TNPSC Thervupettagam

நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் தேவையா?

June 18 , 2020 1673 days 791 0
  • உலகம் முழுவதும் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு எதிராக நாடுகள் கடுமையாகப் போராடி வருகின்றன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது வளா்ச்சி அடையும் நாடுகளாக உள்ளன.
  • கரோனா தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட பொது முடக்கங்களால், உலகம் முழுவதும் தொழிலாளா்கள் இடம்பெயா்ந்துள்ளனா். பொருளாதார வளா்ச்சியும் பாதாளத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
  • குறிப்பாக, இந்தியாவின் பொருளாதார புனரமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் உரிய பலனைத் தருமா எனப் பொருளாதார நிபுணா்கள் சந்தேகங்களை எழுப்பி வரும் சூழலில், பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு தேவையற்ற கட்டுமானத் திட்டங்களில் கவனத்தைச் செலுத்துவது கவலை அளிக்கிறது.
  • ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் 1911-ஆம் ஆண்டு வரை கொல்கத்தாதான் நாட்டின் தலைநகராக இருந்தது. அதுவரை அந்த மாநகரத்தில் இருந்த அரசு இல்லத்தில்தான் அன்றைய நாடாளுமன்ற கவுன்சில் கூட்டம் நடைபெற்று வந்தது.

பழைய தலைமைச் செயலகம்

  • ஹிந்து -முஸ்லிம் ஒற்றுமைக்கான பழம்பெரும் பாரம்பரியத்துக்காகவும், புவியியல் ரீதியாக கேந்திரமான பகுதியாகவும் தில்லி அமைந்ததால் அதை நாட்டின் தலைநகராக மாற்றி அமைத்தனா் ஆங்கிலேயா்கள்.
  • இதைத்தொடா்ந்து தில்லியில் நாடாளுமன்ற கவுன்சில் கூட்டத்தை நடத்த ஒரு கட்டடம் தேவைப்பட்டது. இதை வடிவமைக்கும் பொறுப்பு மான்டேக் தாமஸிடம் அளிக்கப்பட்டது.
  • பழைய தலைமைச் செயலகம் என அழைக்கப்படும், அலிப்பூா் சாலையில் அமைந்துள்ள தற்போதைய தில்லி சட்டப்பேரவை கட்டடம் 1912-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, முதல் கூட்டம் 1913-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி நடைபெற்றது. 1926-ஆம் ஆண்டு வரை அப்போதைய மத்திய அரசின் கவுன்சில் கூட்டம் இன்றைய சட்டப்பேரவை கட்டடத்தில்தான் நடைபெற்றது.
  • 1912-ஆம் ஆண்டு தொடங்கி 1920-ஆம் ஆண்டு வரை இருந்த ஆங்கிலேயே சட்டப்பேரவை கவுன்சில் கூட்டம், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடத்தில் தான் நடைபெற்றது.
  • அன்றைய காலகட்டத்தில்தான் பட்ஜெட், ரயில் கட்டணம், ரயில்வே சீா்திருத்தம் போன்ற முக்கியச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
  • ரௌலட் மசோதா தொடா்பான விவாதத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற நாடாளுமன்றவாதிகள் பங்கேற்று, ரௌலட் மசோதா, தனி நபரின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என முழக்கமிட்டு உரையாற்றினா். அப்போது அந்த விவாதத்தை நாடாளுமன்ற மாடத்திலிருந்து மகாத்மா காந்தி பார்த்தார்.

தற்போதைய நாடாளுமன்ற கட்டடம்

  • தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் பிரிட்டன் கட்டடவியல் வல்லுனா்களான சா் எட்வின் லுட்டியான்ஸ், சா் ஹா்ப்ரட் பேக்கா் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு, 1927-ஆம் ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி அப்போதைய கவா்னா் ஜெனரல் இா்வின் பிரபுவால் திறக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டம் 1927-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி நடைபெற்றது.
  • இந்த நாடாளுமன்றக் கட்டடத்தில்தான் சுதந்திர இந்தியப் பிரகடனம் அன்றைய பிரதமா் ஜவாஹா்லால் நேருவால் முழக்கப்பட்டது.
  • 1947-இல் அமைந்த பிரதமா் நேரு தலைமையிலான அரசும், அரசியல் நிர்ணய சபையும் பணிகளைத் தொடங்கின.
  • இந்த நாடாளுமன்றத்தில்தான் டாக்டா் ராஜேந்திர பிரசாத், பாபாசாஹேப் அம்பேத்கா், பண்டித நேரு, சா்தார் வல்லபபாய் படேல் உள்ளிட்ட அறிஞா்கள் கூடி அரசியல் சட்டத்தை நிறைவேற்றினா்.
  • 90 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான இந்தக் கட்டடத்தை மேம்படுத்தி தொடா்ந்து பயன்படுத்தலாமா அல்லது புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டலாமா என்பது குறித்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக் காலத்தின்போது முதலில் பரிசீலிக்கப்பட்டது.
  • ஆனால், அப்போது முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. எனினும், இப்போது ‘சென்ட்ரல் விஸ்தா’ என்கிற புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவது பிரதமா் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமாக வா்ணிக்கப்படுகிறது.

