TNPSC Thervupettagam

நவீன இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் – V

August 15 , 2019 1970 days 8352 0

விண்வெளித் திட்டங்கள் – II

செயற்கைக் கோள்களின் வகைகள்

  • விண்வெளிப் பயணத்தின் சூழலில், செயற்கைக்கோள் என்பது சில குறிப்பிட்ட தேவைகளுக்காக ஒரு சரியான நோக்கத்துடன் விண்வெளி சுற்றுப்பாதையில் வைக்கப்படும் ஒரு பொருளாகும்.
  • பூமியின் சந்திரன் போன்ற இயற்கை துணைக் கோள்களிலிருந்து இவற்றை வேறுபடுத்திக் காட்டுவதற்காக இவை மனிதரால் உருவாக்கப்பட்ட செயற்கையான துணைக் கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • பின்வரும் செயற்கைக் கோள்கள் அவற்றின் பயன்பாட்டின் அடிப்படையில் வகைப்படுத்தப் பட்டுள்ளன.

I.தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள்

  • இந்திய தேசிய செயற்கைக் கோள்கள் (இன்சாட்) அமைப்பானது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய உள்நாட்டு தகவல் தொடர்பு செயற்கைக் கோள் அமைப்புகளில் ஒன்றாகும். இது புவிநிலை சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஒன்பது செயல்படும் தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களைக் கொண்டுள்ளது.

  • இன்சாட் 1B-ஐ செயல்நிலைப் படுத்தியதன் மூலம் 1983 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பானது இந்தியாவின் தகவல் தொடர்புத் துறையில் ஒரு பெரிய புரட்சியைத் தொடங்கி பின்னர் அதனைத் தக்க வைத்துக் கொண்டது.

II. புவிக் கண்காணிப்பு செயற்கைக் கோள்

  • 1988 ஆம் ஆண்டில் IRS-1A உடன் தொடங்கி இதுவரை பல்வேறு செயல்பாட்டுத் தொலையுணர் செயற்கைக் கோள்களை இஸ்ரோ செலுத்தியுள்ளது.
  • இன்று இந்தியாவானது மிகப்பெரிய செயல்படும் தொலையுணர் செயற்கைக் கோள் குழுவை கொண்டுள்ளது.
  • தற்போது ரிசோர்ஸ்சாட் – 1 & 2; கார்டோசாட் 1, 2, 2A & 2B; ரைசாட் – 1 & 2; ஓஷன்சாட் – 2; மேகா-ட்ரோபிக்ஸ் மற்றும் சாரல் ஆகிய 11 செயல்படும் செயற்கைக் கோள்கள் சுற்றுவட்டப் பாதையில் உள்ளன.

  • நாட்டில் உள்ள பல்வேறு பயனாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் உலகளாவிய பயன்பாட்டிற்காகவும், பன்முகப் படுத்தப்பட்ட, இடம் சார்ந்த, நிரந்தர மற்றும் தற்காலிக தெளிவுத் திறன்களில் தேவையான தரவினை வழங்குவதற்காக இந்த செயற்கைக் கோள்களில் பலவிதமான கருவிகள் இணைக்கப் பட்டுள்ளன.
  • இந்தச் செயற்கைக் கோள்களின் தரவுகளானது வேளாண்மை, நீர்நிலை வளங்கள், நகர்ப்புற திட்டமிடல், கிராமப்புற மேம்பாடு, கனிம ஆய்வுகள், சுற்றுச்சூழல், வனவியல், பெருங்கடல் வளங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய பல பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப் படுகின்றன.
  1.   சோதனை செயற்கைக் கோள்
  • இஸ்ரோ பல சிறிய செயற்கைக் கோள்களை முக்கியமாக ஆய்வு நோக்கங்களுக்காக செலுத்தியுள்ளது.
  • இந்த ஆய்வுகளில் தொலையுணர்தல், வளிமண்டல ஆய்வுகள், ஆய்வுப் பொருள் மேம்பாடு, சுற்றுவட்டப் பாதை கட்டுப்பாடுகள், மீட்பு தொழில்நுட்பங்கள் மற்றும் பல ஆய்வுகள் அடங்கும்.
  1.    இடங்காட்டி செயற்கைக் கோள்
  • உள்நாட்டு விமானப் பயணங்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய சர்வதேச புவியிடங்காட்டி உதவி பெறும் புவி மேம்படுத்தபட்ட இடங்காட்டி (ககன்) அமைப்பை இந்திய விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து இஸ்ரோ செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றது.
  • உள்நாட்டுத் தயாரிப்பிலேயே நிலைப்படுத்துதல், இடங்காட்டுதல் மற்றும் நேர சேவைகள் போன்ற பயனர் தேவைகளைப் பூர்த்தி செய்ய, பிராந்திய செயற்கைக் கோள் இடங்காட்டி அமைப்பு என்றழைக்கப்படும் இந்திய பிராந்திய இடங்காட்டி செயற்கைக் கோள் அமைப்பை (IRNSS) இஸ்ரோவானது நிறுவிக் கொண்டு இருக்கின்றது.

