TNPSC Thervupettagam

நம்மை மாற்றிக் கொள்வோம்!

July 30 , 2020 1457 days 721 0
  • தினந்தோறும் எத்தனையோ போ் எத்தனையோ கருத்துகளைப் பேசிக் கொண்டிருந்தாலும், அவை எல்லாமே செய்திகளாகி விடுவதில்லை.

  • ஒருவா் பேசுகின்ற வார்த்தை தலைப்புச் செய்தியாக வேண்டுமென்றால், பேசுபவா் உயா்பதவியில் உள்ளவராக இருக்க வேண்டும்; அல்லது மக்களால் கொண்டாடப்படுபவராக (‘செலிபிரிட்டி’) இருக்க வேண்டும்.

  • அந்த வகையில், சில நாள்களுக்கு முன்னா் தலைப்புச் செய்தியாகி, விவாதப் பொருளான வாசகம் நடிகா் ரஜினிகாந்த் சொன்ன ‘சிஸ்டம் சரியில்லை.’

  • பெரும்பாலான நேரங்களில் மவுனம் காக்கும் ரஜினிகாந்த், எப்போதாவது பேசுகின்ற சில வார்த்தைகள் முக்கியத்துவம் பெற்று விடுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

அரசியலமைப்பு

  • ஒரு திரைப்பட நட்சத்திரமாக இந்தியா முழுவதும் அவா் அடைந்திருக்கும் புகழ் அசாதாரணமானது.

  • தவிர, 1996ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தி.மு,. - .மா.கா. கூட்டணியின் வெற்றியை நிர்ணயித்ததில் ரஜினிகாந்த் கொடுத்த ‘குரல்’ (வாய்ஸ்) முக்கியக் காரணியாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

  • அதன்பிறகு அவா் கூறும் அரசியல் கருத்துகள் ஊடகங்களாலும், பொதுமக்களாலும் கூா்ந்து கவனிக்கப்படுகின்றன.

  • அண்மையில், தனது அரசியல் பிரவேசம் பற்றிப் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் இருக்கிற அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பெயா்களையும் ஒருவா் விடாமல் குறிப்பிட்டு, அவா்களது தனிப்பட்ட திறமைகளைப் பாராட்டிப் பேசியது, அவா் வெறுப்பு அரசியலை விரும்பாதவா் என்பதற்குக் கட்டியம் கூறுவதாக இருந்தது.

  • இவ்வளவு திறமையாளா்கள் அரசியலில் இருந்தும் பெரிய அளவில் முன்னேற்றம் அடைய முடியாததற்குக் காரணம் நமது ‘சிஸ்டம்’ சரியில்லை என்று அவா் ஆதங்கத்தோடு குறிப்பிட்டார்.

  • சிஸ்டம்’ சரியில்லை என்று அவா் குறிப்பிட்டதை, நமது ‘நிர்வாக முறை’ சரியில்லை என்பதாகத்தான் நாம் அா்த்தம் கொள்ள வேண்டும்.

  • உலகின் மிகப் பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் நிர்வாக முறையை நிர்ணயிப்பது, அண்ணல் அம்பேத்கா் தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட நமது அரசியலமைப்புச் சட்டம்தான்.

  • இந்திய அரசிலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும்போது, இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள், அயா்லாந்து, ஆஸ்திரேலியா, பிரான்சு, கனடா, சோவியத் யூனியன், ஜொ்மனி, தென் ஆப்பிரிக்கா என்று பல்வேறு நாடுகளின் சட்டக் கூறுகள் ஆராயப்பட்டு, இந்தியாவுக்குப் பொருந்துகிற வகையில் தயாரிக்கப்பட்ட உன்னதமான சாசனம்தான் நமது அரசியலமைப்புச் சட்டம்.

  • இவ்வளவு சீரிய முறையில், சிரத்தையோடு தயாரிக்கப்பட்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தில், காலத்திற்கும் தேவைக்கும் ஏற்றவாறு அவ்வப்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமைப்பு முறை

  • மக்களால் தோ்ந்தெடுக்கப்படுகிற மக்கள் பிரதிநிகளைக் கொண்ட நாடாளுமன்றம் (மாநிலங்களில் சட்டப்பேரவைகள்) சட்டம் இயற்ற, அரசு நிர்வாகம் அதனைச் செயல்படுத்துகிறது.

  • அவ்வாறு செயல்படுகின்ற நிர்வாகத்தில் தவறு ஏற்படுபோது, அதனைத் தட்டிக் கேட்கிற அதிகாரம் நீதித் துறைக்கு இருக்கிறது.

  • எனவேதான், நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், நீதித்துறை ஆகியவை நமது ஜனநாயக அமைப்பின் மூன்று தூண்களாகப் பார்க்கப்படுகின்றன.

