TNPSC Thervupettagam

நவீன மருத்துவம் நகரும் தடங்கள்

December 25 , 2023 329 days 208 0
  • கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு உலக அளவில் மருத்துவத் துறையில் தடாலடி மாற்றங்களை அதிகம் காண முடிகிறது. 2023இல் இவை இன்னும் வேகமெடுத்துள்ளன. புத்தம் புதிய நோய்க்கணிப்பு முறைகளும், நவீன மருத்துவ வசதிகளும் நிறையப் புகுந்துள்ளன. இவற்றின் பலனாக, பொதுவான நோய்களுக்கு மட்டுமல்லாமல், பல அரிய வகை நோய்களுக்கும் நோய்க்கணிப்புக் காலம் குறைகிறது; சிகிச்சைகள் எளிதாகின்றன.
  • மகத்துவம் பெறும் மரபணு சிகிச்சைகள்: 2023இல் நவீன மருத்துவம் நகர்ந்துள்ள முக்கியமான தடம் மரபணு சிகிச்சை தொடர்பானது. மரபணுப் பிறழ்வுகள் (Genetic mutation), தன்னுடல் தாக்குதல் (Auto immune), வளர்சிதை மாற்றம், உறுப்புச் சிதைவு போன்றவற்றின் கலவையாகப் பல அரிய நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றுக்குத் தீர்வு காண்பதில் பல முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளன. மரபணு நோய்களைப் பொறுத்தவரை, டி.என்.. (DNA) மரபுச் சங்கிலியில் பிழையுள்ள அல்லது பிறழ்வான மரபணுவை அகற்றியோ, மாற்றியோ சிகிச்சை அளிப்பதுதான் அடிப்படைக் கோட்பாடு. இதைமரபணுத் திருத்தம்’ (Gene editing) என்பர். இதற்குக்ரிஸ்பர்’ (CRISPR - Clustered regularly interspaced short palindromic repeats) தொழில்நுட்பம் உதவுகிறது.
  • செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஆர்.என்.-க்களையும் (RNA) பாக்டீரியாக்களில் உற்பத்தியாகும் Cas9 நொதிகளையும் பயன்படுத்திப் பிழைகளைத் திருத்துவது இதன் செயல்முறை. வீட்டில் ஒழுகும் தண்ணீர்க் குழாயைப் பழுது பார்ப்பவருக்கு நாம் அடையாளம் காட்டுவதைப் போல, திருத்தம் தேவைப்படும் பிழையுள்ள மரபணுச் சங்கிலியை Cas9 நொதிகளுக்கு ஆர்.என்.-க்கள் அடையாளம் காட்டுகின்றன. பழுது பார்ப்பவர் பசையைப் பூசி ஒழுகும் குழாயை அடைப்பார் அல்லது குழாயை மாற்றுவார். அதைப் போல, பிழையுள்ள மரபணுவை Cas9 நொதிகள் அகற்றுகின்றன அல்லது மாற்றுகின்றன. இந்தச் செயல்முறையில் இதுவரைஅடிப்படைத் திருத்தம்’ (Base editing) என்னும் தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டது.
  • டி.என்.. என்பது இரட்டைவடச் சங்கிலி போன்றது. அடிப்படைத் திருத்தத்தில் டி.என்..வின் இரண்டு வடங்களிலும் திருத்தம் உண்டானது. சமயங்களில் இது தேவைப்படுவதில்லை. ஒற்றை வடத்தில் மட்டும் திருத்தம் இருந்தால் போதும் என்னும் நிலையில், இம்மாதிரியான திருத்தத்தால், பயனாளிக்கு விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்பட்டன. இந்தக் குறையைப் போக்கும் விதமாக இப்போது புகுந்துள்ளதுமுதன்மைத் திருத்தம்’ (Prime editing) என்னும் நவீன முறை. இது பிழையுள்ள ஒற்றை வடத்தை மட்டும் திருத்துகிறது. இது, குழாயை மாற்றாமல் ஒழுகும் பகுதியை மட்டும் சரிசெய்வதற்கு ஒப்பானது.