(i) ககன்

  • இது இந்திய விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து கூட்டாக செயல்படுத்தப்பட்ட செயற்கைக் கோள்கள் அடிப்படையிலான மிகைப்படுத்தும் அமைப்பாகும்.
  • ஒருங்கிணைக்கப்பட்ட செயற்கைக் கோள் அடிப்படையிலான இடங்காட்டி சேவைகளை துல்லியத் தன்மையுடன் பொது விமானப் பயன்பாடுகளுக்கு வழங்குவதும் இந்திய விண்வெளியில் சிறந்த போக்குவரத்து நிர்வாகத்தை வழங்குவதும் ககனின் முக்கிய நோக்கங்களாகும்.

  • பிராந்திய எல்லை கடந்த தடையற்ற இடங்காட்டுதலை வழங்குகின்ற இந்த அமைப்பானது பிற சர்வதேச செயற்கைக் கோள்கள் அடிப்படையிலான மிகைப்படுத்தும் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து இயங்கக் கூடியதாக இருக்கும்.
  • விண்வெளியில் ககன் அமைப்பிற்கான சமிக்ஞையானது GSAT – 8 மற்றும் GSAT- 10 ஆகிய செயற்கைக் கோள்களிலிருந்து கிடைக்கின்றது.

(ii) இந்திய பிராந்திய இடங்காட்டி செயற்கைக்கோள் அமைப்பு (IRNSS)

  • இது முக்கியமான தேசிய பயன்பாடுகளுக்காக இந்திய செயற்கைக் கோள் அடிப்படையில் நிலைப்படுத்துதலை மேற்கொள்ளும் ஒரு தன்னிச்சையான அமைப்பாகும்.
  • இந்தியா மற்றும் அதன் அண்டைப் புறங்களில் உள்ள பயனர்களுக்கு மிக துல்லியத் தன்மையுடன் நம்பகமான நிலை, இடங்காட்டுதல் மற்றும் நேர சேவைகளை வழங்குதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.

  • இது பொதுவான இரண்டு வகையான சேவைகளை வழங்கும்.
    • நிலையான நிலைப்படுத்துதல் சேவை
    • கட்டுப்படுத்தப்பட்ட சேவை
  1.    அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு
  • இந்திய விண்வெளித் திட்டமானது, வானியல், வானியற்பியல், கோள் மற்றும் புவி அறிவியல், வளிமண்டல அறிவியல் மற்றும் தத்துவார்த்த இயற்பியல் ஆகிய பகுதிகளில் ஆய்வை உள்ளடக்கியது.
  • பலூன்கள், ஆய்வு விண்கலன்கள், விண்வெளித் தளங்கள் மற்றும் தரைசார் ஆய்வக வசதிகள் ஆகியவை இந்த ஆய்வு முயற்சிகளை ஆதரிக்கின்றன.
  • வளிமண்டல சோதனைகளுக்கு என்று தொடர்ச்சியான ஆய்வு விண்கலன்கள் உள்ளன.
  • பல அறிவியல் ஆய்வுக் கருவிகள் குறிப்பாக X-கதிர்கள், காமா கதிர் வெடிப்புகளை கண்டறிவதற்கென செயற்கைக் கோள்களில் பொருத்தப்பட்டு அனுப்பப் பட்டுள்ளன.