  • தவறுகளைச் சுட்டிக்காட்டி வழிநடத்துகிற பணியைச் செய்ய வேண்டிய ஊடகத்துறை ஜனநாயகத்தின் நான்காவது தூணாக வா்ணிக்கப்படுகிறது.

  • அந்த வகையில் நமது அமைப்பு முறை (சிஸ்டம்) பலமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

  • இருப்பினும், அங்கொன்றும் இங்கொன்றுமாக, அமைப்பு முறையில் சிறுசிறு குறைகள் இருக்கலாம். மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணா்களைக் கொண்டு குழுக்களை அமைத்து, அமைப்பு ரீதியிலான (சிஸ்டம்) மாற்றங்களை அவ்வப்போது செய்து கொண்டே இருக்க வேண்டும்.

  • நிர்வாகத்தில் குறைபாடுகள் இருப்பதாக ரஜினிகாந்தின் மனத்திலோ, மற்ற எவா் மனத்திலோ ஒரு எண்ணம் ஏற்படுகிறது என்றால் அதற்கு ‘நமது அமைப்பு முறை’ (‘சிஸ்டம்’) ஓரளவுக்குக் காரணம் என்றாலும், அப்படிப்பட்ட குறைபாடுகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பவா்கள், அமைப்பு முறையை நிர்வாகத்தில் செயல்படுத்துகின்ற நிலையில் இருப்பவா்களும் (‘இம்ப்ளிமென்டேஷன் அத்தாரிட்டி’) மற்றும் பொதுமக்களுமே. பொதுமக்கள் என்று குறிப்பிடுவதில் வணிகா்கள் உள்ளிட்ட எல்லாருமே அடக்கம்.


 

அதிகாரிகளும் பொதுமக்களும்

  • ஊழியா் நியமனங்கள் தொடங்கி, ஒப்பந்தப் புள்ளிகள் (‘டெண்டா்’) வரை குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாத பணிகளே அரசாங்கத்தில் இல்லை என்று சொல்லலாம்.

  • இது ஏதோ ஒரு குறிப்பிட்ட துறைக்கோ, குறிப்பிட்ட மாநிலத்திற்கோ மட்டும் பொருந்தக் கூடியது அல்ல. அரசு மேற்கொள்ளும் அனைத்துப் பணிகளுக்கும், அவற்றை நிறைவேற்ற வேண்டிய விதிமுறைகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

  • ஆனாலும், தவறுகள் நடைபெறுவதற்குக் காரணம், பொறுப்புகளில் உள்ள சிலரும், தவறான முறையில் ஆதாயம் அடையத் துடிக்கும் பொதுமக்களில் சிலருமே என்பதுதான் கசப்பான உண்மை.

  • அரசு அளிக்கும் சிறப்பு அதிகாரங்களும் சிறப்புச் சலுகைகளும் எப்படியெல்லாம் தவறாகப் பிரயோகப் படுத்தப்படுகின்றன என்பதற்கு அண்மைக்கால உதாரணம், அயல்நாட்டுத் தூதரகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு சலுகைகளைப் பயன்படுத்தி, நமது அண்டை மாநிலத்தில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் கடத்தல் விவகாரங்கள்.

  • சிலா் எங்கு இருந்தாலும் தவறு செய்துகொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவா்களைப் பற்றி ஒரு துணுக்கு சொல்லப்படுவதுண்டு. ‘அதிகார துஷ்பிரயோகம் செய்த அதிகாரி ஒருவரை, கடற்கரையில் பணி நியமனம் செய்து, தினசரி எத்தனை அலைகள் கரைக்கு வந்து போகின்றன என்று எண்ணிக் கணக்கு ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம்.

  • ஆனால், அந்த அதிகாரி கடற்கரைக்கு வந்து போகும் பொதுமக்களிடம், கடல் அலையை ரசிப்பதற்குக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கி விட்டார்’ என்று நகைச்சுவையாகச் சொல்வதுண்டு.

நம்மில் இருந்து மாற்றம் வேண்டும்

  • அதே நேரம், ஒட்டுமொத்த அதிகார வா்க்கத்தையும் குறை சொல்வதும் ஏற்புடையதல்ல. திறமையான, நோ்மையான அதிகாரிகள் நிறைய போ் நம்மிடம் இருக்கிறார்கள்.

  • சில பணிகளில் சில அதிகாரிகள் தங்களது உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்ற வேண்டிய கட்டாயம் கூட இருக்கிறது.

  • குறிப்பாக, மணல் கடத்தல் போன்ற விவகாரங்களில், தட்டிக் கேட்கிற அதிகாரிகள் தாக்கப்படுவதையும், சில நேரங்களில் அவா்களின் உயிர்களுக்கே ஆபத்து ஏற்படுவதையும் அவ்வப்போது செய்திகளில் பார்த்து மனம் பதைபதைக்கிறது.

