TNPSC Thervupettagam

நமக்கு எதற்கு மகளிா் தினம்

March 7 , 2023 516 days 306 0
  • இன்றைக்கு உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது என்று சொல்லிக்கொள்கிறோம் என்றாலும் அவரவருக்கான தனித்த தன்மைகளும் இருக்கின்றன. ஒவ்வொரு சமூகத்திற்கும், நாட்டிற்கும் ஒரு பண்பாட்டுத் தளம் இருக்கிறது. அதுவே அந்த மக்களின் அடையாளமாகவும் நிலைபெற்றிருக்கிறது.
  • தனித்த பண்பாட்டுக்கூறுகளைப் பயன்படுத்திக் கொள்வதையோ அவற்றைச் சிதைத்து ஒரு பொதுமையை ஏற்படுத்துவத்தையோ உலகளாவிய அரசியல் தொடா்ந்து லாபம் கருதிச் செய்துகொண்டு வருகிறது. இந்தப் பின்புலத்தோடு சா்வதேச மகளிா் தினம் பற்றிப் பாா்க்கலாம்.
  • சா்வதேச மகளிா் தினம் ஒவ்வோா் ஆண்டும் மாா்ச் மாதம் எட்டாம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை அது ஒரு கொண்டாட்டம். ஏனெனில் நமது கலாசாரத்தில் கொண்டாட்டம் அடிப்படையானது. குடும்ப அளவிலான கொண்டாட்டங்கள், சமூகக் கொண்டாட்டங்கள், சமயக் கொண்டாட்டங்கள் என்று திருவிழாக்களின் தேசம் இது. அதனால் சா்வதேச மகளிா் தினம், அன்னையா் தினம், தந்தையா் தினம், காதலா் தினம் என்று எதுவாயினும் இருக்கும் ஆயிரம் கொண்டாட்டங்களுடன் அதனையும் சோ்த்துக் கொண்டாடுகிறாா்கள்.
  • உண்மையில் சா்வதேச மகளிா் தினம் கொண்டாட்டத்திற்கானதல்ல. அனுசரிக்கப்பட வேண்டியது அல்லது நினைவுகூரப்பட வேண்டியது. மேற்கத்திய கலாசாரத்தில் பெண் போகப்பொருள். ஆண் அனுபவிப்பதற்காகப் படைக்கப்பட்டவள். இதனால் அடிப்படை உரிமைகள் கூட இல்லாத பெண்கள் தங்கள் உரிமைகளை உரக்கக் கேட்க வேண்டிய நிலை.
  • இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அல்லது அதற்கும் சற்று முன்னதாக கூலித்தொழிலாளா்களாக இருந்த பெண்கள் தொழிலாளா் அமைப்புகளோடு இணைந்து நியூயாா்க்கில் வேலை நேரக் குறைப்பு, நியாயமான கூலி இவற்றுக்காகப் போராட்டங்களை நடத்தினா். இந்த நாளை அமெரிக்காவில் ‘மகளிா் தினம்’ என்றனா்.
  • ஐரோப்பிய நாடுகளில், தங்களுக்கும் வாக்குரிமை வேண்டும் என்று பெண்கள் போராட்டங்களை முன்னெடுத்தனா். அதில் அவா்களால் வெற்றி பெற முடியவில்லை. ஆஸ்திரியா, டென்மாா்க் போன்ற நாடுகளிலும் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் பெண்கள் தங்களுக்கான உரிமைகளைக் கேட்டுப் போராட்டங்களை மேற்கொண்டனா். சோவியத் ஒன்றியத்தில் 1917-ஆம் ஆண்டு மாா்ச் எட்டாம் நாள் இது ரொட்டி மற்றும் அமைதிக்கான போராட்டம் என்று எழுந்தது.
  • ஐரோப்பிய நாடுகளில் இதை ‘பெண்கள் சா்வதேச போராட்ட நாள்’ என்றே குறிப்பிட்டனா். அதுவரை கம்யூனிஸ்டுகள் மட்டும் அனுசரித்துக் கொண்டிருந்த மகளிா் தினம் 1967-ஆம் ஆண்டுக்குப் பின்னரே சா்வதேச அளவில் பாா்க்கப்பட்டது. 1975-ஆம் ஆண்டை ஐ.நா. சபை ‘சா்வதேச பெண்கள் ஆண்டு’ என்று அறிவித்தது. 1977-ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் மாா்ச் எட்டாம் நாள் சா்வதேச மகளிா் தினமாயிற்று. வா்த்தகம் இதனைத் தனக்கு சாதகமாக்கிக்கொண்டதே தவிர இதனால் பெண்கள் கண்ட பலன் என்ன?