 இந்திய விண்வெளித் திட்டத்தின் முக்கிய மைல்கற்கள்

  • திருவனந்தபுரத்திற்கு அருகே அமைந்துள்ள தும்பாவில் ள்ள அம்பா நிலநடுக்கோட்டு விண்கலன் செலுத்தும் மையத்தில் இந்திய விண்வெளித் திட்டம் முதன் முதலில் துவங்கியது.
  • 1963 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று தும்பாவிலிருந்து முதல் ஆய்வு விண்கலன் செலுத்தப்பட்டது.
  • நைக்-அப்பாச்சி எனும் இந்த முதல் விண்கலமானது, அமெரிக்காவிலிருந்து வாங்கப்பட்டதாகும்.

  • ஆய்வு விண்கலன் என்பது உயர் வளிமண்டலத்தின் இயற்பியல் அளவுருக்களை மதிப்பிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட விண்கலன் ஆகும்.
  • 1967 ஆம் ஆண்டு ஜனவரி 01 அன்று செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு புவி மையமானது அகமதாபாத்தில் அமைக்கப்பட்டது.
  • இந்தியாவின் உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட முதல் ஆய்வு விண்கலனான RH-75 ஆனது 1967 ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
  • இந்தியாவின் முதல் செயற்கைக் கோளான ஆர்ய பட்டாவானது, X – கதிர் வானியல் மற்றும் சூரிய இயற்பியல் ஆய்விற்காக சோவியத் ஒன்றியத்தால் 1975 ஆம் ஆண்டு செலுத்தப்பட்டது.

  • 1975 – 76 காலகட்டத்தில் இஸ்ரோவானது நாசாவுடன் இணைந்து விண்வெளித் தகவல் தொடர்பு முறையை தொலைக்காட்சி ஒளிபரப்புக்குப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்கியது.
  • இதன் விளைவாக, செயற்கைக் கோள் வழியான தொலைக்காட்சி பரிசோதனை என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.
  • 1977 ஜனவரி 01 முதல் 1979 ஜனவரி 08 வரையிலான காலங்களில் பிரான்ஸ் – ஜெர்மன் சிம்பொனி செயற்கைக் கோளைப் பயன்படுத்தி இஸ்ரோ மற்றும் அஞ்சல் & தந்தி துறையின் கூட்டுத் திட்டமான செயற்கைக்கோள் தொலைத் தொடர்பு பரிசோதனை திட்டமானது மேற்கொள்ளப்பட்டது.
  • புவிக் கண்காணிப்பிற்கான சோதனை செயற்கைக் கோளான பாஸ்கரா – 1 ஆனது 1979 ஆம் ஆண்டு ஜுன் 07 அன்று செலுத்தப் பட்டது.
  • ரோகிணி தொழில்நுட்ப ஆய்வுக் கருவிகளுடன் கூடிய SLV-3இன் முதல் சோதனை ஏவுதல் 1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று திட்டமிடப் பட்டது. ஆனால் இந்தச் செயற்கைக் கோளை சுற்றுவட்டப் பாதையில் நிறுத்த இயலவில்லை.
  • செயற்கைக் கோள் ஏவு வாகனம் (SLV) – 3 ஆனது இந்தியாவின் முதல் செலுத்து வாகனம் ஆகும்.
  • ரோகிணி செயற்கைக் கோளுடன் கூடிய SLV-3-ன் இரண்டாம் சோதனை ஏவுதல் வெற்றியடைந்து 1980 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று அது விண்ணின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

