- அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி, அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு, தற்போது ஓராண்டு கடந்த நிலையில், அங்கு எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
- 2019 ஆகஸ்ட் 5க்கு முன்னர் அமலில் இருந்த சட்டங்கள் எல்லாம் தற்போது அங்கு இல்லை. 354 சட்டங்களில் தற்போதைய காலத்திற்குப் பொருந்தாத 164 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. 138 சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. 170 சட்டங்கள் புதிதாக அமலாகி இருக்கின்றன. வன்முறையும், பயங்கரவாத நடவடிக்கைகளும் ஏறக்குறைய 40 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது.
- கடந்த காலங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறபோது ஆண்டுக்கு 190 பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாகத் தெரிய வருகிறது. ஆனால், இந்த ஆண்டு அது 120 ஆகக் குறைந்துள்ளது வியப்பை அளிக்கிறது. ஓர் அமைதிக்கான பயணமாகவே இது தென்படுகிறது. பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறுகிறபோதெல்லாம் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினரும், அப்பாவி மக்களும் தொடர்ந்து பலியாகி வந்தது சகிக்க முடியாத துயராகும். தற்போது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.
- பயங்கரவாத அமைப்புகளில் உள்ளூர் இளைஞர்களை மூளைச் சலவை செய்து சேர்க்கப்பட்டு வந்த நிலை அக்காலகட்டத்தில் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால், தற்போது இளைஞர்கள் பயங்கரவாத இயக்கங்களில் சேர்வது குறைந்து விட்டது. மேலும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் நிரந்தர குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டதால், அங்கு தங்குவதற்கும், வசிப்பதற்குமான சூழல் உருவானது.
- இவற்றில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அனைத்து துறைகளிலும் காலியிடங்கள் அதிகமாக இருந்த காரணத்தினால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அவற்றில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டு, கடுமையான நடைமுறையைத் தவிர்த்து எளிமையான நடைமுறையைக் கையாண்டு அப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
- கடுமையான நெருக்கடிகளால் பொருளாதாரத்தில் பின்தங்கி விட்டவர்கள், தங்களது வலுவான கட்டமைப்பைத் தொலைத்து விட்டவர்களாக நிர்கதியாக இருந்தவர்களைக் கண்டறிந்து 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதற்கும், பகாரி மொழி பேசுபவர்களுக்கு நான்கு சதவிகித இடஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நடவடிக்கைகளின் மூலமாக சில நம்பிக்கைகள் துளிர்க்கத்தான் செய்கின்றன.
- இதில் ஆச்சர்யப்படத்தக்க ஒரு செய்தி என்னவென்றால், மத்தியஅரசின் ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரையின் பலன்கள் ஜம்மு காஷ்மீரின் அரசு ஊழியர்களுக்கும் கிடைத்துள்ளது. இதனை அவர்கள் மகிழ்வோடு தெரிவிக்கிறார்கள். இதன்மூலம் மூன்று லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
- ஜம்மு காஷ்மீரில் பாலங்கள் தகர்க்கப்பட்டும், சாலைகள் சிதிலமடைந்தும் இருந்தன. இப்போது அவற்றையெல்லாம் புனரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். உலகிலேயே உயரமான ரயில் பாலம், வரலாற்றுச் சிறப்பு மிகுந்த செனாப் நதியின் மீது கட்டப்பட்டு வருகிறது. 10 ஆயிரம் கோடி மதிப்பிலான மின் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.
- இப்போது லடாக், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் இந்தியர் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என்கிற புதிய நிலச்சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இந்தியாவின் பிற பகுதிகளோடு ஜம்மு காஷ்மீரை இணைப்பதற்கான சிறந்த முன்னெடுப்பாகவே இந்த நடவடிக்கையை நாம் பார்க்கலாம். இவை போக, 80ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தீட்டப்பட்டு, ஐஐஎம், ஐஐபி, எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்கள் தோற்றுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
- இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா நகரமான காஷ்மீரில் முன்பு சுற்றுலாத்துறை பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தது. அங்கு அச்சுறுத்தல்கள் அதிகமானதால் சுற்றுலாதுறை பெரும் சரிவைச் சந்தித்து வந்தது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் வேலைவாய்ப்புகளை இழந்தவர்களாக இருந்தார்கள். இப்போது நிலைமை முற்றிலும் மாறி சுற்றுலா துறை பழைய உத்வேகத்தை எட்டியுள்ளது.
- இப்படிப்பட்ட வரவேற்கத்தகுந்த நிகழ்வுகள் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் தங்களது கசப்பான அனுபவத்தையே மீண்டும் மீண்டும் பதிவு செய்திருக்கிறார்கள். சில கடினமான முடிவுகளை நாம் கடந்துதான் ஆக வேண்டும் என்று எதிர்த்தரப்பில் சொல்லப்பட்டாலும், அங்குள்ள மக்களுடைய மனநிலை முழுதும் இன்னும் மாறுவதற்கு பல சந்தர்ப்பங்களை நாம் தந்தாக வேண்டிய சிக்கலான சூழ்நிலையிலேயே நாம் தற்போது இருக்கிறோம்.
