TNPSC Thervupettagam
October 29 , 2023 386 days 306 0
  • பாதை தெரிகிறபோது பயணம் செய்வது சாத்தியமே. ஆனால், முட்புதர்கள் மண்டிக்கிடந்த பாழ் நிலத்தைச் சீராக்கிப் பாதை சமைத்தவர் சாவித்ரிபாய் புலே. பெண் கல்விக்காகவும் பெண்ணுரிமைகளுக்காகவும் இறுதிவரை போராடிய சாவித்ரிபாய், இந்தியாவின் முதன்மைப் பெண்ணியவாதிகளுள் ஒருவர்.
  • கைம்பெண்கள் அவர்களது குடும்பங்களால் கைவிடப்பட்ட நிலையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப் பட்டு அதன் காரணமாகக் குழந்தை பெற்றெடுப்பது பெரும் பாவமென்று கருதப்பட்டது. அப்படியொரு சூழலில் சாதியப் படிநிலையில் மேல்தட்டில் இருந்த குடும்பத்தைச் சார்ந்த காசிபாய் என்னும் கைம்பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஜோதிராவ் – சாவித்ரிபாய் தம்பதி அந்தக் குழந்தையை 1874இல் தத்தெடுத்தது பெரும் புரட்சி. கைம்பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்தியாவின் முதல் சிசுக்கொலை தடுப்பு இல்லத்தை அமைத்த சாவித்ரிபாய், பின்னாளில் அதை மருத்துவமனையாக மாற்றினார். புலே தம்பதி தத்தெடுத்த யஷ்வந்த் ராவ் என்னும் அந்தக் குழந்தை அந்த மருத்துவமனையிலேயே மருத்துவராகப் பணி யாற்றியது புரட்சியின் நல்விளைவுகளில் ஒன்று.

பெண்கள் கூட்டணி

  • தலித்துகள், பெண்கள், ஒடுக்கப் பட்டோர் ஆகியோரின் நல்வாழ்வுக்காகவும் உரிமைகளுக்காகவும் 1873இல் ‘சத்திய சோதக் சமாஜ’த்தை ஜோதிராவ் புலே தொடங்கினார். அந்த அமைப்பின் தலைவராக சாவித்ரிபாய் புலே செயல்பட்டார். பிறப்பின் அடிப்படையில் தாங்கள் ஒடுக்கப்பட வேண்டியவர்களே என்று நம்ப வைக்கப்பட்டிருந்த அடித்தட்டு மக்களிடம் சம உரிமை குறித்தும் அவர்களின் அரசியல் பங்கேற்பு குறித்தும் சாவித்ரிபாய் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சாதி அடிப்படையிலான சமூக அமைப்பு எவ்வளவு தந்திரமானது என்பதையும் அவர் மக்களுக்கு எடுத்துரைத்தார். பெண்களின் கல்வித் தரமும் அரசியல் விழிப்புணர்வும் அதிகரித்திருக்கும் இந்நாளில் தங்கள் தெருக்குழாயில் தண்ணீர் வரவில்லை யென்றால் கூடக் குரல் எழுப்பப் பெரும் பாலான பெண்கள் யோசிக்கின்றனர். உரிமையைக் கேட்டுப் பெறக்கூட அவ்வளவு தயக்கம். யாராவது முதல் கல்லை எறியட்டுமே என்கிற மரத்துப்போன மனநிலைதான் இதற்குக் காரணம். ஆனால், ஒடுக்கப்பட்டோரின் குரல்வளை நசுக்கப்பட்டு வாய் என்பது மௌனமாக இருக்க மட்டுமே என்றிருந்த அந்நாளில் சத்திய சோதக் சமாஜத்தில் 90 பெண்களை உறுப்பினர் களாகச் சேர்த்துப் பெண்ணுரிமைக்காக சாவித்ரிபாய் போராடியது வீர வரலாறு.