  • சோதனை நிலை புவிநிலைத் தகவல் தொடர்பு செயற்கைக் கோளான ஏரியன் பயணியர் ஆய்வுக் கருவி சோதனை (ஆப்பிள்) ஆனது 1981 ஆம் ஆண்டு ஜுன் 19 அன்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

  • இது எதிர்கால தகவல் தொடர்பு செயற்கைக் கோள் அமைப்பின் முன்னோடியாக மாறியது.
  • இந்திய தேசிய செயற்கைக் கோள் அமைப்பு (இன்சாட்) – 1A ஆனது 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
  • இந்த அமைப்பானது தகவல் தொடர்பு, ஒளிபரப்பு மற்றும் வானிலை ஆய்விற்கானதாகும்.
  • 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 02 அன்று இந்தோ-சோவியத்தின் முதல் மனித விண்வெளிப் பயணம் தொடங்கப்பட்டது.
  • விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய குடிமகன் ராகேஷ் சர்மா ஆவார்.

  • மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சோவியத்-இந்தியக் குழுவினரில் ஒருவராக சோவியத்தின் சோயுஸ் டி-11 ராக்கெட் மூலம் இவர் பயணித்தார்.
  • 1987, மார்ச் 24 அன்று குறைந்த செலவில் SLV-3ஐ விட அதிக எடையைச் சுமந்து செல்லும் மேம்படுத்தப்பட்ட செயற்கைக் கோள் செலுத்து வாகனத்தின் முதல் செலுத்துதல் நிகழ்த்தப்பட்டது. இது குறைந்த செலவு கொண்டதாக கருதப் பட்டது.
  • முதல் செயல்பாட்டு இந்திய தொலையுணர் செயற்கைக் கோளான IRS 1-A ஆனது 1988 ஆம் ஆண்டு மார்ச் 17 அன்று செலுத்தப்பட்டது.
  • இரண்டாவது IRS-P2 உடனான மேம்படுத்தப்பட்ட துருவ செலுத்து வாகனத்தின் செலுத்துதல் 1994 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று நடைபெற்றது.

  • இந்தச் செயற்கைக் கோளானது வெற்றிகரமாக சூரிய ஒத்திசைவிற்கான  துருவ சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
  • புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் செலுத்து வாகனமான GSLV-D1 இன்                        GSAT-1 உடனான மேம்படுத்தப்பட்ட முதலாவது ஏவுதலானது 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து நிகழ்த்தப்பட்டது.
  • இது அதிக எடையுடைய மற்றும் அதிக தேவைகளைக் கொண்ட புவி ஒத்திசைவு செயற்கைக் கோள்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது.
  • தெற்காசிய செயற்கைக் கோள் (GSAT-9) என்பது இஸ்ரோவால் தெற்காசிய கூட்டிணைவு நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் பகுதிக்கென்று   செலுத்தப்பட்ட புவி ஒத்திசைவு தகவல் தொடர்பு செயற்கைக் கோளாகும்.

  • இந்தச் செயற்கைக் கோளானது 2017 ஆம் ஆண்டு மே 05 அன்று செலுத்தப்பட்டது.
  • 2130 கிலோ எடை கொண்ட இன்சாட்-4CR செயற்கைக் கோளானது 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 அன்று GSLV-F04 மூலம் செலுத்தப்பட்டது. அந்நாள் வரை இந்தியாவிலிருந்து செலுத்தப்பட்ட அதிக எடையுடைய செயற்கைக் கோள் இதுவேயாகும்.
  • PSLV – C11 ஆனது சந்திரயான் – 1 விண்கலத்தை ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதியன்று வெற்றிகரமாக செலுத்தியது.

  • சந்திரயான் – 1 ஆனது இந்தியாவின் முதல் கோள் அறிவியல் மற்றும் ஆய்வுப் பணிக்கான திட்டமாகும். இது 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 வரை சுமார் 312 நாட்கள் செயல்பட்டு வந்தது.
  • 2013 ஆம் ஆண்டு நவம்பர் 05 அன்று PSLV-C25 ஆனது செவ்வாய் சுற்றுப் பாதை விண்கலன் திட்ட (மங்கள்யான்) விண்கலனை வெற்றிகரமாக செலுத்தியது.