- பயங்கரவாதிகளின் தாக்குதல்களால் பெருமளவு நசிந்து போய் விட்ட ஜம்மு காஷ்மீரின் சுதந்திர தாகம் முழுமையாக முன்னேற்ற நிலை அடைவதற்கு மக்களின் மனங்களில் மாற்றங்கள் வேண்டியதாக இருக்கிறது.
- நாடு விடுதலை அடைந்த போது சுதந்திர தேசமாக இருந்தது ஜம்மு காஷ்மீர். பின்னர் அதனை ஆக்கிரமிக்க முயன்ற பாகிஸ்தான், பின்பு இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைவு, 370 ஆவது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரங்கள், தனிக்கொடி, தனி சாசனம் இப்படியெல்லாம் இருந்தவற்றை புதிய மாற்றத்திற்கான தற்கால நிகழ்வுகளாகவே மக்கள் எண்ணி, அவர்கள் தங்கள் மனநிலையில் இருந்து விடுபடுவதற்கு சில கால அவகாசங்கள் தேவைப்படுவது இயல்புதானே!
- ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு ஜம்மு காஷ்மீரில் தனிநாடு கோருகிற பயங்கரவாத இயக்கங்களில் குறிப்பிடத்தகுந்த ஒன்று. மத்திய அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கை காரணமாக கடந்த ஓராண்டு காலத்தில் இந்த பயங்கரவாதிகளின் பிடியில் இளைஞர்கள் யாரும் சிக்கவில்லை. பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் வேரோடு நசுக்கப்பட்டு விட்டன.
- கடந்த ஆண்டு 75 பாதுகாப்பு படையினர் வீர மரணம் அடைந்தனர். இந்த ஆண்டு தற்போது வரை அது 35 பேராகக் குறைந்திருக்கிறது. கையெறி குண்டு சம்பவங்களும், கண்ணிவெடித் தாக்குதல்களும், துப்பாக்கி சத்தங்களும், வெடிகுண்டு தாக்குதல்களும் குறைந்திருக்கின்றன.
- லடாக் மக்களைப் பொருத்தவரை தங்களுக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கனவு அவர்களுக்கு இருந்தது. நீண்ட காலமாக இருந்துவரும் அக்கோரிக்கை 65 ஆண்டு பயணத்தில், குஷோக் பகுலா, துப்ஸ்டான் ஷேவாங் போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் லடாக்கின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் தங்கள் குரல்களை எழுப்பியும் வந்தனர்.
- தற்போது லடாக் சுதந்திரமான நிலப்பகுதியாக தனது பயணத்தை இனிதே தொடர்கிறது. லடாக் மக்கள் "எங்கள் வாழ்நாளில் இவை நிறைவேறும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. அறுபத்தைந்து ஆண்டுகளில் யூனியன் பிரதேசம் என்கிற கனவை நாங்கள் எட்டிப் பிடித்திருக்கிறோம்' என்று பெருமை பொங்க பேசத் தொடங்கி விட்டார்கள். ஜம்மு காஷ்மீரில் இருந்து பிரிந்து சுதந்திரமாக தனித்த அடையாளத்துடன் லடாக் நடைபோடுகிறது.
- தங்கள் பாதையைத் தாங்களே அமைத்துக் கொள்வதற்குரிய நல்வாய்ப்பு அவர்களுக்கு அமைந்திருக்கிறது. ஏனென்றால், ஜம்மு காஷ்மீரின் 65 சதவீத நிலப்பரப்பு, அதாவது 45 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் கொண்டிருந்த லடாக்கிற்கு வெறும் இரண்டு சதவீத பட்ஜெட் தொகை ஒதுக்கப்பட்டு வந்ததால், மிகப்பெரிய வளர்ச்சியை அவர்கள் அடைய முடியவில்லை.
- 57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட லடாக்கிற்கு, தற்போது அது நான்கு மடங்காக உயர்த்தப்பட்டு 232 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. மேலும் சிறப்பு மேம்பாட்டு நிதியாக லடாக்கிற்கு ஆறாயிரம் கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.
- ஆனால், இவற்றின் மூலம் பெரும் வளர்ச்சி பெற்றுவிடலாம் என்கிற நம்பிக்கையில் இருந்த அவர்களுக்கு, எதிர்பாராத துன்பமாக வந்த கரோனா தீநுண்மி அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது என்று கூறுவது மிகையல்ல. ஏனென்றால், ஜம்மு காஷ்மீர் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டு விட்ட முழுமையான பகுதி.
- ஆனால், லடாக்கின் நிலைமையோ அப்படியல்ல. தனது பயணத்தை பூஜ்யத்தில் இருந்து தொடங்க வேண்டி உள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதன் வளர்ச்சி குறித்து நாம் சரியாகக் கணிக்க முடியும்.
- லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், நிலம் ஆகியவற்றில் மிகப்பெரிய சவால்களைச் சந்தித்து வருகிறார்கள். லே, கார்கில் என இரண்டு மாவட்டங்களாகப் பிரிந்து செயல்பாடுகள் படிப்படியாக வேகமெடுக்க வேண்டும். விரைவில் சர்வதேச சுற்றுலாத் தலமாக லடாக் தனது சிறகை விரித்தால், அதன் வளர்ச்சி தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விடும்.
நன்றி: தினமணி (24 -12 -2020)