TNPSC Thervupettagam

"நல்லது நடக்குமா?'

August 12 , 2019 1978 days 715 0
  • உலகில், மிக  அதிகமான எதிர்ப்புகளையும் ஏளனங்களையும் இழப்புகளையும் கொடுமைகளையும்  சந்தித்த இனங்களுள் ஒன்று  யூதர்கள் இனம். ஆனால், கடும் உழைப்பு, ஒற்றுமை, விடாமுயற்சி, நம்பிக்கை , உலக நாடுகளுக்கு தங்களது பிரச்னைகளை எடுத்துச் சொல்லி ஆதரவு திரட்டும் சாதுர்யம் போன்றவற்றால் பல இடையூறுகளைத் தாண்டி இன்று மிக உயரிய இடத்துக்கு வந்திருக்கின்றனர்.
  • ஜெர்மனியில் யூதர்கள் அடைந்த துன்பங்களுக்கு அளவே இல்லை. உலகப் போருக்கு முன்னர் ஜெர்மனியின் ஆட்சியை  நாஜியினர் பிடித்தனர். நாஜியினரிடம் மக்களும் ஏராளமான எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
  • ஆனால், ஜெர்மனியின் சங்கடங்களுக்கெல்லாம் யூதர்கள் முக்கியக் காரணம் என்று நாஜிக்கள் கூறத் தொடங்கினர். யூதர்கள் ஒடுக்கப்பட்டால், அழிக்கப்பட்டால் , ஜெர்மனி வளம் பெறும் என்று கூறினர் . தங்களது இனம் உலகின் மிக உயர்ந்த இனம் என்று கூறினர்;  "தேவதூதன்' என்ற நிலைக்கு சர்வாதிகாரி  ஹிட்லர் உயர்த்தப்பட்டார்.
  • யூதர்களுக்கு எதிரான  "ஹோலோகாஸ்ட்' என்னும் நடைமுறை செயலுக்கு வந்தது. அவர்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டது . அவர்களுக்குரிய வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டு  விரட்டியடிக்கப்பட்டனர். யூதர்களின் ஆலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அவர்களது கடைகள் , உடைமைகள் சூறையாடப்பட்டன.
  • யூதர்களுக்கு வதை முகாம்கள் உருவாக்கப்பட்டன. ஜெர்மனியில் சுமார் 40,000 வதை முகாம்களும், முழுமையாக அழிப்பதற்கென்றே முகாம்களும் உருவாக்கப்பட்டன. பசியாலும் பிணியாலும், கடும் வேலையினாலும், சித்ரவதையினாலும் ஜெர்மனியிலிருந்த 70 சதவீத யூதர்கள் இறந்தனர். சிலரே உயிர் பிழைத்தனர்; வேறு சிலர் நாடு கடந்து ஓடிப் பிழைத்தனர். யுத்தத்தில் ஜெர்மனி தோல்வி அடைந்து  ஹிட்லர் தற்கொலை செய்து மாண்டார்.
ஜெர்மனியின் தோல்வி
  • ஜெர்மனியின் தோல்விக்குப் பின்னர், அங்கு சர்வாதிகாரம் நீங்கி ஜனநாயக ஆட்சி ஏற்பட்டது . ஆட்சி பொறுப்பேற்றவர்களும், மக்களும்  யூதர்களுக்கு ஜெர்மனி இழைத்த கொடுமைகளுக்கு வெட்கப்பட்டனர்; 1970-இல்  யூதர்கள் சமாதிகள் முன் பிரதமர் வில்லி பிராண்ட் மண்டியிட்டு மன்னிப்பு கோரினார். 
  • உலகப் போர் முடிவில், இஸ்ரேல் எனும் தனி தேசம் உருவானது; அது மட்டுமின்றி, யூதர்களின் உலகம் தழுவிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது; "கிளைம்ஸ் காஃன்பரன்ஸ்' என்ற அந்த அமைப்பு,  யூதர்களுக்கு  ஜெர்மனி அரசு இழைத்த கொடுமைகளுக்கு இழப்பீடு  தர வேண்டும் என்று வலியுறுத்தியது.
  • நாஜிக்காரர்களால் பாதிக்கப்பட்ட யூதர்களுக்கு, நிவாரணம்- மறுசீரமைப்பு- மீள்குடியேற்றம் போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும் என்ற அறைகூவல், ஏனைய உலக நாடுகளால் ஆதரிக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைகளை ஜெர்மனியின் தலைவர் கொன்ராட் அடெனார் கொள்கையளவில்  ஏற்றுக் கொண்டார். 
