TNPSC Thervupettagam

நாடாளுமன்றத்திலும் வெறுப்புப் பேச்சு: முளையிலேயே கிள்ளப்பட வேண்டும்

September 26 , 2023 472 days 269 0
  • இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தொடர், ‘வரலாற்றுச் சிறப்புமிக்கபல நிகழ்வுகளுடன் நிறைவடைந்திருக்கிறது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப் பட்ட மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது ஒரு வரலாற்றுத் தருணம் என்றால், தெற்கு டெல்லி பாஜக மக்களவை உறுப்பினரான ரமேஷ் பிதுரி, சக உறுப்பினரான பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த டேனிஷ் அலி மீது ஏவிய வெறுப்புப் பேச்சு ஒரு பெரும் இழுக்காக அமைந்துவிட்டது. இஸ்லாமியரான அலி மீது பிதுரி நிகழ்த்திய வகுப்புவாதத் தாக்குதலை, ஆளும் பாஜக-வைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் சிலர் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது மிக மோசமான போக்கு.
  • புதிய கட்டிடத்துக்கு மாறியபோது, நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு புதிய வரலாற்றின் தொடக்கத்துக்கு அழைப்புவிடுத்த பிரதமர் நரேந்திர மோடி, “புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் ஒவ்வொரு குடிநபருக்கும் ஊக்கம் தருவதாக அமைய வேண்டும்என்றும் கேட்டுக்கொண்டார். இந்நிலையில்தான், பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரே பிரதமரின் பேச்சுக்கு எதிர்மறையாக அதுவும் முதல் அமர்வில் நடந்து கொண்டிருப்பது, புதிய நாடாளுமன்ற வரலாற்றில் அழிக்க முடியாத கறையாகப் படிந்து விட்டது.
  • ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடுகளில் சிறு வயதிலிருந்தே தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பிதுரி, அதன் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யில் கல்லூரிக் காலத்தில் உறுப்பினராக இருந்தவர். தெற்கு டெல்லி தொகுதியிலிருந்து 2009இல் முதல் முறையாக மக்களவைக்குப் பாஜக சார்பில் போட்டியிட்ட பிதுரி, அத்தேர்தலில் தோல்வியடைந்தார். எனினும் 2014, 2019 தேர்தல்களில் அதே தொகுதியில் வெற்றிபெற்று மக்களவைக்குச் சென்ற பிதுரி, வெறுப்புப் பேச்சுகளுக்காக அறியப்பட்ட ஒருவர் ஆவார். தெற்கு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியைச் சேர்ந்தவரானபிதுரிக்கு, அப்பகுதி இளைஞர்களிடையே பலத்த ஆதரவு உண்டு.
  • பிதுரியின் தற்போதைய பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் உள்பட பொதுச் சமூகத்திலிருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. பிதுரி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியபோது, இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இதுபோன்ற நடத்தை மீண்டும் நடந்தால் தீவிர நடவடிக்கைஎடுக்கப்படும் எனவும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
  • பிதுரி பேசியபோது அவையிலிருந்த மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிதுரியின் பேச்சுக்கு மக்களவையில் மன்னிப்புக் கேட்டார். இந்நிலையில், ‘அவை நடவடிக்கைக்குப் புறம்பான சொற்களைப் பயன்படுத்தியதற்காகவிளக்கம் கேட்டு பிதுரிக்கு பாஜக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
  • புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவில், உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசனப் பிரதிகளின் முன்னுரையில் மதச்சார்பின்மை’, ‘சமதர்மம்ஆகிய சொற்கள் நீக்கப்பட்டிருப்பதாக மக்களவையில் காங்கிரஸ் தலைவராக உள்ள ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டியிருந்த நிலையில், பிதுரியின் வகுப்புவாத வெறுப்புப் பேச்சு புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் ஒலித்திருக்கிறது.
  • இத்தகைய மோசமான நிலை, நாடாளுமன்றத்தில் இனி நிகழாத வகையிலான முன்னுதாரண நடவடிக்கையை அவைத் தலைவர் எடுக்க வேண்டும். நாடாளுமன்ற அவைகளுக்கு வெளியே பொதுவெளியிலும் நா காக்க வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடமை!

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்