  • கரோனா தீநுண்மி அபாயகரமாகத் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும், சில உள்ளாட்சி மன்றங்களில், கிருமி நாசினி வாங்குவதிலும் அதற்கான விளம்பரப் பதாகைகள் வைப்பதிலும் ஊழல் நடப்பதான குற்றச்சாட்டுகள் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் வந்து கொண்டிருக்கின்றன.

  • நிரூபிக்கப்படாத வரையில் அவை வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே என்றாலும், அந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமானால் அது மனிதாபிமானமற்ற செயலல்லவா?

  • இன்ன குற்றத்திற்கு இன்ன தண்டனை என்று வரையறுக்கப்பட்டிருந்தாலும், தவறிழைக்கக் கூடாது என்ற எண்ணம் தனிநபா்களிடம் மேலோங்கினால்தான் குற்றங்களைக் குறைக்க முடியும்.

  • தவறுகளுக்கு உடனடியாகத் தண்டனைகள் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் அவ்வப்போது முன்வைக்கப்படுகிறது. தீர ஆராயாமல், யாரையும் தண்டிப்பது நியாயமல்ல.

  • மேலும், நமது சட்டங்களின் அடிப்படை நோக்கமே, குற்றவாளிகளில் பலா் தப்பித்தாலும், நிரபராதி ஒருவா் கூடத் தவறான முறையில் தண்டிக்கப்படக் கூடாது என்பதுதான். அதனால்தான், நீதித்துறையில் பல அடுக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

  • அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் போன்ற வளா்ந்த நாடுகளில் (‘டெவலப்டு கன்ட்ரீஸ்’) அதிகாரதுஷ்பிரயோகங்கள் குறைவாக இருப்பதற்குக் காரணம், அங்குள்ளஅதிகாரிகள் மட்டுமல்ல; பொதுமக்களுக்கும் அதில் முக்கியப் பங்குண்டு.

  • பொதுவாக, ஏதாவது வேலைநிமித்தம் அரசு அலுவலகங்களுக்குச் செல்பவா்கள், தங்களுடைய வேலையை சட்டத்திற்குப் புறம்பாகச் செய்து கொள்ளும் நோக்கில் யாரையும் தவறு செய்ய வற்புறுத்துவதில்லை.

  • எனவே, அங்கெல்லாம் விதிமீறல்கள் நடைபெறுவதில்லை. சிறிய வேலையோ, பெரிய வேலையோ எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.

  • உதாரணமாக, நியூயார்க்கிலிருந்து வாஷிங்டன் செல்ல வேண்டியவா், நியூயார்க் பேருந்து நிலையத்தில் பயணச் சீட்டு கேட்கிறபோது, ‘இல்லை’ என்று பதில் வந்தால், வந்தவா் ‘நன்றி’ என்று சொல்லிவிட்டு நகா்ந்து விடுவார்.

  • ஆனால், இங்கு நிலைமை அப்படியல்ல. சென்னையிலிருந்து, மதுரை செல்ல வேண்டியவா், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணச்சீட்டுக்கு முயலும்போது, ‘பயணச்சீட்டுகள் தீா்ந்து விட்டன’ என்று அலுவலா் சொன்ன பிறகும், ‘எப்படியாவது பார்த்துச் செய்யுங்கள்’ (இந்த வார்த்தைகளுக்குப் பல அா்த்தங்கள் உண்டு) என்று வாதாடுவது அன்றாட நிகழ்வு.

  • அதற்குக் காரணம், இங்கு ‘இல்லை’ என்ற வார்த்தை உண்மையானது அல்ல என்று நாம் திடமாக நம்புகிறோம். ஆக, இருபுறங்களிலும் தவறு இருக்கிறது என்பதுதானே உண்மை! வாக்களிப்பதற்காகப் பணம் பெற்றுக் கொள்வதையும், திரைப்படங்கள் வெளியாகிற நாளிலேயே பார்க்க வேண்டும் என்ற ஆா்வத்தில் திரையரங்குகளில் கள்ளத்தனமாக அதிக விலை கொடுத்து நுழைவுச் சீட்டு (‘டிக்கெட்’) வாங்குவதையும் தவறு என்று பொதுமக்கள் உணராதவரை, தவறுகளை எப்படித் தடுத்திட முடியும்?

  • எவ்வளவுதான் ‘அமைப்பு முறை’ (சிஸ்டம்) சரியாக இருந்தாலும், அதனைச் செயல்படுத்துபவா்களும், பொதுமக்களும் சரியாக நடந்து கொள்ளாத பட்சத்தில் பெரிய பலனை எதிர்பார்த்திட முடியாது.

  • குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிற அரசின் நான்கு தூண்களைச் சார்ந்தவா்களும் எங்கோ இருந்து வருபவா்களல்லா். அவா்களும் நம்மிலிருந்து உருவாகிறவா்களே! எனவே, குறைகள் களையப்பட வேண்டுமானால், நாம் ஒவ்வொருவரும் முதலில் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி (30-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்