  • 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று, இஸ்ரோவின் PSLV-37 ஆனது தனது 39வது பயணத்தில், இஸ்ரோவின் 714 கிலோ எடை கொண்ட கார்டோசாட் தொகுப்பு செயற்கைக் கோளையும், INS-1A & INS-1B எனும் இரு நானோ செயற்கைக் கோள்களையும் 6 நாடுகளைச் சேர்ந்த 101 நானோ செயற்கைக் கோள்களையும் வெற்றிகரமாக ஒரு சூரிய ஒத்திசைவு சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தியது.

  • 2017 ஆம் ஆண்டு ஜுன் 23 ஆம் தேதியன்று ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து PSLV-C38/கார்டோசாட்- 2 வரிசை செயற்கைக் கோள் திட்டம் செலுத்தப் பட்டது.

  • 2017 ஆம் ஆண்டு ஜுன் 23 ஆம் தேதியன்று, இந்தியாவின் துருவ செயற்கைக் கோள் செலுத்து வாகனமானது தனது 40வது திட்டத்தில் (PSLV-C38) புவிக் கண்காணிப்பிற்காக கார்டோசாட் – 2 தொகுப்பின் ஒரு செயற்கைக் கோளையும் மற்ற 30 செயற்கைக் கோள்களையும் 505 கி.மீ உயரம் கொண்ட  ஒரு சூரிய ஒத்திசைவு சுற்றுப் பாதையில் செலுத்தி  நிலை நிறுத்தியது.
  • இந்தியாவின் சமீபத்திய தகவல் தொடர்பு செயற்கைக் கோளான GSAT-17 ஆனது 2017 ஆம் ஆண்டு ஜுன் 29 அன்று பிரெஞ்சு கயானாவின் கவுரூ ஏவுதளத்திலிருந்து ஏரியன் – 5 VA-238 மூலம் செலுத்தப்பட்டு இன்சாட் / GSAT தொகுப்பில் சேர்க்கப்பட்டது.
  • இந்த GSAT – 17 ஆனது பல்வேறு தகவல் தொடர்பு சேவைகளை வழங்குவதற்காக சாதாரண சி-வரிசை, விரிவாக்கப்பட்ட சி-வரிசை மற்றும் எஸ்-வரிசை ஆகியவற்றின் கருவிகளைக் கொண்டு சென்றது.
  • மேலும் இது முந்தைய இன்சாட் செயற்கைக் கோள்களில் வழங்கப்பட்ட வானிலைத் தரவு ஒளிபரப்பு, செயற்கைக் கோள் அடிப்படையிலான தேடல் மற்றும் மீட்பு ஆகிய சேவைகளுக்குத் தேவையான உபகரணங்களையும் கொண்டு சென்றது.
  • இந்தியாவின் துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனமானது தனது 42வது பயணத்தில் (PSLV – C40) புவிக் கண்காணிப்பிற்காக கார்டோசாட் – 2 தொகுப்பின் செயற்கைக் கோளையும் மற்ற 30 துணை செயற்கைக் கோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது
  • இந்த PSLV-C40 / கார்டோசாட் – 2 தொகுப்பு செயற்கைக் கோள் திட்டமானது 2018 ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று செலுத்தப்பட்டது.

