TNPSC Thervupettagam

நல்ல முன்னுதாரணம் ஜெகன்மோகன் ரெட்டி

June 17 , 2019 2035 days 999 0
  • ஆந்திரத்தின் மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் அரசியலுக்குப் புத்துயிர் கொடுத்திருக்கிறார் அவருடைய மகனும் புதிய முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி. சமூகநலத் திட்டங்களின் வழி தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்டிக்கொண்டவர் ராஜசேகர ரெட்டி. சமூகநலத் திட்டங்களுடன் சமூகங்களின் பிரதிநிதித்துவத்துக்கும் சேர்த்துத் தன்னுடைய அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்ற சமிக்ஞையை அனுப்பியிருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி.
துணை முதல்வர்
  • ஐந்து வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களைத் துணை முதல்வர்களாக ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருப்பது ஒட்டுமொத்த இந்தியாவும் கவனிக்க வேண்டிய ஒரு முன்னுதாரணம். கே.நாராயண சுவாமி (தலித்), பாமுல புஷ்பா ஸ்ரீவாணி (பழங்குடி), பில்லி சுபாஷ் சந்திரபோஸ் (செட்டி பலிஜா), அம்ஜத் பாஷா (முஸ்லி), அல்ல காலி கிருஷ்ண ஸ்ரீனிவாஸ் (காப்பு) ஆகிய ஐவரையும் அவர் துணை முதல்வர்களாக்கி இருப்பது அனைத்துத் தரப்பினருடனும் தனக்கிருக்கும் செல்வாக்கைக் காட்டும் வகையிலும், அனைத்துத் தரப்பினரையும் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் வகையிலுமான அரசியல் உத்தியாக மட்டுமே பார்த்துவிட முடியாது.
  • அதிகாரப் பரவலாக்கல் நோக்கி எடுத்துவைக்கப்பட்டிருக்கிற மிகப் பெரிய முன்னெடுப்பு இது. முந்தைய அரசிலும்கூட இரண்டு துணை முதல்வர்களை நியமித்திருந்தார் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஆனால், அது வெறும் அரசியல் அடையாளத்துக்கான முயற்சியாக மட்டுமே இருந்தது. அதிகாரமற்ற பதவிகளை வகிப்பவர்களாக இவர்கள் மாறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; அதுதான் ஜெகன்மோகன் ரெட்டி முன்னுள்ள சவால்.
உள்துறை
  • ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் பாராட்ட வேண்டிய இன்னொரு அம்சம், முக்கியத்துவம் மிக்க உள்துறை அமைச்சகத்தை மேகதோட்டி சுசரிதா என்ற தலித் பெண்ணுக்கு அளித்திருப்பது; அடையாள நிமித்தமாக அமைச்சர் பதவி வழங்குவது - அதிகாரம் அற்ற துறைகளை ஒதுக்குவது என்ற வழமையான அரசியலிலிருந்து வேறுபட்டு இயங்கப்போவதை வெளிப்படுத்தும் முயற்சி இது. இந்திய அரசியலில் அதிகாரம் என்பது அந்தந்த மாநிலங்களில் செல்வாக்கு மிக்க சாதிகளின் கைகளிலேயே பெருமளவில் இருக்கிறது. எந்த ஒரு கட்சிக்கு மக்கள் இணைந்து வாக்களித்தாலும், பதவிகள் என்று வரும்போது பிரதிநிதித்துவத்தில் ஏற்ற இறக்கம் காணப்படுவது இங்கு இயல்பாக இருக்கிறது.
  • மேலும், யாரோ ஒரு தரப்பினரை வெளியே தள்ளி ஏனையோரை ஒருங்கிணைப்பது என்பதும் இன்றைய அரசியலில் புதிய பாணி ஆகிவருகிறது. ஜெகன்மோகன் ரெட்டியினுடைய அரசியலில் மிகுந்த பாராட்டுக்குரிய அம்சம் என்னவென்றால், அவருடைய அரசியல் எல்லாச் சமூகங்களையும் உள்ளடக்கும் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது என்பதுதான். இந்தியா முழுமையும் உள்ள அரசியல்வாதிகள் ஜெகன்மோகன் ரெட்டியின் முன்னுதாரணத்தைப் பின்பற்ற முயற்சிக்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (17-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்