நலமிழக்கிறதா நம் பூமி?
- மனித வரலாற்றில் முதல் முறையாகப் பூமியின் நலத்தை விரிவாக ஆராய்ந்து ‘புவி நலன் சோதனை அறிக்கை’ (Planetary Health Check Report) என்ற தலைப்பில் ஒரு விரிவான அறிக்கையை ஓர் ஆய்வுக் குழுவினர் தயாரித்திருக்கிறார்கள். போட்ஸ்டாம் காலநிலை தாக்க ஆராய்ச்சிக் கழகத்தைச் (Potsdam Institute for Climate Impact Research) சேர்ந்த யோஹான் ராக்ஸ்ட்ரோம் என்கிற அறிவியலாளரின் தலைமையில் இந்த சர்வதேச ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன.
காத்திருக்கும் விபரீதம்:
- 11,700 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய ஹோலோசீன் காலக்கட்டத்தில் தட்பவெப்பமும் பொதுவான சூழலும் ஓரளவு நிலையானதாக இருந்தன. இந்தக் காலக்கட்டத்தில் நவீன வேளாண்மையும் நாகரிகங்களும் உருவாகி வளர்வதற்கான சரியான சூழலும் நிலவியது. சுற்றியிருக்கும் இயற்கைக்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாமலேயே மனித இனம் முன்னேறுவதற்கு ஏதுவானதாக ஹோலோசீனின் சூழல் இருந்தது.
- இந்த ஹோலோசீனின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு புவிக்கான எல்லை (Planetary Boundary) என்கிற கருத்தாக்கத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். எல்லைக்கு உட்பட்டுச் செயல்பட்டால் பூமி சீராக இயங்கும். இந்த எல்லையைக் கடந்துவிட்டால் சுற்றுச்சூழலுக்கான பாதிப்பு கட்டுக்கடங்காமல் போய்விடும்.
- மொத்தம் ஒன்பது புவிக்கான எல்லைகளை அறிவியலாளர்கள் ஏற்கெனவே வகுத்திருந்தார்கள். யோஹான் ராக்ஸ்ட்ரோம் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் இந்த எல்லைகளின் அளவை விரிவாக ஆராய்ந்திருக்கின்றனர். ஒன்பது எல்லைகளில் ஆறு எல்லைகளை ஏற்கெனவே கடந்துவிட்டோம் என்றும், மீதமிருக்கும் மூன்று எல்லைகளிலும் ஓர் எல்லையை விரைவில் எட்டிவிடுவோம் என்றும் இவர்களது அறிக்கை தெரிவிக்கிறது.
- காலநிலை மாற்றம், உயிர்க்கோளத்தின் ஒழுங்கு, நில அமைப்பின் மாறுபாடு, நன்னீர் மாறுபாடு, உயிர் வேதியியல் போக்கின் மாறுபாடு, புதிய கூறுகளின் அறிமுகம் ஆகிய ஆறு எல்லைகளை நாம் இப்போதே கடந்துவிட்டோம்.
தொடரும் தவறுகள்:
- காலநிலை மாற்றம் மிகவும் மோசமான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரித்திருக்கிறது. பூமியில் உள்ள மொத்த உயிர்களின் தொகுப்பு உயிர்க்கோளம் என்று அழைக்கப்படுகிறது. உயிரினங்கள் அழிதல், வாழிட அழிப்பு போன்றவற்றால் உயிர்க்கோளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. உயிர்க்கோளத்தின் மீண்டெழும் ஆற்றல் குறைந்தபடியே இருக்கிறது.
- நகரமயமாக்கல், காடழிப்பு ஆகியவற்றால் இயற்கையான நிலப்பரப்புகள் தொடர்ந்து மாற்றப்பட்டுவருகின்றன. நிலத்தால் பூமிக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகளும் குறைந்தபடியே இருக்கின்றன. நீர்ச் சுழற்சி மாறிவிட்டது, இது நன்னீரையும் மாற்றியமைத்திருக்கிறது. பூமியில் சீராக இருந்துவந்த நைட்ரஜன், பாஸ்பரஸ் சுழற்சிகள் மாறுபட்டிருக்கின்றன. இது வேதிப்பொருள்களின் சமநிலையைக் குலைத்திருக்கிறது.
- ‘புதிய கூறுகளின் அறிமுகம்’ என்பது, இயற்கையாக ஓர் இடத்தில் இல்லாத எல்லாப் பொருள்களையும் குறிக்கிறது. கதிரியக்கம் கொண்ட பொருள்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரிகள், செயற்கை வேதிப்பொருள்கள், பரிணாமத்தில் நாம் நேரடியாக ஏற்படுத்தும் மாற்றத்தால் வரும் பொருள்கள் ஆகியவை இதில் அடங்கும். இதுபோன்ற பல கூறுகள் நாள்தோறும் இயற்கையிடம் சென்றுசேர்கின்றன. ஆகவே, இந்தப் பொருள்களுக்கான உச்சவரம்பையும் நாம் தாண்டிவிட்டோம்.
மனிதச் செயல்பாடுகள்:
- இதில் இன்னொரு கவலைக்குரிய அம்சம், அபாயக்கட்டத்தைத் தாண்டிய பிறகும் இந்த ஆறு உச்சவரம்புகள் மீதான பாதிப்பும் தொடர்ந்தபடி இருப்பதுதான். உதாரணமாக, உயிர்க்கோளத்தின் எல்லையை வகுப்பதற்கான ஒரு முக்கிய அலகு முதன்மை உற்பத்தித் திறன் (Primary Productivity) என்பதாகும்.