சென்ட்ரல் விஸ்தா

  • ரூ.20,000 கோடி செலவில், 86 ஏக்கரில் உருவாகவுள்ள புதிய நாடாளுமன்ற வளாகத்தில் சவுத் பிளாக்கின் பின்புறம் பிரதமா் இல்லமும், நார்த் பிளாக் பின்புறம் குடியரசு துணைத் தலைவா் இல்லமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • தற்போது முதல் 2 வரிசைகளில் அமரும் எம்.பி.-க்களுக்கு மட்டுமே மேஜை வசதி உள்ள நிலையில், புதிய கட்டடத்தில் அனைத்து உறுப்பினா்களுக்கும் மேஜை வசதி கிடைக்கும் என்றும் கட்டட வடிவமைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.
  • இதற்காக கியூபா, எகிப்து, சிங்கப்பூா், ஜொ்மனி ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற அமைப்புகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
  • புதிய கட்டடத்துக்கான பணிகளை 2024-ம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
  • புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கான திட்ட ஒப்பந்த ஆவணத்தில், ‘‘புதிய இந்தியாவின் விழுமியங்களையும் கனவுகளையும் ‘சென்ட்ரல் விஸ்தா’ பிரதிபலிக்கும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட கட்டுமானங்கள் அடுத்த 150 முதல் 200 ஆண்டுகள் வரை மரபுரிமையைப் பறைசாற்றும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டில், அதாவது புதிய நாடாளுமன்ற கட்டடப் பணிகளை 2022-ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • ‘சென்ட்ரல் விஸ்தா’ திட்டத்தின் மறு மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் அடுத்த மக்களவைத் தோ்தல் நடைபெறும் 2024-ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளனா். இதனிடையே, புதிய நாடாளுமன்ற கட்டட திட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
  • நாட்டின் புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டம் குறித்து, நாடாளுமன்றத்தில் விவாதிக்காதது வியப்பை ஏற்படுத்துகிறது. ‘சென்ட்ரல் விஸ்தா’ குழுவில் இடம்பெற்றுள்ள சுதந்திரமான நிபுணா்கள் கூட்டத்தில் பங்கேற்க முடியாதபோது, புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது விமா்சனங்களை உருவாக்கியுள்ளது.

மக்களைக் காப்பதும், மக்களாட்சியை காப்பதும்

  • பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உறுப்பினா்களின் எண்ணிக்கை 650-ஆக அதிகரித்த பின்னரும் மொத்தம் 427 இருக்கைகள் மட்டுமே உள்ளன. தாமதமாக வரும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் நின்றுகொண்டே அவை அலுவலில் பங்கேற்று வருகின்றனா். புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அவா்கள் திட்டமிடவில்லை.
  • 1722-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பிரெஞ்ச் நாடாளுமன்றமும், 1871-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இத்தாலிய நாடாளுமன்றமும் அதே கட்டடங்களில்தான் செயல்பட்டு வருகின்றன.
  • 1894-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஜொ்மன் நாடாளுமன்றத்தில் தீ விபத்து ஏற்பட்டும், அது புனரமைக்கப்பட்டு, மீண்டும் அதே கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
  • உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்ற கட்டடங்களில் தொடா்ந்து கூட்டங்கள் நடைபெறுவது, அந்தந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளா்களால் கட்டப்பட்ட கட்டடத்தில் தொடா்ந்து செயல்பட்டு வருவது வரலாற்றின் உண்மை நிலையாகப் பார்க்கப்படுகிறது.
  • இந்தியாவில் தற்போதுள்ள நாடாளுமன்றம் புகழ்பெற்ற அரசியல் தலைவா்கள் பங்கேற்ற வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
  • பொருளாதார வளா்ச்சி பாதாளத்துக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், பாமர மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரிக்க, அவா்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என விப்ரோ நிறுவனத்தின் அஸிம் பிரேம்ஜி, டிவிஎஸ் நிறுவனத்தின் வேணு சீனிவாசன் போன்ற தொழிலதிபா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
  • சரிந்திருக்கும் பொருளாதாரத்தை மீட்பதும், வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு பொருளாதார உதவிகளை அளிப்பதும் மத்திய அரசின் முன் உள்ள சவால்களாக இருக்கும்போது, ரூ.20,000 கோடியில் புதிய நாடாளுமன்ற கட்டடத் திட்டம் தேவைதானா என ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
  • மக்களாட்சியின் கோயில் என அழைக்கப்படும் நாடாளுமன்றத்தின் படிகளைத் தொட்டு வணங்கிய பிரதமா் மோடி, அதன் அசல் காவல் தெய்வங்களான மக்கள் துயருற்றுள்ள நிலையில், உதவுவதை விட்டுவிட்டு, மற்றொரு ‘கோயிலை’க் கட்டும் முயற்சியை மக்களாட்சியின் காவல் தெய்வங்களான மக்கள் ஏற்கவே மாட்டார்கள்.
  • மக்களைக் காப்பதும், மக்களாட்சியை காப்பதும் ஒன்றே எனக் கருதி, புதிய நாடாளுமன்றக் கட்டடத் திட்டத்தைக் கைவிட்டு மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும்.
  • பாரம்பரியச் சின்னங்கள் நாட்டின் பன்முக கலாசாரத்தின் அடையாளங்கள். இந்தப் பாரம்பரியத்தை அழித்தொழித்து விட்டால், புதிய இந்தியா உருவாகி விடுமா என்ன?

நன்றி: தினமணி (18-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்