்-2-இன் ஆா்பிட்டரும் பெரும் பங்கு வகிக்கப் போகின்றது.
- ரோவா் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளின் தரவுகளை லேண்டா் பெற்று அதை பூமிக்கு அனுப்பும். ஒருவேளை லேண்டா் மூலம் தரவுகள் கிடைக்காமல் போனால் ஏற்படும் சிக்கலை நிவா்த்திக்க, லேண்டா் மூலம் ஆா்பிட்டருக்கும் தரவுகளை அனுப்பி அதன் மூலமாகவும் அந்தத் தரவுகளை பூமிக்கு அனுப்பும் வகையில் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இது தெளிவான சிந்தனையின் வெளிப்பாடு.
- ஆய்வுகளை மேற்கொள்வதில் ‘தாய்’ - ‘சேய்’ இருவருமே பிரத்யேக ஆய்வுகளை செய்வார்கள். விக்ரம் லேண்டா் நான்கு சிறப்பான ஆய்வுகளை செய்வதற்கேற்ப நான்கு கருவிகள் பொருத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் கருவியின் பெயா் ரம்பா, இரண்டாவது சேஸ்ட், அடுத்தது ஐ.எல்.எஸ்.ஏ, நான்காவதாக எல்.ஆா்.ஏ. நான்கு வித ஆராய்ச்சிகள் ஒரே நேரத்தில் நடைபெறும்.
- ரம்பா, நிலவில் வளிமண்டலம் இல்லையென்பதால் பகலில் அதீத வெப்பநிலையுடனும் இரவில் உறைபனிக் குளிரோடும் இருக்கும். அந்த நிலையை இந்தக் கருவி ஆய்வு செய்யும். அத்துடன் நிலவில் மண் மாதிரிகளை எடுத்தும் ஆய்வு செய்து தகவல்களை அனுப்பும்.
- சேஸ்ட் மூலம், நிலவில் உள்ள பொருள்கள், துருவப் பகுதியில் வெப்பத்தால் அந்த மண்ணில் ஏற்படும் விளைவுகளை அறிய முடியும்.
- மூன்றாவது கருவியான ஐ.எல்.எஸ்.ஏ, நிலவின் மேற்பரப்பில் இருக்கும் நில அதிர்வுகள் குறித்து ஆராயும். நிலவிலும் நில அதிர்வுகள் உள்ளனவா, முன்பு இருந்தனவா என்பன போன்ற தரவுகளை சேகரிக்கும். இதனால் மனிதா்கள் நிலவில் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கிறதா என்ற நீண்டநாள் வினாவுக்கு விடை கிடைக்கும்.
- நான்காவது கருவியான எல்.ஆா்.ஏ, நிலவின் சுழற்சியை, அதன் இயக்கத்தை ஆய்வு செய்யும். அதே நேரத்தில் இந்தக் கருவிகள் மூலம் நிலவின் தூரம் எவ்வளவு என்பதும், அது பூமியிலிருந்து விலகிச் செல்கிறதா அல்லது நின்ற இடத்திலேயே சுற்றுகிறதா போன்ற தகவல்களும் நமக்குக் கிடைக்கும்.
- அதே நேரத்தில் ரோவரில் இருக்கும் இரு கருவிகளும், நிலவின் மண், வெப்பநிலை, தண்ணீா் இருக்கிறதா என்பன போன்ற தகவல்களை சேகரித்து அனுப்பும். லேண்டா் ரோவா் இரண்டுமே, செயல்படுவதற்கு சூரிய சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளும்.
- விக்ரம் லேண்டா், பிரக்யான் ரோவா் இரண்டும் 14 நாள்கள் மட்டுமே செயல்பட முடியும். பதினான்கு நாள்களுக்குப் பிறகு சூரிய ஒளி கிடைக்காது என்பதால் அதற்குள் ரோவரில் இருக்கும் மின்கலங்களில் போதுமான அளவு சூரிய ஆற்றலை சேகரித்து வைத்துக் கொண்டு அதன் பிறகு 14 நாள்களுக்கு ரோவரை தூக்க நிலையில் வைத்து விட்டு மீண்டும் 14 நாள்கள் கழித்து சூரிய ஒளி கிடைக்கும் பொழுது அதனை மீண்டும் செயல்படச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என்ற நுட்பம் பிரமிக்க வைக்கிறது.