முற்போக்குத் திருமணம்

  • வரதட்சிணை மரணங்கள் நம் இந்தியச் சமூகத்துக்குப் புதிதல்ல. தங்கள் தலையைப் பணயமாக வைத்து மகளுக்குத் திருமணம் முடித்துவைக்கிற பெற்றோர் பெரும் பாரம் கழிந்ததாகவே நினைக்கிறார்கள். அதனால்தான், சகித்துக்கொள்ள முடியாத கொடுமையான மண வாழ்விலிருந்து விடுதலை பெற்று வீடு திரும்பும் மகளைப் பிறந்த வீடுகள் இன்றைக்கும் அவ்வளவு உவப்புடன் ஏற்றுக்கொள்வதில்லை. உயிரே போனாலும் புகுந்த வீடுதான் பெண்ணுக்கு நிலையானது என்று காலம் காலமாகச் சொல்லப்பட்டுவருவதால்தான் விவாகரத்து பெற்று வீடு திரும்பிய மகளைப் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்துடன் வரவேற்ற ஜார்க்கண்டின் ராஞ்சி நகரத்துத் தந்தை நமக்குப் பேரதியசமாகத் தெரிகிறார். 200 ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை இன்னும் மோசம். பெண்களின் வாழ்க்கையை வரதட்சிணை என்னும் பெருங்கொடுமை சூறையாடிக் கொண்டிருந்த போது வரதட்சிணைக்குத் தீர்வாக எளிய திருமணங்களை சாவித்ரிபாய் புலே முன்மொழிந்தார். வரதட்சிணை மறுப்புத் திருமணங்களை நான்கைந்து பேர் மட்டுமே கொண்ட குழு முன்னிலையில் நடத்தி வைத்தார். இன்றைய முற்போக்குத் திருமணங்களுக்கு எல்லாம் முன்னோடி சாவித்ரிபாய் புலே நடத்தி வைத்த வரதட்சிணை மறுப்பு எளிய திருமணங்களே. இறப்பைத் தவிர கைம்பெண்களுக்கு வேறு கதியில்லை என்று கற்பிக்கப்பட்டபோது கைம்பெண் மறுமணம் குறித்துத் தொடர்ந்து பேசியதோடு முன்னுதாரண மறுமணங்களை நடத்தித் தனது சொல்லும் செயலும் ஒன்றென உணர்த்தினார் சாவித்ரிபாய்.
  • அடக்குமுறைகளோடு 1876இல் கொடும் பஞ்சமும் பசியும் பட்டினியும் மக்களை வாட்டின. அப்போது வறட்சி நிவாரணப் பணிகளில் உடனடியாக ஈடுபடும்படி பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுத்தார். அரசு பார்த்துக்கொள்ளட்டும் என்றிருக்காமல் பஞ்சத்தில் தவிப்பவர்களின் பசியைப் போக்க மகாராஷ்டிரத்தில் 52 இலவச உணவு விடுதிகளை சாவித்ரிபாய் புலே திறந்தார். தலித்துகளும் ஒடுக்கப்பட்டோரும் ஊர்ப் பொதுக் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கத் தடை விதிக்கப்பட்டபோது அவர்களுக்காக புலே தம்பதி தங்கள் வீட்டுப் பின்புறத்தில் கிணறு தோண்டி, நமக்கு நாமே ஒளியாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தினர்.
  • இன்றைக்கும் ‘வீதி வரை மனைவி’ என்று பாடிக்கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக மகள்கள் தங்கள் பெற்றோருக்கு இறுதிச் சடங்கு செய்வதைச் சிலாகித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், சாவித்ரிபாயோ யாரும் சிந்தித்துப் பார்க்கக்கூடத் துணியாத செயலை 1890இல் மகாத்மா ஜோதிராவ் புலே இறந்தபோது செய்தார். ஜோதிராவ் புலேவுக்கு இறுதிச் சடங்கு செய்ததன்மூலம் தன் கணவரின் இறுதிச் சடங்கைச் செய்த முதல் இந்தியப் பெண் என்கிற புரட்சி அத்தியாயத்தை இந்தியாவின் வரலாற்றுப் பக்கத்தில் எழுதினார் சாவித்ரிபாய்.
  • தான் நடத்திவந்த மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிய தன் தத்துப்பிள்ளைக்கு உதவியாக சாவித்ரிபாய் பணியாற்றினார். அப்போது மகாரஷ்டிரத்தில் பிளேக் எனும் கொள்ளைநோய் ஏராளமானோரைப் பலி கொண்டது. நோய்த்தொற்று குறித்த அச்சமின்றிப் பலருக்கும் மருத்துவ உதவி கிடைக்க சாவித்ரிபாய் போராடினார். பிளேக் தொற்றுக்கு ஆளான சிறுவனை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றபோது சாவித்ரிபாயும் தொற்றுக்கு ஆளானார். சாவித்ரிபாய் தன்னுயிரைத் துச்சமென மதிக்கும் அளவுக்கு மக்கள் சேவையை முதன்மையாகக் கருதினார். எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் 'அனைவருக்கும் கல்வி' என்பதில் அவர் உறுதியாக இருந்ததால்தான் இன்று எத்தனையோ பெண்கள் கல்வி என்னும் கண்கொண்டு இவ்வுலகைக் காண்கின்றனர்.
  • இந்தியாவிலேயே மருத்துவம் பயின்று மருத்துவரான முதல் பெண் என நாம் கொண்டாடுகிறவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் மறுக்கப்பட்டது. என்ன காரணம்? அடுத்த வாரம் பார்ப்போம்.

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்