TNPSC Thervupettagam

நரம்பணு-மின்னணுக் கூட்டணி வெற்றி!

May 30 , 2019 2050 days 1179 0
  • இந்த ஆண்டு மே 30-ஆம் தேதி உலகப் பன் நரம்பணுச் சிதைவு (மல்டிப்பிள் ஸ்கிளரஸோஸிஸ்) விழிப்புணர்வு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. கண்ணுக்குப் புலப்படாத பன் நரம்பணுச் சிதைவு என்பதே முத்திரை மொழி. கட்புலனறிவு என்பதே மையக் கருத்து.
மத்திய நரம்பணு மண்டலம்
  • மத்திய நரம்பணு மண்டல அழிவை ஏற்படுத்தும் நோய் இது. பார்வைக் கோளாறு, தசை மரத்துப் போகுதல், வலி, சோர்வு, தளர்ச்சி, தலைசுற்றல், பாலியல் செயலிழப்பு, புரிதல் பிரச்னைகள் போன்றவையே இந்த நோயின் அறிகுறிகள். சரியாக 150 ஆண்டுகளுக்கு முன்னம் பிரான்ஸ் நாட்டில் ஜீன்-மார்ட்டின்-சார்கோட் என்பவர்தான் இந்த மாறுபட்ட நோயினைக் கண்டு அறிவித்தவர். இந்த நோயாளிகளிடம் தன்னிச்சையான விழி நகர்வு, உடல் நடுக்கம், தடைபட்ட பேச்சு போன்ற அறிகுறிகள் தென்பட்டனவாம்.
  • உண்மையில் ஒரு கணிப்பொறி தனது கணிப்புகளை ஒருங்கிணைத்து வெவ்வேறு உறுப்புகளுக்குப் பாய விடுகிறது. அவற்றைச் சுமந்து செல்பவை மின்னணுக்கள். உடலின் பல்வேறு உணர்வுகளையும் மூளைக்குச் சுமந்து செல்ல உதவுபவை பல கோடி நியுரான்கள் என்னும் நரம்பணுக் கடத்திகள். இவற்றைச் சுற்றி, மின் கம்பிக்கு பிளாஸ்டிக் தடுப்பு உறை போல மையிலீன் என்ற கொழுப்புப் பொருள் போர்த்தி இருக்கிறது. உடலின் வலியை உணர்த்துவதில் இந்த மையிலீன் உறை முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • ஆக, உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலால் மையிலீன் உறை சிதைபடுவதால் பார்வை நரம்புகள், முதுகுத் தண்டுவடம், மூளை போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படக் கூடும். சிந்தனைத் திறனும் நினைவாற்றலும்கூட மந்தம் அடையும்.
பன் நரம்பணுச் சிதைவு
  • பூகோள அடிப்படையில் உலகப் பன் நரம்பணுச் சிதைவு (மல்டிப்பிள் ஸ்கிளரஸோஸிஸ்) நோயினால்  சுமார் 23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ஆயிரத்தில் ஒருவர் அல்லது இருவர் வீதம் இந்த நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
  • குறிப்பாக, வட, தென் துருவங்களில், குளிர் பிரதேசங்களில், சூரிய ஒளிபடாத குளுகுளு அறைகளில் வாழ்பவர்களுக்கும் எழும் வைட்டமின் டி சத்துக் குறைபாடு, மன உளைச்சலில் உண்டாகும் உணர்ச்சிவயப்படுதல், நிலையில்லாத மனவோட்டம் போன்றவையும் இந்த நோயின் அறிகுறிகள்.
  • அதிலும், எதிர்பாராத வகையில் குழந்தைகளை இழந்த பெற்றோர்களிடையே ஏற்படும் மன அழுத்தமும் ஒரு காரணம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மதுப் பழக்கம், புகை பிடித்தல், கரைப்பான்கள் போன்ற தொழிலக நச்சுப் பொருள்கள், தடுப்பூசிகள், மயக்க மருந்துகள் போன்றவற்றாலும் நரம்பணுச் சிதைவு உண்டாகலாம் என்பதற்கான ஆய்வுகள் தொடர்கின்றன.
  • பெரியவர்களில் 30-50 வயதிலேயே இந்த நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதிலும் பெண்களுக்குத்தான் சாத்தியக் கூறுகள் அதிகம். குழந்தைகளில் ஓர் ஆணுக்கு மூன்று பெண்கள் என்ற விகிதத்தில் இதன் பாதிப்பு ஏற்படலாம். மகப்பேறு காலத்துக்குப் பின், தாய்மார்களுக்கு ஒரு சில மாதங்களுக்கு இந்த நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. மரபணுக் காரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உடலின் குரோமோசோம்  6-இல் ஏற்படும் சிக்கல்களால் மனித லியுக்கோசைட் ஆன்டிஜென் என்கிற ரத்த வெள்ளணு எதிர்ப்பொருள்கள் உருவாகின்றன. இதுவே நரம்பணு மையிலீன் சிதைவுக்குக் காரணமாகிறது.
