TNPSC Thervupettagam

நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டிடம்: ஏன் இவ்வளவு அவசரம்?

December 14 , 2020 1323 days 514 0
  • இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுவது என்பது ஒரு கொண்டாட்டத் தருணமாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தை முன்னெடுத்துச்செல்லும் கம்பீர மாளிகையென்று ஒவ்வொரு குடிநபரும் பெருமிதம் கொள்ள வேண்டும். எனினும், அந்தக் கொண்டாட்டம் வழக்குகளின் காரணமாகத் தடைப்பட்டு, தற்போது அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது. நாடாளுமன்றப் பகுதியில் ஏற்கெனவே உள்ள கட்டுமானங்களை இடித்தோ, கூடுதல் கட்டுமானங்களை உருவாக்கியோ, மரங்களை வெட்டியோ எந்த மாற்றங்களையும் ஒன்றிய அரசு செய்யக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தற்காலிகமாகத் தடைவிதித்துள்ளது.
  • புது டெல்லியின் மத்தியில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தை மாற்றியமைக்கும் நரேந்திர மோடி அரசின் லட்சியத் திட்டத்துக்கு ரூ.971 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மக்களவையில் 888 உறுப்பினர்கள் வரையிலும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்கள் வரையிலும் பங்கேற்கும் வகையில் இந்தக் கட்டிடங்கள் அமைந்திருக்கும். ஒன்றிய அரசின் புதிய தலைமைச் செயலகம், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் அலுவலகங்கள், குடியிருப்புகள் ஆகியவற்றையும் உள்ளடக்கி புது டெல்லியின் மத்திய பகுதிகளை மறுசீரமைப்பதற்கான மொத்தச் செலவுகள் கணக்கிடப்படவில்லை என்றும் அத்திட்டத்துக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் சில வாரங்களுக்கு முன்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் தெரிவித்தது.
  • 2022-ல் இந்தியாவின் 75-வது சுதந்திர விழா நிறைவடைவதற்குள் இத்திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்திட்டத்தை முன்னெடுக்கும் இந்தக் காலகட்டத்தில் ஏற்கெனவே பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடு கரோனா பெருந்தொற்றால் மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். தடுப்பூசிக்குப் பிறகு பொருளாதார நிலை மீண்டெழக் கூடும் என்றாலும்கூட, இந்தப் பின்னடைவை அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது. கரோனாவுக்கு இலவசமாகத் தடுப்பு மருந்து வழங்கப்படுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அனைவருக்கும் தடுப்பு மருந்து கிடைக்கும் என்பதை அரசால் உறுதிப்படுத்த முடியவில்லை.
  • புதிய நாடாளுமன்றத்துக்கான நிதி ஒதுக்கீடுகள் 75-வது சுதந்திர விழாவுக்குப் பெருமைசேர்க்கலாம். ஆனால், வல்லுநர் மதிப்பீட்டுக் குழு அதிருப்தி தெரிவித்திருப்பதைப் போல, கட்டுமானங்களுக்கான அனுமதிகளைப் பெற்ற பிறகு, அவற்றில் மாற்றங்களைச் செய்து ஒன்றிய அரசின் பொதுப் பணித் துறை ஒட்டுமொத்த மறுசீரமைப்புத் திட்டத்தையும் மாற்ற முயற்சிப்பதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன.
  • மக்கள் முன்னுதாரணம் இல்லாத அளவுக்குத் துயரங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிற வேளையில் நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டிடம் என்பது பகட்டானதாகவே பார்க்கப்படும் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

நன்றி: தி இந்து (14-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்