TNPSC Thervupettagam

எஸ்.ராஜம்: சாகித்யங்களின் ஓவியர்

February 11 , 2019 2143 days 1442 0
  • ஏதேனும் ஒரு கலைத்திறமை இருந்தாலே மிகையாகப் பெருமிதப்பட்டுக்கொள்ளும் மனிதர்கள் நடுவே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஓவியத்திலும் இசையிலும் மேதையாக விளங்கிய எஸ்.ராஜம் எப்போதும் பூமியில் கால் பதிந்தவராகவே வாழ்ந்த தனித்தன்மை மிக்க ஓர் ஆளுமை. மயிலாப்பூர் நடுத்தெருவில் வாழ்ந்த அவருடைய அந்தப் பழமையான வீடும், எளிய வாழ்க்கை முறையும் சென்ற நூற்றாண்டின் விழுமியங்களாக விளங்கியவை.
  • “இசை என் அப்பாவிடமிருந்து எனக்குக் கிடைத்தது. ஓவியம் அம்மா தந்தது” என்பார். அப்பா சுந்தரம் ஐயர் தொழில் முறையில் வக்கீல்தான் என்றாலும் இசையில் ஈடுபாடு அதிகம். தன் வீட்டையே இசை வளர்க்கும் கூடமாக ஆக்கி வைத்திருந்தார். ‘என்னுடைய அம்மா வரலட்சுமி விரதத்தின்போது தெருவிலிருக்கும் பெண்களுக்கெல்லாம் அம்மன் முகம் செய்து தருவார். அம்மனின் கண்களை அவர் வரையும் அழகை ரசித்துப் பார்த்துக்கொண்டிருப்பேன். சிறுவனான எனக்குள் ஓவிய ஈடுபாடு இப்படித்தான் ஏற்பட்டிருக்க வேண்டும்’ என்று நினைவு கூர்ந்திருக்கிறார் ராஜம்.
  • வீட்டின் அருகில் வசித்த கௌரியம்மாளிடம் சில பாடல்களை கற்றுக்கொண்டிருக்கிறார் ராஜம். 'கௌரியம்மாளுக்கு நல்ல எலுமிச்சை நிறம். கைகள் சாட்டை போல் நீளமாக இருக்கும்' என்று விவரிக்கும் அடுத்த வினாடியே 'அவர் என் தாயார் மாதிரி' என்று சொல்லி நம் மதிப்பில் பல மடங்கு உயர்ந்து நிற்பார் ராஜம்.
நடிப்புத் துறையைத் தவிர்த்தவர்
  • ராஜத்தின் சகோதரர் எஸ்.பாலச்சந்தர் மிகப் பெரிய வீணை மேதை. சகோதரர்கள் இருவருமே ஆரம்பகால தமிழ் சினிமாவில் கால் பதித்தவர்கள். பாலச்சந்தர் தொடர்ந்து சினிமாவில் இயக்குநராகிப் புகழ் பெற்றார். ஆனால் நடிப்புத் துறைக்குப் போன ராஜம் நல்ல எதிர்காலம் இருந்தும் வெகு சீக்கிரமே அந்தத் துறையை விட்டு விலகினார். தன் மனதுக்கு உகந்த துறை இதுவல்ல என்று தெளிவாக முடிவெடுத்தார்.
  • கர்நாடக இசைமேதையான இவர் மேடையில் பாடுவது, பிறருக்குக் கற்றுத் தருவது என்று தொடர்ந்து இயங்கினார். அகில இந்திய வானொலி சென்னையில் தொடங்கிய இரண்டாம் நாளிலிருந்து அதில் ராஜத்தின் சங்கீதம் பரவலாக ஒலிக்கத் தொடங்கியது. பிறகு அதன் இசைப் பிரிவில் பணியாற்றிய காலத்தில் இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தியிருக்கிறார்.
  • பொதுவாகக் கச்சேரிகளில் ஏற்கனவே மக்களுக்கு நன்றாக அறிமுகமான சங்கராபரணம், கல்யாணி போன்ற ராகங்களையே அதிகம் பாடுவார்கள். ஆனால், அபூர்வராகங்களில் அமைந்த கோடீஸ்வர ஐயரின் க்ருதிகளைப் பரப்புவதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் ராஜம். எல்லோரும் இவற்றைப் பாடி பிரபலமாக்க வேண்டும் என்று வற்புறுத்தி சொல்வார்.
தனக்கென்று தனி பாணி
  • நுண்கலைக் கல்லூரியில் ஐந்தாண்டுகள் படித்து தன் ஓவியத் திறமையை வளர்த்துக்கொண்டார் ராஜம். அதில் தனக்கென்று ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டார். இந்திய மரபு சார்ந்த அஜந்தா ஓவிய வகையை வரித்துக்கொண்டார். கோவில் கோவிலாக சென்று அங்கிருக்கும் சிற்பங்களைக் கூர்ந்து கவனித்து அவற்றை அப்படியே ஓவியமாகத் தீட்டுவார் ராஜம். ‘ஓவியர் மணியமும் நானும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் பல சிற்பங்களைப் பார்த்து தீட்டியிருக்கிறோம். அங்கிருக்கும் கிணற்றில் குளித்துவிட்டு கிடைத்த உணவைச் சாப்பிட்டு விட்டு இரவு பகலாகத் தங்கியிருந்து வரைவோம்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
  • 90 வயதை நெருங்கிக்கொண்டிருந்த அவரிடம் இரண்டு வருட காலம் ஓவியம் கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பெரும்பாலும் நீர் வர்ணங்களை உபயோகித்து கனத்த கைவினை காகிதத்தில் தீட்டுவார். முதலில் ஒரு ஸ்கெட்ச் வரைந்து கொள்வார். பின்புலத்தை வர்ணக்கலவையால் நுட்பமாக மெருகேற்றுவார். தீட்டிய வர்ணங்களைத் தண்ணீர் விட்டுக் கழுவி உலர்த்தி எடுப்பார். பிறகு மறுபடியும் தீட்டுவார். இப்படிப் பல முறை செய்தபின் அந்த ஓவியம் முப்பரிமாண வடிவம் பெறும். பளீர் நிறங்களைத் தவிர்த்த அவரது ஓவியங்கள் ஒரு போதும் கண்களை உறுத்தாது. காகிதம் தவிர ப்ளைவுட், பட்டுத்துணி ஆகியவற்றிலும் சில ஓவியங்களைத் தீட்டியிருக்கிறார்.
  • பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பிரபல பத்திரிகைகளின் தீபாவளி மலர்களில் அவருடைய ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன. புதிய கற்பனைகளுடன் வரைந்திருப்பார். ராகத்தை சித்தரிக்கும் அவருடைய ஓவியங்கள் மிக நுட்பமானவை. சாகித்யங்களையும் ஓவியமாக்கியிருக்கிறார். கடவுளர் உருவங்களையும், இயற்கை தேவதைகளையும் அதிகமாக வரைந்திருக்கும் அவர் எப்போதும் பாதத்திலிருந்து தீட்ட ஆரம்பிப்பார். முகத்திலிருந்து தீட்ட ஆரம்பிக்கும் எனக்கு இது விசித்திரமாக இருக்கும். இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது ‘அவர்களெல்லாம் தேவதைகள், இந்த காகிதத்தில் வந்து அவர்கள் இறங்க வேண்டும் என்று காலைப் பிடித்து கேட்டுக்கொள்கிறேன்’ என்பார்.
  • இங்கே ஆழ்வார்களுக்கும், நாயன்மார்களுக்கும் சிற்ப உலோகப் பதிவுகள் உண்டு. நவீன காலத்தில் சில ஓவியப் பதிவுகள் வசதி படைத்தவர்களுக்கு மட்டும் வாய்த்தது. தற்காலத்தில் புகைப்படங்கள் மலிந்து கிடக்கின்றன. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த சங்கீத மும்மூர்த்திகளான தியாகய்யர், முத்துஸ்வாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோரின் உருவங்களுக்கு எந்தப் பதிவும் இல்லை. அவர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்களைப் பற்றி சில குறிப்புகளை சேகரித்துக்கொண்டு ஓவியம் தீட்டி அவர்களுக்கு உருவம் தந்தவர் எஸ்.ராஜம். அவருடைய இந்த ஓவியங்கள்தான் சென்னை மியூசிக் அகாடமியின் சுவர்களை இன்றைக்கும் அலங்கரிக்கின்றன.
காலத்துடன் பயணித்த கலைஞன்
  • மேலைநாட்டு ஓவியங்களுக்கும், இந்திய ஓவியங்களுக்கும் இருக்கும் வேறுபாட்டை விவரிப்பார். இந்திய மரபின் மீது அவருக்கு இருந்த தீவிர பற்றுக்கு சற்றும் குறைந்ததல்ல மேலை நாட்டு ஓவியங்களின் மீது அவருக்கிருந்த மதிப்பு. மயிலாப்பூரில் எந்தக் கடையில் எந்த சிற்றுண்டி நன்றாக இருக்கும் என்று தெரிந்து வைத்திருப்பார். உப்புமா கொழுக்கட்டையை விரும்பி சாப்பிடும் அவர் பீட்ஸாவையும் ருசித்து சாப்பிடுவார். ஓய்வு நேரங்களில் பத்திரிகைத் தொடர்களை வாசிப்பார். கதைக்குத் தகுந்தபடி சித்திரம் வரையப்பட்டிக்கிறதா என்று பார்ப்பார். ‘சிவகாமியின் சபதம்’ தொடங்கி ‘கருவாச்சி காவியம்’ வரை இப்படி நிறைய வாசித்திருக்கிறார். எல்லா விஷயத்திலும் காலத்துடன் சேர்ந்து பயணிப்பது அவருக்கு இயல்பாக இருந்தது. அபேதமில்லாமல் மனிதர்களை நேசிக்கவும் பாராட்டவும் தெரிந்திருந்தது.
  • நாட்டு நடப்புகள் குறித்த அக்கறை அவருக்கு எப்போதும் உண்டு. செய்தித்தாளில் இடம்பெற்ற நீதிபதி சந்துருவின் தீர்ப்புகளை தொடர்ந்து வாசித்திருக்கிறார். தான் வரைந்த ஓவியமொன்றை அவருக்குப் பரிசளிக்க விரும்பினார். அவர் தேர்வு செய்த பரிசு ‘சற்றே விலகியிரும் பிள்ளாய்’ என்று நந்தியிடம் விண்ணப்பிக்கும் நந்தனார் ஓவியம்! அவருடைய தீர்க்கமான புரிதல் வியப்பில் ஆழ்த்தியது.
  • நீண்ட காலம் சைக்கிளில் பயணம் செய்துகொண்டு தன்னுடைய உடைகளைத் தானே தைத்துக்கொண்டு மிக எளிமையாக வாழ்ந்தார் ராஜம். தனக்கு நேர்ந்த வாழ்க்கையை உள்ளபடி ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவருக்கு இருந்தது. இறக்கும் கடைசி தருணம் வரை உற்சாகம் குறையாத மனிதராக இருந்தார். ஒரு கலை வாழ்வின் வெகுமதி வேறெப்படி இருக்க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்