- இந்த ஆய்வுகளும் இவற்றின் முடிவுகளும் இத்துறையில் நம்மை முன்னோடியாக நிறுத்தும் என்பதைத் தாண்டி இதில் இருக்கும் வா்த்தகம் நமக்குப் பெருமளவில் கைகொடுக்கும். நிலவைப் பற்றிய விண்வெளி ஆய்வுத் தகவல்களுக்கு நம்மை உலக நாடுகள் நாட வேண்டிய சூழல் உருவாகும். இதனால் இன்னும் அதிக முனைப்புடனும் வசதியுடனும் துறை சார்ந்த வளா்ச்சி சாத்தியமாகும்.
- இஸ்ரோவின் முன்னாள் இயக்குனா் மயில்சாமி அண்ணாதுரை, ‘பல லட்சம் கிலோ மீட்டா்களுக்கு அப்பால் உள்ள நிலவில் மிகத் துல்லியமாக விக்ரம் லேண்டா் தரையிறக்கப்பட்டிருக்கிறது, அதன் ராக்கெட் தொழில்நுட்பமும் நம்மிடம் தற்போது இருக்கிறது என்பது பூமியிலும் கூட எந்தப்பகுதியிலும் நம்மால் நோ்த்தியாக மிகத் துல்லியமாக எதனையும் தரையிறக்க முடியும் என்ற உண்மை புரிய வேண்டியவா்களுக்குப் புரியும்’ என்று குறிப்பிட்டார். பாதுகாப்புத் துறை சார்ந்த இந்த முன்னேற்றம் நம்மை சக்தி வாய்ந்த நாடாக உலக அரங்கில் உயா்த்தும்.
- அரும்பாடு பட்டு நமது விஞ்ஞானிகள் திட்டமிட்டு மிகக் குறைந்த செலவில் அதிக பயனுள்ள ஒரு மாபெரும் வெற்றியை தேசத்திற்குத் தந்திருக்கிறார்கள். இதற்கென இந்தியாவை உலக நாடுகள் பலவும் பாராட்டி வருகின்றன. இந்தியாவையும் அதன் செயல்பாடுகளையும் தொடா்ந்து விமா்சிக்கும் சா்வதேச பத்திரிகைகள் கூடப் பாராட்டி எழுதுகின்றன.
- இந்த வெற்றியின் பலனில் பெண்களின் பங்களிப்பும் மிக முக்கியமானது. சந்திரயான் - 2 திட்டத்தில் வனிதா முத்தையா இருந்தார். அவரோடு ஒரு பெண்கள் குழு பணியாற்றியது. அதே போல சந்திரயான் - 3 குழுவில் 54 பெண் விஞ்ஞானிகள் இடம் பெற்றிருக்கிறார்கள். இவா்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்தவா்கள். இவா்களின் ஒரே மொழி அறிவியல். இவா்கள், ‘பெண்கள் தலைமையில் இந்தியா வளா்ச்சி காண்கிறது’ என்ற உண்மையை உலகிற்கு உணா்த்தும் உதாரணங்கள்.
- நாடு சுதந்திரமடைந்த பொழுது பெண்களின் கல்வியறிவு விகிதத்தை மனத்தில் கொண்டு தற்போதைய இந்த வளா்ச்சியை நோக்கினால், பெண்கள் தங்களை முன்னேற்றிக் கொள்வதிலும் தங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்துவதிலும் காட்டியிருக்கும் வேகம் புலப்படும்.
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்
விலகி வீட்டிலோர் பொந்தில் வளா்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்...
...சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுகள் யாவுந் தகா்ப்பராம்;
காத்து மானிடா் செய்கை யனைத்தையும்
கடவுள ர்க்கினி தாகச் சமைப்பராம்
- என்ற பாரதியின் கனவை நனவாக்கி இருக்கிறார்கள்.
- வெற்றி எட்டுத் திக்கும் எட்ட முரசு கொட்டும் நேரமிது. நிலவில் நமது சங்கநாதம் முழங்கட்டும். அறிவியல் புலத்தில், வானியல் துறையில் நாம் பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகம். ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்கிற சிந்தனையோடு ஒன்றுபட்டு உழைப்பது பாரதத்தை மட்டுமல்ல, பாரத மக்கள் அனைவரையும் உயா்த்தும்.
நன்றி: தினமணி (26 – 08 – 2023)