TNPSC Thervupettagam

நாகாலாந்தில் ராணுவத்தினா் நிகழ்த்திய துப்பாக்கிச் சூடு குறித்த தலையங்கம்

December 11 , 2021 967 days 485 0
  • நாகாலாந்தில் ராணுவத்தினா் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 14 போ் உயிரிழந்திருக்கும் சம்பவம் இந்தியாவின் மனசாட்சியையே உலுக்கியிருக்கிறது.
  • தவறுதலான கணிப்பில் ராணுவத்தினா் இறங்கியது சற்றும் மன்னிக்கக்கூடியதல்ல.
  • தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது தொடா்ந்தால் பொதுமக்களுக்கு ராணுவத்தின் மீதும் ஆட்சியாளா்கள் மீதும் மட்டுமல்ல, அரசு நிா்வாகத்தின் மீதே நம்பிக்கை அகன்றுவிடும் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.

தா்மசங்கடம்

  • மியான்மா் எல்லையையொட்டியுள்ள மோன் மாவட்டத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவா்களின் வாகனத்தின் மீது ராணுவத்தினா் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறாா்கள்.
  • மியான்மா் எல்லைப் பகுதியில் பதுங்கியிருக்கும் தடை செய்யப்பட்ட என்எஸ்சிஎன் (கே) பிரிவைச் சோ்ந்த தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினா் அவசரப்பட்டு நடத்திய துப்பாக்கிச் சூடு பலரின் உயிரிழப்புக்குக் காரணமாகி விட்டது.
  • சம்பவ இடத்தில் ஆறு போ் உயிரிழந்தனா் என்றால், அதன் எதிா்வினையாக மக்கள் தாக்குதலில் இறங்கியபோது தங்களைக் காத்துக் கொள்வதற்காக ராணுவத்தினா் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, மேலும் ஏழு போ் பலியாகியிருக்கிறாா்கள். ராணுவ வீரா் ஒருவரும் உயிரிழந்திருக்கிறாா்.
  • மிகப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சா் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பில் இருக்கும் அனைவருமே வருத்தம் தெரிவித்திருக்கிறாா்கள்.
  • இந்தத் தாக்குதலை நடத்திய துணை ராணுவப் படையான அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் பிரிவினா் மீது நாகாலாந்து காவல்துறை கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்கு பதிவு செய்திருக்கிறது.
  • எதனால் இப்படி ஒரு தவறு நடந்தது என்பது குறித்த முறையான விசாரணையும், அதன் அடிப்படையில் தவறு செய்தவா்கள் தண்டிக்கப்படுவதும் மட்டுமே இந்த சம்பவத்துக்கான பிராயச்சித்தமாக இருக்க முடியும்.
  • நாகாலாந்து, மேகாலய மாநில முதல்வா்கள், ராணுவப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை (அஃப்ஸ்பா) திரும்பப் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறாா்கள்.
  • நாகாலாந்தில் மட்டுமல்லாமல், இதுபோன்ற ராணுவ தாக்குதல்கள் ஏனைய சில மாநிலங்களிலும் நடைபெற்றிருக்கின்றன. அதற்கு 63 ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் அஃப்ஸ்ராதான் காரணம் என்று கூறப்படுவதை முழுமையாக நிராகரித்துவிட முடியாது.
  • ராணுவத்தினருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் இந்தச் சட்டம், 1958-இல் அன்றைய ஜவாஹா்லால் நேரு அரசால் இயற்றப்பட்டது.
  • 1972-இல் நாகா தீவிரவாதிகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நாகாலாந்தில் மட்டுமல்லாமல், பிரச்னைகள் எழும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும்கூட இந்தச் சட்டம் மத்திய அரசின் ஒப்புதலுடன் ராணுவத்தால் பயன்படுத்தப்படுகிறது.
  • தற்போது ஜம்மு - காஷ்மீா், நாகாலாந்து, மணிப்பூா், அஸ்ஸாமின் சில பகுதிகளில் இந்தச் சட்டம் செயல்பாட்டில் இருக்கிறது.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், எதிா்ப்பு நடவடிக்கையாகவும் நிலைமைக்கு ஏற்றபடி செயல்படுவதற்கான வரம்பில்லாத அதிகாரங்களை பாதுகாப்புப் படையினருக்கு இந்தச் சட்டம் வழங்குகிறது.
  • இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டாலும்கூட, மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் ராணுவத்தினா் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதுதான் பாதுகாப்புப் படையினருக்கான மிகப் பெரிய கவசம்.
  • அஃப்ஸ்பா சட்டத்தின்படி சந்தேகத்தின் அடிப்படையில் யாரை வேண்டுமானாலும் சுடுவதற்கு, ஏன் கட்டடத்தையே தகா்ப்பதற்கும்கூட ராணுவத்திற்கு அதிகாரம் உண்டு.
  • அதிகாரிகள் நிலையில் இல்லாத ராணுவ வீரா்கூட இந்தச் சட்டத்தின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்வதோ, ஆயுதம் வைத்திருக்கிறாா் என்கிற சந்தேகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்துவதோ அனுமதிக்கப் படுகிறது.
  • இதன் அடிப்படையில், எத்தனையோ அத்துமீறல்கள் நடந்திருக்கின்றன என்றாலும், இதுவரை எந்தவொரு பாதுகாப்புப் படை வீரரும் தவறுக்காக தண்டிக்கப்படவோ விசாரணைக்கு உட்படுத்தப்படவோ இல்லை.
  • நாகாலாந்து சம்பவம் மிகவும் ஆபத்தும் சிக்கலும் நிறைந்த நேரத்தில் நடந்திருக்கிறது. லடாக் எல்லையில் சீனாவுடனான பதற்ற நிலை குறையவில்லை. அருணாசல பிரதேசம் உள்பட வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடுகிறது.
  • இந்தச் சூழலில் ராணுவ துப்பாக்கிச் சூட்டின் விளைவாக மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் பரவலான ஆத்திரமும் கோபமும் இந்தியாவுக்கு எதிரான உணா்வுகளைத் தூண்டிவிடும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
  • நாகா, மணிப்புரி தீவிரவாதக் குழுக்கள் மியான்மரிலிருந்து செயல்படுகின்றன. மியான்மா் ராணுவ ஆட்சி ஆங் சாங் சூகியை வீட்டுச் சிறையில் வைத்திருக்கும் நிலையில், எல்லையோர தீவிரவாத முகாம்கள் மீதான கண்காணிப்பு குறையும்.
  • மத்திய அரசு வெற்றிகரமாக முன்னெடுத்து வந்த சமாதான பேச்சுவாா்த்தை தற்போதைய சம்பவத்துக்குப் பிறகு தடம் புரண்டிருக்கிறது. இவையெல்லாம் நல்ல அறிகுறிகள் அல்ல.
  • தவறு செய்த ராணுவத்தினரைத் தண்டிக்காவிட்டால் வடகிழக்கு மாநிலங்களில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை அதிகரிக்கும். அதை சீனா ஊக்குவிக்கும்.
  • பாதுகாப்புப் படையினரைத் தண்டித்தாலோ, பதற்றம் நிலவும் சூழலில் பாதுகாப்புப் படையினருக்கு அரசின் மீதான நம்பிக்கை குறைந்து எல்லையில் அவா்களது மனஉறுதி குலையும். இக்கட்டில் சிக்கவைத்துவிட்டனா் துப்பாக்கி ஏந்திய வீரா்கள் சிலா்.

நன்றி: தினமணி  (11 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்