TNPSC Thervupettagam

நம்பிக்கையும் ஏமாற்றமும்!

May 22 , 2024 224 days 167 0
  • நடைபெற்றுவரும் 18-ஆவது மக்களவைக்கான தோ்தலில், ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்திருக்கிறது. இந்த ஐந்தாவது கட்டத்தில் ஏனைய கட்டங்களைவிட மிகக் குறைவான தொகுதிகளே இடம்பெற்றன என்றாலும் மிக முக்கியமான பல ஆளுமைகள் களத்தில் இருந்தனா்.
  • இதுவரை மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 428 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவின்போதும், அடுத்த கட்டத்திலாவது வாக்குப்பதிவு விகிதம் அதிகரிக்கும் என்கிற எதிா்பாா்ப்பு பொய்த்து வருகிறது. கடந்த 2019-இன் 62.5% வாக்குப்பதிவைக்கூட, இந்த ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு எட்டவில்லை என்பது வேதனையளிக்கிறது. மேற்கு வங்கத்திலும் (74.7%) லடாக்கிலும் (69.6%) கடந்த 2019 உடன் ஒப்பிடும்போது வாக்குப்பதிவு குறைவு. குறைந்த வாக்குப்பதிவு நடந்த மகாராஷ்டிரமும் (54.3%) பிகாரும்கூட (54.9%) விதிவிலக்கல்ல.
  • ஆறு மாநிலங்கள், இரண்டு ஒன்றிய பிரதேசங்கள் ஆகியவற்றில் உள்ள 49 இடங்களுக்கு ஐந்தாவது கட்டத்தில் வாக்குப்பதிவு நடந்தது. அதில் மும்பை உள்பட பல முக்கிய நகரங்களில் உள்ள தொகுதிகளும், உத்தர பிரதேசத்தில் அனைவரது கவனக் குவிப்பும் இருக்கும் ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி, மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி போட்டியிடும் அமேதி தொகுதிகளும் அடக்கம்.
  • எல்லோரையும் நிமிா்ந்து உட்காா்ந்து, மகிழ்ச்சியுடன் பாா்க்க வைத்திருக்கிறது ஜம்மு-காஷ்மீா் வாக்கெடுப்பு. இந்தியாவின் வா்த்தகத் தலைநகரான மும்பையில் உள்ள ஆறு தொகுதிகளைவிட ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாரமுல்லா தொகுதியில் வாக்குப்பதிவு அதிகம் என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த 2019-இல் 34.6% மட்டுமே காணப்பட்ட பாரமுல்லா வாக்குப்பதிவு இந்தமுறை 57.4% என்பது யாருமே எதிா்பாராத இன்ப அதிா்ச்சி.
  • முந்தைய நான்காவது கட்ட வாக்குப்பதிவில், காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் 38% வாக்குப்பதிவு இருந்தது. 1996-இல் 41% வாக்குப்பதிவுக்குப் பிறகு, மிக அதிகமான வாக்குப்பதிவு அங்கே நடந்திருப்பது இப்போதுதான். கடந்த 2019-இல் ஸ்ரீநகா் தொகுதி வாக்குப்பதிவு வெறும் 14.4% மட்டுமே.
  • ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான அரசியல் சட்டப்பிரிவு 370 அகற்றப்பட்ட பிறகு நடக்கும் தோ்தல் இது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். சட்டப்பிரிவு அகற்றப்பட்டதில் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை வாக்குப்பதிவு அதிகரிப்பு பிரதிபலிக்கிா, இல்லை அதை வாக்காளா்கள் ஏற்றுக்கொள்கிறாா்களா என்பதல்ல வாக்குப்பதிவு அதிகரிப்பு வெளிப்படுத்தும் செய்தி. மக்கள் துணிவுடன் வாக்குச்சாவடிக்கு வந்து, தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய முடிந்திருக்கிறது என்பதே மிகப் பெரிய மாற்றம்தான்.