  • GSLV-F08 / GSAT 6A திட்டமானது 2018 ஆம் ஆண்டு மார்ச் 29 அன்று செலுத்தப்பட்டது.
  • இது புவி ஒத்திசைவு செயற்கைக் கோள் செலுத்து வாகனத்தின் (GSLV) 12-வது மற்றும் உள்நாட்டு கிரையோஜெனிக் நிலையுடன் கூடிய ஆறாவது பயணமாகும்.
  • இந்தியாவின் துருவ செயற்கைக் கோள் செலுத்து வாகனமானது 43-வது (PSLV–C41) பயணத்தில் XL உள்ளமைவுடன் வடிவமைக்கப்பட்ட IRNSS-1I செயற்கைக் கோளை செலுத்தியது.
  • இந்த XL உள்ளமைப்பானது PSLV-இல் இருபதாவது முறையாக பயன்படுத்தப்பட்டது.
  • நாவிக் இடங்காட்டி செயற்கைக்கோள் தொகுதியில் எட்டாவதாக இணைந்த இந்த IRNSS-1I ஆனது 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று செலுத்தப்பட்டது.
  • ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து PSLV – C43 செலுத்து வாகனமானது 2018 ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று இந்தியாவின் ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைக் கோள் (ஹைசிஸ்) மற்றும் 30 சர்வதேச துணை செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

 

  • இந்தியாவின் அடுத்தத் தலைமுறைக்கான உயர் செயல்திறன் கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளான GSAT – 11 ஆனது 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 05 அன்று பிரஞ்சு கயானாவின் கவுரூ ஏவுதளத்திலிருந்து ஏரியன்– 5 VA-246 மூலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

  • சுமார் 5854 கிலோ எடை கொண்ட இந்த GSAT-11 ஆனது இஸ்ரோவால் இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிக அதிக எடை கொண்ட செயற்கைக் கோளாகும்.
  • 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று இஸ்ரோவின் 39-வது தகவல் தொடர்பு செயற்கைக் கோளான GSAT – 7Aஐ ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து GSLV-F11 வெற்றிகரமாக செலுத்தியது.

  • GSLV-F11 இந்தியாவின் துருவ செயற்கைக் கோள் செலுத்து வாகனத்தின் 13வது மற்றும் உள்நாட்டு கிரையோஜெனிக் மேல் அடுக்கு நிலையுடன் கூடிய ஏழாவது பயணமாகும்.
  • GSLV-F11 ஆனது இஸ்ரோவின் 3 நிலைகளுடன் கூடிய 4-வது தலைமுறை செலுத்து செலுத்து வாகனமாகும்.
  • இது கு (ku) அலைவரிசையின் தகவல் தொடர்பு பரிமாற்றிகளைக் கொண்டுச் செல்லும் புவிநிலை செயற்கைக் கோளாகும்.
  • இந்தச் செயற்கைக் கோளானது இந்தியப் பிராந்தியத்தில் உள்ள பயனர்களுக்கு தகவல் தொடர்பு திறனை வழங்குவதற்காக உருவாக்கப் பட்டதாகும்.
  • இந்தியாவின் தொலைத் தொடர்பு செயற்கைக் கோளான GSAT – 31 ஆனது 2019 பிப்ரவரி 6 அன்று பிரெஞ்சு கயானாவின் கவுரூ ஏவுதளத்திலிருந்து ஏரியன் – 5 VA 247 மூலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

  • 2019 மார்ச் 27 அன்று டாக்டர் APJ அப்துல் கலாம் தீவு வளாக ஏவுதளத்திலிருந்து இந்தியா தனது செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையான மிஷன் சக்தியை செயல்படுத்தியது.
  • இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தால் உள்நாட்டின் தொழில்நுட்பத்தைக் கொண்டு நடத்தப்பட்ட தொழில்நுட்ப திட்டமாகும்.
  • அத்திட்டத்தால் தாக்கி அடிக்கப்பட்ட மைக்ரோசாட் – R  ஆனது தாழ்புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்த இந்தியாவின் செயல்படாத ஒரு செயற்கைக் கோளாகும்.

  • இந்த சோதனையின் மூலம் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை மட்டுமே உள்ளடக்கிய விண்வெளிச் சாதனைகளின் ஒரு பிரத்தியேக குழுவில் இந்தியாவும் இணைந்தது.
  • இந்தியாவின் PSLV-C46 ஆனது ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ரிசாட்–2B செயற்கைக் கோளை 22, மே 2019 அன்று வெற்றிகரமாக செலுத்தியது.