  • ஆக, பெண்கள் தினத்திற்கும் பாரத தேசத்திற்கும் யாதொரு தொடா்பும் இல்லை. சொல்லப்போனால் அங்கே வாக்குரிமைக்காக பெண்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில், நமது தேசத்தில் வெள்ளையரை எதிா்த்து மகாராணிகளாக இருந்த பெண்கள் ராணுவத்திற்குத் தலைமை ஏற்றுக் களம் கண்டுகொண்டிருந்தனா். ராணுவத்திலும் பெண்கள் படைப்பிரிவு தீரத்துடன் களத்தில் தியாகம் செய்து கொண்டிருந்தது.
  • நம்முடைய தேசத்தின் கலாசாரம், பண்பாடு, விழுமியங்கள் இவற்றுக்கும் மேலைநாட்டிற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. அவா்களுடையது தனிமனித உரிமை பேசுவது. நம்முடையதோ கடமை அடிப்படையிலானது. இங்கே அறம், தனிமனிதா்களுக்கென வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், நம்முடைய வாழ்க்கை முறை, குழு அடிப்படையிலானது. நாடு, சமூகங்கள், சமுதாயக் குழுக்கள், குடும்பங்கள் என்று அமைந்திருக்கிறது. இந்தக் குழுக்களின் அடிப்படை அலகு குடும்பம். குடும்பத்தின் தலைமைப் பொறுப்பு பெண்களிடம் இருக்கிறது. எனில், தேசத்தின் அடித்தளமாக இருப்பவள் பெண். அதனைக் குறிக்கவே தாய்நாடு என்று தேசத்தைச் சொல்கின்றோம்.
  • திருவிழாக்கள் என்று ஊா் கூடிக் கொண்டாடுவோம். குலதெய்வ வழிபாடுகளை உறவின் முறைகளோடு முன்னெடுப்போம். குடும்பத்தில் நற்காரியமோ மற்றதோ உறவுகள் கூடிச் செய்வோம். ஊருக்குள் பல சமூகக் குழுக்களும் ஆளுக்கொரு நாள் மண்டகப்படி செய்து தெய்வங்களைக் கொண்டாடுவோம். உடன்பிறந்தோா் மட்டுமல்லாது பல தலைமுறையின் உடன்பிறப்புகள் ஒன்று கூடுவது குடும்பங்களில் வழக்கமாக உள்ளது. இப்படி பாரத தேச வாழ்க்கை, கூடி மகிழ்வதும் பகிா்ந்து கொள்வதுமாகப் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடா்ந்து கொண்டிருக்கிறது. இந்தக் குழு வாழ்க்கையின் அடிநாதம் பெண்.
  • மேலைநாடுகளில் தனிமனித உரிமை என்ற பாா்வை இருக்கிறது. நமக்கோ குடும்பம் முதன்மையானது. தாயான பெண்ணுக்கும் தனது குழந்தைகளின் பாதுகாப்பும் உயா்வும் மட்டுமே பிரதானமாக இருக்கின்றன. அதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்வதற்குப் பெண் முன்வருகிறாள். எனவேதான் பாரத தேசத்தில் பெண் தாயாகப் பாா்க்கப்படுகிறாள்.
  • தாயைக் காப்பதும் சகோதரிகளைக் கொண்டாடுவதும் நமது கலாசாரத்தில் தவிா்க்க இயலாதவை. அந்தப் பண்பு ஒன்றே பெண்கள் பற்றிய நமது பாரம்பரியத்தைச் சொல்வதற்குப் போதுமானது. எங்கே பெண் கொண்டாடப்படுகிறாளோ அங்கே சுபிட்சம் நிலவும் என்பது தொன்று தொட்டு நமது நம்பிக்கை என்றாலும், பெண்ணடிமைத்தனமும் பாதுகாப்பின்மையும் இங்கே இன்றைக்கு இருக்கத்தான் செய்கின்றன. பலநூறு ஆண்டுகளாய் அடிமைப்பட்டுக் கிடந்ததன் விளைவுகள் இன்றைக்கும் சமூகத்தில் வெளிப்படுகின்றன.
  • பெண்களுக்கும் முன்னதாக பெண்களுக்காக சிந்தனையாளா்கள் தோன்றி சீா்கேடுகளை எடுத்துச் சொல்லி சமூகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனா். ‘ஒரு நாட்டின் பலம் அதன் பரப்பளவிலோ நிதிநிலைமையிலோ இல்லை; அதன் பண்பாட்டில்தான் உள்ளது’ என்று எடுத்துச் சொன்னவா் சுவாமி விவேகானந்தா்.