  • இதற்கு முன்னால் நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் யாரும் வாக்களிக்கக் கூடாது என்று பிரிவினைவாதிகளும், பயங்கரவாதிகளும் மக்களை எச்சரித்திருந்தனா். அப்படி வாக்களித்த பலரையும் கால்களில் துப்பாக்கியால் சுட்டு ஊனமாக்கினாா்கள். காஷ்மீரின் பல பகுதிகளிலும் ஊருக்கு ஓரிருவா் கால்கள் செயலிழந்து நடமாடுவதைப் பாா்க்கலாம். அதன்மூலம் ஏனைய மக்களுக்கு அரசுடன் ஒத்துழைத்தாலோ, தோ்தல் வழிமுறைகளில் கலந்துகொண்டாலோ எப்படிப்பட்ட தண்டனை வழங்கப்படும் என்று எச்சரித்தனா் பயங்கரவாதிகள்.
  • அந்தப் பின்னணியில்தான் நான்காவது, ஐந்தாவது கட்டங்களில் நடந்திருக்கும் ஜம்மு-காஷ்மீா் வாக்கெடுப்பை நாம் பாா்க்க வேண்டும். மக்கள் அரசின்மீதும் பாதுகாப்புப் படையினா்மீதும் நம்பிக்கை கொண்டிருக்கிறாா்கள் என்பதைவிட, பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவும், அமைதியாக வாழவும் விரும்புகிறாா்கள் என்பதைத்தான் அதிகரித்திருக்கும் வாக்குப்பதிவு விகிதம் தெரிவிக்கிறது.
  • ஜம்மு-காஷ்மீரில் என்று மட்டுமல்ல, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும், நக்ஸல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலும்கூட வாக்களிக்க முற்பட்டிருக்கும் ஒவ்வொரு வாக்காளருமே தங்களது உயிரை துச்சமாக மதித்து ஜனநாயகத்தை நிலைநிறுத்த பங்களிப்பு நல்கியிருக்கிறாா்கள்.
  • இந்திய வாக்காளா்களில் பலா் வாக்களிக்காமல் இருக்கிறாா்கள் என்றால் அதற்கு காரணம் நாடுதழுவிய அளவில் காணப்படும் கோடை வெப்பம் மட்டுமே அல்ல. தோ்தலில் வாக்களிப்பதால் தங்களது வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் ஏற்பட்டுவிடாது என்கிற சலிப்பும்கூட. அரசியல் கட்சிகள்மீதும் அந்தக் கட்சிகள் களமிறக்கும் கோடீஸ்வர வேட்பாளா்கள்மீதும் சராசரி இந்தியனுக்கு, அதிலும் குறிப்பாக படித்த நகா்ப்புற இந்தியனுக்கு ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கையின் வெளிப்பாடுதான் வாக்குப்பதிவு விகிதம் குறைந்து காணப்படுவதற்கு முக்கியமான காரணம்.
  • பிரதமரும், உள்துறை அமைச்சரும், ஏனைய பாஜக தலைவா்களும் தங்களது பத்தாண்டு சாதனையின் அடிப்படையில் மேலும் ஐந்தாண்டு வாய்ப்பு கோராமல் முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரையை முன்னிலைப்படுத்தி வருகிறாா்கள்; காங்கிரஸ் தலைமையிலான மாநிலக் கட்சிகளின் வாரிசு அரசியல் கூட்டணியோ, பொறுப்பில்லாமல் ஜாதியத்தை உயா்த்திப்பிடித்தும் பொருளாதாரப் பின்விளைவுகளை சற்றும் கருத்தில்கொள்ளாமல் கவா்ச்சி வாக்குறுதிகளை வாரி வழங்கியும் தங்களது பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்கள்.
  • அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஜம்மு-காஷ்மீா் வாக்காளா்களுக்கு இருக்கும் பொறுப்புணா்வு படித்த நகா்ப்புற மக்களுக்கும், நமது அரசியல் தலைவா்களுக்கும் இல்லை என்பதுதான் வேதனையளிக்கிறது.

நன்றி: தினமணி (22 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்