நம்பிக்கை அளித்த இந்தியர்கள்!
- ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த 33ஆவது ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாகப் பங்களித்து நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். விளையாட்டுத் துறையில் இந்தியாவுக்குக் கிடைத்துவரும் முன்னேற்றத்துக்கு இது சான்றாகியிருக்கிறது.
- ஒலிம்பிக்கில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்திவரும் அமெரிக்காவும் சீனாவும் இந்த முறையும் அதிகப் பதக்கங்களை வென்று முதல் இரண்டு இடங்களைப் பெற்றன. இந்தியா தடகளத்தில் வெள்ளி, ஹாக்கியில் வெண்கலம், துப்பாக்கிச் சுடுதலில் மூன்று வெண்கலம், மல்யுத்தத்தில் வெண்கலம் என ஆறு பதக்கங்களை வென்றது. டோக்கியோ ஒலிம்பிக்கைவிட ஒரு பதக்கம் குறைவு என்றாலும், இந்தியர்களின் விளையாட்டுத் திறமை துலக்கமாக வெளிப்பட்டது.
- 2016, 2020 ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து, பாரிஸ் ஒலிம்பிக்கிலும் முதல் பதக்கத்தை ஒரு பெண்ணே (மனு பாகர்) இந்தியாவுக்குப் பெற்றுக் கொடுத்தது சிறப்புக்குரியது. துப்பாக்கி சுடுதலில் பெண்கள் பதக்கம் வெல்லவில்லை என்கிற குறையையும் மனு பாகர் போக்கினார். முதல் முறையாக ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையும் அவருக்குக் கிடைத்தது. துப்பாக்கி சுடுதலில் கலப்புப் பிரிவில் சரப்ஜோத் சிங், தனியாக ஸ்வப்னில் குசாலே ஆகியோரின் பங்களிப்புடன் வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
- டோக்கியோவைத் தொடர்ந்து பாரிஸிலும் ஆடவர் ஹாக்கி அணி வெண்கலம் வென்றுள்ளது. 56 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்தியா ஒலிம்பிக் பதக்கம் வென்றிருப்பது, ஹாக்கியில் இந்தியாவின் பழைய பெருமையை மீட்டெடுத்திருக்கிறது. ஈட்டி எறிதலில் இந்த முறையும் நீரஜ் சோப்ரா தேசத்தின் நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கிறார். வெள்ளி வென்றதன் மூலம் தடகளப் பிரிவில் தொடர்ச்சியாகப் பதக்கம் வென்ற முதல் வீரராகியிருக்கிறார் அவர். மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றதன் மூலம் தனிநபர் பிரிவில் இளம் வயதில் பதக்கம் வென்ற முதல் இந்தியராகி இருக்கிறார் அமன் ஷெராவத்.
- பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆறு வெண்கலப் பதக்கங்கள் நூலிழையில் தவறவிடப்பட்டன. பேட்மின்டனில் லக்ஷயா சென், பளு தூக்குதலில் மீராபாய் சானு, துப்பாக்கி சுடுதலில் மனு பாகர், அர்ஜுன் பபுதா, மகேஸ்வரி செளகான் - அனந்த்ஜித் சிங் நருகா இணை, வில்வித்தையில் தீரஜ் பொம்மதேவரா-அங்கிதா பகத் இணை ஆகியோர் கடும் போட்டிக்கு இடையில் பதக்கத்தைத் தவறவிட்டு நான்காமிடம் பிடித்தாலும், அவர்களும் பாராட்டுக்குரியவர்களே.
- அதேவேளையில், மல்யுத்த இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கு முன்பாக வீராங்கனை வினேஷ் போகாட் தகுதிநீக்கம் செய்யப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. தொடர்ச்சியாக அவர் சந்தித்து வந்த சறுக்கல்கள், போராட்டங்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றுக்கு இடையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருந்தால், அது அவருக்கு ஆறுதலாக அமைந்திருக்கும். என்றாலும் இதைப் பாடமாகக் கொண்டு எதிர்காலத்தில் தவறு நேராமல் இந்திய ஒலிம்பிக் சங்கம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- ஒட்டுமொத்தமாக, பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் விளையாட்டுத் திறன் மேம்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்றாலும் ஒலிம்பிக்கில் அதிகப் பதக்கங்களை வெல்ல இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டும். அது சாத்தியமாக, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். சிறிய நகரங்களிலும் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளைப் பரவலாக்குவதன் மூலம் திறமைசாலிகளைக் கண்டறிய முடியும். அவர்களுக்கும், இந்தியா ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்திவரும் விளையாட்டுகளில் பங்கேற்பவர்களுக்கும் உலகத் தரத்திலான பயிற்சிகள் உள்ளூரிலேயே கிடைக்க இந்திய ஒலிம்பிக் சங்கமும், மத்திய அரசும் வழிவகை செய்வதன் மூலம் அது சாத்தியமாகும்.
நன்றி: இந்து தமிழ் திசை (12 – 08 – 2024)