TNPSC Thervupettagam

நன்கொடைக் கையூட்டு!

December 2 , 2019 1868 days 894 0
  • தேர்தல் நிதிப் பத்திரம் மூலம் தேர்தல் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்திவிட முடியாது என்பதைத் தெரிந்துகொள்ள நமக்கு இரண்டு ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. தேர்தல் நிதிப் பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட போதே இது குறித்து "பத்திரம், பத்திரம்!' என்கிற தலைப்பில் தலையங்கம் மூலம் (23.11.2017) தினமணி எச்சரித்திருந்தது.
  • தேர்தல் நிதிப் பத்திரம் என்பது சட்டப்படி நியாயமாகத் தெரிந்தாலும் அது ஆளும் கட்சிக்குச் சாதகமானதாக இருக்கும் என்பதும், அதன் வெளிப்படைத்தன்மை போலித்தனமானது என்றும் இப்போது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்டிருக்கும் புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. 

தேர்தல் நிதிப் பத்திரம்

  • 2017-இல் தேர்தல் நிதிப் பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நன்கொடை வழங்குபவரின் ரகசியம் பாதுகாக்கப்படுகிறது. அப்படி வழங்குபவர்கள் எந்தக் கட்சிக்கு வழங்குகிறார்கள் என்கிற ரகசியமும் பாதுகாக்கப்படுகிறது. இவையெல்லாம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படாமல், ஆளும் கட்சிக்கு இவை குறித்த தகவல்கள் கிடைக்கும் விதத்தில் தேர்தல் நிதிப் பத்திர முறை உருவாக்கப்பட்டிருப்பதுதான் பிரச்னைக்குக் காரணம். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேர்தல் நிதிப் பத்திரங்கள் குறித்து பெறப்பட்டிருக்கும் தகவல்கள், தேர்தல் நிதிப் பத்திர முறை இந்திய ரிசர்வ் வங்கியாலும் தேர்தல் ஆணையத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதையும் வெளிப்படுத்தியிருக்கின்றன.
  • தேர்தல் நிதிப் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி வழங்குகிறது. அவற்றில் எந்தப் பெயரும் எழுதப்பட்டிருக்காது. நிதிப் பத்திரம் வாங்குபவர்கள் நன்கொடைப் பணம் முறையானதுதான் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அப்படி உறுதிப்படுத்திவிட்டு பத்திரங்களை வாங்குபவர்கள், அந்த நிதிப் பத்திரங்களை அவர்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு தந்துவிடலாம். 
  • அரசியல் கட்சிகள் அந்த நன்கொடைப் பணத்தை தங்களது கணக்கில் வரவு வைத்துக்கொள்ளும். இதன் மூலம், நன்கொடை வழங்குபவரின் அடையாளம் பாதுகாக்கப்படுகிறது என்பதும் நன்கொடையாகப் பெறும் பணம் கணக்கில் காட்டப்பட்ட பணம் என்பதும் உறுதிப்படுகின்றன என்பதுதான் அரசுத் தரப்பு வாதம். கணக்கில் காட்டாத கருப்புப் பணத்தை  அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க முடியாது என்கிற அளவில் வேண்டுமானால் தேர்தல் பத்திரங்கள் பயன்படலாம். 