நோய் பாதிப்பு
  • இது மூளைக்கும் ரத்த நாளங்களுக்கும் இடையிலான தடுப்புச் சுவரைக் கடந்து அத்துமீறி நுழைந்து மூளைப் பகுதியில் ஆக்கிரமிக்கிறது. இந்த நோயில் நான்கு வகைகள் உள்ளன என்பது எல்லாம் மருத்துவப் பாடம். பொதுவாக, நோய் பாதிப்பினைக் குறைப்பதற்கு மீத்தைல் ப்ரெட்னிசொலோன் போன்ற ஸ்டீராய்டு இன மருந்துகள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.  உடல் ரீதியிலான நோய் பாதிப்புக்கு யோகா போன்ற உடற்பயிற்சிகளும், மூலிகை மருத்துவமும் ஓரளவு உதவலாம்.  ஆனால், அறிவாற்றல் செயல்பாட்டில் இவை எந்த மாறுதலையும் உருவாக்குவதில்லை.
  • ஒரு காலத்தில் நரம்பியல் நிபுணர்கள் தனி ஆய்வகத்திலும், கணினி வல்லுநர்கள் இன்னொரு தனிக்கூடத்திலுமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இன்று அந்நிலை மாறி, நரம்பணு-மின்னணு இரு துறை அறிஞர்களும் ஒரே தளத்தில் நவீனக் கூட்டணி அமைத்து வெற்றிபெறத் தொடங்கி விட்டனர்.
  • இவர்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவான செயற்கை நரம்பியல் தகவல் பரிமாற்ற இயந்திரத்திற்குப் பயிற்சி வழங்கினால் போதும்; சொன்னதெல்லாம் செய்யும். இந்த வகையில் கலிஃபோர்னியா மாகாணத்தில் லா ஜோல்லா நகரில் என்.எஸ்.ஐ எனப்படும் நியுரோ சயின்சஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் ஏழாவது டார்வின்  என்கிற ரோபோ ஒன்றைத் தயாரித்திருக்கிறது.
மூளைத் திறன் 
  • இதில் ஒன்றரை வயதுக் குழந்தையின் மூளைத் திறன் அளவு, 20,000 மூளை செல்கள் அடக்கம் என்று கொள்ளலாம். பொதுவாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்ப இடம் அறிந்து செயல்படும் நாசூக்கான இயந்திரன். இந்த ஏழாவது டார்வினிடம் 18 செயற்கை நரம்பியல் தகவல் பரிமாற்ற அமைப்புகள் உள்ளன.
  • இதற்கிடையில், நினைவாற்றல் என்பது மூளையின் மற்றொரு அம்சம். உலக உயிரினங்களில் மனிதனால் மட்டும்தான் பேசமுடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். விலங்குகளுக்கும் மொழி உண்டு. அதிலும் செம்மீன் மொழிதான் உலகின் தொன்மொழி.
  • இன்றைய நீர்நிலைகளில் வாழும் மீன்கள் மொத்தம் 28,500; இது உலகின் மொத்த உயிரினங்களின் எண்ணிக்கையைவிட அதிகம். மீன் உணவு அறிந்த பலருக்கும் மீன் உணர்வு தெரியாது. இந்தியாவில் மீன்வள விஞ்ஞானியர் ஹிமாத்ரி குமார் முக்கர்ஜி, சுந்தர் லால் ஹோரா பற்றியும் பலருக்கும் தெரிந்திருக்காது.
ஆய்வுகள்
  • மீன்களுக்கும் மனம் உண்டு, நினைவாற்றல் உண்டு என்று ஒன்டோரியோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜேம்ஸ் கீஃபர் மற்றும் பாட்ரிக் கோல்கன் ஆகியோர் கூறியுள்ளனர். பட்டாணி அளவு மூளையை வைத்துக் கொண்டு மீன் சிந்திப்பதா என்று நினைக்கிறோம். ஆஸ்திரேலியாவில் நன்னீர் வானவில் மீன் இனம் அதிபுத்திசாலி. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வாழ்நாளில் இந்த மீன்கள் ஓர் ஆண்டேனும் எதையும் நினைவில் வைத்திருக்குமாம்.
  • ஒரு அகண்ட மீன் தொட்டியின் அடியில் ஒரு வலையில் சிறிய துவாரம் இட்டிருந்தார்கள். மீன் அந்தத் துளை வழியே வெளியேறியது. பதினோரு மாதங்கள் கழித்தும் அதே தொட்டியில் அதே வலைத் துவாரத்திற்குள் நுழைந்து வெளிவந்ததாம். நல்ல நினைவுத்திறன் என்கிறார் குலும் பிரௌன்.