- அதிலும் குறிப்பாக, மனிதச் செயல்பாடுகளால் இது எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறது என்பது கவனிக்கப்படும். சராசரியாக, உலகின் மொத்த முதன்மை உற்பத்தித் திறனில் 10 சதவீதம் அளவுக்கு மட்டுமே மனிதப் பாதிப்பு அனுமதிக்கப்படும். ஆனால், அந்த உச்சவரம்பு எப்போதோ எட்டப்பட்டுவிட்டது. அது மட்டுமல்ல, ஆண்டுதோறும் இது அதிகரித்தபடியும் இருக்கிறது. 2000ஆம் ஆண்டில் 22 சதவீதமாக இருந்த இது, 2020க்குள் 30 சதவீதத்தைத் தொட்டிருக்கிறது.
- மேலே இருக்கும் ஆறு எல்லைகளைத் தவிர, ஸ்டிராட்டோஸ்பியர் எனப்படும் வளிமண்டல அடுக்கில் இருக்கும் ஓசோன், வளிமண்டலத்தில் சேரும் ஏரோசால் கூறுகள், கடல்நீர் அமிலமாதல் ஆகிய மூன்றும் இப்போதைக்குக் கட்டுக்குள் இருக்கின்றன. இவற்றுள் கடல்நீர் அமிலமாதலுக்கான உச்சவரம்பை நாம் விரைவிலேயே தொட்டுவிடுவோம் என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது.
மீளவியலாப் புள்ளி:
- புவிசார் அறிவியலில் மீளவியலாப் புள்ளி (Tipping point) என்ற ஒரு கருத்தாக்கமும் உண்டு. சில நிகழ்வுகள் ஏற்படும்போது, அடுத்து மீண்டுவரவே முடியாத அளவுக்கு அந்தச் சூழல் சீர்குலைந்துவிடும். இவற்றையே மீளவியலாப் புள்ளி என்பார்கள். உதாரணமாக, ஒரு வெடியில் இருக்கும் திரியை நீங்கள் பற்றவைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பற்றவைத்த உடனே வெடி வெடிக்காது. திரியில் அந்த நெருப்பு பயணிக்கும்.
- வெடிக்கு அருகில் வந்தபிறகுதான் அதற்கான வேதிவினை தொடங்கும். திரியில் நெருப்பு பற்றிக்கொண்டிருக்கும்போது, எந்த நொடியிலும் நாம் அதை அணைக்கலாம், வெடிக்காமல் தடுக்கலாம். ஆனால், வெடிக்கு அருகில் நெருப்பு வந்து வேதிவினை தொடங்கிய பின்னர் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. மீளவியலாப் புள்ளி என்பது கிட்டத்தட்ட அப்படியானதுதான். ஒரு சூழல் அந்த நிலைக்கு வந்துவிட்டால் அதை மீட்டெடுப்பது கடினமானது.
- புவிக்கான எல்லைகளும் மீளவியலாப் புள்ளிகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும் சொல்லும் ஆய்வுக் குழுவினர், புவிக்கான எல்லைகள் கடக்கப்படும்போது அந்தச் சூழல் மீளவியலாப் புள்ளியை நோக்கி வேகமாகப் பயணிக்கும் என்று எச்சரிக்கின்றனர்.
- புவிக்கான ஒவ்வொரு எல்லைக்கும் தொடர்புடைய மீளவியலாப் புள்ளிகள் இருக்கின்றன என்றும், இவற்றையும் நாம் கவனிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். காலநிலையைப் பொறுத்தவரை நாம் ஏற்கெனவே புவிசார் மீளவியலாப் புள்ளிகள் பலவற்றைக் கடந்துவிட்டோம் என்று அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் புவிக்கான எல்லை குறித்த தற்போதைய அறிக்கை கவலையளிப்பதாக இருக்கிறது.
நல்ல மாற்றமா?
- கடல்நீர் அமிலமாதலைப் பொறுத்தவரை ஆர்க்டிக், தெற்குக் கடல் பகுதிகளில் பல இடங்களில் உச்சவரம்பு எட்டப்பட்டிருக்கிறது என்றும், விரைவிலேயே இது உலகளாவிய பிரச்சினையாக மாறும் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
- “புவியின் முக்கியமான உயிர் அறிகுறிகள் பலவீனமடைந்து வருகின்றன. இது மீண்டெழும் தன்மையைக் குறைக்கும். மீண்டு வரவே முடியாத ஒரு நிலைக்கும் இது பூமியைத் தள்ளக்கூடும். புவி மாறிக்கொண்டிருக்கிறது, ஆனால், அது நல்ல மாற்றமல்ல, மோசமான பாதையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றம்” என்கிறார் ஆராய்ச்சியாளர் லெவ்கே சீசர். நாம் நினைத்ததைவிடவும் புவியின் வெவ்வேறு கூறுகள் எவ்வளவு இறுக்கமாக, நுணுக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் இந்த அறிக்கை தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறது.
- காலநிலை, சூழலியல் சார்ந்த முக்கியமான பல சர்வதேசக் கூட்டங்கள் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கின்றன. அவற்றிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு முடிவும் இதுபோன்ற அறிக்கைகளை மனதில் வைத்துக்கொண்டு எடுக்கப்பட வேண்டும். அறிவியல் ரீதியான, எதிர்காலத்தை முன்வைத்து எடுக்கப்படும் அப்படிப்பட்ட முடிவுகளே சமகாலத்தின் முக்கியத் தேவை.
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 10 – 2024)