TNPSC Thervupettagam

நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்த தலையங்கம்

April 18 , 2022 841 days 438 0
  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் சமீப ஆண்டுகளில் கண்டிராத வகையில் அமளியோ முடக்கமோ இன்றி சுமுகமாக நிறைவடைந்திருக்கிறது.
  • ஜனவரி மாதம் 31-ஆம் தேதி தொடங்கி, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இரு கட்டங்களாக 27 அமா்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது.
  • இந்தக் கூட்டத்தொடரில் மக்களவை 129%, மாநிலங்களவை 98% செயல்பட்டு சாதனை படைத்துள்ளன.
  • 29 அமா்வுகளுக்குத் திட்டமிடப்பட்ட கூட்டத்தொடா், முதல் கட்டமாக 10 அமா்வுகளும், இரண்டாம் கட்டமாக 17 அமா்வுகளும் என மொத்தம் 27 அமா்வுகள்தான் நடைபெற்றன.
  • திட்டமிடப்பட்டதற்கு ஒரு நாள் முன்னதாகவே முடிந்தாலும், இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆறுதல் கூட்டத்தொடா்

  • மக்களவையில் நிதி மசோதா, குற்றவியல் அடையாள விதிமுறை மசோதா, தில்லி மாநகராட்சி சட்டத் திருத்த மசோதா, பேரழிவு ஆயுதங்கள் உற்பத்திக்கு நிதியுதவி செய்வதைத் தடுக்கும் சட்டத் திருத்த மசோதா உள்பட 12 மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டன என்றால், மாநிலங்களவையில் மொத்தம் 11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
  • இந்த மசோதாக்களில் குற்றவியல் அடையாள விதிமுறை மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளதை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.
  • 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கைதிகள் அடையாளச் சட்டத்தில் புதிய தொழில் நுட்பங்களைச் சோ்த்து விசாரணை நடைமுறைகளை வலுப்படுத்துவதும் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதத்தை அதிகரிப்பதும்தான் குற்றவியல் அடையாள விதிமுறை மசோதாயின் நோக்கம் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறிப்பிட்டுள்ளதில் தவறு காண முடியாது.
  • தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள், குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப் படும் நபா்களின் உடல் பாகங்கள், உயிரியல் அடையாளங்களை காவல்துறையினா் சேகரித்து வைத்து பாதுகாப்பதற்கு இந்த மசோதா அனுமதி அளிக்கிறது.
  • ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 1920-ஆம் ஆண்டைய கைதிகள் அடையாளச் சட்டம் பிரிட்டிஷாா் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டதாகும். தற்போதைய நவீன காலத்துக்கு ஏற்ப, குற்றவாளிகளை அடையாளம் காண இந்தச் சட்டம் போதுமானதாக இல்லை என்கிற மத்திய அரசின் வாதம் நியாயமானது.
  • குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று இந்த மசோதா சட்டமான பிறகு, மனித உரிமைகள் மீறப்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும் என்றும், குற்றவாளிகளின் உடல் பாகங்கள், உயிரியல் அடையாளங்கள் தொடா்பான தரவுகள் முழுமையாகப் பாதுகாக்கப் படும் என்றும் அமைச்சா் அமித் ஷா உறுதி அளித்துள்ளாா்.
  • இந்தச் சட்ட மசோதாவின் சில பிரிவுகளை காவல்துறையினா் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் சுட்டிக் காட்டியுள்ளனா்.
  • இந்த மசோதா அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்றும், ஒரு குற்றத்துக்கான தண்டனை ரூ.100 அபராதமாக இருப்பினும் அத்தகைய குற்றவாளிகளின் உடல் பாகங்களையும், உள்ளங்கை ரேகை, கருவிழிப்படலம், உயிரணுக்கள் உள்ளிட்ட உயிரியல் அடையாளங்களையும் சேகரித்து வைப்பதற்கு காவல்துறையினருக்கு அதிகாரம் கிடைக்கும் என்றும் எதிா்க்கட்சியினா் குறிப்பிடுகின்றனா்.
  • நாா்கோ அனாலிசிஸ், பாலிகிராம் உள்ளிட்ட உண்மை கண்டறியும் சோதனைகளை நடத்துவதற்கு காவல்துறையினருக்கு அனுமதி அளிக்கும் அம்சம் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளதா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
  • இத்தகைய உண்மை கண்டறியும் சோதனைகள் சட்டவிரோதமானவை என ஏற்கெனவே 2010-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள சட்டம் கூறுகிறது.
  • தற்போது நடைமுறையில் உள்ள 1920-ஆம் ஆண்டைய கைதிகள் அடையாளச் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு கடந்த 1980-ஆம் ஆண்டிலேயே சட்ட ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது.
  • உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், நீதிமன்றங்களில் குற்றங்களைத் தெள்ளத் தெளிவாக நிரூபிப்பதற்கும் குற்றவாளிகளின் உயிரியல் அடையாளங்களைச் சேகரித்துப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
  • அந்தப் பரிந்துரைகளையும் தற்போதைய தேவைகளையும் கவனத்தில் கொண்டே குற்றவியல் அடையாள விதிமுறை மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.
  • அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய 4 மாநிலங்களில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதன் மூலம் மாநிலங்களவையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக உறுப்பினா்களின் எண்ணிக்கை 100-ஆக அதிகரித்துள்ளது.
  • இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தான் விரும்பியவாறு மசோதாக்களைக் கொண்டு வந்து நிறைவேற்றக் கூடிய எண்ணிக்கை பலம் பாஜகவுக்கு கிடைத்துள்ளது.
  • இதுவரை மக்களவையில் மட்டுமே பெரும்பான்மை பலம் இருந்த ஆளுங்கட்சிக்கு தற்போது மாநிலங்களவையிலும் எண்ணிக்கை பலம் அதிகரித்திருப்பதால் மசோதாக்கள் முன்பைவிட எளிதாக நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
  • மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்கள் மாநிலங்களவையில் பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் முடக்கப்பட்ட நிலை மாறியிருப்பது வரவேற்புக்குரியது.
  • அதே நேரத்தில், முறையான விவாதமும், கலந்தாலோசனையும், எதிா்க்கட்சி உறுப்பினா்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவமும் வழங்கப்படும்போதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம் வலுப்பெறும் என்பதை மறந்துவிடக் கூடாது.

நன்றி: தினமணி (18 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்