பொருளாதாரக் கண்காணிப்புத் துறைகள்

  • தேர்தல் நிதிப் பத்திரங்கள் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியால் வழங்கப்படுகின்றன. பத்திரம் வாங்கியவர்கள் குறித்த எல்லா விவரங்களையும்  ஸ்டேட் வங்கி பாதுகாக்கிறது. அரசின் பொருளாதாரக் கண்காணிப்புத் துறைகள் கோரினால் அந்த விவரங்களை வழங்க ஸ்டேட் வங்கி கடமைப்பட்டிருக்கிறது. யார் யாரெல்லாம் நிதிப் பத்திரங்கள் வாங்கினார்கள் என்பதை அரசால் கண்காணிக்க முடியும். இது ஆளும் கட்சிக்கு சாதகமாகப் பயன்படுத்தப்படாது என்பது என்ன நிச்சயம்?
  • இரண்டாவதாக, பெரு நிறுவனங்கள் இந்தத் தேர்தல் நிதிப் பத்திரங்களைப் பயன்படுத்தி அரசின் சலுகைகளைப் பெற முடியும். பதிலி (ஷெல்) நிறுவனங்களை உருவாக்கி சட்டப்பூர்வமாகவே அவற்றின் மூலம் ஆளும் கட்சிக்கு நன்கொடை வழங்கி, அந்த நன்கொடையின் மூலம் சலுகைகளைப் பெற முடியும். அது மட்டுமல்ல, வெளிநாட்டு பெரு நிறுவனங்கள்கூட அரசின் ஆதரவைப் பெறுவதற்கு இதன் மூலம் நன்கொடைகள் வழங்க முடியும். அதற்குச் சாதகமாக நிறுவனங்கள் சட்டத்தில் உள்ள தொடர்புடைய பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்காற்றுச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டு அதன் மூலம் அரசியல் கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கு வழிகோலப்பட்டிருக்கிறது. 
  • ஜனநாயகச் சீர்திருத்தக் கூட்டமைப்பு என்கிற தன்னார்வ அமைப்பின் ஆய்வின்படி அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையில் 69% யாரிடமிருந்து பெறப்பட்டவை என்பதே தெரியாதவை. மீதமுள்ள 31% தான் வருமான வரித் துறைக்கு அரசியல் கட்சிகள் தாக்கல் செய்கின்றன. அரசியல் கட்சிகளின் உண்மையான வருவாய் அவர்கள் தாக்கல் செய்வதைவிட பல மடங்கு அதிகம். அது குறித்து தேர்தல் ஆணையத்திடமோ, வருமான வரித் துறையிடமோ அதிகாரப்பூர்வ ஆவணம் எதுவும் கிடையாது.

பல்வேறு சட்டங்கள் 

  • "மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், வருமான வரிச் சட்டம், நிறுவனங்கள் சட்டம், வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்காற்றுச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ரூ.20,000-க்கும் மேல் பெறும் நன்கொடைகள் அனைத்தும் அரசியல் கட்சிகளின் கணக்கில் காட்டப்பட வேண்டும். பெரு நிறுவனங்கள் தங்களது அரசியல் நன்கொடைகளை லாப - நஷ்ட கணக்கு அறிக்கையில், எந்தெந்தக் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை தரப்பட்டது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். நிறுவனத்தின் நிகர சராசரி லாபத்தில் 7.5%-க்கும் அதிகமாக அரசியல் நன்கொடை தரக்கூடாது. 
  • அரசியல் கட்சிகள் வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெற முடியாது' - இவையெல்லாம் கைவிடப்பட்டுத்தான் 2017-இல் தேர்தல் நிதிப் பத்திரம்  அறிமுகப்படுத்தப்பட்டது. 
  • தேர்தல் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாதவரை ஜனநாயகம் முறையாகச் செயல்படாது. அரசின் சலுகைகளைப் பெறுவதற்காக ஆளும் கட்சிக்கு நன்கொடை வழங்குபவர்கள் குறித்த வெளிப்படைத்தன்மை பொதுவெளியில் இல்லாமல் போனால், அதன் விளைவு சலுகைசார் முதலாளித்துவமாக (க்ரோனி கேப்பிடலிஸம்) இருக்குமே தவிர, முறையான ஜனநாயகமாக இருக்காது.
  • தேர்தல் நிதிப் பத்திரங்கள் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்குப் பதிலாக நன்கொடையாளர்களுக்குத்தான் பாதுகாப்பு வழங்குகின்றன. அதனால் இது கூடாது!

நன்றி: தினமணி (02-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்