TNPSC Thervupettagam
June 11 , 2024 215 days 244 0
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவை பதவி ஏற்றிருக்கிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் 71 அமைச்சர்களின் இலாகாக்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைகிறது என்பதுதான் புதிய திருப்பம்.
  • கூட்டணிக் கட்சிகளுக்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. முந்தைய அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை வகித்த பெரும்பாலான அமைச்சர்களுக்கு மீண்டும் அவர்கள் வகித்த துறைகளே வழங்கப்பட்டிருக்கின்றன.
  • பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அமைச்சரவையில் இணைந்திருக்கிறார். நரேந்திர மோடியின் முதலாவது அமைச்சரவையில் அவர் வகித்த சுகாதாரத் துறை அவருக்கு மீண்டும் வழங்கப்பட்டிருக்கிறது.
  • முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 37 அமைச்சர்கள் இப்போதைய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. அவர்களில் 18 பேர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்.
  • புதிய அமைச்சரவையில் 33 பேர் புதுமுகங்கள். பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 10}இலிருந்து 7-ஆக குறைந்திருக்கிறது. உத்தர பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. தென் மாநிலங்களின் சார்பில் 13 அமைச்சர்கள் இணைந்திருக்கிறார்கள்.
  • ஊடகங்களில் பரப்பப்பட்ட வதந்திகளைப் பொய்யாக்குவதாக அமைந்திருக்கிறது கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசத்துக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் வழங்கப்பட்டிருக்கும் ஒதுக்கீடுகள். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சந்திரபாபு நாயுடு குறைவான பிரதிநிதித்துவத்துக்கு எப்படி ஒப்புக்கொண்டார் என்பது ஆச்சரியப்படுத்துகிறது. மகாராஷ்டிரத்தில் சிவசேனை (ஷிண்டே) பிரிவும் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸýம் அமைச்சரவை ஒதுக்கீடு குறித்த அதிருப்தியை எழுப்பியிருப்பது வியப்பை ஏற்படுத்தவில்லை.
  • இளைஞரான லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வானுக்கு கேபினட் அந்தஸ்தும், மற்றொரு கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரீய லோக் தள தலைவர் ஜெயந்த் செüதரிக்கு தனிப் பொறுப்புடனான இணை அமைச்சர் பதவியும் வழங்கியிருப்பது வரவேற்புக்குரியது. அமைச்சரவையில் அனுராக் சிங் தாக்குர் ஏன் இடம்பெறவில்லை என்பது புதிராக இருக்கிறது. 79 வயதான ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன்ராம் மாஞ்சி கேபினட் அமைச்சராக இணைந்திருப்பது புருவம் உயர்த்த வைக்கிறது.
  • புதிய அமைச்சரவை, அதிலும் கூட்டணி அமைச்சரவை அமையும்போது அதில் மிகப் பெரிய மாற்றங்களை பிரதமர் ஏற்படுத்தக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு பொய்த்திருக்கிறது. மூத்த அமைச்சர்கள் பலருடைய இலாகாக்கள்கூட மாற்றப்படாமல் தொடர்வதன்மூலம் முந்தைய ஆட்சியின் நீட்சியாகத்தான் இந்த ஆட்சி இருக்கும் என்கிற சமிக்ஞையை பிரதமர் வழங்க முற்படுகிறார். தேர்தல் பின்னடைவின் தாக்கத்தை அமைச்சரவை மாற்றத்தின் மூலம் கவனத் திருப்பம் செய்யும் முயற்சியில் பிரதமர் ஈடுபடாதது ஏன் என்று தெரியவில்லை.
  • கூட்டணி ஆட்சி அமைந்திருப்பதால் அரசின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும் என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்பு. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் முந்தைய இரண்டு ஆட்சிகளிலும் முன்மொழியப்பட்ட கொள்கை முடிவுகளும், முன்னெடுக்கப்பட்ட திட்டங்களும் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடரும் என்றுதான் தோன்றுகிறது.
  • கூட்டணி ஆட்சி அமைந்திருப்பதால் அடிப்படையான சில விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும் என நினைத்தால் தவறு. எடுத்துக்காட்டாக, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் எந்தவித மாற்றமும் இருக்காது. அமெரிக்கா குறித்த அணுகுமுறை, சீனாவுடனான உறவு, ரஷியாவின் நெருக்கம், பாகிஸ்தான் குறித்த கண்ணோட்டம் ஆகியவற்றில் எந்தவித மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை. அண்டை நாடுகளுடனான இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் இருக்காது என்பதை வெளிப்படுத்துகிறது அமைச்சரவை பதவியேற்பில் பாகிஸ்தான் இதர ஏனைய அண்டை நாடுகள் இடம்பெற்ற காட்சி.
  • வெளியுறவைப் போலவே இந்தியாவின் பாதுகாப்பிலும் எந்தவித மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை. பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்த இந்தியாவிலேயே தளவாடங்களை உற்பத்தி செய்யும் திட்டம் தொடரும். இந்தியாவில் தளவாட உற்பத்தி ஊக்கம் பெறுவதுடன், ராணுவத் தளவாட ஏற்றுமதியிலும் முன்பு போலவே முனைப்புக் காட்டப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
  • நிதி அமைச்சகம் தொடர்பான கொள்கை முடிவுகளும் இந்தியாவின் பொருளாதார கொள்கைகளும் ஏற்றுமதி}இறக்குமதி கொள்கைகளும் எந்தவித மாற்றமும் இல்லாமல் முன்பு போலவே தொடரும். நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமனும் வர்த்தகத் துறை அமைச்சராக பியூஷ் கோயலும் தொடர்கிறார்கள் என்பது அதை உறுதிப்படுத்துகிறது.
  • ஜம்மு}காஷ்மீர், சாலை கட்டமைப்பு, சமூக நலத்திட்டங்கள், எண்ம இந்தியா திட்டம், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட சுகாதார அமைச்சகத்தின் முனைப்புகள் என்று பெரும்பாலான முந்தைய அரசின் திட்டங்களில் எந்தவித மாற்றமும் இருக்காது. அதே நேரத்தில் சில கொள்கை முடிவுகளும் திட்டங்களும் கூட்டணி நிர்பந்தம் காரணமாகவும், எண்ணிக்கை பலமின்மை காரணமாகவும் கைவிடப்படும் அல்லது கிடப்பில் போடப்படும் சூழலைத் தவிர்க்க முடியாது.
  • ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், அக்னிவீர் திட்டம், தொகுதி மறுசீரமைப்பு, அயோத்தியைப் போலவே காசி, மதுராவில் கோயில் கட்டுவது போன்றவை பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சியில் நிறைவேறும் சாத்தியம் கிடையாது. பிரச்னைகளை எழுப்பாத வரை பிரச்னை இல்லாமல் இந்த ஆட்சி தொடரும்!

நன்றி: தினமணி (11 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்