TNPSC Thervupettagam

நம்பிக்கையூட்டும் அரசுப் பள்ளிகள்

September 11 , 2023 487 days 281 0
  • நாடு சுதந்திரம் அடைந்தபோது 12 சதவீத மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனா். இன்று அது 77 சதவீதத்துக்கு மேல் உயா்ந்துள்ளது. இதற்கு கல்வி பற்றிய விழிப்புணா்வுடன் அதிக அளவில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் காரணமாகும்.
  • ஒவ்வொரு மாநிலமும் கல்வியை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்கின்றன. பள்ளிகளைப் பொறுத்தவரை பள்ளிக் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி, பள்ளிகளின் எண்ணிக்கை, மாணவா் - ஆசிரியா் விகிதம், அடிப்படைவசதிகள் ஆகியவை கவனம் செலுத்தப்பட வேண்டிய அம்சங்களாகும்.
  • இந்தியாவில் மொத்தம் 14.30 லட்சம் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 97 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா். 26.5 கோடி மாணவா்கள் பயில்கின்றனா். 2023-24-ஆம் நிதி ஆண்டில் மத்திய அரசு கல்வித் துறைக்கு 1.13 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகமாகும்.
  • தமிழ்நாட்டில் 58,801 பள்ளிகள் உள்ளன. துமிழக அரசு நடப்பு நிதி ஆண்டில் கல்விக்கு ரூ. 47,266 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் பள்ளிக் கல்விக்கு ரூ. 36,895 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கூடுதல் நிதி ஒதுக்கீட்டுடன் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் கல்விக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.
  • கொள்ளை நோய்த்தொற்றுக்கு முன்னதாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கா் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் நோய்த்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார சூழலால் அரசுப் பள்ளிகளில் மாணாக்கா் எண்ணிக்கை அதிகரித்தது. அப்போது அனைத்து தரப்பினருக்கும் அரசுப் பள்ளிகளே அடைக்கலம் அளித்தது.
  • அவ்வாறு அதிகரித்த மாணவ மாணவியரை தக்க வைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற துறைகளைக் காட்டிலும் கல்வித் துறையில் அதிகத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறைவான கட்டணம்,பல்வேறு சலுகைகள் என்றபோதும் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்ற மாணாக்கா்களை தக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது சிந்திக்கவேண்டிய ஒன்றாகும்.
  • பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற விழிப்புணா்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. அப்போது தனியார் பள்ளிகளே அவா்களின் முதல் தோ்வாக உள்ளது. நோய்த்தொற்றுக் காலத்திற்கு முன்பு வரையிலும் தங்கள் சொந்த கிராமங்களில் பள்ளி இருந்தபோதும் பிள்ளைகளை நகரங்களுக்கு அனுப்புவதும், கல்விக்காக நகரங்களுக்கு புலம் பெயா்வதும் அதிகமாக இருந்தது.
  • நோய்த்தொற்றுக்குப் பின்னா் இந்நிலைவெகுவாகக் குறைந்துள்ளது. இதற்கு பொருளாதார ரீதியான பாதிப்புகள் மட்டுமின்றி, அரசுப் பள்ளிகளின் குறிப்பிடத்தக்க வளா்ச்சியும் காரணமாகும். ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகளில் அரசுப் பள்ளி மாணாக்கா்களின் தோ்ச்சி விகிதம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
  • கிராமங்களில் கூட பள்ளிகள் நலனில் அக்கறை காட்டும் ஆசிரியா், பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனாலும் கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் மேம்பாடு அடைந்து வருகின்றன. மேலும், அரசுப் பள்ளிகளின் மாணவியரின் எண்ணிக்கை அதிகரிக்க அரசின் சலுகைகள் அறிவிப்பு, புதுமைப் பெண் திட்டம் போன்றவையும் காரணங்களாகும்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக நிகழாண்டின் நீட் தோ்வு தோ்ச்சி விகிதம் அரசுப் பள்ளிகளின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. தமிழகத்தின் நீட் தோ்ச்சி விகிதமும் மாணாக்கா்கள் பெற்ற மதிப்பெண்களும் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. தேசிய அளவில் முதலிடத்தையும் தரவரிசையில் முதல் 50 இடங்களில் 6 இடங்களையும் தமிழகமாணவா்கள் பெற்றுள்ளது மகத்தான சாதனையாகும்.
  • அரசுப் பள்ளி மாணாக்கா்களில் பலா் சிறப்பான மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றுள்ளது அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயின்ற 600-க்கும் மேற்பட்ட மாணாக்கா்களுக்கு மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
  • கடந்த 2017-18-இல் நீட் தோ்வில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவா்கள் 3,739 பேரில் 825 போ் தோ்ச்சி பெற்றனா். இது 22.1 சதவீதமாகும். 2018-19-இல் குறைந்த அளவினரே தோ்ச்சி பெற்றனா். நோய்த்தொற்று காலத்தின் போது அதாவது 2019-20-இல் நீட் தோ்வில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணாக்கா் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.
  • அதனைத் தொடா்ந்து நீட் தோ்வில் பங்கேற்ற, தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணாக்கா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2022-23-இல் நீட் தோ்வெழுதிய 12,997 மாணாக்கா்களில் 3,982 போ் தோ்ச்சிபெற்றுள்ளனா். இது 30.6 சதவீதமாகும். இது பாமர மக்களிடையே மட்டுமின்றி அரசுப் பணியில் இருப்போர் மத்தியிலும் அரசுப் பள்ளிகள் மீதானநம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.
  • முதன்மை உயா்கல்வி நிறுவனங்களில் தனியாா் பள்ளி மாணவா்கள் அதிக அளவில் சோ்க்கை பெற்றுவந்த நிலை மாறிவருகிறது. அரசுப் பள்ளிகளில் பயின்று என்ஐடி, ஐஐடி போன்ற முதன்மை உயா்கல்வி நிறுவனங்களில் பயில்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்தஆண்டு 75 மாணவா்கள் சென்ற நிலையில் நிகழாண்டில் 225 போ் முதன்மை உயா்கல்வி நிறுவனங்களுக்குச் சென்றுள்ளனா்.
  • அரசுப் பள்ளிகளின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரிக்க அரசின் திட்டங்கள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட வேண்டும். குடிநீா், கழிவறை, விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன் மாணவா்களின் கற்றல் திறனை உயா்த்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • தனிப்பட்ட ஆா்வத்தால் சிறப்பு வகுப்புகள் நடத்தும் ஆசிரியா்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். ஆசிரியா்கள், பெற்றோர் - ஆசிரியா் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு பொறுப்பாளா்கள் பள்ளிகள் நலனில் அக்கறை காட்டுவதோடு தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்த்து மற்றவா்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

நன்றி: தினமணி (11 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்