  • இது எப்படிச் சாத்தியப்படுகிறது? ஒழுகும் தண்ணீர்க் குழாயைக் காட்டுவதற்குப் பதிலாக, குழாயில் ஒழுகும் இடத்தையே கைப்பிடித்துக் காட்டுவதைப் போல, முதன்மைத் திருத்தத்தில் பயன்படுத்தப்படும் ஆர்.என்..க்கள், பிழையுள்ள மரபணுவை மிகத் துல்லியமாக அடையாளம் காட்டுகின்றன. இதன் பலனாக, மரபணுப் பிழையை மிக நுட்பமாகத் திருத்த முடிகிறது; நோயை முழுமையாகத் தீர்ப்பது சாத்தியமாகிறது. தலசீமியா (Thalassemia), அரிவாள் அணு நோய் (Sickle Cell Disease), தசை அழிவு (Duchenne Muscular Dystrophy), பரம்பரைத் தள்ளாட்டம் (Inherited Ataxia) போன்ற அரிய நோய்களுக்குமுதன்மைத் திருத்தம்மூலம் நல்ல தீர்வு காண முடிகிறது.
  • புற்றுநோய்க்குப் புதிய வெடி: கரோனா காலத்தில், தடுப்பூசித் தத்துவத்தில் புதுமையைப் புகுத்தியது எம்.ஆர்.என். தொழில்நுட்பம் (mRNA Technology). மிக விரைவாகவும் எளிதாகவும் குறைந்த செலவிலும் கரோனா தடுப்பூசியைக் கண்டறிவதற்கு இந்தத் தொழில்நுட்பம் உதவியது. மரபணு சார்ந்த இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விடை காண இயலாத நோய்களுக்குப் புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க முனைந்துள்ளனர் அறிவியலாளர்கள். குறிப்பாக, புற்றுநோய்களைக் குணப்படுத்த எம்.ஆர்.என்.. உதவுகிறது. ஒரு தடுப்பூசி வழியாக எம்.ஆர்.என்..க்களைச் செலுத்தும்போது, உடலில் உள்ள இயல்பான செல்களை அவை தூண்டி, புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் எதிரணுக்கள் (Antibodies) உடலுக்குள் உற்பத்தியாக உதவுகின்றன. இதன் பலனால், புற்றுநோய் காலியாகிறது.
  • மேம்பட்டுவரும் சிசுப் பரிசோதனைகள்: கருவில் வளரும் சிசுவுக்குப் பிறவியிலேயே நோய் வர வாய்ப்புள்ளதா என்பதைக் கணிக்கபனிக்குட நீர் பரிசோதனை’ (Amniocentesis), ‘கோரியானிக் வில்லஸ் சாம்ப்ளிங்’ (Chorionic villus sampling) போன்ற பரிசோதனைகளைத் தற்போது பரிந்துரைக்கின்றனர். இவற்றை மேற்கொள்ளும்போது சிசுவுக்குப் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு. இந்தக் குறையைப் போக்க வந்துள்ளது, Non-Invasive Prenatal DNA Testing (NIPT) தொழில்நுட்பம். அதாவது, தாயின் ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் சிசுவின் செல்களைப் (Fetal cells) பிரித்து, அதன் மரபணுக்களை ஆய்வுசெய்யும் ரத்தப் பரிசோதனை முறை இது. கருவில் வளரும் சிசுவுக்கு இதனால் எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவது இல்லை என்பது பெரிய ஆறுதல்.