  • இன்றைய நினைவுக்கோல்களில் (பென்டிரைவ்) இருந்தோ, குறுந்தகடுகளில் இருந்தோ தரவுகளை இடமாற்றுவதுபோல மூளையின் நினைவுக் கிடங்கில் இருந்து தகவல்களை மற்றொருநபருக்கு இடமாற்ற முடியுமா என்று சிந்தித்தார் டொனால்டு ஹெப் என்னும் கனடா நாட்டு உளவியலாளர். மனித மரபணு முத்துகளில் ஆர்.என்.ஏ. என்ற ரிபோநியூக்ளிக் அமில மூலக்கூறுகள் அடங்கியுள்ளன.
  • லாஸ் ஏஞ்சலிஸ்-கலிஃபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி டேவிட் எல். கிளான்ஸ்மான்  ஆர்.என்.ஏ. உதவியினால் நினைவினை இடம் மாற்ற முடியும் என்று இ-நியுரோ (மே 14, 2013) எனும் அறிவியல் இதழில் அறிவித்தார். உயிரியல் ரீதியில் கற்றலுக்கும் நினைவாற்றலுக்கும் உள்ள ஆதாரங்கள் குறித்த இதே துறையில் ஏறத்தாழ 40 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். பெரும்பாலும் எலிகளில் இத்தகைய ஆராய்ச்சிகள் நடத்தி வந்த கிளாஸ்மான்  நத்தைகளைத் தேர்வு செய்தார்.
மற்ற இனங்கள் 
  • நத்தை இனத்துக்கு உற்று அறியும் உணர்வுடன் நாச்சுவை அறிவும் உண்டு. நத்தைகளுக்கும் நினைவாற்றல் உண்டு என்பது நவீன உயிரியல் அதிசயம். ஒரு சில கடல் நத்தைகளின் வால் பகுதியினுள் மின் கம்பிகளைச் செருகி வைத்துத் தைத்தார் கிளாஸ்மான். ஒவ்வொரு 20 நிமிஷ இடைவெளியிலும் அவற்றுக்கு 5 முறை மின் தாக்குகள் கொடுத்தார்.
  • பாதுகாப்புக்கான அனிச்சைச் செயல் மூலம் அந்த நத்தைகள், மின் அதிர்ச்சியினை ஏற்கும் ஒவ்வொரு முறையும் உடலை வெட்டி அசைத்தன. அந்த நத்தைகளை வெறுமனே தட்டிக் கொடுத்தபோதும், அவை உணர்வுடன் உடலைக் குலுக்கின. மேலும், சில கடல் நத்தைகளுக்கு மின் தாக்கு அளிக்கவில்லை. அவை வழக்கம்போல மந்தமாகவே இயங்கின.
  • இப்போது, மின் தாக்குகளை ஏற்ற நத்தைகளின் ஆர்.என்.ஏ. உயிரணுக்கள் பதிக்கப்பட்ட கடல் நத்தைகள், மின் தாக்கு ஏற்காத கடல் நத்தைகள் என்ற இரு வகையிலும் 7 நத்தைகள் வீதம் பிரித்தெடுத்து, அவற்றின் உடலில் தனித்தனியே மின்சாரம் பாய்ச்சினார். ஏற்கெனவே மின் தாக்குண்ட நத்தைகள் மட்டுமே மின் தாக்கிற்குப் பதிலூட்டமாக உடலை அசைத்தன. ஏனைய நத்தைகள் எந்தவித மாற்றமும் இன்றி ஒன்றுமே நடக்காததுபோல இயல்பாகச் செயல்பட்டன. அப்படியானால் நினைவுகளைக்கூட இடம் மாற்றிப் பதியம் இட முடியும் என்னும் புதுக் கண்டுபிடிப்பு மனித வரலாற்றில் மிக முக்கியமானது.
  • 21-ஆம் நூற்றாண்டில் நரம்புச்சில்லுத் தொழில்நுட்பம் பற்றிய ஆராய்ச்சி அதிகரித்து வருகிறது. உயிருள்ள மனிதனுக்கும் உயிரற்ற இயந்திரங்களுக்கும் இடையே புதிய உறவு இது. மின்னணு சாதனங்களாலும் மருந்துகளாலும் அடுத்த 100 ஆண்டுகளில் நம் மூளை நிச்சயம் நாம் யாரும் சிந்திக்காத புது வடிவில் வேறு மாதிரி மாறக் கூடும். ஒருவரின் ஆளுமையும் சுபாவமும், நடத்தையுமே பாதிக்கப்படக் கூடும். அப்புறம் என்ன, புவிசார்ந்த இன, மொழி, மத அடிப்படையிலான மனித சித்தாந்தங்களே மாறக்கூடும்தானே?

நன்றி: தினமணி (30-05-2019) 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்