- டிசம்பர் 13 அன்று புதிய நாடாளுமன்றத்துக்குள் நிகழ்த்தப்பட்ட அத்துமீறல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 22 ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்ட சில மணி நேரத்தில், மக்களவைக்கு உள்ளேயும், நாடாளுமன்ற வளாகத்திலும் புகுந்து சிலர் நிகழ்த்திய இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிரவைத்திருக்கிறது. அதேவேளையில், இந்த விவகாரத்தை முன்வைத்து அரசும் எதிர்க்கட்சிகளும் மோதிக்கொள்வதால் நாடாளுமன்றம் முடக்கத்துக்குள்ளாவது விரும்பத்தக்கது அல்ல. டிசம்பர் 13 அன்று மதியம் 1 மணியளவில், மக்களவையின் பார்வையாளர் பகுதியிலிருந்து குதித்த ஒருவர், மேஜைகள்மீது தாவி ஓடியபடி, தன் காலணியில் மறைத்துவைத்திருந்த, மஞ்சள் நிறப் புகையைப் பரப்பும் கருவியை எடுத்து இயக்கினார். இன்னொரு நபரும் அவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் சென்று இதே போன்ற செயலைச் செய்தார்.
- நீலம் ஆசாத் என்னும் பெண் உள்ளிட்ட இருவர் நாடாளுமன்ற வளாகத்திலும் அதே பாணியில் மஞ்சள் நிறப் புகையைப் பரவச் செய்து முழக்கங்கள் எழுப்பினர். இந்தச் சம்பவம் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் பெரும் அரசியல் சர்ச்சை வெடித்திருக்கிறது. இந்திரா காந்தி படுகொலை சம்பவத்துக்குப் பின்னர்தான் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. 2001 டிசம்பர் 13இல் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், பல அடுக்குப் பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. பார்வையாளருக்கான நுழைவுச்சீட்டு பெறுவதிலும் உரிய கட்டுப்பாடுகள் இருக்கவே செய்கின்றன.
- எல்லாவற்றையும் தாண்டி இந்தச் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. டிசம்பர் 13 அல்லது அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்படும் எனக் காலிஸ்தான் ஆதரவு ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன் அறிவித்திருந்த நிலையில், இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது. எனினும், இது தொடர்பாகக் குற்றம்சாட்டப்படுபவர்கள் எந்த அமைப்புடனும் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இதுதொடர்பாக முழுமையான விசாரணை அவசியம். இதில் தொடர்புடையதாகக் கைதுசெய்யப்பட்ட அனைவரும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
- ஆனால், குடும்பச் சூழலால் கல்வியைத் தொடர முடியாதவர்கள், நன்கு படித்தும் தகுந்த வேலை கிடைக்காமல் விரக்தியான மனநிலையில் இருந்தவர்கள் என்றும், பகத் சிங் முதல் சுவாமி விவேகானந்தர் வரை பல ஆளுமைகளை ஆதர்சமாகக் கொண்டவர்களாக அறியப்படுபவர்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் மைசூரு எம்.பி-யான பாஜகவின் பிரதாப் சிம்ஹா வழியே நுழைவுச்சீட்டு பெற்றவர்கள் என்பதாலும், இதில் ஈடுபட்ட நீலம் ஆஸாத், விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் உள்ளிட்டவற்றில் பங்கெடுத்தவர் என்பதாலும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் பரஸ்பரக் குற்றச்சாட்டில் ஈடுபட்டிருக்கின்றன. இவ்விஷயத்தில் இரு தரப்பும் காட்டும் பிடிவாதத்தால் நாடாளுமன்றச் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டிருப்பதை மக்கள் அதிருப்தியுடன் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.
- புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை உருவாக்கி, பெருமிதத்துடன் திறந்துவைத்த மத்திய அரசு, அதன் பாதுகாப்பையும் உறுதிசெய்திருக்க வேண்டும் என்னும் எதிர்க்கட்சிகளின் வாதம் ஏற்கத்தக்கது என்றாலும் அதற்காக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவது தேவையற்றது. மறுபுறம், இப்படியான தருணங்களில் தொடர் மெளனம் காப்பது, எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வது என மத்திய அரசு செயல்படுவதும் விமர்சிக்கத்தக்கது. எல்லாவற்றையும் தாண்டி, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் முன்வைத்திருக்கும் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் தொடர்பான விவாதங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 12 – 2023)