  • புற்றுநோய்க் கணிப்பில் புதுமை: புற்றுநோய்களை முன்கூட்டியே கணிக்க, பயனாளியின் ரத்தத்தில் காணப்படும் உயிரிக் குறிப்போன்களை (Bio-markers) தற்போது பயன்படுத்துகின்றனர் அல்லது மரபணுப் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். இவற்றைவிட எளிதாக, ஆரம்பநிலையிலேயே பலதரப்பட்ட புற்றுநோய்களைக் கணிக்க முடியும் என்பதை ‘Proximity ligation assays – PLA’ எனும் புதிய தொழில்நுட்பம் உறுதிசெய்துள்ளது. எந்தவொரு புற்றுநோய் தொடங்கினாலும் முதலில் செல்களின் மேற்பரப்பில் உள்ள புரதங்களின் மீதுதான் அது வினைபுரிகிறது. அப்போது அதற்கு எதிரான புரதங்கள் (Antibodies) அங்கு தோன்றுகின்றன.
  • இவற்றைக் கணிப்பதன் மூலம் புற்றுநோய் வாய்ப்பையும் கணிக்க முடியும் என்பது இப்போது புகுந்துள்ள நவீன நோய்க்கணிப்பு முறை. ஒரு செடியின் நோயைத் தெரிந்துகொள்ள அதன் வேரைக் கிளற வேண்டாம்; இலையைப் பார்த்தாலே போதும். அதுபோலப் புற்றுநோயைக் கணிக்க மரபணுவைப் பார்க்க வேண்டாம்; புற்றுசெல்லின் புரதத்தைப் பார்த்தாலே போதும் என்று கற்றுத்தந்துள்ள புதிய பாடம் இது.
  • நம்பிக்கையூட்டும் நரம்பு உருப்படங்கள் (Neuroimaging): இதுவரை மனநோய்களைக் கணிப்பதற்கு முன்னுரிமை கொடுத்துவந்த EEG, PET, MRI ஸ்கேன் உள்ளிட்ட நரம்பு உருப்படங்கள், இப்போது ஒருபடி முன்னேறி, சமூகத்தின் தாக்கம், தனிநபர் மனநிலை, மிகுந்த அழுத்தமான நேரங்களில் முடிவெடுத்தல் போன்ற எண்ணம்-செயல்-நடத்தை சார்ந்தவை மூளையில் ஏற்படுத்தும் வேதிமாற்றங்களைக் கணிக்கவும் உதவுகின்றன. முக்கியமாக, Functional MRI (fMRI) உருப்படங்கள் இவற்றில் முன்னிலை வகிக்கின்றன. தற்கொலை எண்ணங்களை முன்கூட்டியே அறிந்து தவிர்க்க இந்தத் தொழில்நுட்பம் பயன்படக்கூடும் என்னும் நம்பிக்கையை விதைத்துள்ளது.
  • மாற்றங்களை ஏற்படுத்தும் செயற்கை நுண்ணறிவு: மருத்துவத் துறையில் நோய்த்தன்மை அறிதல், துல்லியமான நோய்க்கணிப்பு, மருந்து தயாரிப்பு எனப் பலவற்றிலும் புகுந்து புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம். ‘நேச்சர்’, ‘சயின்ஸ்’, ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்போன்ற பிரபல மருத்துவ இதழ்களில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்துவருவதே இதற்குச் சாட்சி. இந்த ஆண்டில் சாட்ஜிபிடி, ஜெமினி, கிளாடு போன்ற .. தொழில்நுட்பச் செயலிகளும் ‘Crowdsourcing’ எனும் நோய்க்கணிப்பு முறையும் மருத்துவத் துறையை அடுத்த நவீனத்துக்கு நகர்த்தியிருக்கின்றன.
  • இவற்றில் போலிகள் உருவாகவும் சாத்தியங்கள் உண்டு என்பதால், உண்மைக்கும் போலிக்கும் வேறுபாடு தெரியாமல் மக்கள் திணறக்கூடும். மருத்துவர்களுக்கும் இவை சவால்கள் விடும். இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள, இவற்றின் பயன்பாட்டுக்கான சரியான நெறிமுறைகளை வல்லுநர்கள் வகுத்து மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் வழிகாட்ட வேண்டும். சமூகம் பயன்படுத்தும் இத்தகைய தளங்களை அரசு முறைப்படி கண்காணிக்கவும் வேண்டும். காரணம், மருத்துவத் துறையானது மனித உயிர் தொடர்பானது.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்