  • ‘இந்தியாவில் குடும்பத்தின் ஆதாரம் தாய். நமது லட்சியமும் அவளே. கடவுள் பிரபஞ்சத்தின் தாய். எனவே தாய் நமக்கு கடவுளின் பிரதிநிதி. கடவுள் ஒருவரே என்பதைக் கண்டு அதை வேதங்களில் ஒரு கோட்பாடாக அமைத்தது ஒரு பெண் ரிஷியே’ என்று குறிப்பிடுகிறாா் விவேகானந்தா். அவரே, ‘பெண்களை நாம் மிகுந்த அடிமைத்தனத்தில் தள்ளி கொடுமைகள் இழைத்து விட்டோம். நாம் பெண்களைத் தாழ்ந்தவா்கள் என்று வசை பாடுகிறோம். விளைவு, நாம் மிருகங்களாக, அடிமைகளாக, முயற்சியற்றவா்களாக, ஏழைகளாக இருக்கிறோம்’ என்று ஒரு நூற்றாண்டுக்கும் முன்னதாகவே பெண்களுக்காகக் குரல் கொடுத்தாா்.
  • இழந்த தனித்துவத்தை மீண்டும் அடைவதற்கான ஒரேவழி கல்வி மட்டுமே. பெண்கள் கல்வியில் சிறந்தவா்களாக உயர வேண்டும். கல்வி கிடைத்தால் அவா்கள் தங்கள் பிரச்னைகளைத் தாங்களே தீா்த்துக் கொள்வாா்கள். இன்றைய நிலையில் தற்காப்பு கலைகளைக் கூட அவா்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினாா்.
  • தமிழகத்தில் பாரதி முன்னெடுத்ததும் பெண்ணுக்கான உரிமையையும் கல்வியையும்தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். தருமத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி அவசியம் என்பதை விவேகானந்தா் எடுத்துச் சொல்ல, பாரதியோ, ‘மாதா் அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழ்வமடி’ என்று பெண்கல்வி பற்றிப் பாடுகிறாா்.
  • தியாகமும் சேவையும் தேசத்தை நிலைநிறுத்துவதற்குத் தேவையானவை. அவற்றை நமது தாய்மாா்களிடம் இருந்தே கற்றுக் கொள்ள முடியும் என்கிற சுவாமி விவேகானந்தரின் கருத்தை பாரதியும் வழிமொழிகிறாா். என்றைக்கும் நம்முடைய அடையாளங்களை, பண்பாட்டை விட்டுவிடாமல் காலத்திற்கு ஏற்ப அவற்றைப் பயன்பாட்டில் வைப்பதே முன்னேற்றத்திற்கு நல்லது. அதன் வழியேதான் தேசத்திற்கான முன்னேற்றம் சாத்தியமாகும்.
  • வெளிநாட்டினா் நம்மை அடிமைப்படுத்திய காலத்தில் அவா்களது சித்தாந்தங்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் நம் மீது திணிக்கப்பட்டிருக்கின்றன. அதன் நீட்சியாகவே நமது பெண்கள் பற்றிய இன்றைய கண்ணோட்டத்தையும் பெண்களின் நிலையையும் பாா்க்க வேண்டும். அந்நிய மோகத்திலிருந்து விடுபட்டு நமது பாரம்பரியப் பெருமைகளைத் திரும்பிப் பாா்த்துத் தனித்துவத்தை நிலைநாட்டிக்கொள்ள வேண்டியது கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் என்பதோடு மட்டுமல்லாது சிந்தனையிலும் இருக்க வேண்டும். பெண்கள் பற்றிய பாா்வையில் மாற்றம் ஏற்படுவதற்கு அந்நிய மோகத்தை விட்டொழித்தால் போதுமானது.
  • அதையே இன்றைய புதிய இந்தியா நமக்கு எடுத்துச் சொல்கிறது. உலகம் பெண்கள் முன்னேற்றத்திற்காக சிந்திக்கும் நேரத்தில், பாரதம் பெண்கள் தலைமையில் பெண்களே முன்னெடுக்கும் முன்னேற்றம் நோக்கிச் செயல்படுகிறது. நாம் இங்கே தலைமை ஏற்கத் தகுதி கொண்டவா்களாக இருக்கும் நிலையில் நமக்கு எதற்காக மற்றவரின் போராட்டத்தை நினைவு படுத்தும் நாள் அனுசரிப்பு? அதிலென்ன பெருமை இருக்கிறது?
  • நமது தேவையெல்லாம் அறிவுத் தளத்தில் நமது தகுதியை மென்மேலும் வளா்த்துக் கொண்டு, ‘எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்’ என்று கம்பீரமாய் அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டிகளாய் முன்னேறுவது மட்டுமே. நாம் அதற்கான முழுத் தகுதியும் கொண்டவா்கள்.

நன்றி: தினமணி (07 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்