  • இது வேளாண்மை, வனவியல் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய தளங்களுக்கு சேவைகளை வழங்கும் நோக்கமுடையது.
  • சந்திரயான் – 2 விண்கலத்தைச் சுமந்து செல்லும் புவி ஒத்திசைவு செலுத்து வாகனமான GSLV- மார்க்-III M1 என்ற வாகனமானது  ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 2019 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று செலுத்தப்பட்டது.
  • சந்திரயான் 2 ஆனது சந்திரனுக்கான இந்தியாவின் இரண்டாவது பயணமாகும்.
  • இது முழுவதும் உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட சுற்றுப் பாதை வாகனம், தரையிறங்கு வாகனம் (விக்ரம்), ஊர்ந்து செல்லும் வாகனம் (பிரக்யான்) ஆகியவற்றை உள்ளடக்கியது.

  • ஊர்ந்து செல்லும் பிரக்யான் ஆனது தரையிறங்கு வாகனமா விக்ரமிற்குள் வைக்கப்பட்டுள்ளது.
  • சந்திரனின் தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்த விரிவான புரிதலைப் பெறுவதற்காக சந்திரயான் 2 ஆனது பல அறிவியல் ஆய்வுக் கருவிகளைக் கொண்டுள்ளது.
  • ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனம் (PSLV-XL) மூலம் 2019-2020 ஆம் ஆண்டில் சூரியனுக்கான முதல் பயணத் திட்டமான ஆதித்யா – எல் 1 ஐ இஸ்ரோ செலுத்த உள்ளது.
  • சூரியனைக் குறித்துப் பிரத்தி யேகமாக ஆய்வு மேற்கொள்வதற்காக இந்தியாவால் அனுப்பப்படும் முதல் பயணம் இதுவாக இருக்கும்.
  • 1500 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்–1 செயற்கைக் கோளை சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள ஒரு புள்ளியான லெக்ராஞ்சியன் 1(L1) என்ற புள்ளியைச் சுற்றியுள்ள ஈர்ப்பு விசையற்ற சுற்றுப் பாதையில் நிலை நிறுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

  • இந்தியாவின் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முதல் திட்டமான ககன்யான் ஆனது 2022 ஆம் ஆண்டில் இஸ்ரோவால் தொடங்கப் பட ள்ளது.
  • ககன்யான் திட்டத்தின் கீழ் 3 விண்கலன்கள் சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப்படும்.
  • இந்த மூன்று விண்கலன்களில் இரண்டு மனிதர்கள் இன்றியும் ஒன்று ஒரு மனிதரைக் கொண்ட விண்வெளிப் பயணத் திட்டமாகவும் இருக்கும்.
  • சுற்றுப் பாதை தொகுதி என்றழைக்கப்படும் இந்த மனித விண்வெளி பயணத் திட்டத்தில் ஒரு பெண் உட்பட மூன்று இந்திய விண்வெளி வீரர்கள் இருப்பர்.
  • இந்த ஆய்வுக் கலம் பின்வருவனவற்றைக் கொண்டிருக்கும்.
    • மனிதர்களைச் சுமந்து செல்லும் பெட்டகம்
    • இரண்டு திரவ உந்து விசை எந்திரங்களால் இயங்கும் செயல்பாட்டுப் பெட்டகம்
  • இது அவசர கால தப்பித்தல் மற்றும் அவசர கால பயண நிறுத்தம் ஆகிய வசதிகளையும் கொண்டிருக்கும்.
  • GSLV-MK III ஆனது இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான திறனைக் கொண்டிருப்பதால் அது இப்பயணத்திற்கு பயன்படுத்தப்படும்.
  • இந்தத் திட்டமானது அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை அடுத்து மனித விண்வெளிப் பயணத்தை தொடங்கும் நான்காவது நாடாக இந்தியாவை மாற்றும்.

 

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்