- பிரபல வங்கக் கவிஞரும், வங்க இலக்கியத்துக்கு நவீன பாணியை அறிமுகம் செய்தவருமான ஜீபனானந்த தாஸ் (Jibanananda Das) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
- வங்கதேசத்தின் பரிசால் நகரில் (1899) பிறந்தார். தந்தை சத்யானந்த தாஸ் பள்ளி ஆசிரியர். பிரம்ம சமாஜத்தில் முக்கிய உறுப்பினராகவும் இருந்தார். தாய் குஸும்குமாரி தாஸ் பிரபல கவிஞர். சிறு வயதில் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை இந்த தாய்தான் ஊர் ஊராக பல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினார்.
- ஆரம்பக் கல்வியை வீட்டிலேயே பெற்றார். சிறு வயதிலேயே எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். பரிசால் பிரஜமோஹன் கல்லூரி, கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பயின்றார். 1917-ல் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
- கொல்கத்தா சிட்டி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். இவரது முதல் கவிதை 1919-ல் வெளிவந்தது. தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் இறந்தபோது இரங்கல் கவிதை எழுதினார். ‘ஜாரா பலக்’ என்ற முதல் கவிதை தொகுப்பு 1927-ல் வெளிவந்தது.
- கவிஞர் புத்ததேவ் போஸ் தனது ‘கவிதா’ இதழில் இவரது பல கவிதைகள், கட்டுரைகளை வெளியிட்டார். கொல்கத்தா, டாக்கா உள்ளிட்ட பல நகரங்களில் பல்வேறு இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகின.
- இவரது ஆரம்பகால கவிதைகள் வங்கமொழியின் தெளிவு, சொல்வளம், அழகுஆகியவற்றை சித்தரித்தன. இயற்கை, கிராமம், பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றையும் கருப்பொருளாகக் கொண்டிருந்தன.
- பின்னர் இவரது கவிதைகளில் சமூக அக்கறையும், வேதனையும் அதிக அளவில் வெளிப்பட்டது. 1940, 50-களில் வெளிவந்த இவரது கவிதைகள் பெரும்பாலும் அரசியல் பரபரப்புகள், இரண்டாம் உலகப்போர், வங்கதேச வறட்சி, மதக் கலவரம் போன்றவற்றை மையமாகக் கொண்டிருந்தன.
- இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு சில நாட்களுக்கு முன்பு 1947-ல் பயங்கர கலவரம் மூண்டது. இதில் பாதிக்கப்பட்டதால், சொந்த ஊரைவிட்டு வந்து கொல்கத்தாவில் குடியேறினார். வாழ்நாள் முழுவதும் எழுதிக்கொண்டே இருந்தார்.
- ஏராளமான கதைகள், கட்டுரைகள், விமர்சன நூல்களைப் படைத்துள்ளார். ‘பால்யவான்’, ‘பூர்ணிமா’, ‘கல்யாணி’, ‘ம்ருணாள்’, ‘காருவாஸனா’ உட்பட பல நாவல்களை எழுதியுள்ளார். ‘ஜரா பாலக்’, ‘பன்லதா சென்’, ‘ரூப்சி பங்களா’ போன்ற இவரது கவிதை தொகுப்புகள் புகழ்பெற்றதோடு, சர்ச்சையையும் கிளப்பின.
- கவிதைகளின் பாரம்பரியப் பாணியை மாற்றி புதுமைகளைப் புகுத்தினார். இவர் வாழ்ந்த காலத்தில் இவை முழுமையாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. பெரிதாகக் கொண்டாடப்படவும் இல்லை. 300-க்கும் குறைவான படைப்புகளே வெளிவந்தன. இவரது மறைவுக்குப் பிறகே, இவரது ஏராளமான கவிதைகள், உரைநடைகள் கண்டறியப்பட்டு வெளியிடப்பட்டன.
- ரவீந்திரநாத் தாகூர், காஸி நஸ்ருல் இஸ்லாம் ஆகியோருக்குப் பிறகு மிகவும் கொண்டாடப்பட்ட வங்க எழுத்தாளரும் வங்க இலக்கியத்தின் சிறந்த படைப்பாளியுமான ஜீபனானந்த தாஸ் 55-வதுவயதில் சாலை விபத்தில் (1954) உயிரிழந்தார். மறைவுக்குப் பிறகு, 1955-ல் இவரது ‘ஸ்ரேஷ்ட கவிதா’ என்ற கவிதை தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
நன்றி: இந்து தமிழ் திசை (16 – 02 – 2024)