  • அரசாங்கங்கள், பொதுவாக மற்றொரு அரசாங்கத்துடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தும். ஆனால்,  ஓர் இன மக்களின் கூட்டமைப்புடன் ஜெர்மனி அரசு  பேச்சுவார்த்தை நடத்தியது. சில ஆண்டுகள் நடைபெற்ற  பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில்  ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • ஒப்பந்தத்தின் அடிப்படையில், உயிரிழந்த யூதர்களின்  குடும்பங்களுக்கும், உடல் உறுப்புகளை இழந்தோருக்கும் 10 ஆண்டுகளுக்குள் கணிசமான தொகையினை இழப்பீடாக அளிக்க ஜெர்மனி அரசு ஒப்புக்கொண்டது. ஜெர்மனியிலிருந்து அயல் நாடுகளுக்கு தப்பியோடிய யூதர்கள் சுமார் ஏழரை லட்சம் பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.
ஒருங்கிணைப்பு
  • ஜெர்மனியின் ஒருங்கிணைப்புக்குப் பின்னர், முந்தைய கிழக்கு ஜெர்மனியிலிருந்து பாதிக்கப்பட்ட யூதர்களுக்கும் இழப்பீடு தரப்பட்டது. வேறு சிலருக்கு, மாதந்தோறும்  உதவித் தொகை இன்னமும் வழங்கப்பட்டு வருகிறது.
    இவ்வாறாக, 32 பில்லியன் டாலர் (சுமார் ரூ.2.27 லட்சம் கோடி) இதுவரை இழப்பீடு தரப்பட்டிருக்கிறது. இன்னமும், ஒவ்வொரு ஆண்டும்   நிவாரணக்  குழுவுடன் ஜெர்மனி அரசு பேசி, கணிசமான தொகையை எந்தவொரு சுணக்கமும் இன்றி வழங்கிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் அன்றைய  நாஜி அரசின் குற்றங்களுக்கு, இன்றைய ஜெர்மனி அரசு அனுபவிக்கும் தண்டனை என்றே கருத வேண்டும். 
  • யூதர்கள் பட்ட இன்னல்களை  நோக்கும்போது, இலங்கையைச் சேர்ந்த தமிழின மக்கள் பட்ட துன்பங்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் எந்த விதத்திலும் யூதர்களின்  துன்பங்களுக்கு குறைந்ததல்ல. 
  • பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டும் , உறுப்புகளை இழந்தும், உரிமைகளையும் உடைமைகளையும் இழந்தும்  பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தங்களது உயிரைக் காத்துக்கொள்ள பல நாடுகளுக்கு பலர் அகதிகளாக இடம்பெயர்ந்து சிரமப்பட்டு வருகின்றனர்.
சரியான தகவல்
  • போரின்போது வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்கள், கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், இன்னமும் சிறையில் இருப்பவர்கள் குறித்த யாதொரு சரியான தகவலும் கிடைக்காமல், அவர்களது  பெற்றோர் பெரும் அவலத்துக்குள்ளாகியிருப்பது இன்னமும் தொடர்கதை. 
  • இழைத்த துன்பங்களுக்காக இலங்கை அரசு மன்னிப்பு கோரவில்லை. கொடுமைகள் இழைக்கப்பட்டதாகவோ, பல அப்பாவிகள் இறந்ததாகவோ ஒப்புக்கொள்ளவும் இல்லை. பறிக்கப்பட்ட உரிமைகள், நிலங்கள்  மீண்டும் வழங்கப்படவும் இல்லை. இழப்பீடு , புனரமைப்பு, மறுவாழ்வு, நிவாரணம் போன்ற திட்டங்கள் ஏட்டளவில்கூட இல்லை.  
  • யூதர்களுக்கு ஜெர்மனி  அரசால் வழங்கப்பட்டது போன்ற நிவாரணமும், நிம்மதியும் இலங்கைத் தமிழர்களுக்கு இனியாவது   கிடைக்குமா? நல்லது  நடக்கும் என  நம்புவோம்.
நன்றி: தினமணி(12-08-2019)

 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்